உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ

இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன், தற்போதுள்ள வரிக் கொள்கையால், எதிர்காலத்தில் பல சலுகைகள் கிடைக்கும் என உறுதி செய்ய முடியும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டிற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் இருந்து நாட்டின் எதிர்காலத்துக்காக முதலீடுகள் செய்யப்படுமானால் அதற்குத் துணை நிற்க வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் 12 சதவீதம் என்ற அளவிலேயே வரி வசூலிக்கப்படுகின்றது. எனினும், நாட்டை விட்டு வெளியேறி தொழிலுக்காகச் செல்லும் நாடுகளின் வரி சதவீதம் 38 முதல் 43 அளவில் உள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியதால் நாட்டிற்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெங்காய ஏற்றுமதியை இந்தியா எளிதாக்கிய பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கையை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள வேட்பாளர்கள் இதனை மேற்கொள்வதாக உறுதியளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த கால தலைவர்களும் அரசாங்கங்களும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசியல் காரணங்களுக்காக முறியடித்தன.

 

இந்தநிலையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கை இல்லாத வரையில் இலங்கை ஒரு நாடாக முன்னேற முடியாது. தேசியப் பிரச்சினைக்கு அரசியல் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. ஏனெனில் பல்வேறு எதிர்ப்புத் தாக்கங்கள் இருக்கும்.

 

முன்னதாக 2000 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்தார். இது ஒரு மதிப்புமிக்க முன்மொழிவாக இருந்தது.

 

ஆனால் அரசியல் காரணங்களால் அதை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. உண்மையில், அந்த நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியே சந்திரிக்கா குமாரதுங்கவின் நடவடிக்கையை எதிர்த்தது.

 

அத்துடன் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவின் நகலை எரித்த செயற்பாட்டிலும் ஈடுபட்டது.

 

இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்க நாட்களில், புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்கும் அதன்படி செயற்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

அதுவும் குறுகிய அரசியல் மற்றும் இனவாதக் கண்ணோட்டங்களால் தோல்வியடைந்தது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உறுதியளித்துள்ள ஜனாதிபதி ரணில் !

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை வழங்கப்படுமெனவும் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 2025 க்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் காணாமல்போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண காணி அமைச்சின் அதிகாரிகள் வடக்கிற்கு விஜயம் செய்வார்கள் என்றும் வடக்கை போலவே முழு நாட்டையும் கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு வடக்கின் மக்கள் பிரதிநிகளுக்கும் முதலீடுகளுக்காக புலம்பெயர்ந்தோருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்து அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3% ஆக மேம்படுத்தவும், 2025 ஆம் ஆண்டில் 5% ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தும் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என வட. மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்தவர்கள் என எவரும் இலங்கைக்குள் இருக்க கூடாதெனவும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

 

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 1788 பேர் காணாமல் போயிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருப்பதோடு அவற்றில் 1289 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

எஞ்சிய 500 க்கு கிட்டிய முறைப்பாடுகளை விரைவில் விசாரணை செய்யுமாறு அதிகாரிக்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த பணிகளை நிறைவு செய்து காணாமல் போனோர் அலுவலகத்துடன் தொடர்புபட்டு செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் ஒன்றுகூடியிருந்த மேற்படி கூட்டத்தில் மாவட்டத்திற்குள் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் அது தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

 

மீள் குடியமர்த்தல், கல்வி, சுகாதாரம், காணி, மீன்பிடி, விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

 

வட. மாகாண அபிவிருத்திக்கு அவசியமான திட்டமிடலை தயாரித்து துரித அபிவிருத்திக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி நாட்டின் பொருளதாரத்தை மீட்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

புதிய பொருளாதார ஆணைக்கு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எவர் வேண்டுமானாலும் நாட்டுக்குள் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு அதற்கான அழைப்பை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

வடக்கின் வலுசக்தியை பாதுகாத்து வலுசக்தி ஏற்றுமதி செய்வதற்கு அவசியமான அனைத்து திட்டமிடல்களும் காணப்படுவதாகவும் பூநகரியை வலுசக்தி கேந்திர நிலையமாக மாற்றுவதாகவும் உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கின் விவசாயத்துறையை விவசாய நவீனமயப்படுத்தலுக்குள் உள்வாங்கி அதிலிருந்து பெறப்படும் பலன்களை இரட்டிப்பாக்கிகொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும் அறிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்று காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

 

வடக்கின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கான இரு திட்டங்களுக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த கொடுப்பனவுகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவானன் சிவபாதசுந்தரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

உயர்தர பாடசாலை கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்கல்வியை தொடர்வதற்கு நிதி வசதி இல்லாத மாணவர்களுக்கு அதிபரின் பணிப்புரையின் பேரில் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அதிபர் நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களில் உயர்கல்வியை தொடர முடியாமல் அதற்கான உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக இந்த விசேட கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதில், கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களில் உயர்கல்வியை தொடர முடியாமல் அதற்கான உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக இந்த விசேட கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

அதில், கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்ட்டது.

தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்விப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண்கள் பாலியல் ஈடுபடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டுள்ளனர் உணவையோ பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இந்த பிள்ளைகளிடம் தங்கள் பெற்றோருக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்தும் வலுவோ பணமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்முதலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்கரையோரங்களில் உள்ள ஹோட்டல்களை பொலிஸார் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்ததை நாங்கள் பார்த்துள்ளோம் கடற்கரையோரத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் அதிகாரம் கரையோரா பாதுகாப்பு திணைக்கத்திற்குள்ளது பொலிஸார் இவ்வாறான கட்டிடங்களில் தலையிட்டு அது போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கட்டப்பட்டது என தெரிவிப்பது சட்டத்திற்கு விரோதமானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் – பின்னணியில் மதபோதகரின் போதனைகள்..?

கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

21 வயதான யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான விரிவுரைகளை ஆற்றி வருபவர் என அறியப்பட்ட ருவன் பிரசன்ன குணரத்ன அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் இதேபோன்று இறந்து கிடந்தார்.

உயிரிழந்த பெண்ணும், ஆணும் ருவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட போதகரின் பிரசங்கங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக முடித்துக்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ கூறினார்.

‘அடுத்த ஆன்மாவை நோக்கிய விரைவான மாற்றத்திற்கான ஒரு வழிமுறையே தற்கொலை” என இந்த பிரசங்கங்களில், குணரத்ன உயிரை மாய்ப்பதை ‘நியாயப்படுத்தியதாக’ கூறப்படுகிறது .

உயிரிழந்த போதகர், கொட்டாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ரூ. 150,000 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 எனும் துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Online மூலமாகவும் இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்ய முடியும் – இறைவரித் திணைக்களம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம்.

 

எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

 

வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

 

கோரிக்கையை பரிசீலித்த பிறகு, வரி செலுத்துவோரின் அடையாள எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

 

வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

 

2024 ஜனவரி 01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

 

இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை !

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லை ஆதீனத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை வடக்கிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதிக்கு நேரில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது – வவுனியாவில் சம்பவம் !

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல் ஜோடியானது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இடப்பட்டது.

இதன்போது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காதல் ஜோடி இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.