::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

பரபரப்பான ஆட்டத்தில் 4 ஓட்டங்களால் தொடரை வென்றது இலங்கை !

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை !

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய   நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததது. டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததது.  ஒல்லி போப் 145 ரன்னிலும், ஜோ ரூட் 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

14 ஓட்டங்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 284 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் மலிங்கா !

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார்.

மாதவிடாய் வலியால் வெற்றியை தவறவிட்ட வீராங்கனை – ஆணாக இருந்திருக்கலாம் என வேதனை !

மாதவிடாய் காரணமாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் பிரெஞ்ச் ஓபனில் அதிர்ச்சியூட்டும் வெற்றி வாய்ப்பை இழந்த சீன வீராங்கனை ஜெங் கின்வென், தான் ஒரு ஆணாக இருந்திருக்கலாம் என வேதனை தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்விடெக்கிற்கு எதிராக பிரெஞ்ச் ஓபன் தொடரில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யவேண்டும் என்ற தனது நம்பிக்கையை, கடுமையான வயிற்றுப் பிடிப்புகள் சிதைத்துவிட்டதாக சீனாவின் ஜெங் கின்வென் கூறினார்.

உலக தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் 19 வயதே ஆகும் ஜெங், திங்கட்கிழமையன்று முதல் முறையாக ரோலண்ட் கரோஸ் அரங்கத்தில் விளையாடினார். அதுவும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்விடெக்கிற்கு எதிரான போட்டியாக அமைந்தது.

 

இந்த போட்டியில் இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் ஜெங்கிற்கு, தனது காயம்பட்ட வலது காலில் மருந்து கட்ட மருத்துவ கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், அதைவிட பெரிய கவலைகள் இருந்ததாக அவர் வெளிப்படுத்தினார்.

“அது பெண்களின் விஷயங்கள்” என்று ஜெங் தனது மாதவிடாய் வலியைக் குறிப்பிடுகிறார்.

“முதல் நாள் எப்போதுமே மிகவும் கடினமாக இருக்கும், பின்னர் நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும், முதல் நாளில் எனக்கு எப்போதும் மிகவும் வலி இருக்கும். “என் இயல்பிற்கு எதிராக என்னால் செல்ல முடியவில்லை, நான் ஒரு ஆணாக இருக்க விரும்புகிறேன், அதனால் நான் கஷ்டப்பட வேண்டியதில்லை” என்று கூறிய அவர்,இப்போது ஒரு பெண்ணாக மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறினார்.

கால்வலி விளையாட்டைகடினமாக்கியது, ஆனால் வயிற்றுவலியுடன் ஒப்பிடும்போது அது ஓரணும் பெரிதல்ல, வயிறு மிகவும் வலியாக இருந்ததால் தன்னால் டென்னிஸ் விளையாட முடியாது என்கிறார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சம்பியன் யார்..? – இறுதிப்போட்டி இன்று !

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்திகதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டி – வன்னியிலிருந்து 7 வீர வீராங்கனைகள் !

ஸ்ரீலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்பற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

வவுனியா, முல்லைத்தீவினைச் சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு பயணம்

நேற்று ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெறும் வீர வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மெத்தியூஸ் அபாரம் – இலங்கை அணி 141 ஓட்டங்களால் முன்னிலை !

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 506 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டம் இழக்காமல் 145 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஷஹிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹுசைன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸிற்காக பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் அடிப்படையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 141 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

இரண்டாவது ஆண்டாகவும் ஒரு போட்டியிலும் விளையாடாத சச்சினின் மகன் – சச்சின் வழங்கியுள்ள பதில் !

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளித்து கூறியதாவது:
இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும்.
உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன்.
ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார்.

ஒத்திவைக்கப்பட்டது ஆசிய விளையாட்டு போட்டிகள் – காரணம் என்ன..?

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் திகதி முதல் 25-ம் திகதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

மேலும், புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரோகித் சர்மா மனதளவில் உடைந்துபோயுள்ளார் – இயன் பிஷப் 

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா மனதளவில் உடைந்துபோயுள்ளார் என்பதை அவருடன் பேசியதன் மூலம் தன்னால் புரிந்துகொள்ள முடிந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்  தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அணியின் பிரதான வீரர்கள் சோபிக்க தவறியதே மும்பையின் இந்த மோசமான நிலைக்கு காரணமாக உள்ளது.  இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்.

“மும்பை அணி கடைசியாக விளையாடிய போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் கேப்டன் ரோகித் உடன் நான் பேசியிருந்தேன். அவர் உடைந்து போயுள்ளார் என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. சிறந்த வீரர்கள் கொண்ட ஒரு அணியை கட்டமைத்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். அதனால் அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்ப சிறு மாற்றங்கள் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். குறிப்பாக அவர்களது பேட்டிங் லைன் அப்பில் இந்த மாற்றம் தேவை. அதன் மூலம் அவர்களது அணி வலு பெறும். என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அது தவிர நடப்பு சீசனில் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் அவர்களது பவுலர்கள் அதிக ரன்களை லீக் செய்து விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். இதிலிருந்து மீண்டு அவர்கள் எப்படி முன்னோக்கி நகர்கிறார்கள் என்பதை பார்க்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார் .