உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள சமூக சவால்கள் தொடர்பில் யாழில் கருத்தறியும் நடவடிக்கை !

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM)   ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின்  யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்  பொதுமக்களின் கருத்தறிந்தது - PMD | PMD

சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை  சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.

இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடயங்கள்  மற்றும் பரிந்துரைகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள சமூக சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய விரிவாக இந்தச் சந்திப்புக்களில் ஆராயப்பட்டன.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் வண.கலாநிதி ஜெஸ்ரின்  பீ ஞானப்பிரகாசம்,   யாழ் நாக விகாரையின் தம்மிக தேரர் உள்ளிட்ட மதத் தலைவர்களுடன் இடைக்காலச் செயலக அதிகாரிகள் குழு முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கருத்துக்கள் மற்றும் கவலைகள் தொடர்பில் சமயத் தலைவர்கள் இதன் போது கருத்துத்  தெரிவித்ததுடன், நாட்டில் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு  நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியடைய பிரார்த்தனை செய்ததுடன் ஆசிகளையும் வழங்கினர்.

இடைக்கால  செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து  மதத் தலைவர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படவுள்ள  உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்த விளக்கங்களை வழங்கினார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், இடைக்கால செயலகம் சிவில் சமூக அமைப்புகள், யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கல்வியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், இளைஞர் குழுக்கள், பெண்  உரிமை  அமைப்புப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களையும் திரட்டியது.

இந்த ஆலோசனைகள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகள் பற்றிய விரிவான புரிதலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய பங்குதாரர்களுடன்  நடத்தப்பட்ட விரிவான பொது ஆலோசனைச் செயல்பாட்டில் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று மற்றும் சட்ட அதிகாரி  அஷ்வினி ஹபங்கம,கொள்கைப் பிரிவுப் பிரதானி கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின்  மக்கள் தொடர்பு மற்றும் கொள்கைப் பிரிவைச் சேர்ந்த  சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கெடுத்திருந்தனர்.

வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது – ஹர்ஷ டி சில்வா

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்றோம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருந்தால் அது தவறு என அவர் வலியுறுத்தினார்.

முன்னைய தலைவர்கள் வரிகளை குறைப்பதற்கு மோசமான தீர்மானத்தை எடுத்ததன் காரணமாகவே இன்று இலங்கை இவ்வாறானதொரு நிலையை அனுபவித்து வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் !

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமீப காலமாக நாட்டில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் பொருத்தமற்ற செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உள்ளே மற்றும் பாடசாலைக்கு வெளியே பிள்ளைகளுக்கு பொருத்தமற்ற பல்வேறு விடயங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

பாடசாலைக்கு 500 மீற்றர் இடைவெளியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற விடயங்களை விநியோகிக்கும் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது இடம்பெறுவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

போலிஸாரை ஈடுபடுத்தி பாடசாலைக்குள் மற்றும் வெளியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முறையற்ற நடவடிக்கைகளும் ஒழிக்கப்படும்” என அவர் மேலும் தொவித்துள்ளார்.

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாதிரியார் கைது !

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 63 வயதுடைய பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்டவொரு மத சபையொன்றின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் விடுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது .

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் குறித்த பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதி பதிவு செய்யப்படாத நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பாதிரியார் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – பொலிஸ் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைது !

போதைப் பொருள் பாவனை  தொடர்பில்,  கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் நாடளாவிய ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2121  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், 133 பேர்  புனர்வாழ்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ‘நிஹால் தல்துவ‘ தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் மற்றும் மாவா போதைப்பொருளுடன் யாழில் மூன்று இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே  20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பிற்கு வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு கிராமத்தை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வருகைதந்ததாகவும் அதற்கு தாமும் மக்களும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

திவ்லபொத்தானை கிராமத்தில் சிங்கள மக்கள் பல வருடங்களாக விவசாயம் செய்துவருகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இந்த விவசாய செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். குறித்த விவசாய நிலங்களை தமிழ் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்தை கால்நடைகளுக்காக வழங்கினால் சிங்கள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள். அதற்கு எதிராகவே நான் குரல் கொடுத்து வருகின்றேன்.

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம் | Pillaiyan Support Sinhalese Mayilathamaadu Affair

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்திலும் தம்மை பாதுகாத்தார்கள். அன்று முதல் தமிழ் மக்களுடன் நான் இருந்துள்ளேன். எனினும் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  இது மிகவும் தவறானது. தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் எமது பங்காளிகள். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு சிதைந்துவருவதால் தற்போதைய ஆட்சியாளர்கள் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் ஏனைய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் இனவாதம் பேசவில்லை. நாடு நெருக்கடியில் இருக்கும் தருணத்தில் இதுபோன்ற செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்  மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு வாளுடன் தயாராக இருந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது !

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலைச் சேர்ந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறைப் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞனே வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டுக் கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரை கண்டதும் வாள் வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.

பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிகரிக்கப்படும் வற் வரியானது மேலும் அதிகளவான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்காரணமாக அமையும் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரியானது, சுகாதாரத்துறைக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில், பல பொருட்களுக்கு புதிதாக 18 வீத வரி விதிப்பது, பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

அம்புலன்ஸ்கள், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களான ஊன்றுகோல், செவிப்புலன் கருவிகள் ஆகியவை, ஜனவரி முதல் புதிய வரிக்கு உட்பட்டது.

‘சுகாதாரத்துறையின் மீது தேவையற்ற சுமைகளை சுமத்துவதன் மூலம், நோயாளர்களுக்கு வழங்க வேண்டிய நன்மைகள் தொடர்பில் பிரச்சினைகள் உருவாக்குகின்றன. இதனால், நாட்டின் சுகாதாரத்துறை, நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்.

‘இறுதியில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அந்த மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.’

அத்துடன், வரி அதிகரிப்பு காரணமாக, மேலும் அதிகளவான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவுறுத்தல் !

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் காவல்துறையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த விடையம் தொடர்பில் உடன் நடைமுறையாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.