உள்நாட்டுச் செய்திகள்

Sunday, January 23, 2022

உள்நாட்டுச் செய்திகள்

“பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி” – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய சரத் பொன்சேகா,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு குடும்பமும் பயங்கரவாதிகள். பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின்கட்டளை அதிகாரி எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாலச்சந்திரன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், காற்சட்டை மற்றும் சட்டையை அணிவித்து ஒழுங்கப்படுத்தப்பட்டிருப்பார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மேலுமொரு அமைச்சுப்பதவி !

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று (06.10.2020) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தபால் மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக குறித்த பதவியும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா சமூகப்பரவல் தீவிரம் – 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

திவுலபிட்டிய பகுதியில் உள்ள மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது வரை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்த்து அவருடன் சம்மந்தப்பட்ட 707 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும், கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீள் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், திவுலப்பிட்டிய, மினுவாங்கொட , வேயாங்கொட ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலைகளின் நிர்வாகத்திடம் தமது ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை விட்டு வெளியேறாமல் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல தயாராக ​வேண்டும் என தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இலங்கையில் புதிதாக 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 220 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.

“இன்று முதல் சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்“ – வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்.குடாநாட்டில் நேற்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நேற்று (05) வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளது“ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு, நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று நோயாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர். பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அத்தோடு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றுக்கு உறுதியானோருடன் பழகியவர்களை அவர்களுக்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதனாலேயே தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆகவே மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இலங்கையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ! – கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் சாரதியும் ,நடத்துனரும் தனிமைப்படுத்தலில் .-

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துடனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும் காக்க முன்வந்து இனங்காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர்.

பின்னர் வேறொரு பேருந்தில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்துள்ளார்.

கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அந்த பேருந்தில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்டுத்தி வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை ஊரடங்கா..? வெளியாகியுள்ள புதிய தகவல் !

ஊரடங்கு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அரசாங்கம் இதனைக் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நபருக்கு மூன்று முறை கொரோனா வைரஸ் தொற்று !

ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறி அதன் பின்னர் மேலும் இரண்டு தடவைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடு திரும்பிய குறித்த இளைஞர், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது முதன்முறையாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பின்னர் தொற்றில் இருந்து குணமாகி வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த இளைஞர், அவரது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னர் செப்டம்பர் 17 ஆம் திகதி சிலாபம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் சோதனையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸுக்கு உள்ளாகியமை தெரியவந்தது.

அதன்பிறகு குறித்த இளைஞர் இரனவிலா கொவிட் -19 சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கொரோானா தொற்றில் இருந்து மீண்டு இரண்டாவது முறையாக வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இருப்பினும் மூன்றாவது முறையாக நோய்வாய்ப்பட்ட அவர், மீண்டும் ஒக்டோபர் 02ஆம் திகதி சிலாபத்தில் உள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதன்போதும் மூன்றாவது முறையாக அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இலங்கையில் ஒரே நபர் மூன்று முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்ட சந்தர்ப்பம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

“சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழ்த்தாத பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்“ – வவுனியாவில் மகிந்த தேசப்பிரிய !

“சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் நிகழாத விதத்தில் எடுக்கப்படும் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்“ என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று(05.10.2020) விஜயம் செய்த அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெரும்பான்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் என்பது அவ்வாறு அல்ல. ஜனநாயக ஆட்சியில் மாத்திரமல்ல சாதாரணமாக ஒரு மரணச்சடங்குகளில் கூட பெருந்தொகையினர் சிறுதொகையினரது உரிமைகளை நசுக்கி செயற்படும் விதத்தினை நாம் காண்கின்றோம்.

பெரும்பான்மை இனத்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து நாம் தேர்தலை நடத்தினால் சிறுபான்மை இனத்தவர்களின் விருப்பம் மறுதலிக்கப்படுகின்றது. ஆகவே ஒரு வர்ணத்தினால் தீட்டப்படும் ஓவியம் அழகாக இருக்காது. எனவே சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம் என மேலும் தெரிவித்துள்ளார்.