உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“கடனுதவி பெற்றால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை.” – வாசுதேவ எச்சரிக்கை !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறச் சென்றால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்திலிருந்து கடன் வாங்குவது ஏழு தலைமுறைகளுக்கு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் போது கடைசி வழி என்றும், அங்கு செல்லும் எந்த நாடும் உதவியற்றது என்றும், பின்னர் நடக்கும் அனைத்தும் அதன் கொள்கையின்படி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரச சொத்துக்களையும் தனியார் மயமாக்குதல், நாட்டின் நலனில் வெட்டுகள் மற்றும் ரூபாவின் மிதப்பு போன்ற பல கடுமையான நிபந்தனைகளை அவர்கள் முன்வைப்பதாக அவர் மேலும் கூறினார்.

“சீனா தொடர்பில் தமிழ்அரசியல்வாதிகள் அச்சத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.” – சீன தூதுவர் கிய் சென் ஹொங்

பயங்கரவாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் சீனா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு எந்த தீமையும் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கிய் சென் ஹொங் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் சீனாவின் நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது அர்த்தமற்ற விடயம் என தூதுவர் தெரிவித்தார் என சண்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவும் இந்தியாவும் அயலவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் உள்நோக்கம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆனால் நாங்கள் அயலவர்கள் என அவர் தெரிவித்துள்ள அவர், இலங்கையின் வடபகுதி தீவுகளில் சூரியசக்தி மற்றும் காற்றாலைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தூதுவர் அந்த திட்டத்தை இ;ன்னமும் கைவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு தேவை இந்தியாவா ..? சீனாவா..? – எம்.ஏ.சுமந்திரன் நிலைப்பாடு என்ன.!

“சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் விரும்பவில்லை.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கே அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இங்கே சிலர் கேட்கின்றனர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்க கூடாது என்கின்றனர். இதற்கு நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன் சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் இரு காரணங்களிற்காக விரும்பவில்லை. அதில் ஒன்று எமது அரசியல் விடிவிற்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவிற்கு தெரியாது என்பதாகும்.

இரண்டாவது விடயம் இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால் சீனாவின் கடலில் இருந்திருந்தால் அதனை அந்த பிராந்தியத்தின் நியாயமான கரிசணையாக அது இருந்திருக்கும். ஆனால் இலங்கை இந்தியாவின் அருகில் உள்ள ஓர் தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசணையை நாம் உள் வாங்கியிருக்கின்றோம். அதுவும் இந்தியாவிற்கு மிக அண்மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை நாம் விரும்பவில்லை. ஏனெனில் சீனா இந்தியாவின் நட்பு நாடு அல்ல.

இதைச் சொல்லித்தான் சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசணை கொண்டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை விரும்பவில்லை. இதன்போதே வடக்கு கிழக்கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங்கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப்பது நாங்கள் எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால் எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்குமானால் நீங்கள் அந்தப் பயத்தைகொள்ளத் தேவையில்லை என்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால் இவை தொடர்பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனிலேயே செயல்படுவார்கள் அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண்ணம் இருக்கலாம் நாம் கூறியுள்ளோம் இங்கே தொடர்ச்சியாக குழப்பநிலை இருந்தால் இலங்கை அரசிடமே நில அதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப்போகின்றது. அது உங்களிற்கும் சாதகம் இல்லை. இதனை தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக்கள் தொடர்கின்றது இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்பு அல்ல. அப்படியும் இடம்பெறுகின்றது. இதே நேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளது இடம்மெறும்போது தெரியும் என்றார்.

“13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் – முட்டாள்கள்.” – கஜேந்திரகுமார் தாக்கு !

“13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் – முட்டாள்கள்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட்கிறார்களா? அரசமைப்பு என்றால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதன் பெறுமதி பூச்சியம். 35 வருடங்களாக இந்த அரசமைப்பில் – 13ஆம் திருத்தத்தில் ஏதோ இருக்கிறது. அதை நடைமுறைப் படுத்தவில்லை என்று கேட்பதா? தமிழர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வையடைவது எப்படி? அரசமைப்பு ஊடகத்தானே அதை அடையமுடியும் – வேறு எந்த வழியிலும் முடியாது.

அப்படி இருக்கும்போது இப்போதுதானே அதிகாரப் பகிர்வை பேசவேண்டும். ஆனால், இப்போது – அதுவும் ஒற்றையாட்சிக்குள் 13ஐ நடைமுறைப்படுத்தக் கேட்கிறார்கள். இந்த நேரத்தில்தானே, தமிழ்மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒருமித்து கேட்க வேண்டும் அதை செய்யத் தயாரில்லை. இவர்களின் சமஷ்டி என்பது சும்மா பெயருக்குத்தான். 35 வருடங்களாக தோற்றுப்போன – எட்டாத இடத்தில் இருக்கும் 13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் – முட்டாள்கள். ஆனால், இவர்கள் முட்டாள்கள் இல்லை – நிச்சயம் முட்டாள்கள் இல்லை. இந்நிலைக்கும் பூகோள அரசியலில் சீனாவின் வருகை முக்கியமாகிறது. இந்தியாவும் மேற்கு நாடுகளும் சீனாவிடம் இருந்து இலங்கை விடுபட வேண்டும் என்ற தேவை உள்ளது. அந்தப் பின்னணியில் அவை என்ன சொல்கின்றன என்றால், நீங்கள் சீனாவை கைவிடுங்கள் நாங்கள் தமிழனை ஒற்றையாட்சிக்குள் முடக்குகிறோம் என்று.

இதை தங்கள் முகவர்கள் – எடுபிடிகள் ஊடாக செய்கிறோம் என்பதே. சட்டத்தரணிகள், தங்களைத் தாங்களே மூத்த தலைவர்கள் என்று சொல்பவர்கள் தாங்களே நிராகரித்த 13ஐ இப்போது 30 வருடங்களின் பின்னர் நடைமுறைப்படுத்த கோருகிறார்கள். விக்னேஸ்வரன் அதைத் தாண்டி 13 தேவை – புதிய அரசமைப்பிலும் அப்படியே அது உள்வாங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவுக்கும் இதுவே வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் பேசிய போது போட்டுடைக்கும் வேலையை அவர் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுமியின் சடலம் – முல்லைத்தீவில் சோகம் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் ஒரு கை உடலில் இருக்கவில்லை என கூறப்படும் நிலையில், அதனை விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, நேற்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

இதேவேளை, நேற்று அந்த பகுதியில் இராணுவத்துடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, சடலம் காணப்படவில்லையென்றும், இரவோடு இரவாகவே சிறுமியின் சடலம் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலத்தை மீட்ட பொலிசார் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், முல்லைத்தீவு பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“அரசின் தவறான தீர்மானங்களுக்கு துணை போக முடியாது.” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால், அதற்காகத் தவறான தீர்மானங்களுக்குத் துணைபோகவும் முடியாது.” என  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசு தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.

யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும். இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்துக்கும், மின்சாரத்துறை அமைச்சுக்கும் இடையில் சாதாரண ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையைப் பிற நாட்டின் தனியார் நிறுவனத்துக்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையைத் தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம்.

யுகதனவி விவகாரத்துக்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.” என அவர் கூறியுள்ளார்.

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனான முன்னாள் போராளியை அடித்துக்கொலை செய்த மனைவி – முல்லையில் சம்பவம் !

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிறிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிசார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் சந்தேகநபரான மனைவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு மனைவியையும், அவரது இரகசிய காதலனான மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்ததுடன், இன்றைய தினம் சான்று பொருட்களையும் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் பகுதியில் 36 வயதுடைய முன்னாள் போராளியான நடராசா தனராஜ் 31 வயதான கீதாஞ்சலியை திருமணம் செய்து 8 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் இல்லாத நிலையில் மூத்த சகோதரி திருமணம் முடித்துள்ள அதேவேளை மற்றுமொரு இளைய சகோதரி இவரின் பாதுகாப்பில் உள்ளார்.

இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் தனியான வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவர் இல்லாத பொழுது கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 36 வயதான இராசநாயகம் ஜெயபாலன் என்பவருடன் 5 வருடங்களாக கள்ள தொடர்பு இருந்துள்ளாதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை 7 மணியளவில், உயிரிழந்தவரின் வீட்டுக்கு அண்மித்த பகுதியில் தனராஜ் ஏ9 வீதியின் அருகில் உள்ள பூவரசு மரத்தினடியில் இருந்துள்ளார். வீதியால் சென்ற கிராமத்தவர்கள் அவரை கண்டு வினவியபோது, தான் புகையிலையை அதிகம் எடுத்துக்கொண்டதால் தலை சுற்றுகின்றது. அதனால் இங்கு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனராஜ்ஜை உறவினர்கள் நால்வர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று அவரது வீட்டின் அறையில் சேர்த்துள்ளனர். இதன்போது அவருடைய மனைவியும் அங்கு இருந்துள்ளார். அதேவேளை கொலை செய்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான ஜெயபாலனும் வீட்டில் மறைந்திருந்ததாக மனைவியான கீதாஞ்சலி பொலிசாரின் விசாரணையில் குறிப்பிட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து சில மணி நேரத்தில் கீதாஞ்சலி சிறிய தாயாரின் வீட்டுக்கு சென்று தேனீர் அருந்திவிட்டு 30 நிமிடங்களின் பின்னர் உறவினர்களையும் அழைத்து வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை அவதானித்த உறவினர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சடலம் இரவு 11 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் பாரப்படுத்துவதற்கு மாங்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்டமையால், நீதிமன்ற விசாரணைக்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உதவி பெறப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற பகுதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்கு மிக அண்மித்த பகுதி என்பதால் இவ்வாறு உதவி பெறப்பட்டது.

இந்த நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார்.. இதன்போது கொலை செய்யப்பட்டவரின் மனைவி வழங்கிய வாக்குமூலமும், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையும், கிராமத்தவர்களால் வழங்கப்பட்ட இரகசிய தகவல்களும் விசாரணையை திருப்பி போட்டுள்ளது.

குறித்த மரணம் திடீரென்று ஏற்ட்ட மரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவியால் விசாரணையின் போது குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவரது உறவினர்களும் மனைவியின் வாக்குமூலத்திற்கு அமைவாகவே மரணம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆனால், குறித்த நபர் அமர்ந்திருந்த பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்பட்டமை தொடர்பில் திடீர் விசாரணை அதிகாரிக்கு கிராமமட்ட செயற்பாட்டாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினடிப்படையில் முதுகு விலா என்புகள் உடைந்துள்ளமையும், முதுகு பகுதியில் உட்காயமும் இரத்த கண்டல்களும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் திடீர் மரணம் என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் தகவல்களையும் அடிப்படையாக கொண்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது மனைவி வழங்கிய வாக்குமூலத்திற்கும், அழைத்து சென்றவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

விசாரணை மேற்கொண்டிருந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம், உடற்கூற்று அறிக்கை ஆகியன பலத்த சந்தேகங்களை உருவாக்குயுற்றதாக கிளிநொச்சி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் முழுமையான உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், மாங்குளம் பொலிசாரின் கண்காணிப்பில் பொன்னகர் மயானத்தில் புதைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபரின் சடலம் பொலிசாரின் கண்காணிப்பில் பொன்னகர் மயானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டது.

தொடர்ந்து மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் அறிக்கையிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு அமைவாக விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்த மாங்குளம் பொலிசார் சந்தேக நபர்களான கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும், அவரது 5 வருட இரகசிய காதலனையும் விசாரணைக்காக நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, தானும், ஜெயபாலன் என்ற சந்தேக நபரும் இணைந்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜெயபாலன் சவள் ஒன்றினால் முதுகு பகுதியில் தாக்கியதாகவும், பின்னர் விபத்து ஏற்பட்டது போன்று காண்பிப்பதற்காக உயிரிழந்தவரின் சைக்கிளை கல்லினாலும், இரும்பு கம்பியினாலும் அடித்து நெளிவுகளையும், உடைவுகளையும் ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபரான உயிரிழந்தவரின் மனைவியை இன்று பொலிசார் அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதுடன், சவல் மற்றும் உயிரிழந்தவரின் மேல் ஆடை உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அடித்து கொலை செய்யப்பட்டமைக்கான சான்று பொருட்கள் பொலிசாரால் இன்றைய தினம் மீட்கப்பட்டது.

கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்தது போன்றதான தோற்றப்பாட்டை காண்பிக்க முற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் விசாரணை அறிக்கை மற்றும் சான்று பொருட்களுடன் சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராசநாயகம் ஜெயபாலன் என்பவர் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாங்குளம் வட்டார வேட்பாளராக களமிறங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“ஒப்புக்கொண்டபடி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் விழாவில் கலந்து கொள்வேன்.” – சீனாவுக்கு விளாடிமீர் புடின் உறுதி !

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

காணொளி வாயிலாக நடைபெற்ற ரஷ்யா – சீனா ஆகிய இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘முக்கிய தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சீனாவின் முயற்சிகளை வலுவாக ஆதரித்தது மற்றும் நமது நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை உறுதியாக எதிர்த்தது ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது. எங்களின் தேசிய நலன்களைக் காக்கும் முயற்சிகளை ரஷ்யா எப்போதுமே ஆதரித்துள்ளது’ என கூறினார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்,

’21ஆம் நூற்றாண்டில் ரஷ்யா, சீனா இடையேயான நட்புறவு இருநாட்டு ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணம். நம் இரு நாடுகளுக்கும் இடையே புதுமாதிரியான ஒத்துழைப்பு உருவாகியுள்ளது. இந்த ஒத்துழைப்பு இருநாடுகளும் மற்றவரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளும் எல்லையை நிரந்த அமைதிப் பகுதியாக வைத்துள்ளோம். நாம் சிறந்த அண்டைநாட்டு நட்புறவை பேணுகிறோம்’ என கூறினார்.

அத்துடன் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம், ஸி ஜின்பிங்கை, சீனாவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக புடின் கூறியுள்ளார். மேலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதி புடினும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இதுவரை 30 முறை சந்தித்துள்ளனர்.

“கனடாவில் அடி வாங்கிவிட்டு இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார் சாணக்கியன்.” – ஹாபீஸ் நஷீர் அஹமட்

“கனடாவில் அடி வாங்கிவிட்டு இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார் சாணக்கியன்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணி பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம் பெற்றுள்ளது. ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளிய விடயம் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இருக்கலாம், அது ஆயுத கலாசாரத்தில் இடம் பெற்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றது வேறு. அரசியல் அதிகாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஸ்லிம் ஒருவர் இல்லாமல் போனது இந்த முறை மாத்திரம் தான் அப்படி இருந்த போதும் கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படி பறிபோனது இது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இதனை பேச வேண்டிய தேவை உள்ளது ஏன் என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.  “முஸ்லிம்களுக்கு நாட்டில் காணிகள் இல்லை மட்டக்களப்பில் பிரச்சினை இல்லை. முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணி இல்லை என்று சொல்லி நாடகம் ஆடுகிறோம். காணி இல்லை என்று சொல்லி அவர் சொன்னது பிரச்சினை இல்லை.

அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்தில் இருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள் என்ற கவலை தான் எனக்கு உள்ளது.ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல மாறாக இன்னும் ஒரு இனத்துக்கு கிடைக்க இருக்கின்ற நியாயமான உரிமையை கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகும் ” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் காணிகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் ராஜபக்ஷ  அரசாங்கம் – துணைபோகும் வடமாகாண ஆளுநர் !

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்றைய தினம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே /226, காங்கேசன்துறை மேற்கு ஜே /223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான அளவீட்டு பணிகள் நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது. இந்த நிலையில் அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடி காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனால் காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்ட போது ,

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தாயக மக்களின் காணிகளை இலங்கை இராணுவத்திற்கு வழங்க முனைப்பு காட்டி வருவதாகவும்  அத்துடன், தமிழ் மக்களின் காணிகளை நிரந்தரமாக ஆக்கிரமிக்க கோட்டா – மஹிந்த தலைமையிலான  அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.