உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாபெரும் போராட்டம் !

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்" - முள்ளிவாய்க்கால் நினைவு  முற்றத்திலும் போராட்டம்..!!! - Yarldevi News

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கி செல்கிறது

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்

“ஹபாயா’ சர்ச்சை இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது.” – இரா.சம்பந்தன் வலியுறுத்தல் !

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சை தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும். அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

பௌத்த விகாரைளாகும் தமிழரின் பூர்வீக நிலம் – தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் குருந்தூர் மலைக்கு விஜயம் !

தமிழர்களின் வரலாற்று வழிபாட்டு பூமியான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பௌத்தமயமாக்கு உட்பட்டுள்ளதுடன் அங்கு பௌத்த விகாரை அமைப்புக்கான தொடர்ச்சியான நடவடிக்கைக் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளாக தமிழர் வழிபாட்டு தலமாக உள்ள இந்த நிலம் முழுமையாக பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் சென்று கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் இதனை எதிர்த்து வருகின்ற போதிலும் அரசு இதனை தடுப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் சுதந்திர தின உரையில் பழைய தொல்லியல்பகுதிகளை பாதுகாக்க பிரயத்தன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை தொடர்பில் அதிகம் சிந்திக்க வவேண்டிய தேவை தமிழரிடத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன்இ அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்தஇடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

 

 

மேலும் இந்த விஜயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் சிவஞானம் சிறீதரன் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் எம்.கே.சிவாஜிலிங்கம் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர்அணி தலைவர் கி.செயோன்ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி எல்லாருக்கும் சட்டம் ஒன்றே.” – நாமல் ராஜபக்ஷ

ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது அது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகவின் மகனிற்கும் பொருந்தும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராகமமருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள நாமல்ராஜபக்ச ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் ஒருநாடு ஒருசட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அருந்திக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார், ஏதோ நடந்துள்ளது. அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார் ஆகவே நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக ஒரேநாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள்இதனையே ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இது இன்று இடம்பெறுகின்றது -தவறு செய்திருந்தால் அவர்தண்டிக்கப்படுவார் அப்பாவி என்றால் நீதிமன்றில் அவர் தன்னை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் பகிடிவதையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்,எங்களால் ஒருபோதும்பகிடிவதையை அனுமதிக்க முடியாது-எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்ஃ

“அழிந்துகொண்டிருந்த  தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப்  பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.” சுதந்திரதின உரையில் ஜனாதிபதி !

‘இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. .” எனவும் நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே அன்றி, அனைவரையும் திருப்திப்படுத்துவது அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74 வது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பம்!  (LIVE) - தமிழ்வின்

தனது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரமும் உள்ளது. சுயாதீனமாக அபிப்பிராயங்களை கொள்வதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. நாட்டினுள் முழுமையாக ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது.

சுதந்திரம் மிக்க சனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில் நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பதுபோன்று பொறுப்புக்களும் இருக்கின்றன. எல்லோரும் நாட்டிற்காகத் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும்போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சக்கட்டப் பயன் கிடைக்கும். பொறுப்புக்களை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.

ஒரு நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமாக அமைவது, அந்த நாடானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடைந்தபோதே ஆகும். அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம் அரசைப் போன்று மக்களுக்கும் உள்ளது.

ஒரு நாட்டை உரிய திசையைநோக்கிக் கொண்டுசெல்லும்போது அதற்காக நாட்டின் அனைவரினதும் உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம். மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்க முறையான சிந்தனையின்மூலம் மட்டும்தான் நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றிகரமானதொரு பயணத்திற்கு வேண்டிய அர்ப்பணிப்புக்களைச் செய்தால் மட்டுமேதான் நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும்.

எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை.

எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது  முதலீடுகள் முக்கிய காரணியொன்றாகும். முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசு  எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதுடன், எமக்கு உள்நாட்டு முதலீடுகளைப்போல சர்வதேச முதலீடுகளும் அவசியமாகும். விசேடமாகப் பாரிய அளவிலான  கருத்திட்டங்கள், நவீன தெழில்நுட்ப அறிவு தேவைப்படும் கைத்தொழில்கள், உலகச் சந்தைக்கான சந்தர்ப்பங்களை  ஏற்படுத்தும் புதிய  வியாபரங்களுக்கு  சர்வதேச  முதலீடுகள் தேவைப்படுகின்றது.

அதற்காக அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு  முதலீடுகளுக்கு எதிராகத்  தவறான  அபிப்பிராயங்களை  மக்களிடம் கொண்டுசெல்லும்  தரப்பினர்பற்றி  மக்கள் மிகவும்  அவதானமாக இருத்தல் வேண்டும்.

கலாசாரச் சுதந்திரம் ஒவ்வொரு இனத்திற்கும் முக்கியமானது. ஆயிரம் வருடகால  வரலாற்றைக்கொண்ட பாரம்பரிய சம்பிரதாயங்கள், விழுமியங்கள் மற்றும் எமது பண்புகளைப் பாதுகாத்தல் என்பவற்றை எமது அடிப்படைப் பொறுப்பாகக் கருதுகின்றோம்.

கடந்தகாலத்தில்   பல  அச்சுறுத்தல்களுக்குள்ளாகி அழிந்துகொண்டிருந்த  தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப்  பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எமது நாடு சட்ட ஆதிக்கத்தைப் பாதுகாக்கும், சர்வதேச சமவாயங்களை மதிக்கும்  நடொன்றாகும். குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  இலங்கைக்குப் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சார்த்துவதற்கு ஏதேனுமொரு தரப்பினர்  முயற்சிகளை மேற்கொண்டபோதும் எவ்விதத்திலுமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு உடந்தையாக இருக்கவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றார்.

“கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.” – ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை !

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளதால், கடந்த கால காயங்களை குணப்படுத்த புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தன்று இவர்களில் சிலருக்கு விடுதலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறையில் இருக்கும் போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை தேடி வந்து அவர்களின் வாழ்க்கை கதைகளை கூறினர். அவர்களுக்கு நடந்தது என்ன, ஏன் இந்த நிலைமைக்கு ஆளாகினர் போன்ற விடயங்களை கூறினர்.

போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காயங்களை மேலும் காயப்படுத்திக்ககொண்டிருக்காது, விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது முக்கியமானது என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரிடம் எடுத்துரைத்தோம்.

இல்லை என்றால், இதனை அடிப்படையாகவும் ஒரு காரணமாகவும் கொண்டு, மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணிக்குழு என்ற வகையில் நாங்கள் வடபகுதிக்கு விஜயம் செய்தோம். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சிறையில் இருக்கும் பலரது பெற்றோர் எம்மை சந்தித்தனர்.

சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களில் கோரிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆம் திகதி ஒரு கலந்துரையாடல் நடந்தது, அப்போது நாங்கள் ஜனாதிபதிக்கு இதனை நினைவூட்டினோம்.

இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனை செய்தால், பிரிவினைவாத கரு நிழல் மீண்டும் ஒருங்கிணைய இருக்கும் சந்தர்ப்பை இல்லாமல் செய்யலாம். அந்த காலத்தில் எமது இளைஞர் ஒருவர் அங்கிருந்தாலும் அவரும் புலி உறுப்பினர்தான். இதுதான் உண்மை நிலை. நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி சிலருக்காவது விடுதலை கிடைக்கும் என நாம் நம்புகிறோம். என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு துளியேனும் இரத்தம் சிந்தாமல் காலனித்துவ சுதந்திரத்தை அடைந்தோம்.” – சுதந்திரதின அறிக்கையில் பிரதமர் மஹிந்த !

வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம்.

ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. ஒரு துளியேனும் இரத்தம் சிந்தாமல் காலனித்துவ சுதந்திரத்தை அடைந்தமை இன, மத, கட்சி பேதமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்துத் தலைவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாகும்.

74 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த சுதந்திரத்தின் உண்மையான உத்வேகம் உள்நாட்டுப் போராட்டங்களினாலும், மூன்று தசாப்த கால பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினாலும் இந்நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது. போர்வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலுக்கும் அர்ப்பணிப்பிற்கும் தலைமைத்துவம் வழங்கி இத்தால் 13 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு அச்சம் இல்லாத நாட்டுக்கு மீண்டும் உரிமைக் கொள்ள முடிந்தது.

அந்த சுதந்திரம் மீண்டும் சவாலுக்கு உட்பட்ட நிலையில் நாட்டின் ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்று நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திய நாம் உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும்  பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மாபெரும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.

இந்த அழிவுகரமான தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் திட்டம் இப்போது உலக அளவில் பாராட்டப்பட்டிருப்பது ஒரு நாடாக நம் அனைவருக்கும் ஒரு பெரிய சாதனையாகும்.

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. ஒருவரையொருவர் மதித்து, மற்றவரின் இருப்புக்கு இடையூறாக இல்லாத சமூக மாற்றத்தின் மூலம் சுதந்திரத்தின் அர்த்தத்தை விரிவுபடுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

இந்த தேசிய சுதந்திர தினத்தில், எமது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்து மகத்தான தியாகங்களை செய்த அனைத்து மாவீரர்களையும் நாம் மரியாதையுடன் நினைவு கூர்வோம். சவால்களை முறியடித்து நாளைய விடியலுக்காக சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ள யாழ்.பல்கலைகழக மாணவர்கள் !

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக பல்கலைகழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு செல்வதற்காக பல்கலைகழகத்தில் தமது வாகனங்களை தரித்துவிட்டு செல்ல முற்ப்பட்ட நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.

நீதிமன்ற தடையுத்தரவையடுத்தும் தொடரும் மீனவர் போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் !

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பருத்தித்துறை –  சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய வழக்கு – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்ன..?

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரான நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதி சோபித ராஜகருணா தெரிவித்து, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நிலவும் கொவிட்-19 நிலைமையால் உயர்தர மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார் .

இந்த விடயத்தை கல்வி நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.