::விளையாட்டு

Tuesday, October 26, 2021

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

“எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்பு கிரிக்கெட்டை விட ஆழமானது.” – வில்லியம்சன் நெகிழ்ச்சி !

“எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்பு கிரிக்கெட்டை விட ஆழமானது.” என நியூசிலாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதும் நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன், இந்திய அணித்லைவர் விராட் கோலியின் நெஞ்சோடு சாய்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
எதிரணி தலைவரை அரவணைத்தது ஏன் என்பது குறித்து வில்லியம்சன் அளித்த சுவாரஸ்யமான பேட்டி வருமாறு:
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது மிகச் சிறந்த தருணம். இந்தியாவுக்கு எதிராக எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது கடினமாக இருக்கும் என்பது தெரியும். அதனால் கடும் முயற்சியை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.
போட்டி முழுவதும் ஒரு கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கோப்பை அதிர்ஷ்டம் எங்களுக்கு கிட்டியது. ஆட்டம் முடிந்ததும் கோலியின் தோளோடு ஏன் சாய்ந்தேன் என்று கேட்கிறீர்கள்.
எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்புறவு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டது. எங்களது நட்புறவு கிரிக்கெட்டை விட ஆழமானது. அது எங்கள் இருவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடு தான் அந்த இனிமையான கட்டித்தழுவல் என்றார்.

மழையால் தப்பித்த இலங்கை – கைவிடப்பட்டது மூன்றாவது போட்டி !

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதை அடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது போட்டி இன்றைய தினம் இடம்பெற்ற போது தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் நடுவர்களால் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட சோம் கரண் 4 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

எவ்வாறாயினும், தொடர்ந்து மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை முன்னதாக இருபதுக்கு இருபது போட்டித்தொடரையும் முழுமையாக இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையின் கிரிக்கெட் அவமானகரமானதாக மாறியுள்ளது.” – அர்ஜுன ரணதுங்க வருத்தம் !

இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 04 வருடங்களுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் அணி தொடர்தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறிய போது ,

போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் தொடரையும் மோசமான வகையில் இழந்த இலங்கை அணி !

இலங்கை யணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. ஏற்கனவே மிக மோசமான வகையில் இருபதுக்கு இருபது தொடரை இழந்துள்ள நிலையில் ஒரு நாள் தொடரையும் நேற்றைய தினம் இலங்கை இழந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டீ சில்வா அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், தசுன் சானக 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

5 விக்கெட் வீழ்த்திய சாம் கர்ரன்இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட சாம் கரண் 5 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் தலைவர் ஒயின் மோர்கன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஜேசன் ரோய் 52 பந்துகளுக்கு முகங்கொடுத்து 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்று கொண்டனர்.

இதன் மூலம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய 2 க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்தால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து கண்ணீருடன் விலகிய செரீனா வில்லியம்ஸ் !

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார்.
சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்தது.

இங்கிலாந்துடனான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் 8 வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்கள் – தொடரும் தோல்வி !

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே இருபதுக்கு இருபது தொடரை இங்கிலாந்து வெள்ளையடிப்பு செய்துள்ள நிலையில் இந்த தொடரில் ஆறுதலாக ஒரு வெற்றியை சரி பதிவு செய்ய இலங்கை அணி களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 71 ஓட்டங்களையும் னிந்து ஹசரங்க 54 ஓட்டங்களையும்  பெற்றுக் கொண்டனர். இது மட்டுமே குறிப்பிடக்கூடிய ஓட்டமாக அமைந்திருந்தது. ஏனைய இலங்கை அணியின் 8 வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுக்குள்ளேயே ஆட்டமிழந்து வௌியேறினர்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட கிரிஸ் வோகர் 4 விக்கெட்டுக்களையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமமாக வீழ்த்தினர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மூன்று விக்கெட்டுக்களை இலங்கை அணி சார்பாக பெற்றுக் கொண்டார்.

இதன்படி  5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

“69 மில்லியன் ரூபாய் செலவில் விசேட விமானத்தில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட வீரர்களின் செயல் கோபமூட்டுகிறது.”  – இலங்கை கிரிக்கெட்டின் வைத்திய குழுவின் தலைவர்

பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட்டின் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றில் கலந்து கொண்ட குசல் மெந்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவின் ஆகியோர் இங்கிலாந்தின் நடுவீதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி சிகரட் பிடிப்பதற்காக ஒன்றாக நின்ற காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பலரும் இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கருத்து தெரிவித்த போதே அர்ஜுன டி சில்வா  இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இவர்கள் தங்கும் இடத்தில் கால்வாய் ஒன்று உள்ளது. யாரும் இல்லாத போது காலையிலோ அல்லது மாலையிலோ கால்வாய் வழியாக நடந்து செல்லலாம். ஆனால் அந்த பாதையில் ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் பக்கம் செல்லக்கூடாது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறித்த பாலத்தைக் கடந்ததும், நகர மையத்தை அடையலாம். வீரர்களுக்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய அல்லது ஏதாவது செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில், ஒரே ஒரு உடல் பயிற்சி நிபுணர் மட்டுமே இருந்தார். அணியில் எந்த வைத்தியரும் இருக்கவில்லை. இப்போது 24 மணி நேரமும் வைத்தியர் ஒருவர் உள்ளார். வைத்தியர் ஒருவர் இருக்கிறாரா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். வைத்தியருக்கு தெரியாது. ஏனென்றால், அவர்கள் இரவில் உறங்குகிறார்களா என்பதை பார்ப்பது வைத்தியரின் வேலை இல்லை. வௌியில் செல்ல முடியாது என்பது வீரர்களுக்கு தெளிவாக தெரியும்.

வீரர்களின் பாதுகாப்பிற்காக 69 மில்லியன் ரூபாய் செலவில் விசேட விமானத்தில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்திய அணியினருக்கு முன்னதாகவே இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுதான் எனக்கு கவலையும் கோபமுமாக உள்ளது. நான் ஒருபோதும் வீரர்களை விமர்சிப்பதில்லை. நான் வீரர்களை நேசிக்கிறேன். ” என்றார்.

இங்கிலாந்தின் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை !

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடருக்கு சென்ற  இலங்கை அணி வீரர்கள் வீதி ஒன்றில் புகைப்பிடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணி உப தலைவர் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளது.

அத்துடன் தனுஸ்க குணதிலகவும் இவர்களுடன் இருப்பது தெரிகிறது. கொரோனா பாதுகாப்புக்கு உட்பட்டு சுற்றுலா சென்றுள்ள வீரர்கள் அதனை மீறி செயற்பட்டுள்ளார்களா எனவும் வீடியோவில் உள்ள விடயம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம்.” – தோல்விக்கு பின் விராட் ட்வீட் !

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தோல்விக்குப்பின் பேசிய இந்திய அணி தலைவர் விராட் கோலி
‘‘இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து மீண்டும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். அணியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்போம். ஒரே மாதிரியான அணியைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர மாட்டோம்.
அடுத்த திட்டத்துக்காக ஒரு வருடம் வரை காத்திருக்கமாட்டோம். எங்கள் ஒயிட் பால் அணியில் ஏராளமான வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் உள்ளார்கள். அதேபோல் டெஸ்ட் அணியையும் தயார் செய்ய வேண்டும்.
அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்குக் கொண்டு வர வேண்டும்’’ என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ள விராட் கோலி ‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம். ஒன்றாக இணைந்து நாங்கள் முன்னோக்கி பயணிக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெற்றிக்கனவை தகர்த்து, 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்தது நியூசிலாந்து !

AUSvIND): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - முதலிடம் பிடித்த இந்திய அணி! | India Takes No 1 spot in ICC World Test Championship standings

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ஓட்டங்களும், நியூசிலாந்து 249 ஓட்டங்களும் எடுத்தன.

32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ஓட்டங்களுடனும், கோலி 8 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ஓட்டங்கள் , ஜடேஜா 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ஓட்டங்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா 170 ஓட்டங்களில் சுருண்டது.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினாலும் அதன் பிறகு அனுபவம் வாய்ந்த நிதான துடுப்பாட் வீரர் கேன் வில்லியம்சனும், ரோஸ் டெய்லரும் பொறுமையாக ஆடி வெற்றிப்பாதைக்கு பயணிக்க வைத்தனர்.

வில்லியம்சன்-டெய்லர்

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் வசப்படுத்தியது.  வில்லியம்சன் 52 ஓட்டங்களுடனும் (89 பந்து, 8 பவுண்டரி), ரோஸ் டெய்லர் 47ஓட்டங்களுடனும் (100 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது. கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு  நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.  இதற்கு முன்பு கடந்த2000ம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ்  கோப்பையை கைப்பற்றியதே நியூசிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பாக பார்க்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை என்ற சிறப்பையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் 8 வெற்றியையும் ஒரு ட்ராவையும் அந்த அணி கண்டுள்ளது.

வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.