உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானம் !

நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

உரப் பிரச்சினை மற்றும் அதனால் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்துவதற்கு இயலாமை காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் அறவிட முடியாத கடனாக அவற்றை வங்கியும் அறிவித்துள்ளமையினால் விவசாயத்தை மேற்கொள்ள மேலதிக கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கதி !

குருநாகல் யக்கஹாபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி, அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ உயர் அதிகாரி பொதுமகன் ஒருவரை காலால் உதைக்கும் காணொளி காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவியதை அடுத்து, குறித்த அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

05 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை, குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவப் படைப் பிரிவின் இராணுவ காவல்துறையினரும் சமாந்தரமான இராணுவ விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் நேற்று திங்கட்கிழமை குறித்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரிகேட் கமாண்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்திருந்தது.

மக்காவில் தமிழ் !

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமியத் தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

திருடன் என அழைப்பதை நிறுத்துங்கள் – நாமல் ராஜபக்ஷ காட்டம் !

நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று அழைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எனது குடும்ப உறுப்பினர்களோ  நானோ எந்த எரிபொருள் பேரங்களிலும் ஈடுபடவில்லை. நம் நாட்டை இந்த நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அந்த குறிக்கோளுக்காக நாம் ஒருவர் மீது ஒருவர் குற்ற விரல் நீட்டும் பழி விளையாட்டை முதலில் நிறுத்த வேண்டும். ஒருவரையொருவர் ஹொரா என்று அழைக்கும் இந்தப் போக்கை நிறுத்த வேண்டும். இனி அரசியல் ஒரு பொருட்டல்ல, நாம் செய்ய வேண்டியது ஒன்றுபட்டு மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவதுதான்”
போலியான செய்திகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு பதிலாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பு “கோட்டாபாய ராஜபக்ச ஒரு லீ குவான் யூ“ என்ற விமல் வீரவங்ச – இன்று “ஜனாதிபதியை காணவில்லை“ என்கிறார் !

மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையில் ஜனாதிபதியையும் பிரதமரையும் காணவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல கிலோமீற்றர் தூரம் வரிசையில் நிற்பதாக குறிப்பிட்டார்.
குடிமக்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி வலிக்கு சற்று நிவாரணம் தர ஜனாதிபதி குறைந்தபட்சம் ஏதாவது சொல்ல வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்டு வருவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறலாம் என நினைத்தமை தவறானது.
அவர் தேசியப்பட்டியல் மூலம் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வந்த தோல்வியடைந்த வேட்பாளர் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளையாட்டை விட்டுவிட்டு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
……………………..
இவ்வாறு குறிப்பிட்டுள்ள விமல்வீரவங்சவே ராஜபக்ஷ அரசு மீண்டும் பதவியேற்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தவர். அதே நேரம் சிங்கப்பூர் சிற்பி லீகுவான்யூ போல ராஜபக்ஷக்கள் இலங்கையை மீட்பார்கள் என தெரிவித்தவரும் இதே விமல்வீரவங்ச ஆவார்.

“நான் காலால் உதைத்தேன். ஆனால் அந்த நபர் மீது படவில்லை.”- இராணுவ லெப்டினன் விளக்கம் !

குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும், அது அந் நபரின் மேணியில் படவில்லை என குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் மற்றும் சமூக வளைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி தொடர்பில் அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர் மிக்க இராணுவ அதிகாரி என குறிப்பிடும் லெப்டினன் கேரணல் விராஜ் குமாரசிங்க, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பாதாள உலகக் கோஷ்டியினர் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாக கூறினார்.
தான் காலால் உதைத்தது உண்மையே என குறிப்பிட்ட லெப்டினன் கேர்ணல் விராஜ் குமாரசிங்க, எனினும் அந்த தாக்குதல் குறித்த சிவியன் மேல் விழவில்லை எனவும், குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் என தெரிவித்தாஎர். எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி !

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோர், இலங்கையின் நிதி நெருக்கடிகளை வெற்றிக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இது தொடர்பில், நாளையதினம் பாராளுமன்றில் தெளிவுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முற்றாக முடங்கும் இலங்கையின் கிராமிய வைத்தியசாலைகள் !

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன், வெளிநோயாளர் சிகிச்சை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வைத்தியசாலை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. எனினும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, வெலிகம பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையை கடந்த 2 ஆம் திகதி முதல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வீடுகள் மற்றும் ஏனைய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

கரும்புலிகள் தினத்தில் வடக்கில் வெடிகுண்டுத்தாக்குதல் – அநுரகுமாரவின் கருத்தால் மேலும் பரபரப்பு !

கரும்புலிகள் தினத்தில் வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியின் உண்மையை அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஏனெனில்  அரசாங்கமே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“அரசாங்கமானது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நாட்டை மீண்டும் குழப்ப முயற்சித்து வருகிறது. 2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரட்னவுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 29 ஆம் திகதி பாதுகாப்புச் செயலகத்திற்கு இந்தக்கடிதம் கிடைத்துள்ளது.

இந்தக் கடிதத்தில் ஜுலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ள கரும்புலிகள் தினத்தை இலக்கு வைத்து, வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று வடக்கில் அல்லது தெற்கில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு எந்தவொரு நிகழ்விலும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பொன்றின் ஊடாக வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியை பொலிஸ் மா அதிபர் ஊடாக, பாதுகாப்புச் செயலாளருக்க அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தகவலானது யார் ஊடாக கிடைத்தது? இந்த செய்தி உண்மையா? என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்யத் தவறினால், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை திசைத்திருப்பவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும்.

எனவே, இந்த வெடிகுண்டு அச்சுறுத்தலும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாக இருக்குமோ எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையால், மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்யக்கூடிய நிலையில்தான் இந்த அரசாங்கம் உள்ளது. மக்களும் இதுதொடர்பாக அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீர்வு தருவதாக மட்டுமே கூறும் டக்ளஸ் தேவானந்தா – எந்த தீர்வுமே வந்து சேரவில்லை !

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த மாத இறுதியில் நான் தீர்வு பெற்றுக்கொடுப்பேன், இதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” நாடு முழுவதும் எரிபொருள் பிரச்சினை காணப்படுகிறது. எரிபொருள் இல்லாமல் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான எரிபொருள் நாட்டில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

 

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளது.யார் எல்லை தாண்டி வந்தாலும் அவர்கள் கடல் படையால் கைது செய்யப்படுவார்கள்.இது நீண்டகாலப் பிரச்சினை.இதனை தீர்ப்பதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

……………………………

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வைத்தருமாறு தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டிருந்தபோது அந்த இடத்துக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டு வாரங்களுக்குள் தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதற்கு தீர்வு கிடைக்கவேயில்லை. இது போக அதைப்பற்றி அதற்கு பிறகு அவர் வாய் திறக்கவேயில்லை. இது இந்த வருடம் மட்டுமே. இது போல இவர் எத்தனையோ விடயங்களுக்கு தீர்வு தருவதாக கூறியும் இவர் கூறிய பாதியளவான விடயங்கள் எவற்றுக்குமே தீர்வு தரவில்லை – கிடைக்கவில்லை – அல்லது முயற்சிக்கவில்லை  என்பதே உண்மை. ஒவ்வொரு ஊடக சந்திப்பிலும் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என சூசகமாக கூறும் டக்ளஸ் சொன்னதை கொஞ்சமாவது செய்ய முற்படலாம்.