::விளையாட்டு

Wednesday, June 23, 2021

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

பிற்போடப்பட்டது லங்கா பிரீமியர் லீக் !

இம்முறை இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்தி வைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருகின்றது.

இதற்மைய, எதிர்வரும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரெஞ்ச் ஓபன் தொடர் – தகர்க்கப்பட்டது செரீனா வில்லியம்ஸின் சாதனைக்கனவு !

உலகின்  தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 1999-ம் ஆண்டு முதன்முதலாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து டென்னிஸில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனை கர்ப்பிணியாக இருந்தபோதே வென்றார்.
குழந்தை பெற்ற பிறகு சிறிது காலம் விளையாடவில்லை. அவர் தற்போது வரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இன்னும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிகமுறை வென்ற மார்கரெட் கோர்ட் (24) சாதனையை சமன் செய்துவிடுவார்.
தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபனில் எப்படியும் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21 வயதேயான இளம் வீராங்கனை ரிபாகினாவிடம் 6-3, 7-5 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
தோல்வியினை தொடர்ந்து பேசிய அவர்,  “பிரெஞ்ச் போனால் என்ன? விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனை மூன்று முறை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்துடனான 20 ஓவர் போட்டித்தொடருக்கு இலங்கை அணிக்கு புதிய தலைவர் !

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணியின் 20 ஓவர் போட்டி தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கு தலைவராக உள்ளார்.

குசல்பெரரா இலங்கை அணிக்காக 22 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டி மற்றும் 47 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

THAMILKINGDOM: ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

இலங்கை 20 ஓவர் அணிக்கு மலிங்கா தலைவராக செயல்பட்டு வந்தார். அவர் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தசுன் ‌ஷனகா தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீக்கப்பட்டு குசால் பெரேரா தலைவராக தேர்வாகி உள்ளார்.

இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிகள் வருகிற 23, 24 மற்றும் 26-ந்தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 29, ஜூலை 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கிறது.

“ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. தலைவர் பதவி வேண்டாம்.” – ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது  சுழற்பந்து வீச்சு மூலம் உலக முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். ஐ.பி.எல், பிக் பாஷ் உள்ளிட்ட ஏராளமான டி20 லீக்கில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி டி20 அணியின் தலைவராக ஹஷ்மதுல்லா ஷாஹிதியை நிமியத்தது. துணைக் தவைராக ரஹ்மத் ஷாவை நியமித்தது. ரஷித்கானை புதிய துணைத்தலைவராக நியமித்துள்ளது. ஆனால் கேப்டனாக நியமிக்கவில்லை.
இந்த நிலையில் தலைவர் பதவியை விரும்பவில்லை என ரஷித் கான் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். துணைக் கேப்டன் என்பது எனக்கு சிறந்தது. என்னுடைய ஆலோசனை தேவைப்படும்போது, தலைவருக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது எனக்கு சிறந்தது.
ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தலைவராக மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதைவிட, என்னுடைய பணி அணிக்கு மிகவும் சிறந்தது, அணிக்கான எனது செயல்பாடு பாதிக்கப்படுமோ, என்று நான் பயப்படுகிறேன். இது முக்கியமானது. இதனால் ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. கிரிக்கெட் போர்டு, தேர்வுக்கு எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு துணையாக நான் இருப்பேன்’’ என்றார்.

கொரோனாவுக்கு மத்தியிலும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்தங்கள் – 10000 தன்னார்வலர்கள் விலகல் !

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10000 தன்னார்வலர்கள் விலகி உள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ளன. எனினும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா.? என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும், பல தன்னார்வலர்கள் விலகியதற்கு மற்றொரு காரணம் என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி – 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகள் !

2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2023 – 2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரங்கள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்ந்து நடைபெறும். 9 அணிகள் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு இரு வருடங்கள் கழித்தும் இறுதிச்சுற்று நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

2027, 2031 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. எனவே 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கடைசியாக 10 அணிகள் பங்கேற்கும். 2003 உலகக் கிண்ண போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும். 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸில் மோதும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

டி20 உலகக் கிண்ண போட்டியில் 20 அணிகள் பங்கேற்கும்.

கடைசியாக 2017 இல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.

2024 – 2031 இல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்.

2024 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.

2025 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2026 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2027 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.
2028 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2029 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2030 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2031 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.

“விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார் . கைல் ஜேமிசன் அதில் சிக்கவில்லை.” – டிம் சவுத்தி பாராட்டு !

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ந்திகதி தொடங்குகிறது.
இதில் நியூசிலாந்து பந்து வீச்சை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ரோகித் சர்மா. விராட் கோலி, புஜாரா, ரகானே எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதே கேள்வி. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பெங்களூர் அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக பந்து வீசியும் அசத்தினார். பயிற்சியின்போது அவரிடம் இந்திய அணி தலைவர் கோலி டியூக் பந்தை கொண்டு தனக்கு பந்து வீச முடியுமா? என்று கேட்டார். அதற்கு ஜேமிசன், “நான் பந்து வீசினால் நீங்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை புரிந்துகொள்வீர்கள். அதனால் வீசமாட்டேன்.” என மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் விராட் கோலி விரித்த வலையில் கைல் ஜேமிசன் சிக்காததற்கு டிம் சவுத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி கைல் ஜேமிசனிடம் கேட்ட சம்பவம் உண்மை. ஆனால், அந்த பதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கானது. ஏன் அவர்கள் பந்து வீச்சை கவனிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் விராட் கோலி பந்து வீச்சை எதிர்கொள்ள இருப்பார். அவருக்கு பந்து வீசக்கூடாது என்பதை தெரிந்துள்ள கைல் ஜேமிசன் மிகப்பெரிய அறிவு தேவையில்லை’’ என்றார்.

கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்று இலங்கை வீரர்கள் !

கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மூவரை தெரிவு செய்துள்ளனர்.

இவர்களில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து அண்மையில் விலகிய திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க ஆகிய மூவரும் ஆவர்.

Caribbean Premier League 2018: Teams, Squads And Change in Rules |  CricketTimes.com

அண்மையில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் திசர பெரேராவை பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி நிர்வாகமும், இசுரு உதானவை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் , வனிந்து ஹசரங்கவை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி நிர்வாகமும் எடுத்திருந்தன. இவர்கள் மூவருமே சகலதுறை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் தீவில் நடைபெறவுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபிரியன் பிரீமியர் லீக்கில் கிரென் பொல்லார்டின் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானதுடன், அந்த அணி நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் !

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குசல் ஜனித் பெரேராவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி !

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது. ஏற்கனவே தொடரரை இழந்திருந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக  இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தமது 6 சதத்தை பூர்த்தி செய்து 120 ஓட்டங்களையும் டீ சில்வா 55 ஓட்ங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஸ் அணியின் தஸ்கின் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன்படி 97 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.அந்த அணி சார்பில் அதிகமாக மஹ்மதுல்லா 53 ஓட்டங்களையும் ,  ஹூசைன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்தசமீர 05 இலக்குகளை கைப்பற்றி போட்டியின் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் துஷ்மந்தசமீர தெரிவானார். தொடர்நாயகனாக ரஹீம் தெரிவானார்.

ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.