உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

புனித சிவனொளிபாதமலை யாத்திரையின் போது போதைப் பொருள் கடத்திய 18 இளைஞர்கள் !

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது ஹட்டன் வீதியூடாக போதைப் பொருள் கடத்திய 18 இளைஞர்களை ஹட்டன் பொலிஸார் கடந்த 08 ஆம் திகதி கைது செய்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 18 இளைஞர்கள், ​​கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸ் நாய் பிரிவின் அதிகாரிகள் ஸ்டூவர்ட் நாயின் உதவியையும் நாடியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுடைய அனுராதபுரம், பாணந்துறை, கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டொலர் பற்றாக்குறை – இன்னும் 10 நாட்களில் இலங்கை சந்திக்கவுள்ள நெருக்கடி !

எதிர்கால எரிபொருள் இறக்குமதிக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை உள்ளது எனவும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் நுகரப்படும் எரிபொருளுக்கு நாட்டுக்கு 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகக் கூறிய அவர், தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 150 மில்லியன் டொலர் இருப்பதாகவும் கூறினார். இம்மாத எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 200 மில்லியன் டொலரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபன வசம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவையால் பணம் வழங்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காதலிக்க மறுத்த பெண்ணின் உறவினர்கள் மீது இளைஞர் குழு வாள்வெட்டுத்தாக்குதல் – 07 பேர் வைத்தியசாலையில் !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞர் ஒருவர் அவரது குழுவினருடன் பெண்னின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருபக்கமாக காதலித்து வந்துள்ளதாகவும், அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தறவு கொடுத்து வந்துள்ளதாகவும் இதனையடுத்து இருவரது உறவினருக்கிடையே இரண்டு தடவைகள் கைகலப்புக்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இருபக்கமும் சமாதானமாக சென்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று (09) இரவு 7 மணியளவில் ஜெயந்திபுரத்தில் வீதியில் வைத்து குறித்த பெண்ணின் உறவினர் மீது இளைஞனின் குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தின் 7 பேர் படுகாயமடைந்ததையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் – குமார வெல்கம

“நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர், முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்ப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் விளைவினை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தேன். நான் குறிப்பிட்டதை மக்கள் ஏற்கவில்லை தற்போது அனுபவ ரீதியில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களுக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் 2019ஆ ம் ஆண்டுக்கு பிறகு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தொடர்பில் கருத்துரைப்பது பயனற்றதாகும். ஜனாதிபதியால் நாட்டையல்ல ஒரு பிரதேச சபையினை கூட சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய வகையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்றிற்கு வழங்கினார். பின்னர் அவர் தலைமையிலான சுதந்திர கட்சியினர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்கினார்கள். நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

சீனா ஏன் தமிழர்களுக்கு தேவையில்லை ..? – சுமந்திரன் விளக்கம் !

“வட – கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை.”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதன் படி,

வட – கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை என நான் தெளிவாக தெரிவித்திருப்பதுடன் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளேன். எங்கள் அரசியல் அபிலாசை என்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது – இந்த இரண்டு கருத்துக்களும் சீனாவிற்கு அந்நியமான விடயங்கள்.

எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் நாங்கள் தென்சீன கடற்பகுதியில் இல்லை – தென்சீன கடற்பகுதியில் இருந்திருந்தால் நாங்கள் சீனாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை அங்கீகரித்திருப்போம்,ஆனால் நாங்கள் இந்து சமுத்திர பகுதியில் இருக்கின்றோம்,இந்திய கரையிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ளோம்.  இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை நியாப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பதற்காக எங்களை யாரும் குற்றம்சொல்ல முடியாது.

சீனா இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடு இல்லை. இதன் காரணமாக இந்திய கரைக்கு மிக அருகில் உள்ள வடகிழக்கில் சீனா காலூன்ற அனுமதிப்பது– இந்தியாவிற்கு எதிராக மேலும் பகைமை நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கு சமமானது. என தெரிவித்துள்ள சுமந்திரன் இதனை நாங்கள் செய்யக்கூடாது என நினைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களிற்காக நாங்கள் வடக்குகிழக்கில் சீனாவை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“52 நாட்கள் மைத்திரிபால செய்த சூழ்ச்சியால் நேர்ந்த கதி.” – வே. இராதாகிருஷ்ணன்

“மைத்திரிபால சிறீசேன 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்த அரசுக்குள், அரசியல் ரீதியிலும் தற்போது நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். எனவே, அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணிகள் உருவாகலாம். புதிய பயணம் பற்றி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாமும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். தேர்தலை மட்டும் எதிர்ப்பார்த்து வருபவன் தலைவர் கிடையாது, நாளை சமூகதாயம் பற்றி சிந்திப்பவனே உண்மையான தலைவர். அவ்வாறானவர்களுக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேவேளை, தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன்பின்னர் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டன. இதனால் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். அதற்கு தடையாகவோ – எதிராகவோ நிற்கமாட்டோம். அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. 20 மூலம் அது நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்டுள்ள அவல நிலையை மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். இந்த உண்மையைதான் மைத்திரி இன்று கதைக்கின்றார். ஆனால் 52 நாட்கள் அவர் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி என்றார்.

நடு வீதியில் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு !

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில் ராகம ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபாகே வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பல்பொருள் அங்காடியில் சிறு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியே வந்துள்ளார்.

பல்பொருள் அங்காடியின் அருகில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவரை பிடிக்க முற்பட்ட போது முச்சக்கர வண்டி சாரதியை கையில் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, மற்றொரு குழு சந்தேக நபரை துரத்திச் சென்ற போது, யாரும் நெருங்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக அவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து சந்தேக நபர் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது சந்தேகநபர் நோயாளர் காவு வண்டி மூலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சந்தேக நபரின் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நாகொல்ல, உக்குவெலவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதான ரெஜி வனசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த ராகம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான தினுக லக்ஷான் பீரிஸ் என்னும் முச்சக்கர வண்டியின் சாரதி ராகம வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

“சீனாவுடனான நட்புறவு நீண்ட காலம் நீடிக்கும்.” – பிரதமர் மகிந்த உறுதி !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் பல இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொவிட்-19  நிவாரணம் மற்றும் கொவிட் பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சீன அரசு அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் இந்த சந்திப்பில் நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலம் நீடிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபாய இழந்த இரண்டு வருடத்தை பெற சர்வஜன வாக்கெடுப்பு !

நான் கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி தலதாமாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன் அவ்வேளை இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட்டினால்இரண்டுவருடங்களை இழந்துள்ளீர்கள் சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் ஏன் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என கேள்வி எழுப்பினார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உங்களை எனது ஆலோசகராக்கவேண்டும் என நான் அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மக்களிற்கு எனது கஸ்டங்கள் குறித்து தெரிந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“சுசில் பிரேமஜயந்தவுக்கு கிடைத்த அதிஷ்ட சீட்டு எனக்கும் கிடைக்கும்.” – மைத்திரிபால சிறீசேன

தெல்கந்த சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணித்தியாலயத்தில்  அதிர்ஷ்டச் சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர் ,

தற்போதைய நிலைமையை உற்று நோக்கினால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல் தான் காணப்படுகின்றது.  அன்றைய நாட்களில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காமை மற்றும் வீட்டு பெண்கள் அடுப்பை மூட்டும் போது தகாத வார்தைகளால் பேசினர். அவற்றை செவிமடுக்க அன்று சிறிமாவோ பண்டார நாயக்க தயாராக இருக்கவில்லை.

நேற்று  நான் பேசியதைக் கேட்ட, சமூக ஊடகங்களில் சிலர், நீங்களும் அரசாங்கத்தை கொண்டு வழிநடத்தினீர்கள் தானே என கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.

என்னுடைய அரசாங்கம் வேறுபட்டது என்றும் இன்று அரசாங்கத்தை நடத்துபவர்கள் அன்று தமது அரசாங்கத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்பது நினைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அன்று தம்மை இழிவுபடுத்தியவர்கள் இன்று மக்களின் அவமானத்துக்கும் நிந்தைக்கும் உள்ளாளாகியுள்ளனர் தானே என அவர் கேள்வி எழுப்பினார்.