உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பிரதமராகிறார் கோட்டாபய ராஜபக்ச..? – பிரதமர் தினேஷ் குணவர்த்தன விளக்கம் !

“பிரதமர் பதவி நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவியே என்னைத் தேடியே வந்தது.” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.

அதிபரின் விருப்பத்துடனும் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்துடனும் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். இது நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவி என்னைத் தேடியே வந்தது. பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கத் திரைமறைவில் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. எவரினதும் அழுத்தமும் எனக்கு வரவும் இல்லை. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த ஆதரவுடன் தான் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன்.

நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் எனவும், பிரதமராகப் போகின்றார் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.”- மாவைக்கு டெலோ கடிதம் !

உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணாகரம் வல்வெட்டித்துறை நகரசபை சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்ற தலைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் மயூரன், தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்கத் தவறிமை தொடர்பாக எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த முறை நகர சபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரின் மரணத்தினாலே ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டது. அந்த இடத்தை நிரப்புகின்ற தார்மீக உரிமை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கே இருந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

மேற்படி வெற்றிடத்திற்கு தங்கள் கட்சியால் தொடர்ச்சியான கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில் தங்கள்கட்சி உறுப்பினர் மயூரன் அவர்களுக்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்து நகரசபை தவிசாளர் பதவி ரெலோவுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது.

ரெலோவின் தவிசாளராக இருந்த கருணானந்தராஜா மரணித்த பின்புதவிசாளர் தெரிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டது.
23-08-2022 அன்று நடந்து முடிந்த வல்வெட்டித் துறை நகர சபைத் தவிசாளர் தெரிவிலே, தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தினால் பிரேரிக்கப்பட்டவருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்த நிலையில் தங்களால் நியமிக்கப்பட்டமேற்குறிப்பிட்ட நபர் தவிசாளர் தெரிவில் வாக்களிப்பிற்கு சமூகம் கொடுக்காதலால் எமது கட்சி ஒரு வாக்கினாலேவெற்றி வாய்ப்பை தவறவிட்டமை மிகவும் வேதனையான விடயம்.

ஆகையால், தங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு எமது கட்சி சார்பில் பதவி வழங்கப்பட்டதுஎன்பதை நினைவுறுத்தி உடனடியாக நடைமுறைக்கு வரும் வண்ணம், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவருடைய பதவி நிலையை வறிதாக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றும் எமது கட்சியால் கோரிக்கை முன் வைக்கிறோம்.

எதிர்காலத்தில் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதற்கு இந்தநடவடிக்கை மிகவும் அவசியமானது என்று எமது கட்சி வழமைபோல கருதுகின்றது.

ஏனைய பல உள்ளுராட்சி மன்றங்களிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்புமுடிவுகளுக்கு கட்டுப்பட்டே எமது கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சியோடு ஒன்றிணைந்து இன்றுவரை செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கடந்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை நினைவுபடுத்தவிரும்புகிறோம்.

எதிர்காலங்களில் இந்த ஒழுங்குமுறை சீர்குலையாமல் இருப்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை நீங்கள்முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

விரைவில் தங்கள் பதிலையும் நடவடிக்கையும் எதிர்பார்க்கிறோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMF ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா  லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அவரின் கருத்துக்கு பதில் வழங்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கை குறித்து நான் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிரானவர் அல்ல. அதில் வரி தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தாங்கள் விரைவில் தேசிய சபையை ஸ்தாபித்து, குறித்த ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை முன்வைத்து கட்சித் தலைவர்களின் கருத்தைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் உள்ள முக்கியத் தகவல்களை விட்டுவிட்டு ஏனைய விபரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

கலைப்பீட கட்டிடத் தொகுதியின் கீழ்த்தளத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆதரவு நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. கலைப்பீடத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த நிலையம் திறக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு – வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாபெரும் போராட்டம் !

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும்  காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய  ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன், தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், தொழிற்சங்க மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 1979ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலிலுள்ள கொடூரமான பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் பிரச்சார  நடவடிக்கையொன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம். அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான  அதிருப்தியை நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம்.

இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே நாளையும் தொடர்கின்றது. குறிப்பாக தற்போது  காலி முகத்திடல் அகிம்சைவழி போராட்டக்காரர்களை கைதுசெய்யவும் இச்சட்டமே  பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே அச்சட்டத்தினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரப்படுவதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுமாறும் வேண்டப்படுகின்றர் என்றுள்ளது.

ஆலய திருவிழாவிலும் அடிதடி மற்றும் வாள்வெட்டு – வடக்கில் தொடர்ந்து அதிகரிக்கும் வன்முறைக்கலாச்சாரம் !

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது. நேற்று (08 ) மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (09.09) ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன. இச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து பொலிசாரால் வாள்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய தலைவரை விடுவித்த பின்னரே ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன் திரண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிட உயர்நீதிமன்றம் அனுமதி !

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சீனக்குடா எண்ணெய் தாங்கியை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள அதிகாரம் வழங்கிய அமைச்சரவை பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து இந்த மனுக்களை எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் வக்முல்லே உதித்த தேரர் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இந் நிலையில் இன்று மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, மனுக்களில் திருத்தத்துக்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை வகிக்காத காரணத்தினால் அவரை தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க நீதிமன்றில் அனுமதி கோரினார். இதற்கு உடன்பட்ட நீதிமன்றம் கோட்டாபயவை பிரதிவாதியாக இணைக்க இணக்கம் வெளியிட்டது.

இதேவேளை மனுக்கள், நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன

புத்தளத்திலிருந்து அழைத்து வரப்பட்டு யாழில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த சிறுவர்கள் – சீல் வைக்கப்பட்ட விடுதி !

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றினை நடத்தி, அங்கு வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட காரணமாக இருந்த விடுதி இன்று வெள்ளிக்கிழமை  சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்தார். புத்தளம் பகுதியில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஊதுபத்திகளை வழங்கி விற்பனையில் ஈடுபடுத்திய விடுதியே  சீல் வைத்து மூடப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கடந்த மாதம் குறித்த விடுதியில் இருந்து ஏழு சிறு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள் உட்பட 11 பேர் யாழ்ப்பாணம் சிறுவர் பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் குறித்த விடுதியினை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.

ராஜபக்ஷகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் ரணில் விக்கிரமசிங்க – குமார் வெல்கம  குற்றச்சாட்டு!

இலங்கையின்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நிகழ்ச்சி நிரலை விடுத்து ராஜபக்ச ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நவ லங்கா நிதஹஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாரியதொரு அமைச்சரவை நியமிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான செலவீனங்களும் பாரியளவில் அதிகரிக்கும்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என நாம் ஏற்கனவே உறுதியளித்திருந்தோம். எனினும் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்த அரசாங்கமே இலங்கையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு நல்லது செய்ய ஜனாதிபதி முற்படுவாராயின் அவருக்கு ஆதரவு வழங்க நாம் தயாராக உள்ளோம். இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் வாக்களிக்காதிருந்த போதிலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மீது எனக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக வாக்களித்தேன்.

எனினும் இப்போதைய சூழ்நிலையில் ரணிலால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது என தெளிவாக தெரிகிறது.

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் ராஜபக்ச குடும்பத்தினரால் ஆட்சிக்கு வர முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்

இலங்கை மக்களில் இரண்டு வீதத்தினர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – மனுஷ நாணயக்கார

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.