உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் – திணறும் இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேற்றப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அமர்வில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் வாக்குகளை பெற முயற்சிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா மற்றும் மொன்டனீக்ரோ ஆகிய நாடுகளின் அனுசரணையின் கீழ் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு பல நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையில் சர்வதேச அதிகார வரம்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட மற்றும் பிற வழிகாட்டுதல்களை வழங்குவது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி குற்றம் செய்ததற்கான தெளிவான சாட்சியங்களைக் கொண்ட நபர்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்து தீர்மானம் கவனம் செலுத்துகிறது.

இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைவதற்கு காரணமான பொருளாதாரக் குற்றங்களைச் செய்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த வரைவுத் தீர்மானங்கள் பரிந்துரைக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப நான் கடுமையாக பாடுபட்டேன் – நார்மல் ராஜபக்ஷ

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும் இன்னும் பல வெற்றிகள் வரவுள்ளன என்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் யார் என்பது முக்கியமில்லை என்றும் அமைப்பில் தலையிடாவிட்டால் வெற்றிகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.

புதிய அணித்தலைவரை கொண்டு வந்த பின்னர், இலங்கை அணி போட்டிகளில் தோல்வியை சந்திக்கும்போது நான்  விமர்சித்தேன்.

விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது, நான் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தேன். என்னை உருவாக்க அல்ல.

அமைப்பில் யாராவது தலையிடும்போது வீரர்கள் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

மன்னாரை கருவாடு காய வைக்கும் இடம் என குறிப்பிட்ட டயானாவின் கருத்து தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதிருப்தி!

மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு. எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

புதிதாக இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை ஓர் களியாட்ட இடமாகவும், குறிப்பாக தன்னை சிறு வயதில் கருவாடு காய வைப்பதற்கு மன்னாரிற்கு அனுப்ப உள்ளதாக தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

அவரது கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மன்னார் மாவட்டம் மிகவும் கலை, கலாச்சார பண்புகள், கடல் வளம், விவசாய வளம் அனைத்தோடு பொருந்தியதாக அமைந்துள்ளது.

தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது. தற்போதைய உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த காலங்களை விட இம்முறை உயர்ந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன.

எனவே மன்னார் மாவட்டத்தின் கலை கலாச்சார பண்புகள் தெரியாமல், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்கள் முன் கதைப்பது கண்டிக்கத்தக்க விடயம் என்பதோடு, இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கிய ஜனாதிபதி அதனை பரிசீலிக்க வேண்டும்.

குறித்த பெண் சில காலங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தார்.

நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசி இருந்தார்.

அவருடைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நால்வர் கைது !

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை இன்று (14) அதிகாலை 2 மணியளவில் யாழ் மாவட்ட காவல்துறையினர் கைது செய்ததுள்ளனர்.

இதன்போது அவர்கள் வசமிருந்த 61 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினார்.

யாழ் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கைப்பற்றப்பட்ட போதை பொருளும் மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தையும் ஒருவர் கொழும்பையும் சேர்ந்தவரென தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்.வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் 22 வயது இளைஞன் கைது !

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியில் நேற்று (13) இரவு 8.00 மணி அளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவில் ஒன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர், 11 வாள்களை கைப்பற்றியதோடு குறித்த வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவை தமது பூசை வழிபாடுகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கைதான இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரின் தந்தையே ஆலயத்தில் பூசைகளில் ஈடுபடுவர். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 24 வயது ஆசிரியை தற்கொலை !

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய ஆசிரியையே உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது 24) என யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய சதி – நால்வருக்கு எதிராக குற்றப்பகிர்வு பத்திரம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி  முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு  பிரதிவாதிகளுக்கு எதிராக  குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் முன்னிலையில் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம்  இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  குற்றம் சுமத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக கடமையாற்றிய கடந்த 2009 பெப்ரவரி முதலாம் திகதிக்கும் அம்மாதம் 14 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,  குருணாகலையில்  அவர் கலந்துகொண்ட மக்கள்  சந்திப்பொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தி  ஜனாதிபதி உள்ளிட்டோரை கொலை செய்ய சதிச் செய்ததாக சட்ட மா அதிபர்  இந்த நால்வருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந் நிலையில் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள்,  பயங்கரவாத தடை சட்டத்தின்  திருத்தங்கள் பிரகாரம், குறித்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு பிணையளிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இருப்பதாக குறிப்பிட்டு பிணை கோரி வாதங்களை முன் வைத்தனர்.  பிரதிவாதிகள்  கடந்த 13 வருடங்களாக  விளக்கமறியலில் இருக்கும் நிலையில் அதனை விஷேட காரணியாக கருதி பிணையளிக்குமாறு அவர்கள் கோரினர்.

எனினும்  வழக்குத் தொடுநர் குறித்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு முன் வைத்தது.

இந் நிக்லையில் பிணைக் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிப்பதாக நீதிபதி மகேன் வீரமன் அறிவித்த நிலையில், வழக்கு அன்றைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே படு கொலை வழக்கிலும் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த போதும், அவரை அண்மையில் கம்பஹா மேல்  நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய  மூன்று நாடுகளில் சீனா முதலிடத்தில் !

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய  மூன்று நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் மசூட் அஹமட்டுடான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய  மூன்று நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் தனியாரையும் உள்வாங்க முடியும் என கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடியான நிலையை சிலர் தமக்கு சாதமாக்க முயற்சி – ஜெனீவாவில் சீனா !

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபாண்டே தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தனிநபர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு எவ்வளவு தேவை..? – வெளியாகியுள்ள அறிக்கை !

இந்நாட்டில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு மாதம் வாழ்வதற்கு குறைந்தபட்ச தொகையாக 13,137 ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் துறை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

முந்தைய மாதத்தில் இதே எண்ணிக்கை 12,444 ரூபாவாகக் காட்டப்பட்டது, இம்முறை வளர்ச்சி 5.57% ஆக உள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவையான தொகை 52,552 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 56,676 ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன  இலங்கையின் தற்போதைய பொருளாதார – வாழ்க்கைச்செலவு பற்றி குறிப்பிட்ட போது,

இலங்கையில் வாழும் மக்கள் வறுமையில் இருந்து வெளிவர ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவை . இலங்கையில் தொழில் புரிவோரில் 70 வீதமானோர் 62 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள். இலங்கையின் போசாக்கு குறைபாட்டை சர்வதேச சமூகத்தினரின் அறிக்கையை நிராகரிக்கிறதே தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையின்படி நாட்டில் வறுமை தீவிரமடைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 30 வீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதும் நினைவில்கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச ஆதரவுடன் இலங்கைக்கு உணவு வழங்கும் திட்டத்தை உலக உணவுத் திட்டம் ஆரம்பித்துள்ளது.” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.