உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தமிழரின் பூர்வீக நிலத்தில் விகாரை – முல்லைதீவு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு !

குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதியின்மை ஏற்படாத வகையில் காவல்தறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும், இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி. எஸ். எஸ். தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரனும் முன்னிலையாகியதோடு, எதிர்தரப்பிலே காவல்துறையினர் மன்றில் முன்னிலையாகினர்.

இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழக்கினுடைய தீர்ப்பை இன்றைய தினம் வழங்கினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் மாத்திரமே இந்தியாவின் கவனம் உள்ளது. ஏனைய விடயங்களில் இந்தியா தலையிடவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறிய அவர்,

அந்தக் காரணிகளைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. எனவே சமூக ஊடகங்களில் வரும் அனைத்திற்கும் தம்மால் பதிலளிக்க முடியாது. இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்ற வகையில், இந்த நேரத்தில் கொழும்பிற்கு பொருளாதார ரீதியாக உதவக்கூடிய வழிகளில் புது டெல்லி கவனத்தை செலுத்துகிறது

இலங்கை மக்கள் எமது அண்டை வீட்டாராக இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தியாவின் அர்ப்பணிப்பாகும். இலங்கையர்கள் நட்பான மனிதர்கள். இந்த நட்பின் உணர்திறன் காரணமாகவே அவர்கள் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். தற்போது ஏதிலிகள் நெருக்கடியும் இல்லை” என்றார்.

most-tracked flight ஆக சாதனை படைத்த கோட்டாபாய பயணித்த விமானம் – சிங்கப்பூரில் கோட்டபாய !

வுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவிலிருந்து கோட்டாப ராஜபக்ஷ சென்ற SV788 விமானம் சற்று நேரத்திற்கு மன்னர் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.

இதேநேரம்  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில்லை என்றும் அது குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் கோட்டபாய ராஜபக்ஷ பயணித்த சௌதி அரேபியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தை ஏராளமானோர் தேடியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை அதிகமானோரினால் கண்காணிக்கப்பட்ட விமானமாக (most-tracked flight) இது மாறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலகம் முழுவதும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புளூம்பேர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Flightradar24.com இணையதளத் தரவுகளின்படி, GMT 7:43 வரை 5,000க்கும் மேற்பட்ட பயனர்கள் “Saudia flight 788” ஐத் தேடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பதவியை ஏற்க தயாரான பொன்சேகா – மீண்டும் சஜித் பிரேமதாசவுக்கு ஏமாற்றம் ?

“பெரும்பான்மை எம்.பி.க்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் ஜனாதிபதியாக பொறுப்பேற்கத் தயார்” என்று இலங்கை முன்னாள் இராணுவத் தளபதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இதுகுறித்து சரத் பொன்சேகா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, “இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை ஜனாதிபதி  பதவிக்கு போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்பதவியை நிச்சயம் ஏற்பேன்” என்றார்.

இதுபற்றி கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசாவிடம் கூறியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, “இது எனது தனிப்பட்ட கருத்து. இதனை கட்சித் தலைமையிடம் கூறத் தேவையில்லை” என்றார்.

முன்னதாக, கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்தது. கடந்த சில நாட்களாக அதிபர் மாளிகையிலே போராட்டக்காரர்கள் தங்கியிருந்தனர்.

ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் உறுப்பினரான பொன்சேகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் ஜனாதிபதி கோட்டாபய !

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் தனது முடிவினை அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு கோட்டாபய அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கும் போராட்டக்காரர்கள் – ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்படும் தடை !

நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதோடு, தாக்குதலை மேற்கொள்ள முன்நகர்ந்து வந்த இராணுவத்தினருடன்கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து வேறொரு பகுதிக்கு கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு பாரதூரமான செயலாக மாறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் நாடாளுமன்றத்தின் கடைசி வீதித்தடை ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க ராணுவத்தினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் – சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் !

கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்திருந்த நிலையில் கோட்டாபய  இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பதவி விலகல் தொடர்பான ஆவணங்களை இன்று உத்தியோகபூர்வமாக சபாநாயகரிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை.

இந்நிலையில் அவ்வாறு பதவி விலகல் நடைபெறவில்லை என்றால் தான் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சபாநயாகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால் பதில் தாக்குதல் நடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை !

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி  பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. எனினும், இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை என எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மான் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சந்திப்பில் முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு முப்படையினர் இதன்போது கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கான அனுமதியை தம்மால் வழங்க முடியாது என தாம் தெரிவித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே, தாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் – ஜனாதிபதியுமானார் ரணில் விக்கிரமசிங்க – இலங்கை அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க பல தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிராத நிலையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனமே கிடைத்திருந்தது. அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி இன்று பதில் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொள்ளுங்கள் – கண் கெட்ட பிறகு டக்கரின் சூரிய நமஸ்காரம் !

நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், அரசியலமைப்பின் அடிப்படையில் விடயங்களை முன்னகர்த்தி நாட்டிற்கு வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதே தன்னுடைய எதிர்பார்ப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதை ஆரம்பமாக கொண்டு முன்னோக்கி நகர்வததே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

…………………………..

ஜனாதிபதி கோட்டாபாய தலைமையிலான அரசு ஆதிக்கம் மற்றும்  பதவியிலிருந்த போது – புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான பெரிய அழுத்தங்கள் முன்வைக்கப்படவில்லை.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் – அபிலாசைகள் தொடர்பில் எந்த அழுத்தங்களும் ராஜபக்சக்களிடம் முன்வைக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக கூறி பல மாதங்களை தாண்டிவிட்ட நிலையில் இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

 

வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியை வைத்துக்கொண்டு பல விடயங்களுக்கும் – பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதாக கூறி இன்று வரை அவற்றை அவர் பெற்றுக்கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சக்களின்  அதிகாரம் நாட்டில் மேலோங்கியிருந்த போது டக்ளசின் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் பல அடாவடிகடிகளிலும் ஈடுபட்டிருந்த அதே நேரம், வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி பணம் பெற்றிருந்ததாகவும் பல தகவல்கள் உள்ளன.