உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பிலிப்பைன்ஸை அடுத்து தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19.08.2020) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிலிப்பைன்சிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 பேர் பாதிப்பு !

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் அதிபர் சுகாதாரத் துறை அமைச்சகம், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,59,570 ஆக அதிகரித்துள்ளது. 600 பேர் பலியாகி உள்ளனர்.

பிரேசிலில் இதுவரை 1,08,536 பேர் பலியாகி உள்ளனர். 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாகவே 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகிறது.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின்கொரோனா  மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் விலங்கினை உடைத்து வெளியே வருவேன் ! – பிள்ளையான்

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்,  நாளை மறுதினம் (20.08.2020)  பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (18)  அனுமதி வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் 3ஆவது சந்தேக நபராக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில்,  அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி பிள்ளையானின் சட்டத்தரணிகளால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த நகர்வு மனுவை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதிபதி டி. சூசைதாசன்,  சிவநேசதுரை சந்திரகாந்தனை நாளை மறுதினம்  வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கினார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்து வெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பிள்ளையானை, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் பாராளுமன்ற அமர்வுக்காக அழைத்துச் செல்லவுள்ளனர்.

அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாம் முன்வர வேண்டும்! – சமல் ராஜபக்

கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொது மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பரந்த நோக்கத்திற்கமைய பொறுப்பு வாய்ந்த இந்த அமைச்சு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். நாரஹென்பிட்டியவில் உள்ள அமைச்சு கட்டிடத்தில் நேற்றையதினம் (17.08.2020) இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அவர், மக்களுக்கான சேவைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான காலம் கனிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

´வசதியான குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் அமர்ந்திருப்பதற்கு பதிலாக, அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாம் முன்வர வேண்டும்´ எனவும் இதற்காக அவர் இராஜாங்க அமைச்சின் அனைத்து அதிகாரிகளினதும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகளை தீர்ப்பதாக உறுதியளித்த அமைச்சர் ராஜபக்ஷ, மக்களுக்கு சேவை செய்வதற்காக தமது கடமைகளை இதயசுத்தியுடன் நேர்மையான முறையில் முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தூரநோக்கிற்கமைய அவரால் முன்மொழியப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்காக அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகுல் மடுவ மண்டபத்தில் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் செல்கின்றோம் ! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

இது கட்சியின் கொள்கை முரண்பாட்டினையும் சுயநலச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்றுள்ளனனர்.

இதில் இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஒற்றையாட்சியை நிராகரிப்பதாகவும் சமஷ்டி முறை அல்லாத எந்தவொரு விடயத்தினையும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக பரிசீலிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை முரண்பாட்டினையும் சுயநலச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் தாய்க் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் அரசியல் யாப்பில் சுயாட்சியின் மெய்ப்பொருளை எந்தவொரு அரசியலமைப்பின் (ஒற்றையாட்சி அரசியலமைப்பாயினும் சரி) கீழும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருவதாகவும் எந்தவொரு இடத்திலும் சமஷ்டி வலியுறுத்தப்பாடாத நிலையில் குறித்த கட்சியின் பெயரிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பின்னர், தங்களுடைய அரசியல் எதிர்பார்ப்பை நோக்கி செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்தான், கட்டாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர் !

வெளிநாடுகளுக்கு பல்வேறு நோக்கங்களுக்காக சென்று மீள நாட்டுக்கு வர முடியாது இருந்தவர்களை மீட்டு இலங்கைக்கு கொண்டு வரும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில்  கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 305 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அதனடிப்படையில் ஜோர்தானில் இருந்து 285 இலங்கையர்களும் கட்டாரில் இருந்து 22 இலங்கையர்களும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் அஎன்ற வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் ! – விமல் வீரவன்ச

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்றதன் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மாற்றியமைக்கப்பட இருக்கின்றது.

மேலும் புதிய அரசியலமைப்புக்கு ஏற்றவாறு நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்ல வேண்டும்.

இதற்கு பொதுதேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால், அதனை உருவாக்கிய விதம் தவறு – சுரேன்ராகவன்

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நிலையில் இலங்கையின் அரசியல்வாதிகள் பலரும் 13வது திருத்தச்சட்டம், 19வது திருத்தம் போன்றன பற்றி தம்முடைய கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன்ராகவன் அவர்கள் 19வது திருத்தச்சட்டம் தொடர்பான தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்த 19ஆவது திருத்தமானது இலங்கை அரசாங்கத்தையும் ஆட்சியிலிருக்கும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது. 19ஆவது திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால், அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம்தான் இன்று நாட்டில் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது” என்றார்.

“ஆடம்பர செலவுகளை தவிருங்கள்“ – பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

 

20 ஆம் திகதி கூடவுள்ள புதிய பாராளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி வருகையை ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்குமாறும் ,  9 ஆவது பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி எளிய முறையில் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாக பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு இராணுவ மற்றும் குதிரை அணி வகுப்பு உட்படப் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுவது வழக்கமாகும்.

ஆனால் இம்முறை 20 ஆம் திகதி புதிய பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஆரம்ப விழா மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

இராணுவ அணிவகுப்பு , பாதுகாப்பு அணிவகுப்பு மற்றும் பாராளுமன்ற வீதியின் இருபுறமும் இராணுவ அணி வகுப்பு செலுத்துமாறு பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த முறை குதிரை அணிவகுப்புகள் வேண்டாம் என்றும் நிறுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெயர்ப்பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்திய நாமல் ராஜபக்ஷ !

இலங்கையில் பெரும்பாலான அரச பெயர்ப்பலகைகளிலும் பொது இடங்களிலுள்ள பெயர்ப்பலகைகளிலும் தமிழ்வடிவம் பெரும்பாலும் பிழையாகவே அமைந்திருக்கும். இப்படியான நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர்ப்பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று  (18.08.2020) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

இதுவரை எந்தவொரு அமைச்சரதும் பார்வைக்கு கிட்டாத இந்த தமிழ் பிழையானது, இளைஞர்களை வலுப்படுத்த புதிதாக பதவியேற்ற இளம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறான பிழைகள் குறித்து எதிர்வரும் காலத்தில் அமைச்சரினால் கூடுதல் கவனம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.