உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.” – இரா.சாணக்கியன் விசனம் !

கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

´நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே. இலங்கையராக அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம். அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள்.

 

மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும். மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும்.” – இலங்கைக்கு வழங்கப்பட்டள்ள உறுதி !

சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இலங்கை ஜனாதிபதியுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை நடத்தியதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமைக்கு மேலாக சிவில் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையை மீண்டும் அப்பாதையில் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு விவகாரங்களில் கூட்டு மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” எனத் தூதுவர்கள் தெரிவித்தனர்.

பின்வரும் 3 முக்கிய செயன்முறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியை ஊக்குவிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

1.ஜீஎஸ்பி +

2.சர்வதேச நாணய நிதியம்

3.மனித உரிமைகள் பேரவை

இந்தச் செயன்முறைகளை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு மேலும் கூறியுள்ளது.

உயிரை தியாகம் செய்யுமாறு கூறிய பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி ..?

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இறுதிப் போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும் அல்லது போராட்டத்தில் வெற்றி பெறுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

“நாட்டை மீட்க முன்வராது அமைச்சு பதவிகளுக்காக பேரம்பேசுகிறார்கள்.” – உதய கம்மன்பில விசனம் !

நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

பதவிகளைப் பகிர்வது பற்றிப் பேசாமல் நாட்டைக் காப்பாற்றுவது பற்றிப் பேசுவதே இன்று செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் இன்னும் அதிகாரப் போட்டியே நிலவி வருவதாகவும், நாட்டை கூட்டாக மீட்கும் முயற்சி இல்லை என்றும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை என்றும் அவர் கூறினார்.

இது வரையில் அனைத்துக் கட்சி அரசாங்கம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்ததாகவும் பூமியில் இன்னும் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

10 கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு முன்பள்ளிகளில் இராணுவ அடாவடிகள் – நாடாளுமன்றில் சிறிதரன் !

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறுக்கத்தக்க விடயம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு முன்பள்ளிகளின் பெயர் இராணுவத்தின் தலையீட்டுடன் மாறப்பட்டுள்ளமையை சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கல்வி திணைக்களங்களின் கீழ் இருந்த முன்பள்ளிகள், சிவில் பாதுகாப்பு தரப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் முன்பள்ளிகளை நிர்வகிப்பது பிறிதொரு இன அடக்கு முறை என்றும் சிறிதரன் குற்றம் சாட்டினார்.

இராணுவத்தினர் நிர்வாகத்தின் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை மாகாண கல்வி திணைக்களங்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு தற்துணிவை கற்றுக்கொடுக்காத பள்ளிக்கூடங்கள் – பரீட்சை பெறுபேறு தொடர்பான அச்சத்தால் யாழில் மாணவி தற்கொலை !

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு ஒன்றை எடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப் பரீட்சைக்கு மருத்துவப் பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். தான் எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் மாணவி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் மாணவி நேற்று (09) மாலை தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயசங்கர் நிவேதிகா வயது 22 என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை இடம்பெற்று உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

………………………….

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பதிவாகும் தற்கொலைகளில் பாடசாலை மாணவர்களின் தற்கொலைகளும் கனிசமான எண்ணிக்கையில் காணப்படும். இந்தப்பாடசாலைகள் மாணவர்களுக்கு தற்துணிவை வளர்ப்பதில்லை. பரீட்சைகளுக்கூடாகவும் – போட்டிகளுக்கூடாகவும் – மாணவர்களை இன்னமும் அதைரியப்படுத்துகின்றனவே தவிர தற்துணிவை கற்பிப்பதில்லை. பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை கற்பிப்பதுடன் நிறுத்தி விடுகின்றனர் . வாழ்க்கையிலுள்ள சவால்கள் பற்றியோ..? அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தையோ வளர்ப்பதில்லை. இதனாலேயே துணிவில்லாத சமூகம் ஒன்று தோன்றிவிடுகிறது. மேலும் பாடசாலைகளில் பரீட்சைகள் தொடர்பில் மாணவர்களை அவ்வளவு உளநெருக்கடிக்கு உற்படுத்துகின்றது இந்த பாடசாலையும் – இலங்கையின் கல்வி அமைச்சும். பரீட்சையை ஒரு போட்டியாக மட்டும் சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகளும் சரி – இலங்கையின் கல்வி முறையும் சரி பரீட்சைகளில் தோற்போர் – சித்தியடையாதோர் பற்றி கவனம் செலுத்துவதே கிடையாது. இந்த கல்வி முறையில் உள்ள சிக்கலே இலங்கையில் மாணவர்கள் தற்கொலைக்கு மிகப்பெரிய தூண்டுதல். வெறுமனே கற்பித்தலோடு நின்று விடாது ஆசிரிய சமூகம் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான தற்துணிவை ஏற்படுத்தும் கல்வியை வழங்க முன்வர வேண்டும். அதுவே இந்த மாணவர் தற்கொலைகளை குறைக்க ஒரே ஒரு வழிமுறை.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் !

“கோட்டகோகம” போராட்டத்தின் முக்கிய செயட்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு எதிராக கோட்டை பொலிசார் மற்றும் கொம்பனித்தெரு பொலிசார் இரண்டு தனித்தனி B ரிப்போர்ட்களை தாக்கல் செய்துள்ளனர் .

இதேவேளை காலிமுகத்திடல் போராட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.மல்லாகத்தில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 14 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை !

2016 ஆம் ஆண்டு வவுனியா – மணிப்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை ஆட்கடத்தல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட நபருக்கு  கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு இக்குற்றச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து எதிரி கைது செய்யப்பட்டுவவுனியா மேல் நீதிமன்றில் எதிரிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்து.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது எதிரி தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சிறுமி சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட எதிரிக்கு ஆட்கடத்தல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், துஸ்பிரயோக குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து  தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், 5 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடும், செலுத்த தவறும் பட்சத்தில் இரு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு !

தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முதல் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் அதன் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் வாக்கெடுப்பு நாளில் விசேட வாக்கெடுப்பு நிலையங்களை அமைத்தல், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் முடியும் வரை தேர்தல் ஆணைக் குழு வெளியிடும் நெறிமுறைகள் செல்லுபடியாகும் என்றும் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்குவதும் அதில் அடங்கும்.