கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வன்னியிலுள்ள இந்திய வம்சாவளி மக்களை மலையகத்தில் மீண்டும் குடியேற்ற வேண்டும்

up-cun.jpgவன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் அதிகளவான இந்திய வம்சாவளி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியேற்ற அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி.சென்னன் இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலையமொன்றை அமைக்குமாறு கோரியுள்ளார். பதுளையிலுள்ள கட்சி பணிமனையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பிரித்தானிய விசேட தூதுவரை இலங்கை அரசு நிராகரித்திருப்பது முறையற்ற செயலாகும். இந் நாட்டில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கை நாட்டில் குடியேற்றியது பிரித்தானிய அரசுதான். அந்நிலையில், இலங்கையின் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு இருக்கவே செய்கின்றது. ஆகையினால், தமிழ் மக்களின் துயரினைப் போக்கும் வகையில் பிரித்தானிய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பின்னிற்கக் கூடாது. பிரித்தானிய விசேட தூதுவரை இந்நாட்டிற்குள் பிரவேசிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும்.

நாட்டின் வட பகுதியில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் அம்மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். நடைபெற்று வரும் யுத்தத்தினால் இம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் விடயத்தில் அரசுகருணை காட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இனம் கண்டு, அவர்களை மீண்டும் மலையகத்தில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடாக மலையகத்தில் நலன்புரி நிலைய மொன்றினை அமைத்து வடபகுதி இந்திய வம்சாவளி தமிழ் மக்களை அந்நிலையத்தில் குடியமர்த்த வேண்டும். அதனையடுத்து அம்மக்களின் ஜீவனோபாயத்திற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும்.

நாட்டின் தென்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களையடுத்தே, தென்பகுதி தமிழ் மக்கள் வட, கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். அங்கும் யுத்த சூழலினால் வாழ முடியாத அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால், அம்மக்கள் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே அரசு இம்மக்கள் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி செயல்படவேண்டும். அத்துடன் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசும் புலிகளும் கைவிடவும் வேண்டும்’ என்று கூறினார்.

வன்னியிலிருந்து காயமடைந்து வந்தவர்களை பொலனறுவை ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது நல்லதல்ல-ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

batticolo1.jpgமுல்லைத் தீவில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 178 பேர் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை;

திருகோணமலை வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்கும் வகையில் இவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போன்ற தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இவர்களை மாற்றுவது தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார். பொலனறுவை வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சகலரும் பெரும்பான்மை இனத்தவரின் மொழியான சிங்களம் பேசுபவர்கள். சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி பேசுபவர்கள் இதனால் மொழி ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுவது என்றால் பாதுகாப்புக் கெடுபிடிகள், போக்குவரத்து கெடுபிடிகள் அங்கு தங்கியிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல அங்கு சேவையாற்றுபவர்கள் சேவை மனப்பான்மையுடன் இவர்களுக்கு சேவையாற்றினாலும் மக்களையும் விடுதலைப் புலிகளாக கருதுபவர்களும் உண்டு.

ஏற்கனவே உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இவர்கள் அங்கிருந்து அறிமுகமில்லாத இடமொன்றிற்கு மாற்றப்பட்டிருப்பதானது அவர்களிடையே தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்துமென்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடையே ஒருவித அச்சமும் பீதியும் இருப்பதை அறியக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார

10 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இழந்தன

sri-lanka-election.jpgமத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த பத்து சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தை இழந்துள்ளன. மேற்படி சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் 30 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியிருந்தன. மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 வீத வாக்குகளை எந்தவொரு சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொள்ள முடியாமையினாலேயே இந்நிலையேற்பட்டுள்ளது.

இம்முறை மாகாண சபையில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. தவிர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை. இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த மொத்த வாக்குகள் 3,039 ஆகும். இது மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 1.07 சதவீதமாகும்.

புதுக்குடியிருப்புக்குள் நுழைந்திருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

mi24_2601.jpgஇலங்கை இராணுவத்தினர் இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் வசம் எஞ்சியுள்ள ஒரேயொரு நகரமாகிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் முன்னேறிய இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு கிழக்கே இராணுவ முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இதி்ல் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,

இந்த மோதல்களின்போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் 19 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இன்று அதிகாலையும் நேற்றும் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் 40 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவிலிருந்து கப்பலில் அழைத்து வரப்பட்ட காயமடைந்தோரில் இதுவரை 11 பேர் உயிரிழப்பு

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்குக் கூட்டிவரப்பட்ட காயமடைந்த பொதுமக்களில் பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் கண்டி போதனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர் என்றும் மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, திருகோணமலையிலிருந்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பெப்ரவரி 11 முதல் நான்கு தடவைகளாக கப்பல் மூலம் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டோரில் 1,110 பேர் திருகோணமலையிலிருந்து வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் 500 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 21 பேருமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. இதன் விபரம் வருமாறு;

பெப்ரவரி 1 தொடக்கம் பெப்ரவரி 19 வரை 500 பேர், பெப்ரவரி 20 – 28 பேர் , பெப்ரவரி 21-45 பேர், பெப்ரவரி 22-11 பேர் , பெப்ரவரி 23 -33 பேர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டோரின் பிந்திய நிலைவரம் வருமாறு;
கொழும்பு / கண்டி 68 பேர் , பொலனறுவை 171 பேர், கந்தளாய் 160 பேர், தம்பலகமம் 76 பேர்.

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார நிலையம்:அமைச்சர் ரிஷாத்

pregnant-lady.jpgவன்னியிலி ருந்து வரும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன்கருதி வவுனியா ஆயுர்வேத வைத்திய நிலையத்தில் விசேட மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார். வன்னியில் இருந்து சுமார் 700 கர்ப்பிணித் தாய்மார்கள் வவுனியாவுக்கு வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரசவத்தின் பின்னர் இவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்படாமல் மேற்படி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளும் அளிக்கவுள்ளதாகவும் அவர்களின் குழந்தைகளின் நலன்களை கவனிக்கவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சுகாதார அமைச்சினூடாக இவர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர வவுனியா வந்துள்ள மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் மு.கா.தனித்து போட்டி

SLMC Gen Sec M T Hasan Aliமேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் வேட்பாளர் பட்டியல்கள் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேல்மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ஹஸன் அலி அந்த இரண்டு மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று காலை பூர்த்தி செய்யப்படவிருப்பதாகவும் அப்பணி நிறைவுற்றதும் தாமதமின்றி இன்று அல்லது நாளையே வேட்புமனுதாக்கல் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

vanni.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவிவகாரங்களுக்கான கவுன்சில் இலங்கையில் மோசமடைந்துவரும் மனிதநேய நெருக்கடி குறித்தும் பெருமளவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் போர் தொடர்பிலான சட்டங்களை இந்த மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக போர்நிறுத்தம் ஒன்றையும் கோரியிருக்கிறது என பி.பி.ஸி. செய்திச்சேவை நேற்று அறிவித்துள்ளது. .

விடுதலைப்புலிகள் மோதல் நடக்கும் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க வன்முறை மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியிருப்போரைப் பார்க்க வருபவர்களைக் கண்காணித்து அனுமதிக்கும் முறை சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம் , அங்கு சுயாதினமான கண்காணிப்பு அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஐ.நா. செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற மனித நேய அமைப்ப்புகள் அந்த முகாம்களுக்கு வர முழு அனுமதி தரப்படவேண்டும் என்றும் அது கோருகிறது.

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்பதை வலியுறுத்தும் ஒன்றியம், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவது என்பது அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே அமையும் என்று கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் முடிவாகத் துறந்து, சிறார்களை படையணியில் சேர்ப்பதை நிறுத்தி, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வை அடைய ஒரு அரசியல் வழிமுறையில் பங்கேற்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது

விசுவமடுவில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு பாதுகாப்பு படையினரால் மீட்பு

uthaya_nanayakara_.jpgமுல்லைத் தீவு, விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  படையினரால் விடுவிக்கப்பட்ட விசுவமடுவின் பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதல்களின்போதே இந்த ஆயுதக்கிடங்கை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 81 மி.மீ. ரக 250 மோட்டார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர். 52 பீப்பாய் எரிபொருள்கள், 150 பெட்டிகளைக் கொண்ட இரும்புக் குண்டுகள், 35 ஆயிரம் வெடிபொருட்கள் என்பனவற்றையும் படையினர் அங்கிருந்து கண்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புப் படையினர் இந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புலிகள் மீண்டும் மூச்சுவிட இடமளிக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath_f_jaffna.pngபயங்கர வாதிகளை முற்றாக அழித்தொழிக்கும்வரை மனிதாபிமான நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புலிகளுடன் எந்தவித யுத்தநிறுத்த உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி வலியுறுத்திக் கூறினார்.

2006ம் ஆண்டிலிருந்து பாதுகாப்புப் படையினர் இந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட முன்னேற்றங்களிலிருந்து தாம் எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புலிகள் மீண்டும் மூச்சுவிடுவதற்கு தான் இடமளிக்கப் போவதில்லை. தற்பொழுது புலிகள் 65 சதுர கிலோமீற்றர் சிறியபரப்புக்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.