உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பால் இலங்கைக்கு பிரகாசமான எதிர்காலம் – அமெரிக்கா

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இதன் போது, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில் பதவியேற்றமை பற்றியும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பதையும் நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், எமது நாடும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் இருந்து வருகின்றனர் என்றும் நல்லாட்சியை அரவணைத்துச் செல்லும், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் உறவுகள் இலங்கையில் மலரும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த போது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர நிலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, இந்த அறிவிப்பை வெளியிட்ட 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும், இல்லையெனில் அது இரத்து செய்யப்படும்.

நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் !

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நாட்டையும் மக்களையும் இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி மனுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனோரீதியான அழுத்தங்களை கொடுத்த அமெரிக்கா – விமல் வீரவங்ச பகீர் !

கோட்டாபாய ராஜபக்சவை பதவியை கவிழ்ப்பதிலும் – ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பிலும் மேற்குலக நாடுகளின் பங்களிப்பு – குறிப்பாக அமெரிக்கா அதிகமாக மறைமுகமாக  செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார். ஆகவே இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன .

அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் தகுந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் தற்போது சட்டபூர்வமான அரசாங்கம். ஆனால் தற்போதைய அரசாங்கம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை.

மேலும் தமது திட்டங்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்.  நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம். அதுமட்டுமன்றி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்த நபர் விமான நிலையத்தில் வைத்து கைது !

ஜூலை 13ஆம் திகதி ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து, ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்றதாக தெரிவிக்கபபடும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானிஸ் அலி எனும் குறித்த நபர், இன்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற போது விமானத்தில் வைத்து CID யினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சியொன்று பதிவிடப்பட்டு, அது தற்போது வைரலாக பரவி வருகின்றது.

குறித்த வீடியோவில்..

அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, விமானத்தில் ஏறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கைது நடவடிக்கை தொடர்பில், குறித்த நபர் ஆட்சேபனை வெளியிடுவதோடு, அவரை கைது செய்ய 3 அதிகாரிகள் முயற்சி செய்வதோடு, அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், விமானத்திலிருந்தவர்களால் அவரது கைதுக்கான நீதிமன்ற பிடியாணை மற்றும் பயணத்தடையை காண்பிக்குமாறு தெரிவிப்பதை, குறித்த வீடியோ காட்சியில் காணக்கூடியதாக உள்ளது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 9ல் போராட போகிறாராம் பொன்சேகா !

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான விவாவத்தில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள். அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேநேரம் ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையைக் குலைக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் ஓருவரை இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்தமுடியாது. எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுகூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்த நிலையில் போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டார்.

……..

இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒவ்வொரு தென்னிலங்கை தலைவர்களுமே கூட்டாக பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் தான்.  இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை ஊழல்வாதிகள் என  கடுமையாக சாடும் இதே பொன்சேகா கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்தே ராஜபக்ஷக்களுக்கு எதிரான தேர்தலை எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தனக்கான ஆதரவுத் தளத்தை உறுதி செய்ய இன்று ஊழல் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.

பொன்சேகாவின் இந்த பாராளுமன்ற உரை கூட தனித்த ஒரு இனத்தை மட்டுமே மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நேரத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் அனைத்திலும் இவருக்கும் பங்கு உண்டு.இறுதி போர்க்குற்றங்கள் தொடர்பிலும் – காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களிலும் வாய் மூடிக்கொண்டிருக்கும் இதே பொன்சேகா இன்று மக்களின் உணர்வு – மனிதாபிமானம் போன்றன பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையானது.

இன்று நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு தனது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார் பொன்சேகா. இன்று தென்னிலங்கை சமூகத்தின் கனிசமான இளைஞர்களும் போர் வெற்றியை கோட்டாவுக்கு கொடுக்க கூடாது என்பதற்காக பொன்சேகாவுக்கு கொடுக்கிறார்கள். கோ கோம் கோட்டா போராட்ட களங்களிலும் இதனை அவதானிக்க முடிந்தது.

ஆக மொத்தத்தில் ஒரு விட இன்றைய கால போராட்டங்களில் தெளிவாக தெரிகிறது ” இந்த இலங்கை மீண்டும் இனவாத சாக்கடைக்குள் மூழ்கி மூழ்கியே இருக்க போகிறதே தவிர மீட்சி அடைய வழியே இல்லை”

இலங்கையை வந்தடைந்தது தமிழக அரசின் 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் !

தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த மனிதாபிமான உதவி, இந்திய உயர்ஸ்தானிகரினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அதனை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள், மூன்றாவது கட்டமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இதுவரையில், 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்துகள் என மொத்தமாக சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

தூய்மைப்பணியாளர்கள் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணியாவிட்டால் கொடுப்பனவு இல்லை !

யாழ். மாநகர சபை திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்றும், அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்வின் போதே இந்த விடயம் சபை உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

யு.எஸ்.எய்ட் அமைப்பின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களுக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அணிகலங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், பெரும்பாலான திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணியாது பணிகளில் ஈடுபடுகின்றமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகிறது.

இது சுகாதாரத்திற்கு தீங்கானது என்பதால், இனிமேல் குறித்த ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு – மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை !

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்டா கோ கம மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த கும்பலை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட போராட்ட இடத்தை சுற்றி கடமையில் ஈடுபட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மே 09 தாக்குதலின் பின்னர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் சட்டத்தை அமுல்படுத்துவதிலும் பொலிஸ் மா அதிபர் தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தனக்கும் – வீட்டுப்பணிப்பெண்ணுக்கும் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வைத்தியர் – மரபணு பரிசோதனையில் சிக்கினார் !

வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பிரசவித்த சிசு கொல்லப்பட்ட சம்பவத்தில் நேற்று மட்டக்களப்பு நகரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் மேல்மாடி வீதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு பெற்று தங்கியிருந்து கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவரை தனது வீட்டு வேலைக்கு அமர்திய நிலையில் 2017 மார்ச் 26 ம் திகதி குறித்த பணிப்பெண்ணுக்கு ஆண்பிள்ளை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையை சீலையால் சுற்றி வீட்டின் கிணற்றினுள் வீசிய நிலையில் பணிப்பெண்ணுக்கு தொடர்ந்து இரத்த போக்கு ஏற்பட்ட காரணமாக மார்ச் 26ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 31 ம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் தண்ணீரில் நாற்றம் வீதுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் கிணற்றை சோதனையிட்டபோது கிணற்றில் இருந்து சிசு ஒன்றை மீட்டதுடன் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது குறித்த பணிப்பெண் குழந்தை தனக்கும் வைத்தியருக்கும் பிறந்தாகவும் வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் சிசுவை தான் கிணற்றில் வீசியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என வைத்தியர் தெரிவித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய குழந்தையின் இரத்த மாதிரியும் வைத்தியரின் இரத்த மாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மரபணு பரிசோதனை முடிவில் குறித்த குழந்தை வைத்தியருக்கு பிறந்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மட்டு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பரிசோதகர் தலைமையிலான பொலிஸாரின் தொடர் விசாரணையில் நேற்று கண்டி வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் குறித்த வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தனக்கு பிறந்த குழந்தையை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பணிப்பெண் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் ஏற்கனவே அவருடைய சகோதரியின் கணவருக்கு பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.