உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டு போரின் பற்றி இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட ரகசிய ஆவணங்களில் பிரிட்டன் மாற்றங்களை செய்தது !

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது என்ன நடைபெற்றது என்பது குறித்த தெளிவாக அறிந்துகொள்வதற்கு இலங்கையின் உள்நாட்டு போரின்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்து பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய ஆவணங்களில் உள்ள திருத்தங்களை மாற்றவேண்டும் என மைக்கல் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிட்டனிற்கு அனுப்பிய இரகசிய ஆவணங்கள் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் இரகசிய ஆவணங்கள் என வகைப்படுத்திய ஆவணங்களை நேஸ்பி பிரபு பிரிட்டனின் தகவல் சுதந்திர சட்டத்தை பயன்படுத்தி கேள்விக்கு உட்படுத்தினார்.

பிரிட்டனில் அந்த ஆவணங்களில் பெரும்மாற்றங்களை மேற்கொண்டார்கள் எனக்கு அந்த திருத்தங்கள் குறித்து திருப்தியில்லை என்பதை நான் வெளிப்படையாக தெரிவிக்கின்றேன்,நான் இது குறித்து சில காலமாக தெரிவித்து வருகின்றேன், அந்த திருத்தங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் நான் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபடப்போகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பரடைஸ் லொஸ்ட் பரடைஸ் ரிகெய்ன்ட் என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

தொடர்ந்து இருளில் மூழ்கப்போகும் இலங்கை – வெளியாகியுள்ள தகவல் !

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் முற்றாக நேற்று மூடப்பட்டதுடன் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை விநியோகிக்கத் தவறினால் அடுத்த வாரம் முதல் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இதுவரை வழங்கப்பட வில்லை எனவும், எனவே இன்று முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும், அவசரகால கையிருப்பு கிடைக்காவிட்டால் நேரம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் மின்சார நெருக்கடி – வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு !

நிலவும் மின்சார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக இன்றும் நாளையும் அரச துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,( PUCSL) முன்மொழிந்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்றினால் மின்வெட்டு காலத்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க முடியும் என அதன் தலைவரான ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

அலுவலகங்கள் செயற்படுவதற்கு மின்வெட்டு நேரத்தில் மின்பிறப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இதற்குப் பயன்படுத்தப்படும் டீசலின் அளவைக் குறைத்து, நாளாந்த போக்குவரத்து சேவைகளைக் குறைப்பதன் மூலம், டீசல் இருப்புக்களை மின் உற்பத்தியை நோக்கி செலுத்த முடியும் .

, இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி நாளை நாட்டை வந்தடையும் எனவும், ஏப்ரல் 1 ஆம் திகதி இறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இன்றும் நாளையும் சவாலான காலகட்டமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மருத்துவமனைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் மின் தடைகளை எதிர்கொள்ளாது, அதே நேரத்தில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மின்வெட்டுகளை எதிர்கொள்ளக்கூடும் என அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவிலான வளங்களைப் பயன்படுத்தியதன் காரணமாக நீர்மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 7% ஆகவும், கொத்மலை 20% ஆகவும், சமனலவெவயில் 11% ஆகவும், மொத்த நீர் ஆதாரங்கள் 27% ஆகவும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீர்மின் உற்பத்தி 325 மில்லியன் அலகாக உள்ளதாகவும், அது 200 மில்லியன் அலகுகளை எட்டும்போது, ​​நீர் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், காலப்போக்கில் எச்சரிக்கப்பட்டும் பொதுமக்களும் நிறுவனங்களும் அதன் தாக்கத்தைத் தணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்து மின் நெருக்கடி உருவாகிறது என்றும், பல நாட்களுக்கு முன்னர் வந்த எரிபொருள் ஏற்றுமதி இன்னும் வெளியிடப்படவில்லை, ஏனெனில் பங்குகளை வெளியிடுவதற்கு டொலர்களை பெற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையின் நிலையை கண்டு கண் கலங்கினேன்.” – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்திய உதவியை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாக பேராதனை வைத்தியசாலை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பதைத் தொடர்புகொண்டு விவாதிக்குமாறு உயர் ஆணையர் பாக்லேயிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என ஜெய்சங்கர் இன்று ட்வீட் செய்துள்ளார்.

 

பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ள இலங்கை அரசாங்கம் !

இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ளது.

250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“நாம் தோற்க மாட்டோம்.”- பிரதமர் மஹிந்த நம்பிக்கை !

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
‘நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.
தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலர் 450 ரூபா வரை செல்லும் – யாராலும் தடுக்க முடியாது என்கிறார் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா !

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்க டொலர் 450 ரூபாவை நெருங்குவதைத் தடுக்க முடியாது என இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வர்த்தக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் பிரச்சினையின் அளவையும் அரசாங்கம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் சில தவறான முடிவுகளால் நிதி ஒழுக்கம் சீர்குலைந்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் அரசாங்க வருவாயும் 25% குறைக்கப்பட்டது.

இதை முதலில் பார்த்தபோது செலவு பக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னோம். எனினும் அரசாங்கம் அரசியல் பிரசாரத்துடன் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. வருமானத்துக்குப் பதிலாக செலவுகள் அதிகரித்த போது கடன் வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது கடன் தராத நிலை ஏற்பட்டுள்ளது. இலகுவாக அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதைத் தொடர்ந்தது.

இதனால் டொலர் மதிப்பு உயர்கிறது. இந்த அரசாங்கம் வந்ததும் 180 ரூபாவாக இருந்த டொலரைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. டொலரை நெகிழ்வாக வைத்திருக்கச் சொன்னோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று 230 ரூபாவுடன் டொலரை நிறுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

தூக்கிட முயன்ற மனைவியை கண்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை !

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததனை கண்டு சந்திரகுமார் கோபனா (28) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராற்றினால் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதனை கண்ட கணவன் மனைவியை தூக்கில் இருந்து மீட்டெடுத்து அதே தூக்குக்கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இச்சபவத்தில் மனைவியான கணேசன் பிரதீபா (20) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“வெகு விரைவில் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும்.” – சீ.வி.விக்னேஸ்வரன்

தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். பல இடங்களிலும் அந்த அடையாளங்களை நீக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாளங்குடா பிரதான வீதியில் வெண்மதி கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்குள் ஒரு பொதுவான கருத்து இருக்கின்றது. வடக்கு கிழக்கு மக்கள் வேற்றுமைப்படக் கூடாது தங்களுக்குள் ஒருமித்து செயலாற்ற வேண்டும். நாங்கள் வடகிழக்குத் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களுக்குள் அந்நியோன்யம் வரவேண்டும் என்ற வகையில் வட மாகாண மக்களுக்கு எவ்வாறான செயன்முறைகளைச் செயற்படுத்தி வருகின்றோமோ அதேபோல் கிழக்கு மாகாண உறவுகளுக்கும் எம்மாலான செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலே வெளிநாட்டு உறவுகளின் பண உதவியோடு சில நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்தச் செயற்பாடு அரசியல் ரீதியானதல்ல, தமிழ் மக்கள் சார்பானது. எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனையின் வாயிலாக ஏற்பட்ட நிகழ்வு. ஏனெனில் அரசியல் என்று வரும் போது எமக்கான வாக்காளர்கள் வட மாகாணத்தில் தான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் வடக்கு என்று நில்லாது எமது மக்கள் எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களிடம் ஒரு உறவுமுறை இருக்கின்றது. அதன் அடிப்படையில் நாங்கள் சில நடவடிக்கைளை எடுக்க வேண்டி நிலை வந்திருக்கிறது.
தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். பல இடங்களிலும் அந்த அடையாளங்களை நீக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த வணக்கஸ்த்தலங்கள், எமக்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்படுத்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது வருங்காலத்திலே வடக்கு கிழக்கு மக்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற பயம் பீடித்திருக்கின்றது. அதே நேரம் இங்கிருக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் சம்மந்தமாகவும் எங்களுக்குள் பலவிதமான பிரச்சனை இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.
இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து எமது மக்களை நாங்கள் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் எமது செயற்திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அந்த அவசியத்தின் நிமித்தம் தான் இவ்வாறான செயற்திட்டங்களை வகுத்து அதற்கான நிதிகளைப் பெற்ற எமது மக்களுக்குக் கொடுத்து வருகின்றோம்.
இவ்வாறான சுயதொழில், கைத்தொழில் நடவடிக்கைகளில் எமது இளம் சமுதாயம் ஈடுபடுவதற்கான நடவடிக்களையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதனைச் சிறிது சிறிதாக ஆரம்பிக்க வேண்டும். வருங்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கைத்தொழில் மையங்கள் இருக்கக் கூடிய விதத்தில் நிலைமையை உருவாக்க வேண்டும்.
எமது கட்சியைப் பெருத்தளவில் தன்னாட்சி, தட்சார்பு, தன்நிறைவு எனும் முக்கிய மூன்று குறிக்கோள்கள் இருக்கின்றன. தன்னாட்சி என்பது அசியல் ரீதியானது. ஆனால் எமது குடும்பங்கள் எமது வாழ்க்கை என்ற ரீதியில் தட்சார்பினை நாங்கள் நாட வேண்டும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய விடயங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மரக்கறிகளிலன விலை மூன்று நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது வீட்டுத் தோட்டம் அமைக்க எமது வடமாகாண மக்களுக்கு அறிவறுத்தியிருந்தோம். இப்படியொரு நிலை வரும் என்று நினைக்கவில்லை ஆனால் தமிழ் மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் தட்சார்பு நிலையினை அடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் சொல்லியிருந்தோம்.
தற்போது வீட்டுத்தோட்ட செயற்பாடு பல இடங்களிலும் ஆரம்பிக்கப்படுகின்றன. அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான கைத்தறி செயற்பாட்டினை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் எமது மக்கள் தங்களின் தேவைகளையாவது பூர்த்தி செய்யக் கூடிய நிலைமை உருவாகும் அதற்காகத் தான் எமது வெளிநாட்டு உறவுகள் ஊடாக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
எங்களின் விஜயத்தின் போது எமது மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள். அதனை முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அரசாங்கமும் அல்ல, இந்த மாகாணத்திற்கு உரியவர்களும் அல்ல. ஆனால் கிழக்கு மாகாணம் என்பது எங்களுக்கு பிற மாகாணமோ, அந்நிய மகாணமோ அல்ல. தமிழ் மக்களைக் கொண்டிருக்கும் இந்த மாகாணத்தின் விடிவு இந்த மாகாணத்தின் நன்மை தீமைகளில் நாங்களும் பங்குபற்ற வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த நிலையிலே சிந்தித்து எமது மக்களுக்குரிய சுயதொழில் நடவடிக்கை முயற்சிகளுக்கு எங்களால் இயலுமான உதவிகளைச் செய்வோம்.
அதற்கேற்றவாறு எமது மக்களும் ஒவ்வொரு விடயங்களிலும் தட்சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்க வேண்டும். எந்தவிதத்திலாவது எமது கல்வி நிலை மேம்பட வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. முக்கியமாகத் தமிழ் பெண்கள் கல்வி நிலையில் மிகவும் மேம்பட வேண்டி அத்தியாவசியம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நல்ல கல்வி நிலை இருந்தால் அந்த சமூகத்திற்கே ஒரு நல்ல நிலை கிடைக்கும். எனவே பெண் கல்வி மிகவும் முக்கியமானதொன்று.
எனவே இவ்வாறான உதவிகள்செய்வதற்கு நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம். மக்களும் எங்களிடம்பெறும் உதவிகளை நல்ல விதத்திலே செயற்படுத்தி அனைவருக்கும் நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய விதத்திலே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

“தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.”- முன்னணியினர் இந்தியாவிடம் வேண்டுகோள் !

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் கடிதம் கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அக்கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
28-03-2022
உயர்திரு.சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
கௌரவ வெளிவிவகார அமைச்சர்,
இந்தியா
ஊடாக,
கௌரவ துணைத்தூதுவர்,
இந்திய துணைத் தூதரகம்,
யாழ்ப்பாணம்.
அவர்களுக்கு,
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக
1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர்.

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபு சமர்ப்க்கப்பட்டிருந்த பொழுது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைபை சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றுகோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.
13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதனுடைய நோக்கமே, 13 ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப் புள்ளியாகக் கூட கருதப்பட முடியாது என்பதனாலேயாகும்.

எனினும் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாணசபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு மட்டும் 1988ல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.
இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்த போது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தினை இராஜினாமா செய்து 13 ஆம் திருத்தத்தினை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர்.

இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாக கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும் கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கிவருகின்றனர். தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய – இணைந்த வடக்கு கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஸ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.

13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக் கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13 ஆம் திருத்தம் ஒரு பேச்சுப் பொருளாகக் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில், கணக்கிலெடுக்கப்படாத – நிராகரிக்கப்பட்ட ஒரு விடயமாகவே தமிழ்த் தேசிய அரங்கில் 13ஆம் திருத்தம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது.
ஈழத் தமிழ்த் தேச மக்களின் நிலைப்பாட்டிலே, 13ஆம் திருத்தமும் மாகாண சபைகளும், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அல்ல என்பதுடன், அது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமையாது என்ற உண்மையை தொடர்ந்தும் நிரூபிக்கின்ற வகையிலேயே, கடந்த 2022 ஜனவரி 30ம் திகதி யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலும், 2022 மார்ச் மாதம் 13ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு திடலிலும், மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன.

அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் அணிதிரண்டு, 13ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல, இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதேவேளை – தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் எனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் மேற்படி பேரணிகள் ஊடாக வலியுறுத்தியுள்ளார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களது உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில், அவர்கள் நாட்டைப்பிரிக்காத, ஓர் சமஸ்டித் தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும், தனிநாட்டிற்காக மட்டுமே பிடிவாதமாக செயற்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியே, ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள். போர் முடிந்த பின்னர், ஒற்றையாட்சியை நிராகரித்து, சிறீலங்காவின் சட்டத்தின் பிரகாரம் நாட்டைப்பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சமஸ்டித்தீர்வையே வலியுறுத்தி, தமிழ்மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். இலங்கைக்கு நான்காவது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, சிறீலங்கா அரசு, அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியல் அமைப்பை சமஸ்டி அரசியல் யாப்பாக கொண்டுவராமல்;, மாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழதமிழ்த் தேசம் உறுதியாக செயற்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டுவருதனை தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், ‘கிட்டுப்பூங்கா’ பிரகடனமானது தமிழ் மக்களின் அசைக்க முடியாத அரசியல் வேணவாவை மீண்டும் வெளிப்படுத்தும் ஆவணம் என்னும் வகையிலும், இந்த விடயங்களை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்த சமயத்திலே, நாம் அவரை நேரில் சந்தித்து வெளிப்படுத்த காத்திருந்த நிலையில் எமக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்திருக்காத நிலையில், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை இக்டிகதம் ஊடாக கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஊடாக இந்திய அரசின் மேலான கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர்

தலைவர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செல்வராசா கஜேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி