உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலிருந்து உணவு விநியோகம் – விசாரணைகள் தீவிரம் !

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான உணவுப் பொட்டலங்களை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து அண்மைக்காலம் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது ஏதேனும் அமைப்பினால் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி !

இராமநாதபுரம், புதுக்காடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இராமநாதபுரம், புதுக்காடு, காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 லீற்றர் கோடாவும், 62 அறுபத்தி இரண்டு போத்தல் கசிப்பும் சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“கோட்டா கோ கமவில் ஈடுபடாதீர்கள் என தமிழர்களிடம் ஏற்கனவே நான் தெரிவித்தேன்.”- சிறீதரன்

சிங்கள தரப்பினரிடமிருந்து நாம் ஏமாறியதைக் காட்டிலும் தமிழ் தரப்பினரிடமிருந்து ஏமார்ந்தமையே அதிகமாக உள்ளது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் காரியாலயம் இன்று (01) திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால், அது தமிழர் தரப்பிற்கான தீர்வினை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், அவ் அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற வேளையிலே தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசப்பட்டு அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.

கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது.  தமிழர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன் என்பதையும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

பாரபட்சம் பார்க்காது கைது செய்யுங்கள் – பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் !

அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையிலுள்ள இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்குமிடையில் பல்வேறு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாதுகாப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி, தராதரம் பாராமல் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதுகாப்புப் படையினரின் கடமைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடையூறு விளைவிப்பவர்கள், மோதல்களை ஏற்படுத்துபவர்கள் மற்றும் அவற்றை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

 

மூடப்படும் நிலையில் இலங்கை ஆடைத்தொழிற்சாலைகள் – பறிபோகும் சர்வதேச சந்தைகள் !

பொருளாதார நெருக்கடியால் ஆடை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக வலய சேவை மையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் ஆடை உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இன்மையால் தமது பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை எனவும் இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இலங்கை பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.

நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் சீன ஆராய்ச்சிக்கப்பல் – பதறும் இந்தியா !

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் 750 கிலோமீட்டருக்கும் அதிகமான வான்வழி அணுகல் கண்காணிப்பு திறனைக் கொண்டுள்ளது, எனவே இது தென்னிந்தியாவில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய அணு ஆராய்ச்சி மையங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட துறைமுகங்கள் உட்பட சீனாவால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இந்தியாவின் பல இடங்களில் இருந்து தகவல்களை சேகரிக்க சீனாவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் இந்த கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டையில் தரித்திருக்கும் எனவும், முக்கியமாக எரிபொருள் உள்ளிட்ட நிரப்புதல்களுக்காக, அது துறைமுகத்தில் தரித்திருக்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாம் மூன்று மாதம் பொறுமையாக இருந்ததால் கோழைகள் அல்ல. இராணுவத்தை சோதிக்காதீர்கள் என்கிறார் பாதுகாப்புச் செயலாளர் !

“இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றிய போதேஅவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் பேசிய அவர்,

நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  எனினும் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபவோருக்கு எதிராக அதிக பட்ச பலம் பிரயோகிக்கப்படும்.

தற்போதைய நிலைமையை நானும் பாதுகாப்பு தரப்பினரும் மூன்று மாதங்களாக பொறுத்துக்கொண்டோம்.  இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் எவரேனும் அரச சொத்துக்களுக்கு அல்லது அரசாங்க அலுவலகங்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டால், அவசரகால சட்ட விதிமுறைகளின் அதிகபட்ச பலம் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கோட்டாபாய இலங்கைக்குள் வருவதற்கான தருணம் இதுவல்ல.”- ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருகை தருவதற்கான உகந்த சந்தர்ப்பம் இது அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வருகை தரும் பட்சத்தில், நாட்டிற்குள் அரசியல் நெருக்கடி ஏற்படலாம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படவில்லை எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க  இலங்கைக்குள் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் சில காலங்கள் செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ரணில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்.”- பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் மனதார வரவேற்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானதும், பாராட்டத்தக்கதும்.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். எனவே, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.