உள்நாட்டுச் செய்திகள்

Friday, October 22, 2021

உள்நாட்டுச் செய்திகள்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் !

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (24.09.2020) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பாடசாலையின் பிரதான வாயிலை மறித்து இடம்பெற்ற இந்தப் போராட்டத்தினால் பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் இடம்பெறவில்லை.

262 மாணவர்களைக் கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்று பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்கு வருமாறும் பாடசாலை ஒழுக்க விதிகளைப் பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களைப் பாதுகாத்துத் தருமாறு கோரி பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி கோட்டக்கல்லி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் பெற்றோரிடம் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

”விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது ” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது எனவும் அவர்களின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நம்புவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையானது எந்தவொரு அதிகாரத் தரப்புடனும் இணையாத அணிசாரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்ற உறுதிபூண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

75ஆவது பொதுச் சபையின் பொது விவாதத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்ட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும் எனவும் அது அந்தந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் துடிப்பு மற்றும் தேவைகளை மிகச்சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையானது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த நிலையில், அனைத்து பயங்கரவாத செயல்களையும் உள்நாடு அல்லது சர்வதேசமாக இருந்தாலும் மிகக் கடுமையான வகையில் கண்டிக்கிறது.

இலங்கை மண்ணிலிருந்து அது நீக்கப்பட்ட போதிலும், இந்தப் பயங்கரவாத அமைப்பின் சர்வதேச தொடர்பாடல் எஞ்சியிருக்கிறது. அதன் இரக்கமற்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தி சில தலைநகரங்களை அதன் ஆதாரமற்ற பொய்கள் மற்றும் பிரசாரங்களைப் பரப்புவதற்கு செல்வாக்குச் செலுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வன்முறை சித்தாந்தத்தை வெவ்வேறு போர்வைகள் மற்றும் வெளிப்பாடுகளின் கீழ் தொடர்ந்து ஆதரிக்கும் மற்றும் பரப்புகின்ற இந்த சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இலங்கை ஆழ்ந்த உறுதிபூண்டுள்ளது என்பதை வெளிப்படுத்திய ஜனாதிபதி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டவிரோத உற்பத்தி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த குற்றவியல் குழுக்களின் அதிகரித்துவரும் நுட்பத்தைப் பற்றியும் இலங்கை மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதனை நிவர்த்தி செய்வதற்காக போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும் ஒரு ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அந்தக் குழு பாராட்டத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம் !

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட “இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி” க்கு, அமைச்சுக்களுக்கும், இராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் நேற்று முன்தினம் 22ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நியமனம் செய்யப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“யுத்தகாலத்தில் புலிகளால் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்கள – முஸ்லீம் மக்கள் மீள குடியமர்த்தப்பட வேண்டும் ” – இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர

யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் அதிகளவிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் அவர்கள் மீண்டும் அங்கு குடியேற்றப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று(23.09.2020) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் இடம்பெறாத காரணத்தினால் சில விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.இதன்போது நான் ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதிகளவிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்று எங்கு உள்ளனர்? அவர்களுக்கு தேர்தல் உரிமை உள்ளதா? என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து பார்க்க வேண்டும். 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டு நாட்டின் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் என கூறிக்கொண்டு நாடு நாசமாகிவிட்டது. கடந்த ஆட்சியில் அரசியல் அமைப்பு சபையில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் கையாள்களாக இருந்து தீர்மானம் எடுத்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் எப்படிப்பட்டவர் என்றால் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர். இவர்கள் இருவரும்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தனர். அவர்களில் ஒருவர் தான் ரட்ணஜீவன் ஹூல்.

தகுதியில்லாத ஒருவரை இவர்கள் தேர்தல்கள் ஆணைகுழுவிற்கு கொண்டுவந்தனர். நல்லாட்சியில் நடந்த ஊழல் குற்றங்களின் போது, வழக்குகள் தொடுக்காத ஹூல் 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது முதலாவது வழக்கை தொடுத்தார்.

எனவே இவர்களில் கொள்கை என்ன என்பது எமக்கு நன்றாக தெரியும். தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பக்கச்சார்பான, என்.ஜி.ஓ காரர்களை நீக்க எமக்கு 20 வது திருத்தம் வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தொடரும் தற்கொலைகள் – வவுனியா – செட்டிக்குளம்பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.!

அண்மைக்காலங்களில் தமிழர் பகுதிகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. காதல்தோல்வி, நுண்கடன் பிரச்சினை, கல்வியில் பின்னடைவு, குடும்பப்பிரச்சினை என ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த தற்கொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரவு வீட்டில் தூங்கச்சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார். அதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு சடலம் மீட்கப்பட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த சு.நாகேந்திரன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரஜை ஒருவரின் முறைப்பாட்டை தீர்த்து வைக்க வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் !

வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி நேற்று (23.09.2020) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுடன், போதுமானளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

அலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி போதுமானளவு ஊழியர்கள் இருப்பதை கண்டறிந்தார்.

அங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி அவரது தேவை மற்றும் விபரங்களை கேட்டறிந்தார்.

ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்
மக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்து கடிதம்!

இலங்கை அரசினுடைய கடுமையான போக்கு தொடர்பாக ஜெனீவாவில் பேசியிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அவர்களுக்கு  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நன்றிகளையும் பாராட்டுக்கயைளும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், “2020 செப்ரெம்பர் 14ஆம் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தினுடைய கவலைதரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதாவது, அதிகார நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பேணாதிருத்தல், குடியியல் பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமித்தல், போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றினோடு தொடர்பிருக்கும் அலுவலர்களின் குற்ற ஆராய்வு சம்பந்தமாக பொறுப்புக் கூறல் அற்ற நிலை போன்றவை அவையாகும்.

மேற்கூறிய, அரசியல் ரீதியான குறைபாடுகளை வெளிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை தமிழ் மக்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றார்கள். இது தனிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு அப்பால் தொடர்ந்து வந்த நிர்வாக அலகுகளின் செயற்பாடுகள் தங்களால் குறிப்பிடப்பட்ட பண்பியல்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

இவை, இலங்கையின் இதுவரை கால அரசாங்க முறைமையின் குறைபாடுகளாகும். இந்த நாட்டினுடைய அரசியல் ரீதியான தத்துவார்த்த வெளிப்பாடுகள் இவை. இப்பிராந்தியத்தின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் நீங்கள் கூறுவதுபோல் இவை பாதிப்பாக அமையக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், சர்வதேச வழிமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அமைய சகலரும் நடந்துகொள்வதில்தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் தமிழ் மக்களிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கான முக்கிய அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முதலாவது உறுப்புரையில் இடம்பெற்றுள்ளது.அதாவது, சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் வெவ்வேறு மனித குழுமங்களின் சம உரித்துக்களிலும் சுயநிர்ணயத்திலும் பிரிக்க முடியாதவாறு தங்கியிருக்கின்றன என்பதே அதுவாகும்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான பார்வை சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. இதனை அடைய எடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் உற்ற துணையாக இருப்பார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன். அதிமேதகு தங்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி அங்கிருந்து அவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து செல்லும் போது பொலிஸார் தடையேற்படுத்தினர்.

தொலைபேசி ஊரையாடலின் போது உரிய தீர்வு கிடைக்காதமையால் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.

கடந்த மார்ச் மாதம் தமக்கு புதிய வேலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் புதிய அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பதில் கிடைக்கும் வரை அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை அணிமித்து நின்றிருந்தவேளை, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் பிரதிநிதிகள் 8 பேருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது.

எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பு எழுத்து மூலம் வேண்டுமென கோரிய அவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மீண்டும் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக வந்து எதிர்ப்பை தொடர்ந்தனர்.

“13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் ” – பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா !

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்டு, அதனை எமது மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தியிருந்தால், இன்று எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்தவரையில் தீர்க்கப்பட்டிருக்கும் என்பதை நான் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றேன்.

எனினும், குறித்த அதிகாரத்தைப் பெற்றவர்களும், அபகரித்துக் கொண்டவர்களும் அதனை ஒழுங்குற செயற்படுத்தியிருக்கவில்லை.

மக்களது ஆணையை மதித்து இந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறைபாடுகள், அல்லது சேர்க்கைகள் இருப்பின் அதுகுறித்து ஆராய்ந்து அவற்றை சரி செய்து கொள்வதற்கு கால அவகாசம் இருக்கின்றது என்பதால், இது குறித்து எவரும் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

”வன்னிக்கிராமங்களில் மலசலகூட வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னமும் உள்ளன” – வன்னி மக்களின் இடர் நீக்குமாறு அடைக்கலநாதன் பிரதமரிடம் வேண்டுகோள் !

”வன்னிக்கிராமங்களில் மலசலகூட வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னமும் உள்ளன- அம்மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழிசெய்ய வேண்டும்  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (23.09.2020) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள் முதலில் வன்னியில் எமது மக்களின் நிலைமைகளை அவதானிக்க வேண்டும். எமது மக்கள் அதிகளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அங்கு மலசலகூடம் இல்லாத கிராமங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால், பெண்கள் அதிக சிரமங்களைச் சந்திக்கின்றனர். இவ்விடயத்தில் பிரதமர், அமைச்சர்களுக்கு ஆணையிட்டு வன்னி மாவட்டத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எமது மக்கள் போருக்குப் பின்னர் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மீள்குடியேற்ற விடயங்களில் சொந்த நிலங்களில் அரசாங்க ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக, மகாவலி வலயம் என்பது மிக மோசமாக எமது மக்களைப் பாதிக்கின்றது. பறவைகள் சரணாலயம் எனக் கூறிக்கொண்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இவற்றை கவனத்திற்கொள்ளவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கும்.

ஒவ்வொரு அபிவிருத்திக் கூட்டத்திலும் வன இலாகாவின் செயற்பாடுகளைக் கண்டித்து கருத்துக்களை முன்வைத்தோம். எனவே, ஒவ்வொரு மாவட்டக் குழுக் கூட்டத்திற்கும் முடிவெடுக்கும் அதிகாரிகள் வந்து கவனஞ்செலுத்த வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு ஐயங்கண் குளம் ஆலயத்திற்கு எதிர்வரும் 26ஆம் திகதி மக்களை வர வேண்டாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இது எமது மக்களின் மத உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடாகும். எனவே, இவற்றில் பொலிஸார் தலையிட வேண்டாம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.