உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“நீங்கள் போராடுங்கள். எந்தத்தடையும் இருக்காது.”- புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு !

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னதாக ஊடகங்களிடம் பேசியிருந்த அவர்,

‘கோட்டகோகம’ போராட்டம் தொடர வேண்டும் எனவும்  ‘கோட்டகோகம’ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு உலக சாதனைகளுடன் பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க !

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த பொது தேர்தலில் ரணில் விக்ரமிங்க வெறும் 20000 என்ற சிறிய வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தார். எனினும் தேசிய பட்டியலில் உறுப்பினர் பதவி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அவ்வாறு தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமராகி வரலாற்றில் இடம்பிடித்த ஒருவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகத்திலேயே இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதவி பிரமாணம் செய்துள்ளார். இதுவும் ஒரு உலக சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

நாட்டை விட்டு நாம் வெளியேறமாட்டோம் – நாமல் தமிழில் ட்வீட் !

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் நாமல்ராஜபக்ஷ தமிழில் இட்டுள்ள பதிவின் மூலமே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர், “கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்” என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – மகிந்த குழுவினருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதித்துள்ளனர்.

மேலும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியவர்கள் கண்டறியப்பட்டால் …, – இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம் மக்களை திரட்டபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர், இது தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்

ரணில் – கோட்டாபய திடீர் சந்திப்பு – பிரதமராகிராறா ரணில்..?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழில அடுத்து இருவருக்கமிடையிலான திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னரே தமது அதிகாரத்தை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தென்னிலங்கை ஊடகங்கள் பல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், அவர் பதவி விலக வேண்டும்.”- எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், அவர் பதவி விலக வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

“ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை பதவி விலகுமாறு நாடு முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக, அவர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளார், மேலும் அவர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும்போது, ​​அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு மேல் இருந்தால், அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டி மற்றொரு பிரகடனத்தையும் செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் 155 (7) கூறுகிறது. , அவர் செய்யவில்லை.

ஜனாதிபதி அவ்வாறானதொரு பிரகடனத்தை மேற்கொள்ளாத காரணத்தினால் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில் பிரதமர் இல்லாமலும் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும். எனினும், இன்று பிரதமர் இராஜினாமா செய்ததன் பின்னர், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் தமது பதவிகளை விட்டுச் சென்றுள்ளனர், அதுவே அரசியலமைப்பு நிலைப்பாடு.

எனவே, ஜனாதிபதி உடனடியாக ஒருவரை பிரதமராக நியமித்து அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அனைத்து ஆட்சி அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் இருக்காது.

ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், அவர் பதவி விலக வேண்டும்.

எனவே, ஜனாதிபதி உடனடியாக பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து, அதன் பின்னர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.”- பல்கலைகழக மாணவர்களிடம் சாணக்கியன் கோரிக்கை !

“வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை வெளியிடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) இடம்பெற்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு  பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திடம் வலியுறுத்தினார் சாணக்கியன் ...

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்றைய நாளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நாங்கள் வரவேற்கின்றோம். விசேடமாக இந்த முன்மொழிவுகளுக்குள்ளே மேலும் ஒன்றிரண்டு விடயங்களையும் உள்ளடக்குமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

விசேடமாக இந்த 13 கோரிக்கைகளுக்குள்ளே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான எந்தவொரு விடயங்களும் இல்லாத காரணத்தினால், அந்த விடயங்களையும் முன்வைக்குமாறு அன்பான வேண்டுகோளினை இந்த நேரத்திலே முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை என்ற விடயத்தினையும் சொல்லி இருக்கின்றேன்.

இன்று சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக இருக்கட்டும், அதற்கு பின்னர் நடந்ததாக இருக்கட்டும், இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த நாட்டிற்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதிலளிக்காமல் விட்டாலும் எங்கள் நாட்டிற்கு ஒரு எதிர்காலம் இல்லை என்பதனையும் இந்த இடத்திலே நான் விசேடமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனியார் மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த முன்மொழிவுகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறும் இரா.சாணக்கியன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

மகிந்த ராஜபக்ஸ எங்கே..? – கடற்படை தளபதி வெளியிட்டுள்ள தகவல் !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக இருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (11) தெரிவித்தார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் தலைமையக மைதானத்திலிருந்து இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஒப்புக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுவதாகவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உறுதியானதும் அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வார் எனவும் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தலைநகரில் குவிக்கப்படும் படையினர் – இலங்கையில் இராணுவ ஆட்சி ?

நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

நேற்றையதினம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.