உள்நாட்டுச் செய்திகள்

Monday, October 18, 2021

உள்நாட்டுச் செய்திகள்

“மனிதாபிமானமற்ற இந்த அரசாங்கம் மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கிறது.” – சஜித் பிரேமதாஸ

“மனிதாபிமானமற்ற இந்த அரசாங்கம் மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கிறது.” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் கொரோனா நிலவரம் – விலைவாசி உயர்வு என்பன தொடர்பாக சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

கொவிட் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மூடப்பட்ட பல நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கையை நிலையை அறிந்து நிவாரண பொதிகளை வழங்கியுள்ளன. ஆனால், இலங்கையில் நடப்பது என்னவென்றால் எங்கள் செல்வாக்கின் காரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணப் பொதிகூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களும் தியாகம் செய்யப் பட வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் செய்த தியாகங்களை அரசாங்கம் பார்க்கவில்லை போலவும் தெரியாது என்பது போலவும் இருப்பதை நம்ப முடியாதுள்ளது. மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கும் அரசாங்கமே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.

மக்களை தியாகம் செய்யுமாறு கோரும் அரசாங்கமே உணவு செலவழிப்பின் ஆற்றலில் உலகில் மிகவும் வறிய ஐந்தாவது இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. நாட்டு மக்கள் தங்களின் ஊதியத்தில் 66 சதவீதத்தை உணவுக்காகச் செலவழிக்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை அளித்து நாட்டுக்கு 60 கோடி ரூபா வறிதாய் பறிபோக காரணமாக இருந்த இந்த மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று வேளை போக ஒரு வேளை உணவைக்கூட உண்ணாமல் பெருமூச்சு விடும் நூறாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் தியாகம் செய்யுமாறு மக்களிடம் கேட்பதை விட பெரிய கோரிக்கை எதுவுமில்லை.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை மட்டுப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனூடாக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது என்றார்.

“கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள்.”- ஆளுங்கட்சி உறுப்பினர் மக்களுக்கு அறிவுரை !

கொவிட் தொற்று நோய் பயப்பட வேண்டிய ஒரு கொடிய நோய் அல்ல என மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மரணத்தின் பயமே மரணத்துக்கு முக்கிய காரணம் என இன்று(26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இன்று இலங்கையின் இறப்பு வீதம் 1.9 ஆகும். மக்களின் மனதில் மரண பயத்தை உருவாக்குவது நல்லதல்ல. மரண பயமே இறப்புக்கு ஒரு முக்கிய காரணம். 81 சதவீத மக்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்கின்றனர். 14 வீதமானோர் லேசான காய்ச்சலுடன் குணமடைகிறார்கள். எனவே பயப்படுவதற்கு இது ஒரு கொடிய நோய் அல்ல. சிலருக்கு தாங்கள் நன்றாகத் தேறி வருகிறோம் என்று கூடத் தெரியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“வன்னியில் மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழல்.” – அடைக்கலநாதன்

மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவதாக  வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவுக்கு வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லது கட்டுப்பாட்டு விலையில் எந்தப் பொருட்களையும் பெற முடியாத சூழ்நிலை என் தேர்தல் மாவட்டங்களான மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ளது. ஏழைகளின் உணவுப் பொருட்களாகக் கருதப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தை ஆராய எந்த அரச அதிகாரிகளும் முன் வருவதாக தெரியவில்லை. பொருட்களின் விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறுபட்டு கூடிய விலையில் பொருட்கள் யாவும் விற்கப்படுகின்றன.

அரசு விதித்த கட்டுப்பாட்டு நிர்ணய விலை பொருந்தாததாக இங்கு காணப்படுகிறது. இதற்கு காரணம் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு என்றே கூறவேண்டும். மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.

எனவே இவ் விடயத்தினை கவனத்தில் இருத்தி இந்த மக்களின் அவதி நிலையினை போக்க உரிய நடவடிக்கை  எடுக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 40 வீதமாக அதிகரித்துள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, இலங்கையின் மத்திய மாகாணத்தில் கடந்த வாரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக 20ஆம் திகதி வெளியிடப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மேல் மாகாணத்திலேயே அதிகமாக 5 7வீத தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘சிங்களம் தெரியாததால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் அதிகாரிகள். – திரைமறைவில் உள்ளவர்கள் யார்..? – கோவிந்தன் கருணாகரம் காட்டம் !

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர் வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் சிங்கள அதிகாரிகள் தவிர்ந்து ஏனைய தமிழ் அதிகாரிகள் குறித்த அவர்களின் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களால் அனுமதிக்கப்படாமை தொடர்பில் இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டதன் நிமித்தம் இந்த நாடு முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு உள்நாட்டுப் போரைச் சந்தித்திருந்தது. அந்தப் போரின் நிமித்தம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றது. இருந்தும் 2009லே போர் மௌனிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போர் எதற்காகத் தொடங்கப்பட்டது? எப்படித் தொடங்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக மீண்டும் அந்த நிலைமையை ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் மேலதிகாரிகளும் தமிழ் பேசும் மக்களை ஒடுக்கி துன்புறுத்தும் நிலைமை அதிகாரிகள் மட்டத்திலே அரங்கேறுகின்றது.

கடந்த வைகாசி பதினொராம் திகதி பொதுச் சேவை ஆணைக்குழுவானது திட்டமிடல் பிரிவில் அதிகாரிகளாகக் கடமை புரிந்தவர்களை நேர்முகப் பரீட்சைகள் மற்றும் சேவை மூப்பின் அடிப்படையில் அவர்களுக்குப் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு கொடுத்து பொது நிர்வாக அமைச்சிற்கு பத்து அதிகாரிகளைச் சிபாரிசு செய்திருந்தது. பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் ஐவர் சிங்களவர்கள், நால்வர் தமிழர், ஒருவர் முஸ்லீம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

பொது நிர்வாக அமைச்சு இந்தப் பத்துப் பேருக்கும் கடந்த ஆகஸ்ட் 07ம் திகதிக்கிடையில் அவர்களது கடமைகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்த அமைச்சுகளில் பொறுப்பேற்கும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதில் சிங்களவர்கள் ஐவரும் எவ்வித தடையும், இடையூறுகளுமின்றி தங்களது கடமைகளை தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அமைச்சுகளில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

ஆனால் ஏனைய தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐவரும் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற இடத்தில் ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இவர்களை பதவியேற்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கு சிங்கள மொழி மூலம் தான் நிர்வாகம் செய்ய வேண்டும் அதனால் அந்த அதிகாரிகள் தகுதியற்றவர்கள் என்ற காரணம் அமைச்சுக்களின் செயலாளர்களால் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிகழ்வானது திட்டமிட்ட ஒன்றாகவே இவ்வாறு பதவி உயர்வு பெற்ற தமிழ் அதிகாரிகளுக்கு நடைபெற்றிருப்பதாகவே நான் அறிகின்றேன். இது வெறுமனே அமைச்சுக்களின் செயலாளர்களால் மாத்திரம் இடம்பெற்றிருக்க மாட்டாது. இவர்களுக்கு யாரோ மேல் அதிகாரியோ, அரசியல்வாதிகளோ பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் சிங்களவர்களைத் தவிர்த்து மிகுதி தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐந்து பேரையும் தங்கள் பதவிகளைப் பொறுப்பெடுப்பதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இந்த நாட்டிலே கடந்த கால யுத்தங்கள் நடைபெற முன்பு எந்த திணைக்களங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழ் அதிகாரிகள் தான் தலைமைப் பொறுப்புகளில் இருந்த வரலாறுகளே இருக்கின்றது. இதன் பிற்பாடு நிர்வாக பொறுப்புகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுகளிலும் பல்வேறு இடையூறுகள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகத்தான் இந்த நாட்டிலே போர் மூண்டது, இத்தனை அழிவுகளையும் இந்த நாடு சந்தித்தது என்ற பட்டறிவை இந்த அரசு கொண்டிருந்தாலும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு தமிழ் பேசும் மக்களைத் தள்ளுவதற்கான ஒரு உத்தேசமாக இருக்கின்றதோ என்று எண்ணத் தோணுகின்றது.

இது சிங்கள தேசம் என்ற சிந்தனையில் சிங்களவர்களைக் கொண்டுதான் அரசியல் ரீதியானதாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்த நாட்டை நடத்தப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையாக தமிழ் பேசும் வாழும் பிரதேசம் உங்களுக்குத் தேவையில்லையா? அல்லது எதிர்காலத்திலும் தமிழ் பேசும் மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கப் போகின்றீர்களா?

மத்திய அரசாங்கத்திலே சிங்கள மொழி மூலம் தான் நீங்கள் நிர்வாகம் செய்ய வேண்டும். சிங்களவர்களைக் கொண்டு தான் நீங்கள் நிர்வாகம் செய்யப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிற்கு எதற்காக நீங்கள் சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றீர்கள். 98 வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்களவர் ஒருவரைப் பிரதம செயலாளராக நியமித்திருக்கின்றீர்கள். வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலே சிங்கள அரச அதிபர்களை நியமித்திருக்கின்றீர்கள். 75 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் தொடர்ச்சியாக சிங்களவர் ஒருவரையே பிரதம செயலாளராக வைத்திருக்கின்றீர்கள்.

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது?

எனவே இவ்விடயமானது இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அறிகுறியாகவும், மீண்டும் ஒரு போரை ஏற்படுத்துவதற்குமான எத்தனிப்பாகவுமே தென்படுகின்றது.

இன்று பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் தங்கள் வேலை செய்த இடங்களில் விடுவிப்பினைப் பெற்று மத்திய அரசின் கீழ் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக பொது நிர்வாக அமைச்சிலே வெறுமனே கையெழுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே அந்த உயர் அதிகாரிகளை தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று அவர்களது கடமைகளைச் செய்ய விட வேண்டும். அல்லது வடக்கு கிழக்கிலே இருக்கும் சிங்கள அதிகாரிகளை அங்கே எடுத்துவிட்டு இவர்களை வடக்கு கிழக்கிலே அவர்களது கடமைகளைச் செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தாண்டவம் – 11 நாட்களில் 2000 பேர் பலி !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நாளாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 14ஆம் திகதி 161 பேரும், 15ஆம் திகதி 167 பேரும், 16ஆம் திகதி 171 பேரும், 17ஆம் திகதி 170 பேரும், 18ஆம் திகதி 186 பேரும், 19ஆம் திகதி 195 பேரும், 20ஆம் திகதி 198 பேரும், 21ஆம் திகதி 183 பேரும், 22 ஆம் திகதி 194 பேரும், 23ஆம் திகதி 190 பேரும், 24ஆம் திகதி 198 உயிரிழந்துள்ளன.

 

இதே நேரம் தற்போதைய கொரோனா பரவல் நிலவரப்படி இலங்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 139 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனா நிவாரண நிதிக்காக முழுச்சம்பளத்தை கொடுத்தால் என்னால் உயிர்வாழ முடியாது.” – ஆளுங்கட்சி உறுப்பினர் வேதனை !

கொரோனா நிவாரணநிதியத்தின் செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய இந்த மாத சம்பளத்தை முழுமையாக வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்தனர். முக்கியமாக ஆளுங்கட்சியினர் ஏகமனதாக தங்களது சம்பளத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்த கொவிட் நிதியத்துக்கு தனது சம்பளத்தை வழங்க முடியாதென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ,

கொவிட் நிதியத்திற்கு முழுச் சம்பளத்தையும் வழங்குவதற்கு ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இன்று அரசியல்வாதிகள் பலரும் சம்பளத்தை கொவிட் நிதியத்திற்காக அன்பளிப்பு செய்கின்றனர். எனக்கு சம்பளத்தை முழுவதும் அளிக்க முடியாது அவ்வாறு முழு சம்பளத்தையும் அளித்தால் என்னால் உயிர்வாழ முடியாதென்பதால் அரைச்சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன்.

எனது தந்தையார் த பினான்ஸ் நிறுவனத்தில் முதலிட்டதால் நட்டமடைந்தார். அதனால் இன்று முழுச் சம்பளத்தையும் நிதியத்திற்கு அளித்துவிட்டால் நான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டுவிடுவேன்” என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 4 இலட்சத்தை கடந்த கொரோனத்தொற்று !

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வரையில், நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகிய நிலையில், மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்று உறுதியானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 163 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 750 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைகழக பகிடிவதை தொடர்பில் மாணவர்கள் பொலிஸாரிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய சட்ட திருத்தம் !

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” – எம்.கே.சிவாஜிலிங்கம் இரங்கல் !

“இன மத பேதங்களை கடந்து செயல்பட்டவர் மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” என  என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Valvettithurai.org :: Tamil News, News about Valvai. (Valvettiturai,  Valvai, VVT, வல்வெட்டித்துறை, வல்வை)

அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று உறுதியாகக் கூறியவர். பல்லின ,பல்மத நாடு என்று உரத்துக் சொன்ன குரல் மங்களவின் குரல்.

தெற்கில் தெய்வேந்திரமுனையில் பிறந்த மங்கள வடக்கில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முனையிலுள்ள உலக சாதனை வீரன் ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தவர்.

அமரர் மங்கள சமரவீர அவர்களினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிவிட்டனர். மங்கள சமரவீர நாட்டின் ஐனாதிபதி பிரதமர் பதவிகளில் இருந்திருந்தால் இனப்பிரச்சனைகள் தீர்க்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கும்.

இனமத பேதமற்ற அரசியல் தீர்வுக்காக போராடிய அமரர் மங்கள சமரவீர அவர்களின் இறப்பிற்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.