உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வடக்கில் உக்கிரமடைந்துள்ள தொழில் வாய்ப்ப்பின்மை பிரச்சினை – திண்டாடும் இளைஞர் பட்டாளம் !

வடக்கு மாகாணத்தில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். ஒட்டுமொத்தமாக இலங்கையில் உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.

அரசாங்கம் அடுத்த வருடம் வேலை வாய்ப்பை வழங்காது என்று அறிவித்துள்ள நிலையில் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற் சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.

“சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மனோகணேசன்.” – கஜேந்திரகுமார்

தென்னிலங்கை சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசிய அவர்,

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒற்றையாட்சிக்குள் திணிக்கும் சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.  இந்தியாவின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை வேதனையளிக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களே பேரினவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றமையை உணர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கடற்கரை பகுதிகளில் தொடர்ந்தும் கரையொதுங்கும் சடலங்களும் – மனித எலும்புக்கூடுகளும் !

தொண்டமனாறு உயரப்புலம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக் கூடென சந்தேகிக்கப்படும் பாகங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மனித எச்சங்களென சந்தேகப்படுவது தொடர்பில் மீனவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாருடைய சடலம் என்பது இதுவரை அடையாளம் காண முடியாத நிலையிலும் ஆணா, பெண்ணா என அடையாளப்படுத்த முடியாத அளவில் இவை காணப்படுகின்றன.

வட கடல் கரையோரங்களில், மனித உடல்கள் கரையொதுங்குவதும் ,மனித எச்சங்கள் கரையொதுங்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால், அவ்வாறான சடலங்களில் எந்தவொரு சடலமும் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை.

சிங்கள மொழியில் விசாரணைகளுக்கான அழைப்பாணை – ஏற்க மறுத்த மனோகணேசன் !

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு, விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமது இல்லத்துக்கு, கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும், தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி மனோ ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நீண்ட காலமாக நடக்கின்றன. பல எதிரணி எம்பீக்கள் பலமுறை அழைக்கப்பட்டார்கள். நான் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது திடீரென நான் அழைக்கப்பட்டுள்ளேன். ஏனிந்த திடீர் அழைப்பு என தெரியவில்லை. தனது மூன்றில் இரண்டு பலத்தை பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் முழு அமைச்சரவையையும், குற்றம் சாட்டி தண்டனைக்கு உள்ளாக்க முடியும் என்ற பாணியில் ஜனாதிபதி சமீபத்தில் பேசி இருந்தார். அதன் வெளிப்பாடோ இதுவென தெரியவில்லை.

இந்த அழைப்பாணை முழுக்க சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கின்றது. இந்நிலையில் இதை ஏற்று என்னால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு வர முடியாது என அறிவித்து விட்டேன். அத்துடன் எனக்கு சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை அனுப்பி இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளர்கள், இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) பிரிவுகளை மீறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) என்ற சட்ட விதிகளின்படி இலங்கையின் எந்தவொரு பிரஜையும், எந்தவொரு அரசு அலுவலகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும், தொடர்பாடல்களை பெற உரிமை கொண்டவர்கள் என்பதையும், நான் ஒரு தமிழர் என்பதை அறிந்த நீங்கள், இலங்கையின் சக ஆட்சிமொழியான தமிழ் மொழியில், என்னுடன் தொடர்பாடல் செய்ய தவறி, அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளீர்கள் எனவும், நான் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

எதுவானாலும் முதலில் தமிழ் மொழியில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை வரட்டும். அப்புறம் விசாரணைகளை அவசியமானால் சந்திப்பேன். ஆனால், அங்கேயும் பிழையில்லா தமிழ் மொழியில் இவர்கள் எனது வாக்குமூலத்தை எழுதி பதிவு செய்ய வேண்டும்.

“ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடுகிறார்கள்.” – யாழ்.மாநகர சபை தொடர்பில் கஜேந்திரகுமார் விசனம் !

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மெலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.

ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.

அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை சிறிலங்கா அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் இருக்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.

மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற மத்திய அரசு செய்யக்கூடிய வேலைகளைக்கூட சரியான முறையில் நிபுணத்துவம் இன்றி ஆய்வுகள் செய்யாமல் வெறுமனே கண் துடைப்புக்காக செய்ததாக இல்லாமல், உண்மையி்ல் ஆக்கபூர்வமான அபிவிருத்தியாக மாற்றியமைக்கக்கூடிய கண்காணிப்பாக செயற்பட்டிருக்க வேண்டும்.

இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனெனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.

இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே , மாநகர சபைக்குள் மாத்திரமல்ல, உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் தேசிய சிந்தனை இல்லாமல், வெறுமனே உழைக்கின்ற சிந்தனையோடு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நெடுங்கேணியில் துப்பாக்கிச்சூடு – சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழப்பு !

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே  உயிரிழந்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய  பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.

விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில் உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதனடிப்படையில்  ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே  உயிரிழந்துள்ளதாகவும் எதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இந் நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்த பெண்ணின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் ஏற்கனவே கொலை குற்றத்துக்காக சிறையில் இருந்து வந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஹ்ரான் உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறை சம்பளம் வழங்கியதா..? – பாதுகாப்பு செயலாளர்

சஹ்ரான் உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறையினால் சம்பளம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மறுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாம் பாதுகாப்பு செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

“நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார்.” – இரா.சாணக்கியன்

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து இன்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், அவரை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரங்க வெளியில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யாழ்ப்பாணத்துடன் தொடர்புகளை பேண விரும்புகின்றோம்.” – சீனா தூதுவர்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.

பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகிறேன். யாழ் நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் நூலகம் பற்றிய முழு விபரங்களையும் எமக்கு விளங்கப்படுத்தியிருந்தார். எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என்றார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்,

இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா..? என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என்றார்.

யாழ்.மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான பாதீடு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும்,  ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும்,  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21  உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13  உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.