ஜெயபாலன் த

Sunday, August 1, 2021

ஜெயபாலன் த

என் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் புரட்டிப் போட்ட நாள்: கருப்பு யூலை!

ரவி என் அண்ணா, ஊரில் அவனை எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும். தனபாலன் பதிவுப் பெயர். நாங்கள் அனுராதபுரத்தில் தான் பிறந்தோம். அவன் முதற் பிள்ளை பெரிய உயிரைக் காப்பாற்றுவதா? சின்ன உயிரைக் காப்பாற்றுவதா? என்ற போராட்டத்தோடு தான் அண்ணா சத்திரசிகிச்சை மூலம் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டான். அதனால் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்த டொக்கடர் தனபாலனின் பெயரே அவனுக்கும் சூட்டப்பட்டது. அவனையும் ஒரு டொக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு தான் அம்மா அவனை வளர்த்தார். ஏ எல் பயோ சயன்ஸ் படித்தான். யாழ் வட்டு இந்துக் கல்லூரியில் படித்தான். யாழ் நியூ மாஸ்ரருக்கு ரியூசனுக்குப் போய் வந்தான். ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர். படிப்பிலும் பரவாயில்லை. ஆனால் டொக்டர் கனவை எட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. பெரும்பாலான நேரம் அவன் அரசியல் கூட்டங்கள் என்று தான் திரிந்தான்.

யாழ் வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் ஒரு சிவராத்திரி விழா என்று தான் நினைக்கிறேன்; அப்போது அ அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர்; திரு திருமதி அ அமிர்தலிங்கம் உரையாற்றுவதற்காக வந்திருந்தனர். அப்போது கிளர்ச்சியூட்டும் கோசங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் உரைகள் பொறி பறக்கும். அந்தக்காலம் அ அமிர்தலிங்கம் தளபதி. கையைக் கீறி இரத்த திலகம் இடுவதுதான் அன்றைய வைரல் ரென்ற். அன்றைய கூட்டத்தில் அண்ணாவும் அ அமிர்தலிங்கத்திற்கு இரத்த திலகம் இட்டான். ஏ எல் முடித்துவிட்டு கொக்குவில் ரெக்கில் படித்தான்.

1983 யூலை 23 இரவு யாழ் திருநல்வேலியில் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஆங்காங்கு எழுந்தமானமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தினர். இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு வயது 12. அண்ணாவுக்கு வயது 19. இராணுவ கெடுபிடி என்றாலும் அவன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. எப்போதும் ஓடி ஆடித் திரிந்துகொண்டுதான் இருப்பான். ஆனால் மாலை ஆறு மணி ஏழு மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும். அப்போதெல்லாம் வேலியில் தடியயை முறித்து கோட்டைக் கறீ, கோட்டுக்குள் பிள்ளைகளை நிற்க வைத்து அடிப்பது நல்ல பெற்றோரின் ஸ்ரைல். பத்தொன்பது வயதிலும் அம்மா கீறிய கோட்டைத் தாண்டாமல் துள்ளித் துள்ளி அடிவாங்குவான்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில். அப்பா அனுராதபுரத்தில் வேலை. ஆண்மகனாக அப்பாவின் இடத்தில் அண்ணா தான் வெளிநிர்வாகம் முழுவதும். அவனுக்கு நட்புகளுக்கும் குறைவில்லை. அவனும் அவனது தலைமுறையும் தேசியவாத அலையில் அள்ளுண்டனர். அதைவிட அங்கு பெரிய மாற்றீடு இருக்கவில்லை. ஊரோடு ஒத்தோடி இருப்பார்கள். ஆனையிறவை பெரிதாக தாண்டாத சிங்களவர்களையோ வேற்று ஆட்களையோ கண்டிராத ஒரு சமூகம். அப்போது என்ன பெரிய அரசியல் அறிவு இருந்திருக்கும். ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் கருத்தோடு அள்ளுண்ட காலங்கள் அவை.

1976 இல் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்தது அப்போது எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 1977 கலவரம் வரை நாங்களும் எல்லோரும் அனுராதபுரத்தில் தான் வாழ்ந்தோம். கலவரம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணா அனுராதபுரம் விவேகானந்தக் கல்லூரியில் ஓல் படித்திருக்க வேண்டும். அன்று பாடசாலைநாள். காடையர்கள் தமிழர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் வீடுகள் கடைகள் எரியூட்டப்பட்டது. அப்பாவோ சின்னையாவோ தெரியவில்லை பள்ளிக் கூடம் சென்றிருந்த அண்ணாவை ஓடிப்போய் கூட்டிவந்து பக்கத்தில் இருந்த சிங்கள நண்பரின் வீட்டில் ஓரிரு நாட்கள் ஒளிந்துகொண்டோம். சில மங்களான ஞாபகங்கள் இன்றும் உள்ளது.

அனுராதபுரத்தில் யாழ்ப்பாண சந்திக்கு அருகில் இருந்த எங்கள் வீடும் எரிக்கப்பட்டதாக சொன்னார்கள். ஓரிரு நாட்களில் நாங்கள் பொலிஸ் பாதுகாப்போடு அனுராதபுரம் கச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். அப்போதும் கடையர்கள் பெற்றோல் குண்டுகளோடு துரத்தினர். அனுராதபுரம் கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இராணுவ பாதுகாப்போடு வவுனியா வரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டோம். மாங்குளத்தில் காடையர்கள் பஸ்ஸை கற்கள் கொண்டு தாக்கினர். அக்காலத்திலும் உண்மைச் சம்பவங்களும் வதந்திகளும் சேர்ந்து மரண பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு இதனைப் புரிந்துகொள்ளும் வயதில்லை. ஆனால் அண்ணாவுக்கு இவை தெளிவாக மனதில் பதிந்து இருக்கும். அந்த உணர்வுகளோடு தமிழ் தேசியத்தின் தலைநகரான யாழ் மண்ணில் அவன் இளைஞனான்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல் கொழும்புக்கு மறுநாள் மாலையளவில் கொண்டு செல்லப்பட அங்கு பதட்டம் ஏற்பட்டது. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழர்கள், அவர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்கானது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சியில், இக்கலவரம் கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யூலை 25 மாலை வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 35 பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 17 அரசியல் கைதிகள் யூலை 27 இல் படுகொலை செய்யப்பட்டனர். பரவலாக தென்பகுதியில் குறிப்பாக கொழும்பில் நடந்த வன்முறையில் சிங்களக் காடையர்களால் 800 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம் 24 மணிநேரச் செய்திச் சேவைகள் கிடையாது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்வதுதான் செய்தி. லங்கா புவத் – ப்பொறு புவத் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அன்றும் அசம்பாவிதங்கள் வதந்திகளாக வந்துகொண்டிருந்தது. நாளாந்த வாழ்க்கை சீர்குலைந்தது. சமைத்து சாப்பிடுவதே கஸ்டமானதாக இருந்த நாட்கள். ஒவ்வொரு வீட்டுலுமே இழவு நிகழ்ந்தது போன்ற உணர்வு. மாலை ஆறு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்காக எல்லோரும் மயான அமைதியோடு காத்திருந்தோம். வெலிகடைப் படுகொலைகள் பற்றி சொல்லி கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. அண்ணா குமுறினான். அருகில் இருந்தவற்றை தூக்கி எறிந்தான். கொல்லப்பட்டவர்களில் அவனுக்கு நெருக்கமான மாஸ்ரரும் ஒருவர். கொல்லப்பட்டவர்களில் சிலர் அவனுக்கு நெருக்கமாக இருந்தனர் அல்லது அவர்கள் தனக்கு நெருக்கமாக இருந்ததாக உணர்ந்து இருக்க வேண்டும்.

அப்பொழுதெல்லாம் நாளாந்தம் செய்தி கேட்பது நாளாந்த வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ஒழிப்பு மறைப்பு கூட்டுத்தாபனமானது. அதனால் செய்திகளுக்கு இந்தியாவின் ஆகாசவானியின் செய்திகள், மாநிலச் செய்திகள், பிபிசி இன் தமிழோசை, பிலிப்பைன்ஸில் இருந்து வெரித்தாஸ் வானொலி ஆகியன தமிழ் வீடுகளின் நாளாந்த பெயர்களாக அறியப்பட்டிருந்தது. தமிழ் இயக்கங்கள் கரந்தடிப் படைகள் என வெரித்தாஸ் வானொலியால் என்று தான் நினைக்கிறேன் அழைக்கப்பட்டது.

அவனுடைய போக்குகள் மாற்றம் அடைந்தது. அவன் தன் பொறுப்புகளை உணர்ந்தவன் போல் ஆனான். மேற்கொண்டு தான் படிக்கத் தயாரில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஊர்விட்டு வேலை விடயமாக வேறோர் ஊரக்குப் போகப் போவதாகக் கூறினான். அவன் பொய் சொல்கிறான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்று அவனை நம்ப வைப்பதற்கு எங்களால் முடியவில்லை. நாட்கள் நகர்ந்தது. அவனது நடவடிக்கைகள் முற்றாக மாற்றம் அடைந்தது. ஒரு நாள் இரவு வேலைக்கு போவதாகக் கூறி வெளிக்கிட்டான். ஒரு பாக்கிற்குள் சில உடுப்புகளை எடுத்து வைத்தான். இது எங்களுடைய வீட்டில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள பல வீடுகளில் இதுதான் நடந்தது.

அம்மா கட்டி அணைத்து அழுதா. அவவுடைய கனவுகள் அனைத்தும் அன்று உடைந்தது. அனாலும் அவன் எடுத்த முடிவில் அவன் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கம் இருந்திருக்க வேண்டும். அம்மா கத்தியை எடுத்து கையை கீறி அவனுக்கு இரத்த திலகம் இட்டா. அவன் எந்த சலனமும் இல்லாமல் இருளோடு கரைந்து, படலைக்கு வெளியே அவனை ஏற்றிச் செல்வதற்காக நின்றவரோடு சைக்கிளில் பயணமானன்.

இவ்வாறு ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் புறப்பட்டனர். புறப்பட்டவர்களில் பலருக்கும் புறப்படுவதற்கான காரணம் பெரும்பாலும் அன்றைய அரசியல் சூழல்தான். சில தனிப்பட்ட காரணங்களும் அவர்களை அதனை நோக்க உந்தியிருக்கும்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சிக் கொண்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. யூலைப் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பண்பு நிலை மாற்றத்தை தோற்றுவித்தது. இதுவரை சீராக படிமுறை வளர்ச்சி பெற்று வந்த போராட்டம்; தலைமைகளிடம் வீவேகத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் யூலைக் கலவரம் அதனைப் புரட்டிப்போட்டது. விவேகமற்றவர்கள், அவசரக் குடுக்கைகள் தலைமைகளுக்கு முன் தள்ளப்பட்டனர். வெறும் உணர்ச்சிப் பிளம்பில் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்ட இலக்கையும் வடிவத்தையும் அவர்களோ அவர்களுடைய தலைமைகளோ தீர்மானிக்கவில்லை. மாறாக எதிரியான பேரினவாத அரசிடமும் இந்திய உளவுத்துறையிடமும் அது கையளிக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்’, ‘நாங்கள் ஆயதம் ஏந்த வேண்டும் என்பதையும் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ என்று பெருமையாக அன்று முழங்கினார்கள். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இன்று உணர முடிகிறது. ஏனெனில் இறுதியில் இவர்களை முள்ளிவாய்காலில் முடிப்பது என்று எதிரியான சிங்கள அரசும் இந்திய உளவுத்துறையும் தான் தீர்மானித்தது. ‘ஒப்ரேசன் பிக்கன்’ என்ற 2006 இல் போடப்பட்ட தீட்டத்திற்கமைய அதன் கால அட்டவணப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து 2009 இல் முடிவுக்கு வந்தது.

சகோதரப் படுகொலைகளையும் சில அங்கொன்றும் இங்கொன்றுமான நாளாந்த தாக்குதல்களைத் தவிர எமது விடுதலைப் போராட்டத்தை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறையுமே நடத்தியது.

எமது சகோதரர்களும் சகோதரிகளும் விட்டில் பூச்சிகளாக மடிந்து மறைந்தனர். இன்று எமது வரலாறுகளை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறை முகவர்களுமே மும்மரமாக எழுதுகின்றனர். யாழ் நூலகத்தை எரிக்க முன்நின்ற காமினி திஸ்ஸநாயக்காவை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த எட்வேர்ட் குணவர்த்தன தனது நூலின் மூலம் காப்பாற்றியது போல் இந்திய உளவு முகவர்கள் எமது போராட்டத்திலும் படுகொலைகளிலும் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறைகளை கழுவ முயல்கின்றனர். அதற்காகவும் தங்கள் செயல்களை மறைக்கவும் இன்னுயிர் ஈர்ந்த சகபோராளிகள் மீது வீண்பழி சுமத்துகின்றனர் இந்த உளவுத்துறை முகவர்கள்.

இலங்கையில் ஆயத வன்முறையயை ஏற்படுத்துவதில் இந்திய உளவுத்துறையின் பங்கு தீர்மானகரமானது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் காத்திரமான அரசியல் இல்லாத அமைப்புகள் என்பதால் அவர்களுக்கு ஆயதங்களை இறைத்து அப்பாவி சிங்கள மக்களைப் படுகொலை செய்யவும் அவர்களைத் தூண்டியது. அதனால் இவ்விரு அமைப்புகளுமே இராணுவ கட்டமைப்பில் பலம்பெற்று இறுதியில் விடுதலைப் புலிகள் ஏகபோக தலைமையாகினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த இந்தியாவுக்கு எதிரானவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாக சந்ததியார் படுகொலை. பின்னர் உமாமகேஸ்வரன் இலங்கை அரசுடன் நெருக்கமாக அவருடைய படுகொலை, மாலைதீவு தாக்குதல் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை கொண்டு நடத்தியதே இந்திய உளவுத்துறையே. உளவு நிறுவனங்கள் நேரடியாக வெளிப்படையாக தாங்கள் முன்நின்று எதனையும் செயற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு செயற்படுவதற்கான சூழலை அந்தந்த அமைப்புகளில் உள்ள தங்கள் விசுவாசிகளுடாக அவர்கள் அறியாமலேயே உருவாக்கி விடுவார்கள். இது தான் காகம் இருக்க பனம் பழம் விழுவதென்பது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் மத்திய குழுவில் இந்திய உளவுத்துறை அதிகாரியும் இருந்தார் என்றால் அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான். இந்திய இராணுவத் தளபதியான சேகர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர். இந்திய உளவுத்துறை இன்னமும் பலரையும் தனது முகவர்களாக வளர்த்துக்கொண்டது. இவ்வாறான முகவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். இன்று இவ்வாறான முகவர்களைக் கொண்டு இந்திய உளவுத்துறை தனது செயல்களுக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்கின்றது.

தனபாலன் இயற்பெயர். ஊரில் ரவி. தமிழீழ மக்கள் கழகத்தில் வசந்தன் என அறியப்பட்டவன். கழகத்தின் சமூக விஞ்ஞான கல்லூரியில் கற்றவன். இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி இந்திய உளவுத்துறைக்கு பிடித்தமான ஒரு அம்சமாக ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய உளவுத்துறைக்கு அரசியல் தெரிந்து இந்தியாவை தெரிந்துகொள்பவர்களை விரும்பவில்லை. இந்தியாவுக்கு விசுவாசமான முகவர்களும் தாங்கள் சொல்வதைக் கேட்டு களமிறங்கக் கூடியவர்களுமே தேவைப்பட்டனர். சிந்திக்கக் கூடியவர்கள் அவர்களுக்கு ஒரு போதும் தேவைப்பட்டதில்லை.

தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழகத்தில் வசந்தனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அங்கிருந்த இடதுசாரி அமைப்புகளுக்கு வசந்தனூடக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தவர். இன்றும் அந்த நாட்களை நினைவு கூருகின்றார். அண்ணா வசந்தன் பின்நாட்களில் வவுனியா முள்ளிக்குளம் முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று நாட்களாக நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டான். இம்மோதலில் தமிழீழம் கேட்டுப் போராடச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் இம்மோதலில் கொல்லப்பட்ட பலரின் உடல்களை அருகே இருந்த கிறிஸ்தவ பாதிரியாரே அடக்கம் செய்திருந்தார். சில மாதங்களுக்குப் பின் அப்பகுதிக்குச் சென்று எம் தந்தையார் அந்த பாதிரியாரைச் சந்தித்து வந்தார். அம்மா சில ஆண்டுகளாகவே அவன் சிலவேளை எங்காவது தப்பியோடி இருந்து வருவான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தா. அண்ணாவின் உற்ற நண்பனான பரமானந்தன் தான் எனது மூத்த சகோதரியயை மணம் முடித்தார். அவரின் ஞாபகமாகவே அவர்களுடைய மூத்த மகளுக்கு வசந்தினி என்றும் மகனுக்கு வசந்தன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

(வசந்தனோடு போராடச் சென்ற சக போராளியான நேதாஜி – என்றழைக்கப்படும் பிரேம்சங்கரின் காணொலி கீழே கொமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இவ்வாறாக பல ஆயிரம் போராளிகள் விட்டில் பூச்சிகளாக பேரினவாதத்தினதும் சர்வதிகாரத்தினதும் உளவு நிறுவனங்களினதும் நோக்கங்களுக்காக பலிகொடுக்கப்பட்டனர். வேடர்கள் எழுதுவது வரலாறு அல்ல. வியட்கொங்கின் வரலாற்றை சிஐஏ முகவர்களும் ஹொலிவூட்டும் எழுத முடியாது. அது போல தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வரலாற்றை இந்திய உளவு முகவர்கள் எழுத முடியாது. உண்மையான போராளிகளை வரலாறு பதிவு செய்யும். அல்லாதவர்களை வரலாறு காட்டிக்கொடுத்துவிடும்.

காணொலிப் பதிவு: வாடகை ரவுடிகள்: ஒருமணி நேர இடைவெளியில் இரு வன்முறைச்சம்பவங்கள்

யாழ் நகரம் வன்முறை மிகுந்த நகரமாக மாறி வருகின்றது. வாடகைக் கொலையாளிகள் வாடகை ரவுடிகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் மாறிவிட்டது. யூலை 22 இரவு ஒருமணி நேர வித்தியாசத்தில் இரண்டு வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. யாழ் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் முதலாவது தாக்குதல் இடம்பெற்று குறுகிய நேர இடைவெளியில் மற்றுமொரு சம்பவம் யாழ் அராலியில் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் சில தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லாத நிலையில் கூலிக்கு அமர்த்தப்பட்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. சமூகக் கட்டுப்பாடுகள் முற்று முழுதாக செயலிழந்துள்ள நிலையில் யாழ் தமிழ் சமூகம் உள்ளுணர்வு பிறள்வுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு இரவு ஒன்பது மணியளவில் கடையயை மூடிவிட்டுச் சென்றதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இரு வாள்களுடன் வந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை எறிந்து புடவைக் கடைக்கு தீ மூட்டி உள்ளனர். இந்த தீவைப்புத் தாக்குதல் சம்பவம் ஒளிப்பதிவாகி உள்ளது. இந்த ஒளிப்பதிவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலில் ஈடுபட்டது பதிவாகி உள்ளது.

இத்தாக்குதல் பற்றி தெரிவித்த கடையின் உரிமையாளர் தானும் தனது கணவரும் இரு மாதங்களுக்கு முன்னரேயே கடையை ஆரம்பித்ததாகவும் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் தலைநகர் கொழும்பில் இருந்தும் தருவிக்கப்பட்ட ஆடைகள் கடையில் இருந்தாகவும் தெரிவித்தார். இத்தீவைப்புச் சம்பவத்தால் தனக்கு அறுபது லட்சம் ரூபாய்களுக்கு மோலாக நட்டம் ஏற்பட்டதையும் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

தாக்குதலை நடத்தியவர்கள் தங்கள் பொக்கற்றினுள் இருந்து எடுத்த பெற்றோல் போத்தல்களை எறிந்து கடையின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி தீ வைத்துள்ளனர். இச்சம்பவங்கள் ஒளிப்பதிவாகி உள்ளது. யாழ் பொலிஸ்மா அதிபருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ள கடையின் உரிமையாளர் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு தங்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவிடயமாக கொக்குவிலைச் சேர்ந்தவரும் யாழ் மேயரின் உறவினருமான த சஞ்சீவ்ராஜ் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தமிழ் அரசியல்வாதிகளும் யாழ் மேயரும் யாழ் நகரில் இடம்பெறும் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் பற்றி மௌனமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதும் இவ்வாறான வாடகை ரவுடிகள் உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவித்த அவர் அரசியல் வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனின் மகன் யாழ் இந்துக்கலலூரி மாணவனாக இருந்து வன்முறைக் குழுக்களுடன் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசியல்வாதிகள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அண்மையில் யாழ் மேயர் மணிவண்ணனின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் பிரச்சினையில் வாள்வெட்டில் உட்பட்டு தலை மறைவாக சில நாட்களின் பின் பொலிஸில் சரணடைந்தது தெரிந்ததே.

கொக்குவில்குளப்பிட்டிச் சந்தியில் வைக்கப்பட்ட தீ எரிந்து கொண்டிருக்கின்ற போதே ஒரு மணி நேரத்தில் இரவு பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் யாழ் அராலி வீதியில் உள்ள வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியயை அடித்து நாசம் செய்துள்ளனர். அதன் பின் அதற்கு தீ வைக்கவும் முயன்றுள்ளனர். நித்திரையில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டு அயலவர்களையும் அழைத்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் வியாபாரப் போட்டி காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என கொக்குவில் குளம்பிட்டிச் சந்தி தாக்குதலுக்கு இலக்காண புடவைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறான தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் யாழ் நியூமார்க்கற்றில் தனது கடையயை வாடகைக்கு வழங்கியது தொடர்பில் கடையின் உரிமையாளர் திருநல்வேலியில் இருந்த அவரின் வீட்டில் வைத்து தாக்கப்பட்டு பலத்த வாள் வெட்டுக்கும் இலக்கானார். இது பற்றி சம்பந்தப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதான உரிமையாளரின் உறவினர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் குறித்த கடையை வேறொருவரும் தனக்கு கேட்டிருந்ததாகவும் அவருக்கு கொடுக்க மறுத்து இன்னுமொருவருக்கு கடையை கொடுத்ததாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடையை தங்களுக்கு வாடகைக்குத் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தவர் வாடகைக்கு ரவுடிகளை அமர்த்தி இத்தாக்குதலை நடத்தியதாகவே தாங்கள் நம்புவதாக பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் தெரிவித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யவில்லை.

வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவ்வாறான வாடகை ரவுடிகளைப் பயன்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. அரசியல் வாதிகள் பொலிஸார் வெளிநாட்டவர்கள் என்று அனைவரது கரங்களிலும் கறைகள் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஊர் சென்றுவரும் சிலர் அங்கு பெண்களை பாலியல் பொருட்களாக பயன்படுத்துவதை தனது ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தில் இயக்குனர் புதியவன் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

பிரித்தானியாவில் பதிவுகள் இல்லாமல் 1.2 மில்லியன் பேர்: இவர்ளைப் பதிவு செய்ய பொதுமருத்துவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை!!!

பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் ஏதும் இன்றி 1.2 மில்லியன் பேர் இருப்பதாகவும், 80வீதமான பொது மருத்துவர்கள் இவர்களை தங்கள் மருத்துவ மையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது. தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற டெல்டா வெரியன்ரும், இனி வரும் குளிர் காலத்தில் ஏற்படப் போகும் வைரஸ் தொற்றுக்களாலும் இந்த மக்கள் பிரிவினர் கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகின்றது.

தற்போதைய கொன்சவேடிவ் அரசு குடிவருவோருக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததால்; வீடுவாடகைக்கு விடுபவர்கள் முதல் பொதுமருத்துவர்கள் வரை உள்துறை அமைச்சின் முகவர்கள் போலவே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது பொது மருத்துவர்களுக்கு அவ்வாறான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாத போதும், பொது மருத்துவர்கள் குடிவரவுப் பத்திரங்கள் இல்லாதவர்களை தங்கள் சுகாதார மையங்களில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

தற்போது ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் குடிவரவு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களையும் பொது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் பதிவுசெய்து; அவர்களுக்கான கோவிட் வக்சினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றது. அரசும் பொது மருத்துவர்கள் எவ்வித குடிவரவு மற்றும் ஆவணங்கள் இல்லாமலேயே பொதுமருத்துவர்கள் தங்கள் மையங்களில் யாரையும் பதிவு செய்யலாம் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அரசுக்கு எத்தனை பேர் கோவிட் வக்சீன் போட்டுள்ளார்கள் என்று தெரியுமே அல்லாமல் எத்தனை பேர் வக்சீன் போட்டுக் கொள்ளாமல் உள்ளனர் என்ற விபரம் தெரியாது.

மேலும் பொது மருத்துவர்களின் கீழ் பதிவு செய்பவர்களின் விபரங்கள் குடிவரவுத் திணைக்களத்துடன் பரிமாறப்படாது என்ற உறுதியையும் ஜெனரல் மெடிகல் கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாதவர்கள் வக்சீன் போடுவதற்கு வசதியாக நடமாடும் வக்சீன் மையங்கள் சிலவற்றையும் அரசு இயக்கிவருகின்றது.

பல லட்சம் ரூபாய் ஆலய ஊழல்: வாள் வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நேற்று சரணடைந்தார்!

யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.

ஆலய வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் 2வது நாளாகவும் தலைமறைவு!

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் நடத்திய வாள்வெட்டு கோயிலில் இருந்த சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. அதனை ஆலய அடியவர் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்திருந்தார்.

மேலும் தாக்குதல் நடத்திய ரஜீவன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் ஆகியோரின் புகைப்படங்களையும் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்தார். யூன் 11 மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இன்னமும் தலைமறைவிலேயே உள்ளார் என உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரும் தொலைபேசியல் வாக்குவாதப்பட்டு பின் வாளோடு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே வந்துள்ளாதாக தோண்றுவதாக கெ யோகச்சந்திரன் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். சம்பந்தப்ட்ட இருவருமே ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களால் ஆலயத்தின் நன்மதிப்பு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் யோகச்சந்திரன் தனது அதிருப்தியயை வெளியிட்டார். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடாது என்பதையும் யோகச்சந்திரன் வலியுறுத்தினார்.

இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணனும் இன்னமும் மௌனமாகவே உள்ளனர். பட்டப்பகலில் ஆலய வளாகத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத இன்னுமொரு ஆலய அடியார் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.

புகைத்தலை வியாபாராமாக்கியவர்ளே சுவாசத்தை சீராக்கும் இன்ஹேலரையும் வழங்க உள்ளனர்!

புகைத்ததால் நுரையீரல் பிரச்சினை என்றால் இழுத்து சுவாசத்தை சீராக்கலாம் என புகைத்தல் வணிகக் நிறுவனம் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சுவாசப் பிரச்சினையைச் சீராக்கி சுவாசத்தை சீர்படுத்தும் ‘இன்ஹேலர்’ உபகரணத்தை தயாரிக்கும் பிரித்தானியாவின் மருத்துவ நிறுவனமான வெக்ரூரா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் இறங்கி உள்ளது. ஒரு பில்லியன் டொலருக்கு வெக்ரூரா நிறுவனத்தை வாங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. இதன்படி புகைத்தலுக்கு அப்பால் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் வருமானத்தை ஈட்டலாம் என மதிப்பிடுகின்றது.

பிலிப் மொறிஸ் இன்ரநசனல் புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மருத்துவ சுவிங்கம் தயாரிக்கும் டெனிஸ் நிறுவனத்திற்கு 820 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது. அதேசமயம் தனக்கு போட்டியான அல்ற்றியா நிறுவனத்தையும் தனக்குள் வளைத்துப் போட்டுக் கொள்ள, 200 பில்லியன் டொலர்களை பிலப் மொறிஸ் இன்ரநசனல் செலவழித்துள்ளது. இந்த இணைவின் மூலம் சிகரெட் பிடிப்பவர்களை அதனிலும் சற்று ஆபத்து குறைந்த புகைத்தல் முறைக்கு அடிமையாக்குவததை நோக்கி பிலிப் மொறிஸ் இன்ரநசனல் இறங்கியுள்ளது. பிள்ளையயையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பல்தேசிய நிறுவனங்களும் அதற்குத் துணைபோகும் அரசுகளும் இப்படித்தான் இயங்குகின்றன.

முற்றிலும் இலாப நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்களிடம் மக்களின் சுகாதார பராமரிப்பும் அது தொடர்பான ஆய்வுகளும் கையளிக்கப்படுவது தற்போது வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

உடலில் சீனியயைக் கட்டுப்படுத்தும் (நீரிழிவு) மருந்துகள், கொலஸ்திரோலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இதயத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் என ஆண்டாண்டு காலத்துக்கும் மருந்து எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படும் மருந்துகள் தொடர்பில் பலர், மருத்துவ நிபுணர்கள் உட்பட கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருந்துகளின் அதீத பாவனையால் 500,000 பேர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதல் 70 வீதமான மரணங்கள் ஓபியோய்ட் எனப்படும் போதைப்பொருள் சேர்க்கையுள்ள மருந்துகளின் தாக்கத்தால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2017ம் ஆண்டில் 117,000 பேர் ஓபியோய்ட் அதிதமான காரணத்தினால் மரணத்தை தளுவியுள்ளனர்.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையை ஏற்றுள்ள சௌமியா சுவாமிநாதனின் தந்தை சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துகின்றேன் என்று ஆரம்பித்து, செயற்கை உரங்களுக்கு இந்தியப் பயிர்களையும் செயற்கை உர மற்றும் மருந்து பல்தேசிய கொம்பனிகளுக்கு இந்திய விவசாயிகளையும் அடிமையாக்கியவர். இதனால் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன்சுமை தாங்காமல் தற்கொலைக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு முற்றிலும் இலாபநோக்கத்தோடு இயங்கும் பல்தேசிய நிறுவனங்களின் பெயர்களை உச்சரித்துக்கொண்டே மக்கள் அவர்களுக்கான சவக்குழியயை தாங்களே வெட்டுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்ற மாயைக்காட்டி அரசுகளும் இதற்கு உடந்தையாகவே இருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சுற்றாடலை அசுத்தப்படுத்தவும் எமது உடல்களை அசுத்தப்படுத்தவும் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் போன்ற பல்தேசியக் கொம்பனிகள் இயங்கவும் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் அரசுகள் ஒப்புதல் அளித்தன. இப்போது ஒப்புதல் அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் நாடற்ற தமிழர்கள்: கைவிடப்பட்ட தமிழர்களும் அவர்களைக் கைகழுவிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் !

“எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக்கொலை செய்யுங்கள்” என்று கோரி தமிழ் நாட்டின் திருச்சி மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 60 வரையான இலங்கைத் தமிழ் ஆண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வுண்ணாவிரதங்களை பார்வையிட வந்த இந்திய அதிகாரிகளிடம், ‘மனிதாபிமானத்தோடும் கருணை உள்ளத்தோடும் நடந்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டிக்கொண்ட காணொளிப்பதிவு மனதை உருக்குவதாக அமைந்தது.

‘எங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் தான் சொல்கின்றோமே தவிர, எந்தவகையிலும் உங்களோடு சண்டையிடவில்லை, உங்களை எதிர்க்கவும் இல்லை’ என்று மன்றாடி தங்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர். அங்கிருந்த உண்ணாவிரதிகளில் ஒருவர் கண்ணீரோடும் அடக்க முடியாத வேதனையோடும், “இப்படி எங்களை துன்புறுத்துவதற்குப் பதிலாக விச ஊசியயைப் போட்டு எங்களைக் கொல்லுங்கள்” எனக் கேட்டுக்கொண்டமை நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

யார் இந்த முகாம்களில், சிறப்பு முகாமில் உள்ளவர்கள்? அதற்கான விடை தெரிய வேண்டுமானால் காலச்சக்கரத்தினை ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி நகர்த்த வேண்டும்.

– 1 –

1970க்களின் முற்பகுதியில் தமிழ் தேசியக் கட்சிகளின்: தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் Federal Party – சமத்துவக் கட்சி) இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி – மலையகத் தமிழர்களின் வாக்குரிமையயைப் பறிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் துணை போன தமிழ் காங்கிரஸ். அதாவது இன்றைய கஜேந்திரகுமாரின் தாத்தாவின் கட்சி. இவ்விரு கட்சி முக்கியஸ்தர்கள் தோல்வியைத் தழுவினர். இவர்களுக்கு ஒரு’பஞ்ச் ஸ்டேட்மன்ற்’ தேவைப்பட்டது. அதனால் உருவாக்கக்கப்பட்டது தான் ‘தமிழீழம்’ என்ற கோரிக்கை.

1976 வட்டுக்கோட்டையின் சிறு கிராமம் ஆன பன்னாகத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என அறியப்பட்ட தமிழீழப் பிரகடனம் தமிழர் விடுதலைக் கூட்டணியால் (தமிழரசுக்கட்சி சக தமிழ் காங்கிரஸ்) முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே 1977 தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘பஞ் ஸ்டேட்மன்ற்’ தமிழீழம் – வாக்குகளை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு குவித்தது.

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டி ஆட்சியமைத்து. இடதுசாரிகளுடனான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையை; ஐக்கிய தேசியக் கட்சி நேரெதிராகத் திருப்பி, அமெரிக்க சார்பு திறந்த பொருளாதாரக் கொள்ளைக்கு, நாட்டின் சந்தையைத் திறந்தது. தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் வடக்கும் கிழக்கும் கூடப் பலன்பெற்றன. விவசாயிகள் செழிப்புப் பெற்றனர். தமிழ் சினிமா முளைவிட்டது. வன்னியில் தமிழ் குடியேற்றங்கள் பல உருவாகின. இப்போது அவையனைத்தும் ஸ்தம்பித்தது.

இடதுசாரிகளுடனான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் காலத்தில்; இந்தியாவுடன் இலங்கைக்கு இருந்த நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. பனிப்போரின் உச்சத்தில் உலகம், இருந்த காலகட்டம். இந்தியா அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்த போதும், ரஸ்யசோசலிசக் குடியரசோடு நெருக்கமாக இருந்த காலங்கள். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தன்னை மீறி இலங்கை நடந்துகொள்வதை பொறுக்காத இந்தியாவுக்கு, ‘தமிழீழ பிரகடனம்’ நல்ல வாய்ப்பாக அமைந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலுக்காக விட்ட ‘தமிழீழ பிரகடனத்தை’; இந்தியா, அன்றைய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனாவிற்கும்; பாடம் புகட்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது. இந்த உள்ளூர், சர்வதேச அரசியல் எதனையும் புரிந்துகொள்ளும் அரசியல், அறிவும் அனுபவமும் அற்ற அப்பாவித் தமிழ் இளைஞர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தமிழீழக் கனவோடு போராடப் புறப்பட்டனர். இவர்களுக்கு இந்தியா சகல வசதிகளையும்: உணவு, உறைவிடம், இராணுவப் பயிற்சி, ஆயுதம் -என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்படி போராட வந்தவர்களுக்கு தலைமைகொடுக்க அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் நெருங்கி இருந்த பல இளைஞர்கள் போட்டியிட்டனர். பிரபாகரனும் அவர்களில் ஒருவர். கடைசியில் பிரபாகரன் தமிழீழத்தின் பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் முதல், இறுதியில் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளியது வரலாறு. இறுதியில் 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அவர் சரணடைந்ததும், சுட்டுக்கொல்லப்பட்டதும், அவருக்கு ஒரு நினைவுக் கூட்டம் கூட இதுவரை செய்யப்படாததும் கூட வரலாறாகிவிட்டது.

இன்று இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்றேன் – யூன் 19, இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாக யூன் 19 1990 அன்று சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உட்பட அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஈவிரக்கமற்று சுட்டுக்கொல்லப்பட்ட தினம். இத்தாக்குதலில் இருந்து தப்பிய லாபிர் என்றழைக்கப்படும் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த, தற்போது பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் பிரதேசத்தில் வாழும் பரமானந்தன் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், உள்ளாடையோடு மதில் பாய்ந்து தப்பியோடிய அன்றைய நினைவுகள் இன்றும் எப்படி உயிர் தப்பினேன் என பிரமிக்க வைப்பதாகத் தெரிவித்தார். பரந்தாமனின் குடும்பத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.

அதனையடுத்து ராஜீவ் காந்தி மே 21, 1991இல் தமிழ்நாட்டில் சிறிபெரம்புத்தூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டை தங்களுடைய போராட்டத்தின் பின் தளமாக மட்டும் பாவிக்கவில்லை, பல குற்றச்செயல்களில், அம்மண்ணில் ஈடுபட்டு இருந்தனர்.

1982 மே 19 இல் ராகவன் என்று அழைக்கப்படும் சின்னையா ராஜேஸ்குமாரும் வே.பிரபாகரனும் பாண்டி பஜாரில் நடத்திய துப்பாக்கிச்சூடு பரவலாக அறியப்பட்டதொன்று. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முகுந்தன் என்றழைக்கப்பட்ட உமாமகேஸ்வரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி அது. சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டடு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். தற்போது லண்டனில் வாழும் சின்னையா ராஜேஸ்குமாரின் இந்த வழக்குப் பதிவுகள் காரணமாக அவர் நீண்டகாலமாக இந்தியா பயணிக்கத் தடை இருந்ததும், தற்போது அத்தடைகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

1977 காலவரமும் 1983 கலவரமும் தமிழ் தேசியக் கட்சிகளின் தோழமைக் கட்சியாக எப்போதும் இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் மேலும் மேலும் ‘தமிழீழக் கனவு’ நோக்கித் தள்ளப்பட்டனர். இந்தியாவின் உதவியோடு வடக்கில் ஆயுதநடவடிக்கைகள் அதிகரித்தன.

1983 இன் இறுதிப் பகுதியில் இருந்து அல்லது 1984இன் முற்பகுதியில் இருந்து கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் இலங்கையயை விட்டு வெளியேறத் தீர்மானித்தனர். இவ்வாறு இலங்கையயை விட்டு வெளியேறுபவர்கள் மன்னார், பேசாலையில் இருந்து புறப்பட்டு தமிழ் நாட்டில் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியயை வந்தடைவது வழக்கம் என்கிறார், இவ்வாறு வெளியேறிய குடும்பஸ்தர் போல் பெர்னான்டஸ். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியயைச் சேர்ந்த இவர், தான் சில தடவைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்று பலரையும் ராமேஸ்வரம் அழைத்து வந்ததாகத் தெரிவித்தார். முதற்தடவை ராமேஸ்வரம் வந்தபோது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘முதல் மரியாதை’ திரைக்கு வந்திருந்தாகக் குறிப்பிட்ட அவர் அன்று அப்படத்தை நிலத்தில் இருந்து பார்த்த அனுபவத்தை தேசம்நெற் உடன் பகிர்ந்துகொண்டார். மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் மிகக் குறுகிய தூரத்தில் இருந்ததால் இக்கடல்வழிப் பாதையே பெரிதும் பாதுகாப்பானதாகவும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாதகல் கடல்வழிப் பாதையினூடாக போராளிகள் பயணிப்பது வழமையாக இருந்தது. வல்வட்டித்துரை கடல்வழிப்பாதை வணிக நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்று விளங்கியது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மீனவர்கள் வந்து செல்வது ஐரோப்பிய நாடுகளுக்குள் இருப்பவர்கள் அயல்நாட்டுக்கு சென்று வருவது போன்று தடைகளற்ற பயணமாக அந்த நாட்களில் இருந்தது. இலங்கையில் இருந்து படம்பார்க்க வள்ளங்களில் இளைஞர்கள் சென்று வரக்கூடிய காலங்கள் அவை.

கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட இரணைத் தீவில் இருந்தும் பெரும்தொகையில் பலர் தமிழகம் சென்றுள்ளனர். மலையகத்தைச் சேர்ந்த ஹம்சகௌரி குடும்த்தினர் 1983இல் கிளிநொச்சிக்கு புலம்பெயர்ந்தனர். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் பின் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலையும் மோதலும், மீண்டும் ஒரு யுத்தத்தை வடக்கு கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்க அன்று சிறுமியாக இருந்த ஹம்சகௌரியின் பெற்றோரும் ஒரு சகோதரியும் சகோதரனும் தமிழகம் செல்ல தீர்மானித்து, இரணைத்தீவை அடைந்தனர். அங்கு இவர்களை ஏற்றிச் செல்ல தமிழக மீனவர்களின் படகுகள் காத்திருந்தன. அம்பாள் குளத்தைச் சேர்ந்த ஹம்சகௌரி, தங்களோடு அப்போது 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா செல்வதற்கு வந்திருந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அந்தப் பயணத்தின் போது தங்களோடு வந்த படகுகளில் ஒன்றிணை நோக்கி கடற்படையினர் சுட்டதாகவும்; அப்போது அப்படகில் இருந்த ஒருவர் காயத்தோடு இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு, மரணமடைந்ததாகவும் தெரிவித்தார். இறந்தவரின் இளம் மனைவி கைக் குழந்தையோடு நிர்க்கதியாய் நின்ற காட்சி, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது நினைவுகளைவிட்டு அகலவில்லை என்கிறார் ஹம்சகௌரி.

இவ்வாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் தமிழகம் நோக்கி புலம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் மலையகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் 100,000 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தற்போது வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் 65,000 வரையானவர்கள் 50க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர்.

இம்முகாம்கள் ஒரு கிராமம் போன்று அடிப்படைத் தேவைகளையும் சிறு வீடுகளையும் கொண்டிருக்கும். இவ்வீடுகளை அவர்களே தமக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டிக்கொள்வார்கள். இவர்களுக்கு வாராவாரம் செலவுக்கு உதவிப்பணமும் வழங்கப்படும். அம்முகாமில் உள்ள காவலாளிகளின் அனுமதியோடு வெளியே சென்று சிறிய வேலைகளைச் செய்துவரவும் இவர்களுக்கு அனுமதியுண்டு.

ஆரம்ப காலங்களில் 1990க்கள் வரை இலங்கை அகதிகள் ஓரளவுக்கு வரவேற்கப்பட்டு கன்னியமாக நடத்தப்பட்டாதாகவே பலரும் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர். ஆரம்ப காலத்தில் விரும்புபவர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முகாமில் பதிந்துவிட்டு, வெளியே சென்று வாழ்வார்கள். 1990க்களின் பின் தமிழீழ விடுதலை இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிகரித்ததையடுத்து அனைவரும் முகாம்களுக்குள் முடக்கப்படும் நிலை உருவானது.

ஆயினும் முகாம்களுக்கு வெளியே தற்போது 35,000 பேர் வரை வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் ஓரளவு சுயாதீனமாக செயற்படக் கூடியதாக உள்ளது.

இந்த யுத்தகாலத்திற்கு முன்னதாகவும் ஒரு இடப்பெயர்வு நிகழ்ந்தது. அது முற்றிலும் மாறுபட்டது. இலங்கை அரசினால் (தமிழ் காங்கிரஸின் ஒத்துழைப்போடு) பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 1970க்களின் நடுப்பகுதிகளில் கடலூரில் குடியிருக்கின்றனர். இவர்களுடைய பகுதி சிலோன் காலனி என்றழைக்கப்படுகின்றது.

சிறப்பு முகாம்கள், இம்முகாம்களில் இருந்து முற்றிலும் வேறானது என்கிறார் தோழர் எஸ் பாலச்சந்திரன். முன்னாள் சிறப்புமுகாம் கைதியான தோழர் எஸ் பாலச்சந்திரன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘சிறப்பு முகாம்கள்’ முற்றாக மூடப்பட வேண்டும் என்றும்; அம்முகாம்கள் அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும்; அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல் காலவைரயறையற்று தடுத்து வைக்கப்படுவதாகவும்; குற்றத்திற்கு தண்டனை பெற்ற பின்னரும் கூட அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இவருடைய சிறப்பு முகாம் அனுபவப் பதிவுகள் தேசம் சஞ்சிகையில் வெளிவந்ததுடன் அவற்றை தொகுத்து தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிட்டும் உள்ளார். தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன், லண்டனில் வாழும் வேறும் சிறப்பு முகாம் கைதிகளையும் தேசம்நெற்க்கு அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்களில் ஒருவர் தேசம்நெற் உடன் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கையில், தன்னுடைய முதற் குழந்தையை கை விலங்கு அகற்றப்படாமல் விலங்கிடப்பட்ட கைகளோடு தூக்கியது இன்னமும் தனது நினைவில் நீங்காமல் இருப்பதாகத் தெரிவித்தார்.

அன்று பல நூறு பேர்களாக இருந்த சிறப்பு முகாமில் இன்று எண்ணிக்கை 70ற்கும் குறைவாகவே வந்துவிட்டதாகக் கூறும் தோழர் எஸ் பாலச்சந்திரன், சிறப்பு முகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அது மத்திய அரசின் தேசிய பாதுகாப்பின் கீழ் மத்திய புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார். அது ஈழத்தமிழருக்கான ஒரு சிறைக்கட்டமைப்பாக இருந்த நிலைமாறி வேறு நாட்டவர்களும் சிறைவைக்கப்படுவதற்கான கட்டமைப்பாகவும் இருப்பதாகக் கூறினார்.

– 2 –

எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் கடைப்பகுதிவரை இவர்கள் ஓரளவு கௌரவமாகவே நடத்தப்பட்டனர். ஆனால் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு முதல் சிறிபெரம்புத்தூர் ராஜீவ் படுகொலை வரை தமிழகத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை இயக்கங்களின் ஆயுத வன்முறைகள் இந்நிலையை முற்றாக மாற்றிவிட்டது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட யுத்த சூழலும் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈழவிடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு முகாம்களில் எவ்வித விசாரணைகளும் இன்றி அடைக்கப்பட்டனர். 1990 இல் ஈபிஆர்எல்எப் பத்மநாபா உட்பட்டவர்களை படுகொலை செய்தவர்களை அன்றைய திமுக அரசு தப்பிக்கவிட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சியை அதிமுக ஜெயலலிதா கவிழ்த்து, தமிழகத்தின் ஆட்சியயைக் கைப்பற்றினார். 2000க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் தமிழகத்தில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு ஓரளவு அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு இருந்தது. பட்டமேற்படிப்பை மேற்கொள்ள விவசாயத்துறையில் (40 இடங்கள்), பொறியியல் துறையில் (20 இடங்கள்), மருத்துவத்துறையில் (10 இடங்கள்) தமிழக அரசு சலுகை வழங்கி இருந்தது. ஆனால் இவை ஆரம்ப காலத்தில் அகதி முகாம்களில் இருந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் பயன்பெற்றவர்கள்: இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளும் அவர்களுடைய உறவுகளும் சகாக்களுமே.

ஆனால் இக்குற்றச்சாட்டை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் மகன் மருத்துவ கலாநிதி பகீரதன் மறுக்கின்றார். 1983க்களில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில், இலங்கையில் பல்கலைக்கழகம் சென்று படிப்பைத் தொடர முடியாத பலரும் தமிழகத்தில் கல்வியயைத் தொடர்ந்ததாகவும் அதிமுகா வின் செல்வி ஜெயலலிதா 1991இல் ஆட்சிக்கு வரும்வரை தமிழகத்தில் பல்கலைகழக இடஒதுக்கீடு பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாகவும் தெரிவிக்கின்றார். இக்காலகட்டங்களுக்கு முன் 1979இல் பல்மருத்துவ பிரிவுக்கு பரதெனியாவுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் மருத்துவத்துறையில் கல்வியைத் தொடர்வதற்காக 1981இல் இந்தியா சென்று தன் மருத்துவ கற்கையயை மேற்கொண்டதாக தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

காசி ஆனந்தனின் இரு பிள்ளைகள், கேர்ணல் கிட்டுவின் மூத்த சகோதரரான காந்திதாசனின் இரு பிள்ளைகள் என பலர் பயன்பெற்றனர். அது தவறானதும் அல்ல. ஆனால் ‘இந்த உதவிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு கிடைக்கச் செய்யப்படவில்லை’ என்கிறார் அக்காலத்தில் தனது பிள்ளைகளை கற்பிக்க பல இன்னல்களை அனுபவித்த முன்னாள் போராளியாகி தமிழகத்தில் தஞ்சமடைந்த போல் பெர்னான்டஸ். ‘இந்த முகாம்களுக்கு எல்லாம் உதவுவதற்கு இந்திய மத்திய அரசாலும் தமிழக அரசாலும் அங்கிகரிக்க்பபட்ட ஒருவராகச் செயற்பட்ட சந்திரகாசனும் அவரது அமைப்பும் இத்தஞ்சமடைந்த தமிழர்களுக்கு இழைத்தது மிகப்பெரிய அநீதி’ எனத் தெரிவித்தார் போல் பெர்னான்டஸ்.

தமிழரசுக் கட்சியின் தலைவல் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் மகன்தான் சந்திரகாசன். சந்திரகாசன் செல்வநாயகம் இந்திய உளவுத்துறையின் நம்பிக்கைக்குரிய நபர் என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.

அப்போது புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு மிக நெருக்கமாகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்த வெற்றிச்செல்வன் தனக்கும் இந்திய உளவுப்பிரிவுக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்தி தனது முகநூலில் பதிவிட்டு வருகின்றார். இது பற்றி அவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில்இ ‘நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் இடையே ஒரு தொடர்புப்பாலமாக இருந்தேன்’ எனத் தெரிவித்தார். இந்த உறவானது முற்றிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியலுடன் சம்பந்தப்பட்டதே அல்லாமல் அதனை இந்திய உளவுத்துறையின் முகவர் எனக் கொச்சைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். இவ்வாறான உளவுத்துறையுடனான தொடர்புகள் அவசியமானதும் தவிர்க்க முடியாததும் என வெற்றிச் செல்வன் தெரிவித்தார்.

தான் 1990க்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியது முதல் இந்திய உளவுத்துறையுடன் இருந்த தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தற்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய தொடரை எழுதிவரும் வெற்றிச்செல்வன்இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வரனின் படுகொலையின் பின்னணியயை எழுத உள்ளதாகவும் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவரும் எனவும் தற்போதைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமைக்கு இது இடைஞ்சலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள விடுதலை அமைப்புகள் பற்றி வெளிவந்த நூல்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றி வெளிவந்த நூல்களே அதிகம். வெற்றிச்செல்வனின் பதிவுகள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. ஒரு காலத்தின் வரலாறு என்பது பல்வேறுபட்டவர்களினால்இ வெவ்வேறு கோணங்களில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. புதியதோர் உலகம் முதல் குமிழி வரை என்று நின்றுவிடாமல் இப்போது வெற்றிச்செல்வனின் சாட்சியமும் வெளிவருகின்றது. வெற்றிச்செல்வன் பெரும்பாலும் டெல்லியயை தளமாகக் கொண்டே இயங்கியவர். இவரது பதிவுகள் மீதான விமர்சனங்களும் நம்பகத்தன்மையும் வெவ்வேறு தரப்பினரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் நம்பகத்தன்மையை வரலாறு பதிவு செய்துகொள்ளும்.

ஒரு காலத்தில் இந்திய உளவுப் பிரிவுக்கு நெருக்கமாக இருப்பது சற்று கௌரவக் குறைச்சலாக கருதிய நிலைபோய்இ உளவுப் பிரிவின் முகவராக இருப்பது கௌரவம் என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் வந்தடைத்துள்ளனர். தற்போது பலரும் உளவுத்துறையினருடனான தங்கள் உறவுகளை வெளிப்படையாகவும் பெருமையாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். சந்திரகாசனில் இருந்து அடைக்கலநாதன் வரை இதனை கௌரவமாகவே கருதுகின்றனர். தற்போது பலருடைய முகச்சாயமும் கரைந்து போய்விட்டது.

கட்டுரையை முழுமையாக வாசிக்க:

இந்திய உளவுத்துறை தங்களுக்கு சேவையாற்றுவதற்கு தமிழ், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் சலுகைகளை அன்று முதல் வழங்கி வந்தது. இந்த வசதிகளும் சலுகைகளும் சாதாரண அகதி மக்களைச் சென்றடையவில்லை. இதனால் பயன்பெற்ற இலங்கைத் தமிழ், மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் இன்றும் இந்திய அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கின்றனரே அல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தயாரில்லாதவர்களாகவே உள்ளனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் அசையும் அசையாத சொத்துக்கள் இருப்பதும்; தொடர்ந்தும் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதும்; இவர்களுடைய இந்திய விசுவாசத்திற்கு மிக முக்கிய காரணம். அந்த விசுவாசத்தை வைத்து எவ்வித நன்மைகளையும் இவர்கள் பாதிக்கப்பட்ட, தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்கு இவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை.

தாயகத்தில் உள்ள தங்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கே இவர்கள் விசுவாசமாக உழைக்காமல் அவர்களை ஏமாற்றுகின்ற அரசியலையே முன்னெடுக்கின்ற போது, எப்போதுமே வாக்களிக்காத தமிழகத்தில் வாழும் மக்கள் விடயத்தில் இவர்கள் கவனமெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே சற்று பேராசையான விடயம்தான்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் அதிமுக ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சர்ச்சைக்குரியவர்களாக மாறினர். அவர்கள் மீதான கெடுபிடிகள் முடக்கிவிடப்பட்டது. தஞ்சம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விச்சலுகைகளை தமிழக அரசு நிறுத்தியது, மட்டுமல்ல 12ம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கே அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவி வழங்குவதையும் ஜெ ஆட்சி தடுத்து நிறுத்தியது.

தமிழகத்தின் அப்போதைய நிலையை 2013 மே இல் புதிய ஜனநாயகம் என்ற சஞ்சிகையில், ‘ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !’ என்ற கட்டுரையில் சூரியன் என்பவர் வருமாறு விபரிக்கின்றார்: “முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதி வீட்டுப் பெண்களை கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் வல்லுறவுக்கு ஆளாக்குவதும், மனைவியை அனுப்ப மறுக்கும் கணவன் மீது பொய்வழக்கு போடுவதும், முகாம்களுக்கு அருகில் உள்ள போலீசு நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை “அனுபவிப்பதற்கு” ஆள் அனுப்ப வேண்டியிருப்பதும், ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் இன்னபிற துயரங்களும் தமிழக மக்கள் பலரும் அறியாதவை” என்கிறார். இதனை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய போல் பெர்னான்டஸ் இப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் சற்று பலமாக இருப்பதாலும் செய்திகள் வேகமாகப் பரப்பப்படுவதாலும் இவ்வாறான மோசமான செயல்கள் சற்று தணிந்து இருப்பதாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இப்போது ‘விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள்’ என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போன்று 2013 இல் இடம்பெற்ற சம்பசங்களை சூரியன் வருமாறு பதிவிட்டுள்ளார்: “செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சசிகரன் என்பவர், கியூ பிரிவு போலீசின் துன்புறுத்தல் தாங்காமல், ஏப்ரல் 28 அன்று நஞ்சருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருக்கிறார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சந்திரகுமார் என்ற தனது கணவரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று, இரண்டு குழந்தைகளுடன் முகாம் வாயிலில் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயநந்தினி என்ற ஈழ அகதிப் பெண். அதன் பிறகும் பார்க்க அனுமதிக்காதது மட்டுமின்றி, தற்கொலை முயற்சி வழக்கில் குழந்தைகளுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டு மனம் நொந்த சந்திரகுமார் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 40 ஈழத்தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி, சென்ற ஆண்டு செந்தூரன் என்ற ஈழ அகதி 27 நாட்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 17 பேர் விடுவிக்கப்பட்டனர்”.

இதில் மிகவும் வேடிக்கையானது என்னவென்றால் இதே ஜெயலலிதா 2009 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தங்களைக் காப்பாற்றுவார் என தமிழீழ விடுதலைப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கைக்காகவே கடைசி யுத்தத்தில் மண்மூட்டைகளாக வன்னி மக்களைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதியில் முடிய வேண்டிய யுத்தத்தை மே 18 வரை இழுததடித்தனர். 2009 ஏப்ரலிற்கு பின்னரேயே மிகக் கூடுதலானவர்கள் இறுதி யுத்த்தில் கொல்லப்பட்டனர். அம்மா ஜெ யின் வரவுக்காக தம்பி பிராபாகரன் காத்திருந்தார். இந்தத் தெளிவின்மைக்கு மக்கள் உயிர்களே இறுதியில் பலியிடப்பட்டு உள்ளது. கொள்கைத் தெளிவற்ற அரசியல் தலைமைகளின் முட்டாள்தனமான முடிவுகள் வகைதொகையற்ற மரணங்களுக்கு வித்திட்டமைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் நல்ல உதாரணமாகும்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவருமே ஒரே மாதிரியான கஸ்டங்களையும் வேதனைகளையுமே அனுபவிக்கின்றனர். ஆனாலும் இந்த அகதிகள் ஒரே மொழி பேசி ஒரே மத நம்பிக்கையுடையவர்களாக இருந்தபோதும் காலகாலமாக திணிக்கப்பட்ட முரண்பாடுகள் இன்றும் அவர்களைப் பிரித்தே வைத்துள்ளது. இந்தப் பிரிவினை தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் இரு பிரிவினராகப் பார்க்கப்படுகின்றனர். இந்தியபூர்வீகத்தைக் கொண்டவர்கள் ‘இலங்கைத் தமிழர்கள் – சிலோன் காரர்’ என்றும் ஏனைய தமிழர்கள் ‘ஈழத் தமிழர்கள்’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். அப்படிப் பார்க்கப்பட்ட போதும் அவர்கள் அனைவருமே இந்திய – தமிழக அரசுகளைப் பொறுத்தவரை ‘சட்டவிரோத குடியேற்றவாசிகள்’ என்றே நோக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலேயே நாடற்ற தமிழர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

1970க்களின் நடுப்பகுதியில் இருந்து சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடுகடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் முதல் அண்மைக்காலம் வரை தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்ற தமிழர்கள் வரை அனைவருமே நாடற்றவர்கள். இவர்கள் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அங்கு வாழ்ந்த போதும் இன்றும் நாடற்றவர்களே. அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளும் நாடற்றவர்களே. முதல் தலைமுறையான விரல் விட்டு எண்ணக் கூடிய சில அகதிகள் அங்குள்ள இந்தியப் பிரஜைகளை மணம்முடித்து இந்த நாடற்ற வாழ்விற்குள் இருந்து வெளியேறி உள்ளனர்.

ஆனால் 2003இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது திருமணபந்தத்தில் ஒருவர் சட்டவிரோத குடியேற்றவாசியாக இருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் குடியுரிமை கிடையாது என்று அறிவித்தது. தமிழனாகப் பிறந்து தமிழ் நாட்டிலேயே நாடற்றவர்களாக்கப்படும் கொடியநிலை இன்னமும் தொடர்கிறது. சட்டவிரோ குடியேற்றவாசி என்றால் வாக்குரிமை மட்டுமல்ல வாழ்வாதாரத்திற்கான உரிமையே இல்லாமல் செய்யப்பட்டுவிடுகின்றது என்கிறார் போல் பெர்னானடஸ்.

இலங்கை அகதிகள் என்னதான் கஸ்டப்பட்டாலும் அரசு அவர்களுடைய கல்வியுரிமைகளைத் தடுத்தாலும் அவர்கள் தனியார் துறையினூடகக் கல்வி கற்று பட்டமேற்படிப்பை கணிசமான தொகையானவர்கள் முடித்துள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் கூட மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு தங்கள் கல்வியயை முடித்துள்ளனர். ஆனால் அவர்களால் இன்னமும் ஒரு ஒளிக்கீற்றைக் கூட காண முடியவில்லை. நம்பிக்கைகள் சிதறடிக்கப்படுகின்றது. கணணித் தொழில்நுட்பத்தில் உள்ள இந்தியப் பிரஜையின் சம்பளம் 40,000 இந்திய ரூபாய் என்றால். அதே வேலைக்கு தஞ்சமடைந்த இலங்கைத் தமிழனுக்கு 15,000 இந்திய ரூபாய்களே வழங்கப்படும். அரசின் எவ்வித அடையாள அட்டைகளும் சலுகைகளும் வழங்கப்படாது. எவ்வித பத்திரங்களும் இன்றி சொத்துக்களை வாங்க முடியாது. வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாது. முன்னேற்றத்திற்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியுற்ற பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 7,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பற்ற, உயிராபத்தான படகுகளில் பயணத்தை மேற்கொண்டு நூற்றுக் கணக்கில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இதுவரை 1,000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இவையெதுவுமே குறும்செய்தியாகக் கூட பத்திரிகைகளை எட்டியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இம்மக்கள் ஏழைகள். அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் .கேட்பதற்கு யாருமற்றவர்கள். அதனால் இவர்கள் பற்றிய செய்திகள் கூட யாருக்கும் பயனற்றதாகிவிட்டது. மெடிற்றிரேனியன் கடலில் ஆண்டாண்டு தோறும் ஆயிரக்கணக்கில் ஐரோப்பிய கனவுகளுடன் வரும் ஆபிரிக்கர்கள் கடலினுள் மூழ்கிவிடுகின்றனர். அதுபோல் எமது உறவுகளும் நூற்றுக் கணக்கில் இந்துசமூத்திரத்தினுள் மூழ்கிப் போகின்றனர்.

– 3 –

தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினை என்பது வெறுமனே அரசியல், மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது அல்ல. அன்று அந்த மண்ணுக்கு தங்களது பதின்ம வயதில் சென்று வாழ்க்கையை விதைத்தவர்கள்; இன்று அந்த மண்ணிலே வேர்விட்டு, அவர்களது பிள்ளைகள், பிள்ளை பெற்றுள்ளனர். அம்மண்ணிலே மூன்றாவது தலைமுறை ஒன்று உருவாகிக் கொண்டுள்ளது. அவர்களை சர்வசாதாரணமாக மீண்டும் இலங்கைக்கு வாருங்கள் என்று அழைத்துவிட முடியாது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர்ளில் சிலர் இலங்கைக்கு கட்டம் கட்டமாக வந்துள்ளனர். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு கணிசமானவர்கள் நாடு திரும்பினர். ஆனால் மீண்டும் யுத்தம் தொடங்கியது. 1992க்குப் பின் ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது. 2002 சமாதான ஒப்பந்தத்தை அடுத்து சிலர் திரும்பிச் சென்றனர். ஆனால் மீண்டும் யுத்தம். ஆனால் தமிழகத்தில் வேரூன்றியவர்கள் இப்போது மூன்றாவது தலைமுறையைக் காண்கின்றனர். மீண்டும் நாடு திரும்புவது என்பது இப்போது முதல் தலைமுறையினரின் கையில் இல்லை. இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கையை வரைபடத்தில் மட்டுமே பார்த்துள்ளனர். 2009 யுத்த முடிவிற்குப் பின் கூட தமிழ், மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்மக்கள் விடயத்தில் குறிப்பாக எதனையும் செய்ய விரும்பவில்லை.

வடக்கின் முதலமைச்சராக இருந்த சி.வி விக்கினேஸ்வரன், காம வெறியன் பிரேமானந்தாவுக்கு துணை போனவர்களை சிறை மீட்க, அவர்களை விடுவிக்க, இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் சிறப்பு முகாம் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழகத்தில் உள்ள இலங்கையர் யாருக்கும் இந்திய குடியுரிமை தேவையில்லை, அவர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்று முட்டாள்தனமாக ஒரு கருத்தை வெளியிட்டார். இதே கருத்து ஏனைய தமிழ் தேசிய வாதிகளிடமும் புரையோடிப் போயிருந்தது. ஆனால் இவர்கள் யாரும் தாங்கள் மாகாண ஆட்சியில் இருந்த போதும் கூட தமிழகத்தில் இருந்து மீளக் குடியேறும் மக்களுக்கு எவ்வித வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கவே இல்லை.

இந்திய – தமிழக அரசும் இலங்கை அரசும் எப்படி இந்த மக்களை சுமையாக அல்லது தங்களுடைய பொறுப்பல்ல என்று கருதுகின்றனவோ அவ்வாறே தமிழ், மலையகபாராளுமன்ற உறுப்பினர்களும் அம்மக்களை சுமையாகவே கருதுகின்றனர். இதிலொரு அடிப்படை மாற்றம் நிகழ்வதற்கான வாய்பு இதுவரை தெரியவில்லை. அதற்குக் காரணம், தமிழ் தேசிய அரசியலுக்கு வெளியே தலைமுறை மாற்றம் ஏற்பட்டது போல் தமிழ் தேசிய அரசியலுக்குள் தலைமுறை மாற்றம் நிகழவில்லை அல்லது தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் கூட பழைய அரசியல் அரிசுவடியுடனேயே அரசியலை நகர்த்துகின்றனர். இரா சம்பந்தனுக்குப் பதில் மாவையின் மகன் அரசியலுக்கு வந்தாலும் தமிழ் தேசிய அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பில்லை.

அதற்கு உதாரணமாக யூன் 17 அன்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்தனர். ‘எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக்கொலை செய்யுங்கள்’ என்று திருச்சியில் சிறப்புமுகாம் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களோடு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாடியும் இருந்தார். செல்வம் அடைக்கலநாதன் யூன் 14 அன்று புதிய தமிழக முதல்வர் மு க ஸ்ராலினுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்:

“இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடாம் இந்திய தாய் திருநாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாத்தியமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன்”.

இலங்கையின் உப சபாநாயகராக இருந்த, தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் நிலை இது. ஒரு பத்தாம்பசலித்தனமான கடிதம். விடுதலை செய்யுங்கள் என்ற ஒரு கோரிக்கையைக் கூட அழுத்தம் திருத்தமாக எழுதத்துணிவற்ற, முதுகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள். இன்று இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அறுபது வரையான குற்றவாளிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களுடைய செயற்பாடுகளுக்கான ஆவணங்களும் அரசிடம் உண்டு. அப்படியிருந்தும் இலங்கைப் பாராளுமன்றத்திலேயே அவர்களை விடுதலை செய்யக் கோரி முழங்கும் உங்களுக்கு, இவ்வாறான எந்தக் குற்றச் செயலையுமே செய்யாத சில்லறைக் குற்றங்களுக்காக அல்லது பொய்வழக்கு போட்ட குற்றங்களுக்காக சிறையில் அடைத்து விசாரணையின்றி வைத்திருப்பவர்களை விடுதலை செய்யக் கேட்பதற்கு வாயில் என்ன கொழுக்கட்டையா? வைத்திருக்கிறீர்கள்.

சிறப்பு முகாம் தொடர்பான எவ்வித அதிகாரமும் தமிழக அரசிடம் இல்லை என்பது கூடவா ஒரு இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுக்கு தெரியாது. சிறப்பு முகாம்கள் மத்திய அரசின் கீழ் உள்ளது. அது பற்றி இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பக்லேயுடன் தான் நீங்கள் பேச வேண்டும். யூன் 17ம் திகதி இந்தியத் தூதுவருடன் என்னதான் பேசினீர்கள்? வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு என்று பேசியதாக அறிக்கை விடுகிறீர்கள். இதை யாரோடு பேச வேண்டும்? இலங்கை அரசாங்கத்தோடு. உங்களிடம் 5 ஆண்டுகள் வடமாகாண சபை இருந்ததே. அப்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பாக என்ன செய்தீர்கள்? அபிவிருத்தி செய்யவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் அமைச்சருக்கு அமைச்சர் சுருட்டி; ஆளை ஆள் மாட்டி பதவியை விட்டு ஓட்டப்பட்டீர்கள். மிகுதி நிதியை திருப்பி அனுப்பினீர்கள். நியதிச் சட்டங்களை உருவாக்கவில்லை. அதனால் அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களால் பயன்படுத்த முடியவில்லை. நீங்கள் கொண்டுவந்த சி வி விக்கினேஸ்வரனே உங்களுக்கு ஆப்பு வைச்சு, இப்ப தனிக்கட்சி. ரெலோவும் புளொட்டும் இப்பவே யாரோடு ஒட்டினால் ஆசனத்தை தக்கவைக்கலாம் என்ற கணக்கில் தலையயையும் வாலையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உண்ணாவிரதிகள் பற்றியெல்லாம் என்ன அக்கறை.

அப்படியானால் தமிழ் தேசியம் பேசாத அல்லது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கோரும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றனர்? ஆளும் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஏன் பேசவில்லை? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏன் குரல்கொடுக்கவில்லை? மக்களுக்காக நீங்கள் நிற்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுவொரு சந்தர்ப்பம் அல்லவா? வெறும் அரசியலுக்காக அல்ல உங்கள் இதயத்தையும் திறமையையும் ஒரு முகப்படுத்தி சிறப்பு முகாம் கைதிகளின் விடுதலையையும் தமிழகத்தில் உள்ள நாடற்ற தமிழர்களுக்கான தீர்வையும் முன்வையுங்கள்!

இலங்கை திரும்பி வந்து வாழ விரும்புபவர்களுக்கு சகல விதமான மறுவாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். இலங்கை ஜனாதிபதியை உங்கள் திட்டத்திற்கு சம்மதிக்க வையுங்கள். சிங்கள, முஸ்லீம், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் உங்களோடு அணிசேருங்கள். தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டுங்கள். இவர்களின் தமிழ் தேசியவாதம் காலாவதியாகிப் போய்விட்டதை நிரூபியுங்கள். இவற்றை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ் தேசியவாதிகள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படும்.

1989 இல் இரணைதீவில் இருந்து இந்தியா சென்ற ஹம்சகௌரி சிவஜோதியின் தந்தை கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியவர். கொழும்பில் இருந்து விடுமுறையில் கிளிநொச்சி சென்றிருந்த வேளையிலேயே, இவர் குடும்பத்தோடு இந்தியா செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. அவரைத் தேடிய கனடிய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அமெரிக்க உயர் ஸ்தானிகர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு இவர்களை ஒரு வாரத்திற்குள்ளாகவே அவசர கடவுச் சீட்டை ஒழுங்கு செய்து இலங்கைக்குத் அழைத்துவந்தனர். ஒரு உயர்ஸ்தானிகராலயம் இவ்வளவு பொறுப்போடு ஒரு பணியாளருக்காக இவ்வளவு செய்ய இயலுமானால் அந்த மக்களின் வாக்குகளைப் பெறும் தலைவர்கள் நீங்கள் எவ்வாறு இவ்வளவு பொறுப்பற்று நடந்துகொள் முடியும்?

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற அனைவரும் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு அம்பாள்குளத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு குடும்பத்தின் கதை பொருத்தமாக இருக்கும். பத்து பிள்ளைகளைப் பெற்ற தாயும் தந்தையும் அதில் மூவர் வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்துகொண்டதாலும் ஏனைய மூவர் திருமணம் செய்து கொண்டதாலும் மற்றைய நான்கு பிள்ளைகளோடு படகில் தமிழகம் சென்றனர். கணவன் இந்தியாவிலேயே இறந்து விட்டார். தமிழகம் சென்ற நான்கு பிள்ளைகளில் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டார். ஏனையவர்கள் தமிழகத்திலேயே மணம் முடித்து வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் இந்தியத் தமிழரையே திருமணமும் செய்துள்ளார். தற்போது வயதான தாயார் மட்டும்அவுஸ்திரேலியாவில் உள்ள மகனின் விருப்பப்படி மீண்டும் அம்பாள்குளத்தில் வந்து வாழ்கின்றார். அதனால் அனைவரும் இலங்கைக்கு வாருங்கள்! எங்கள் விகிதாசாரத்தை கூட்டுவோம்! என்று கேட்க முடியாது. ஆனால் இலங்கைக்கு வந்து வாழ விரும்புபவர்களுக்கு அவர்கள் நாடு திரும்புவதற்கான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய எதிர்காலத்திற்கான வாழ்வாதாரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் தமிழகத்திலேயே வாழ விரும்புபவர்களுக்கு தமிழக – இந்திய அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அம்மக்களின் கௌரவமான எதிர்காலத்திற்கு தமிழக – இந்திய அரசுகளுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ் – மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் கைக்கூலிகளாக அல்லாமல் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட கற்றுக்கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளாக: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை ஆடும் முறை மாறவில்லை! ஆனால் ஆட்டம் தொடர்கிறது!! – த.ஜெயபாலன் .

கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீஸ் தன்னை ஒரு மேதை என்றார். அவர் தான் அவ்வாறு எண்ணியதற்கு என்ன காரணம் என்பதையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியுமாதலால்  நான் ஒரு மேதை – I know that I am intelligent, because I know that I know nothing” என்கிறார் சாக்கிரட்டீஸ். தனக்கு ஒரு விடயம் தெரியாது என்பதை உணர்ந்த ஒருவரே அந்த விடயத்தைத் தேடுவதற்கும் அறிவதற்கும் தூண்டப்படுவார். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வார். ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நம்புவவர்களிடம் தேடல் இருக்காது அறிவும் வளராது. இன்றும் சிறந்த விஞ்ஞானியாகக் கருப்படும் ஐசாக் நியூட்டன் கூட எமது மூதாதையர் குறிப்பிட்டது போல கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்றே கூறுகின்றரர். இன்னும் கற்பதற்கும் அறிவதற்கும் நிறைந்த விடயங்கள் இருக்கின்றன என்பதையே அது குறிக்கின்றது.

ஆனால் தங்கள், தங்கள் கிணற்றுக்குள் வாழும் தமிழ் தேசிய வாதிகளோ தாங்கள் அனைத்தும் அறிந்துவிட்ட தோரணையில் அறிக்கைவிடுவதும் முடிந்த முடிவாக கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது ஒருவகை அதிமேதாவித்தனக் கோளாறு – superiority complex. பட்டும் இன்னமும் புத்தியில் தெளிவில்லை. சில சமயம் இது இவர்களுக்கு தீர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

இந்தப் பழமொழி அரசியல் அடிப்படையில் தவறு என்றாலும் தமிழ் தேசியத்திற்கு பொருத்தமாக இருப்பதால் குறிப்பிடுகிறேன். ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல’ தமிழ் தேசிய வாதிகள் எப்போதாவது சொல்லவது, கத்துவது சரியாக இருந்துவிடுவதும் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களால் எப்போதுமே இழப்புத்தான். உயிரை வகைதொகையின்றி இழந்தனர். அளவில்லாத உடைமைகளை இழந்தனர். இப்போது எஞ்சியிருக்கின்ற உரிமைகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். கல்வியை இழக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கல்வியை அழிக்கின்ற விடயத்தை மிகச்சிரத்தையாக செய்துவருகின்றனர், தமிழ் தேசிய வாதிகள். பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு மக்களை அழித்தனர். அரசியல் என்பதன் அடிப்படையே இயலாததை இயலுமாக்கும் திறன் – politics is the art of making imposible posible என்பதை உணராமல், தங்களை வளர்க்கும் திறன் என்று புரிந்து வைத்துள்ளனர். இவ்வளவு காலத்தில் இவர்கள் தங்களையும் ஒன்றும் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வைக்கோல் பட்டறையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைப்பவர்களாகவே உள்ளனர்.

இந்த லட்சணத்தில் மாவை சேனாதிராஜா வாரிசு அரசியலுக்கும் மகனைக் களமிறக்கி உள்ளார். மாவை சேனாதிராஜா ஒன்றும் தன் திறமையால் முன்னுக்கு வந்தவரல்ல. தனக்கு மேலுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட படிப்படியாக முன்னுக்கு நகர்ந்தவர். இதே பாணியில் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி எப்போது பாடையில் ஏறுவார் தான் எப்போது பதவியேற்கலாம் என்று லண்டனில் இருந்து வந்த சாதிமான் எஸ்.அரவிந்தன் கிளிநொச்சியில் காத்துக்கிடக்கின்றார். இவருக்கு அரசியலுக்கு வர உள்ள ஒரே தகுதி யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையனை தன்னுடைய நண்பர் தங்கமுகுந்தனோடு சேர்ந்து அடித்ததே.

தங்கமோ பித்தளையோ முகுந்தன் யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாளை மாற்றி வைப்பேன் என்று சன்னதம் ஆடுகின்றார். மே 31 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை யூன் 1இல் எரிக்கப்பட்டது என்று எழுதி நூலக எரிப்பின் சூத்திரதாரிகளான காமினிதிஸ்சநாயக்காவைவும் சிறில் மத்தியூவையும் காப்பாற்ற முனைகின்றார். அ அமிர்தலிங்கம் மே 31 முதல் யூன் 2 வரை நடந்த சம்பவங்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் அ.அமிர்தலிங்கத்திற்கே எந்த நாள் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது என்பதில் உறுதி இருக்கவில்லை. அப்போதைய ஈழநாட்டின் தவறான செய்தியின் அடிப்படையிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு தான் தமிழ் தேசியம் புனைவுகளையே வரலாறாக்க கொக்கரிக்கின்றது. இப்படி சொந்த விடயங்களிலேயே விவரம் போதாதவர்கள் தற்போது வெளிவிவகாரம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

How LTTE killed TULF leader Amirthalingam - NewsIn.Asiaதமிழ் தேசியம் எப்போதும் பிரச்சினைகளைத் தணிக்க அல்லது தீர்த்துவைக்க விரும்புவதில்லை. எப்போதும் முரண்பாடை மோசமடையச் செய்யும் வகையிலேயே செயற்படும். அதற்கு அவர்களது அரசியல் போதாமை முக்கியகாரணம். 1980க்களில் அவர்களுடைய சமன்பாடு ‘எதிரியின் எதிரி, தங்களின் நண்பன்’. இந்த உலுத்துப்போன சமன்பாட்டைத் தான் அவர்கள் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். இலங்கை அமெரிக்காவின் நண்பன். இந்தியாவின் எதிரி. அதனால் இந்தியாவுக்கு சேவகம் செய்து, இந்தியாவை தமிழர்களின் நண்பனாக்கினால் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா தீர்த்து வைக்கும். இதுதான் அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியம் பின்பற்றுகின்ற சமன்பாடு.

இந்தியாவின் அரசியல் வாரிசான ராஜீவ் காந்தியயைப் படுகொலை செய்த பின்னரும் கூட இந்தக் கூட்டம் இந்தச் சமன்பாட்டை மாற்றவில்லை. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம். ”கள்ளத்தோணிகள், தோட்டக்காட்டான்கள், வடக்கத்தையான்’ என்றெல்லாம் நாங்கள் செல்லமாகத்தான் கூப்பிடுகிறோம்.  மற்றும்படி நாங்களும் நீங்களும் நண்பர்கள் தான். எங்களுக்கு ஒன்றென்றால் தமிழகம் கொந்தளிக்கும்” என்றெல்லாம் இவர்கள் சில பஞ்டயலக் வைத்து அரசியல் செய்ததைவிட இவர்களிடம் ஒரு துளி அரசியல் தெளிவும் இருந்ததில்லை.

சங்கானை நிச்சாமத்தில் சாதியப் போராட்டத்திற்காக குண்டெறிந்த பொழுது அ அமிர்தலிங்கம்  சங்கானையயை சங்ஹாய் ஆக்குகிறார்கள் என்று புலம்பினார். இன்றோ யாழ்ப்பாணத்தில் சீனா பனிப்போர் தொடுக்கிறது என்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி அறிக்கைவிடுகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்களே அல்லாமல் அவர்களுடைய அரசியலில் எந்தவித மாற்றமும் இல்லை.

2009இல் தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் மண்கவ்வியதை அவர்களால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடைய அரசியல் போதாமையின் விளைவே இது என்பதை அவர்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களும் தமிழ் தேசியப் பூநூல் அணிந்த காலம் அது. மதியுரைஞர் பாலசிங்கத்தின் இடத்தை நிரப்ப கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களுக்கு ஐபிசி இல் நேர்முகத் தேர்வுகள் பல நடந்தன. காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து இவர்கள் தமிழ் தேசியத்துக்கு மார்ஸிய மூலாம் பூசினர். பூசிய மூலாம் கொட்டிண்ண, தமிழ் தேசியம் வேகமாகக் கறள்பிடித்தது. இந்த கீ போர்ட் மார்க்ஸிட்டுகள் இன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ‘ஓர்கானிக்’  வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வறுமையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியூட்டுவதே அரசுக்கு துணைபோகும் என்று புரட்சிகர தமிழ் தேசியம் பேசியவர்கள் இன்று, ஓர்கானிக் தமிழ் தேசியப் புரட்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள்,  கீ போர்ட் மார்க்ஸிஸ்டுக்களும் அ.அமிர்தலிங்கம் விட்டுப்போன சமன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். இந்தச் சமன்பாட்டில் எதிரியும் நண்பர்களும் மாறிவிட்டனர். இலங்கைக்கு இப்போதும் இந்தியா தான் எதிரியாம். அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளும் இலங்கைக்கு எதிரியாம். சீனா தான் இலங்கையின் நண்பனாம். அதனால் சீனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் கிழர்ந்து எழுந்து இந்தியாவையும்  அமெரிக்க நேசநாடுகளையும் குசிப்படுத்தினால், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களாம். இதுதான் தமிழ் தேசியவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முதல் அனைவரதும் முடிவான நிலைப்பாடு. இந்தப் பின்னணியில் தான் இவர்கள் இப்போது கத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் தமிழ் தேசியவாதிகள் ஏன் அறிக்கை விடுகின்றனர்; கத்துகின்றனர்; ஏன் அறிக்கைவிடவில்லை; கத்தவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று முற்று முழுதான பொய்யான தகவலை வெளியிட்டது வேறொன்றுக்கும் அல்ல. அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளையும் இந்தியாவையும் குசிப்படுத்தி அவர்களுடைய தூதரகங்களில் கவனத்தைப் பெறவே.

உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளின் கூட்டத்தொடர் பிரித்தானியாவின் சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசமான கோன்வோலில் நடைபெறுகின்றது. அங்கு  வைத்துத் தான் இந்த நேசநாடுகள் ஒரு பில்லியன் (பத்துக்கோடி) வக்சீன்களை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தன. இந்த உதவியயைச் செய்ய முன் வந்தமைக்கு காரணமே எங்கே சீனா இந்நாடுகளுக்கு வக்சீனை வழங்கி ராஜதந்திர ரீதியில் தங்களை தோற்கடித்துவிடும் என்ற பயத்தினால் என்பதை பிரித்தானியாவின் முன்னணிப் பொருளியல் பத்திரிகையான ‘பினான்சியல் ரைம்ஸ்’ நேற்று முன்பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இன்னும் பல ஊடகங்களும் இதனை வெளியிட்டு இருந்தன. இந்த செல்வந்த நாடுகளின் மாநாட்டில் சீனா இடம்பெறாத போதும், இம்மாநாட்டில் சீனாவே ஆளுமை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க ஒன்றியம் இந்தச் செல்வந்த நாடுகளின் உதவியயே வரவேற்றிருந்த போதும், இந்நாடுகளின் போக்கை ‘தடுப்பூசி இனவாதம்’ என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கண்டித்து இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தும் வக்சீனை ஏனைய நாடுகள் உருவாக்கத் தடைவிதித்துவரும் இந்தச் செல்வந்த நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டதால் பத்துவீதத்தையே வறிய நாடுகளுக்கு கையளிக்க முன்வந்துள்ளன. அதுவும் எப்போது இந்நாடுகளைச் சென்றடையும் என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. சீனாவும் ரஸ்யாவும் தங்களது வக்சீனை வறிய நாடுகளுக்கு வழங்கி வருவதால் தான் இந்தச் செல்வந்த நாடுகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தளவு வக்சீனை அதுவும் காலதாமதமாக வழங்க முன்வந்தன.

யாழ்ப்பாணத்தில் இந்தியா – சீனா இடையே பனிப்போருக்கான வாய்ப்பு என்று அனந்தி சசிதரன் யூன் 11இல் வலம்புரியில் வெளியிட்ட கருத்துக்களும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும். செல்வந்த நாடுகளின் தூதராலயங்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், அனந்தி சசிதரன் போன்ற விபரமும் விவேகமுமற்றவர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளில் தங்களுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

Selvam Adaikalanathan - Photos | Facebookதிருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பிலும் திருச்சியில் விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்று கூறும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் மௌனமாக இருப்பதும், இதனால் தான். இந்த அகதிகளோடு தொலைபேசியில் உரையாடியதாகக் கூறும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சமன்பாட்டில் அரசியல் விபரமும் விவேகமுமற்ற அ அமிர்தலிங்கம் முதல்  செல்வம் அடைக்கலநாதன் வரை பிரபாகரனின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு உட்பட எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் இந்தியாவின் தாளத்துக்கு தப்பாமல் ஆட்டத்தை தொடர்கின்றனர்.
_._._._._._
அகர வரிசையில் அனந்தி முதல் உயிர்மெய் வரிசையில் கடைசியில் வரும் விக்கினேஸ்வரன் வரை தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் தாங்கள் வாழும் கிணற்றுக்கு வெளியே பெரியதொரு உலகம் இருக்கின்றது என்பதை ஒரு போதும் எண்ணிப் பார்க்காமலேயே வாழ்ந்தும் கத்தியும் பழகிவிட்டனர். இந்த இருவருக்கும் இடையேதான் மற்றைய தமிழ் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் கிணற்றுக்குள் வாழ்ந்தும் கத்தியும் வருகின்றனர். இவர்களது கத்தல்களையும் புலம்பல்களையும் காதுகுத்து மற்றும் மரணச் செய்திகளுக்கிடையே வெளியிடுவதற்கு சில ஊடகங்கள்: உதயன், வலம்புரி, காலைக்கதிர், லங்காசிறி ஜப்னா நியூஸ் என்று காத்திருக்கும் அளவுக்குத் தான் தமிழ் தேசியத்தின் இருத்தல் இருக்கின்றது.

 

தமிழ் தேசியத்துக்கு கிடைத்த ஒரேயொரு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தலைவர் துரத்திவிட்டதும் அவர் இயற்கை எய்தியதும் வரலாறாகிப் போனபின் அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டாலும் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. இப்போது அதற்குத் தேவையும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் இப்போது அல்ஸமியர் எனும் ஞாபகமறதி நோய் (தமிழில் அறளைபேர்ந்துவிட்டது என்றும் சொல்வார்கள்) க்கு ஆளாகிவிட்டது. அவர்களுக்கு பழையதும் ஞாபகம் இருக்காது. தாங்கள் என்ன கதைக்கின்றோம் என்பதும் ஞாபகம் இருக்காது. அதனால் அவர்கள் அரசியலில் இருந்து சுகவீன விடுமுறையில் செல்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.