உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சண்டை – மண்ணெண்ணெய் அருந்தி பாடசாலை மாணவி மரணம் !

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார்.
கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
என் மகள் மிகவும் உணர்திறன் கொண்ட பிள்ளை அடிக்கடி கோபம் கொள்பவள் கற்றல் மற்றும் வரைவதிலும் வல்லவர் என சிறுமியின் தயார் தெரிவிக்கின்றார்.
கடந்த மாதம் 27ம் திகதி எனக்கும், எனது கணவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகள் சத்தம் போட்டார். பின்னர் சிறிது நேரம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மகள் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து வாயு நுரை வெளியேறியது. எனது மகளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் சிறுமியின் தயார் என்.நாகராணி தெரிவித்தார்.
சுமார் மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தாக்கலாம் என்ற அச்சம் – பாராளுமன்ற பேரூந்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் !

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ என்ற முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளைத் தாக்கும் சந்தேகமே இதற்குக் காரணமாகும்.

இலங்கை போக்குவரத்து சபையின் ஒன்பது பேருந்துகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அந்தப் பேருந்துகள் புதிய இடங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு – பிள்ளையான், திலீபன் ஆதரவுடன் நிறைவேற்றம் !

சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.

இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் !

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளுக்காக நீண்டநேரம் வரிசையில் நின்ற நான்கு பேர் பலியாகியிருக்கும் நிலையில்,வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் கொழும்பிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றில் இராணுவத்தினர்,பொலிஸார் கடமையில் நிற்க,எரிபொருள் கொள்வனவுக்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை இங்கு காணலாம்.

இலங்கையின் வான்பரப்பையும் இந்தியாவிடம் விற்றது ராஜபக்ஷ அரசாங்கம்- வெளியாகியுள்ள குற்றச்சாட்டு !

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பம். எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாது மக்கள் வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், இலங்கையில் பாதுகாப்பு கட்டமைப்புக்கு எனக் கூறி, இலங்கையின் வான் பரப்பு இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.

இலங்கையின் கடல், நிலமும் சீனாவுக்கு வழங்கப்பட்டது. துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்கினர். எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்கினர். இவ்வாறான நிலைமையில் இலங்கையின் வான் பரப்பும் 29 மில்லியன் டொலர்களுக்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு ட்ரோன் விமானங்களை பறக்கவிடுவதற்காக இலங்கை வான் பரப்பு விற்பனை செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பமாக இதனை நான் பார்க்கின்றேன். இந்தியாவுடன் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதில் ஒன்று இலங்கை மக்களின் உயிரியல் அடையாளங்களை அதாவது கைவிரல் அடையாளங்களை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் உரிமையை வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தொழிற்நுட்ப அமைச்சுக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று ட்ரோன்கள் மற்றும் நான்காயிரம் தொன் எடை கொண்ட மிதக்கும் மிதவை படகு ஆகியவற்றை இலங்கையில் பயன்படுத்த இந்திய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சம்பந்தமான முழு பாதுகாப்பு இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வந்த வீரர் இலங்கை கடற் பாதுகாப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்திய கடற் கண்காணிப்பு அமைப்புக்கு ஹம்பாந்தோட்டையில் ஒரு மையத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.

சீனாவுக்கு துறைமுகம், இந்தியாவுக்கு கடல், மிகப் பெரிய போரை ஏற்படுத்தக் கூடியது.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ஆளுந்தரப்பின் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை.” – இராஜாங்க அமைச்சர் ஜீவன் அறிவிப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பல அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டிற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய ஆகியன நிராகரித்துள்ளன.

இந்நிலையில் சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்ளாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.இதேவேளை சர்வகட்சி மாநாட்டுக்கு சென்று இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மோசமடைந்த இலங்கையின் நிதிநிலமை – மூடப்பட்ட இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்கள் !

வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள இலங்கையின் தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டமையானது தற்காலிகமானவை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மூடப்பட்ட அலுவலகங்களை ஒரு வருட காலப்பகுதிக்குள் மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை காரணமாக அவுஸ்ரேலியாவின் சிட்னி கொன்சியுலர் அலுவலகம் , ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் சுவிடனில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மூட வேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அடிக்கடி கவனத்தில் கொண்டு இந்த அலுவலகங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் நாட்டின் நிதி நிலைமை சீராகும் வரையில் தற்காலிக நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு – யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் !

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்துகளுக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அவை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ஷ கூட்டியுள்ள சர்வ கட்சி மாநாடு – கலந்து கொள்ள மறுக்கும் கட்சிகள் !

கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி மாநாடு தொடர்பில் பல கட்சிகளும் தங்களுடைய எதிர்பபை வெளியிட்டு வருகின்றனர்.

 

ஆளுங்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதில் அர்த்தம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது அரசாங்கத்திற்கு விசேட உதவிகளை வழங்குகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தை பலப்படுத்துவது அல்ல ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. சில அரசியல் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள நிலையில், சிலர் தங்களது கொள்கைகளின் அடிப்படையில் அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களின் சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் அனைத்து தரப்புக்களையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும் முக்கியமான பல கட்சிகள் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. “ பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்ற மாட்டார் என்பதை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் எம்.பி., பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில்தான் தங்கியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெதிவித்துள்ளார்.

மேலும் சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கின்றது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

தொடரும் பொருளாதார நெருக்கடி – அமைச்சரின் வாகனத்தை எரிவாயு சிலிண்டரால் தாக்கிய மக்கள் !

இராஜாங்க அமைச்சர் கனகஹேரத்தின் வாகனத்தினை பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேகாலை ரன்வவவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமையல் எரிவாயுவிற்காக காத்திருந்த மக்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவேளை அந்த பகுதியில்காணப்பட்ட மக்கள் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் பின்னர் அந்த பகுதியை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.