உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அமெரிக்காவை அடுத்து சீனாவும் இலங்கை மாணவர்களுக்கு உதவி – 1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு அரிசி வழங்கும் சீனா !

1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரிசி 44 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டு இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் 7,900 பாடசாலைகளில் உள்ள 1.1 மில்லியன் மாணவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு அரிசியை வழங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த வாரம் மேலும் இரண்டு அரிசி இருப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் உள்ள சிறுவர்களும் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஜீ – 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுபோக அறுவடைக்கான எரிபொருளை வழங்குங்கள் – விவசாய அமைச்சு கோரிக்கை !

சிறுபோக அறுவடை மற்றும் யூரியா உரத்தை விநியோகிக்க போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 20,275,000 லீற்றர் டீசல், சிறுபோக அறுவடை மற்றும் உர போக்குவரத்துக்கு தேவைப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் சுமார் 4,77,000 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அறுவடை இம்மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

மேலும், இந்திய அரசினால் வழங்கப்படும் 65,000 மெற்றிக் தொன் யூரியா 2000 பாரவூர்திகள் மூலம் 566 கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெற்செய்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் புடினுடன் பேச முயற்சிக்கும் கோட்டாபாய – ஜுலை 10 உடன் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

1.6 சதவீதத்தால் வீழ்ச்சி கண்ட இலங்கையின் பொருளாதாரம் !

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேராவின் சொந்த செலவில் யாழில் குடிவரவு – குடியகல்வு அலுவலகம் !

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

 

தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த வேலையும் செய்யாதோரின் எண்ணிக்கை திடீர் உயர்வு!

நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுகளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது.

அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்குங்கள் – ஐ.தே.க கோரிக்கை!

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையளித்தால் ஆறு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கூறும் எதிர்கட்சிகள் அந்த கால அவகாசத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்க மறுப்பது ஏன் ? என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர், ருவான் விஜயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில் வல்லுநர்களுடன் இன்று (28ம் திகதி ) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ருவான் விஜயவர்த்தன இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ருவான் விஜேவர்தன, இரண்டு வருடங்கள் சீரழிக்கப்பட்ட நாட்டை சில நாட்களிலேயே நாட்டை கட்டியெழுப்ப கூறுவது, இந்த நெருக்கடி சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேட முற்படுபவர்களே தவிர நாட்டை நேசிப்பவர்கள் அல்ல எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப, முன்பிருந்த நிலைக்கு நாட்டை கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு குறிப்பிட்டளவு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ருவான் விஜயவர்த்தன் கோரியுள்ளார்.

இலங்கை சிறுவர்களின் போஷாக்கான உணவுக்காக 20மில்லியன் அமெரிக்க டொலர்கள் – பைடன் அறிவிப்பு !

இலங்கையில் உள்ள சிறுவர்களும் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஜீ – 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 800,000க்கும் மேற்பட்ட இலங்கை சிறுவர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் 15 மாதங்களில் 27,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்குதல், அத்துடன் பாடசாலை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியுதவியின் நோக்கமாகும்.

அத்துடன், உணவு உற்பத்தியை அதிகரிக்க 30,000 விவசாயிகளுக்கு விவசாய உதவி மற்றும் நிதி உதவியை வழங்குதலும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். அதேபோல், இந்த 20 மில்லியன் மனிதாபிமான உதவியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவரகத்தினால் (USAID) வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால் முடியவில்லை என்றால் பதவி விலகுவேன் என்கிறார் தம்மிக !

எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால், அதிகாரத்தில் இருப்பது அர்த்தமில்லை என தனது தாய் தெரிவித்ததாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் என்னிடமுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டு மக்கள் பசியில் இருக்கும் போது நான் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.

அதனை 6 மாதங்களுக்குள் செய்ய முடியாவிட்டால் அமைச்சு பதவியை துறக்குமாறு மனைவி அறிவுரை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவியில் இருந்து நாட்டில் மாற்றத்தை செய்யத் தவறினால் ‘தாத்தா கம் ஹோம்’ என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் எச்சரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது !

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் சட்டவிரோமாக சென்ற 54 பேரை கிழக்கு கடல் பகுதியில் வைத்து நேற்று (26) இரவு கடற்படையின் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று (27) மாலை 3 மணிக்கு அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு கிழக்கு கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பாலமீன்முடு கடற்கரையில் இருந்து சிறிய படகுகள் மூலம் கிழக்கு கடலில் தரித்து நின்ற இயந்திர படகிற்கு சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டு பிரயாணித்து கொண்டிருந்த இயந்திர படகை கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்ட போது அதில் சட்டவிரோமாக அவுஸ்ரோலியாவுக்கு சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 54 பேரை கைது செய்தனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பயணித்த படகை கடற்படையினர் இழுத்து கொண்டு திருகோணமலை கடற்படை முகாமிற்கு இன்று மாலை 3 மணிக்கு வந்தடைந்ததுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கோண்ட பின்னர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் தெரிவித்தனர்.