::விளையாட்டு

Tuesday, October 26, 2021

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஜடேஜாவின் அதிரடி கைகொடுக்க இறுதி நிமிடத்தில் வெற்றியை ருசித்தது சென்னை !

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைவன் மோர்கன் டாஸ் வென்று  துடுப்பெடுத்தாட்டத்தைச் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சாம் கர்ரன் இடம் பிடித்தார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ஓட்டங்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 172 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க் வாட், டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 40 ஓட்டங்களும், டு பிளிஸ்சிஸ் 30 பந்தில் 43 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொயீன் அலி 28 பந்தில் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 10ஓட்டங்களிலும், சுரேஷ் ரெய்னா 11 ஓட்டங்களிலும், டோனி 1ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
கடைசி 2 ஓவரில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பிரதித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் அடிக்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 22ஓட்டங்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். 3-வது பந்தில் ஷர்துல் தாகூர் 3 ஓட்டங்கள் அடித்தார். 5-வது பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். கடைசி பந்தில் தீபக் சாஹர் ஒரு ஓட்டங்கள் அடிக்க சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் பிளே-ஓப் சுற்றுக்கு இலகுவாக முன்னேறியது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி !

ராஜஸ்தானை இலகுவாக வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி !

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதையடுத்து 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் துவக்கத்தில் இருந்தே தடுமாறிய அந்த அணி 55 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. அணியின் தலைவர் சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியில் சாம்சன், மஹிபால் ஆகிய இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை.
ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம் !

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

சம்பள விடயத்தில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ !

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரர்களாக போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள். அதிக கோல்கள், விருதுகள், வருமானம் என எதை எடுத்தாலும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.
லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடும்போதும், ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
மெஸ்சிக்கு பார்சிலோனா மிக அதிக அளவில் சம்பளம் கொடுத்து வந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரியல் மாட்ரிட் அதிக சம்பளம் கொடுத்தாலும் மெஸ்சியைவிட குறைவாகத்தான் வாங்கினார். மேலும், வணிக ஒப்பந்தம் உள்பட இதர வருமானத்திலும் மெஸ்சி முன்னிலை பெற்றிருந்தார்.
ரொனால்டோ யுவென்டஸ் அணிக்கு சென்ற பிறகு, அவரது சம்பளம் வெகுவாக குறைந்தது. தற்போது மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து விலகி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றுள்ளார். இதனால் மெஸ்சி சம்பளம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் 2021-22 சீசனில் மெஸ்சியை விட ரொனால்டோ அதிக வருமானம் ஈட்டும் நபராக இருப்பார் என போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ரொனால்டோ வரியுடன் 125 மில்லின் டாலர் சம்பளம் பெறும் நிலையில், மெஸ்சி 110 மில்லியன் டாலரே பெறுவார் எனத் தெரிவித்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெ் அணி ரொனால்டோவுக்கு போனஸ் உடன் சேர்த்து 70 மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்கிறது. வணிக ஒப்பந்தம் மூலம் 55 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார்.
 மெஸ்சி சம்பளம் மற்றும் போனஸ் மூலம 75 மில்லியன் டாலர் ஈட்டுவார் எனத்தெரிவித்துள்ளது.

இறுதி ஓவரில் மாயாஜாலம் செய்த கார்த்திக் தியாகி – த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் !

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில்  நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில்  வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 185 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணிசார்பில் லீவிஸ் 36 ஓட்டங்களையும் , ஜெய்ஸ்வால் 49 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் சார்பில் மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ஓட்டங்கள் விளாசினார்.
பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.  பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல்-அகர்வால் ஜோடிஅடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர்.

ஒரு கட்டத்தில் 15 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது, அதுவும் இறுதி இரண்டு ஓவர்களில் அவர்களுடைய வெற்றிக்கு 8 ஓட்டங்கள் மட்டுமே தேவைபட்டது.

19-வது ஓவரை வீசிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் சிக்கனமாக 4 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார், இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை இருந்த போதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

20 வயதான கார்த்திக் தியாகியின் இறுதி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்து டாட் ஆனது. 2வது பந்தில் மர்க்ராம் ஒரு ஓட்டம் அடித்தார். 3வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை பறித்தார்.

 

இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது. 5வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது  பாவியன் அலனுக்கு எதிராக அதுவும் டாட் ஆனது. இதனால் ராஜஸ்தான் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஒரே ஒரு ஓட்டத்தை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார் கார்த்திக் தியாகி.

இறுதியில், பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இரண்டு ஓட்டங்களால் தோற்றது.

இதன்மூலம் கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்களால் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது கார்த்திக் தியாகிக்கு அளிக்கப்பட்டது.

பெங்களூரை இலகுவாக சாய்த்த கொல்கத்தா !

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ஓட்டங்களுக்குள் படுமோசமாக சுருண்டது. அந்த அணி சார்பாக படிக்கல் பெற்ற 22 ஓட்டங்களே அதிக பட்சமாக காணப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி, அந்த்ரே ரஸல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர்  93 ஓட்டங்கள் கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. துடுப்பாட்டத்தில்  சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 82 ஓட்டங்கள் குவித்தது. ஷுப்மான் கில் 34 பந்தில் 48 ஓட்டங்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முக்கியமான இரண்டு தலைமைப்பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி !

இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.

இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.

இருபதுக்கு20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், இருபதுக்கு20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

துபாயில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, இருபதுக்கு20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.

இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.

இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இருபதுக்கு20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.

“இலங்கை வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது.” – விராட் கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அபுதாபியில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர். ஆட்டம் முடிந்ததும் இந்த சீருடை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பெங்களூரு அணியின் தலைவர்  விராட் கோலி பின்னர் கூறியதாவது:-
எங்கள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று வீரர்களாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது பகுதியில் ஆடிய கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இலங்கை பவுலர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா இலங்கையில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.
அங்குள்ள ஆடுகளங்களும், அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதனால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களது திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். சில வீரர்கள் விலகினாலும் நாங்கள் வலுவாக இருப்பதாகவே உணர்கிறோம். புதிய வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. முதல் பாதியில் எப்படி விளையாடினோமோ அதே வேட்கை, மனஉறுதியுடன் 2-வது கட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம்.” இவ்வாறு கோலி கூறினார்.

மீண்டும் ஆரம்பமாகிறது ஐ.பி.எல் திருவிழா – மோதுகின்றன இரு பலமான அணிகள் !

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்திகதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்திகதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.
இந்த நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2-வது கட்ட பகுதியில் துபாயில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (அதாவது 30-வது லீக் ஆட்டம்) 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகின்றது.
புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறி விடலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லியில் சந்தித்த லீக்கில் சென்னை அணி 218 ரன்கள் குவித்த போதிலும், அதை கீரன் பொல்லார்ட்டின் (34 பந்தில் 8 சிக்சருடன் 87 ரன்) அதிரடியால் மும்பை அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து அமீரக சீசனை சென்னை அணி வெற்றியோடு தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க !

ரி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த ரி20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.