கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மாத்தளை மாவட்டத்தில் தற்காலிக அடையாள அட்டையை பெற “பவ்ரல்’ கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

paffre.jpgமாத்தளை மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இல 261/6 பிரதான வீதி, மாத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ள நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலிற்கான மக்கள் அமைப்பான “பவ்ரலின்’ மாத்தளை கிளைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டால் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலை வழங்க முடியுமென மேற்படி அமைப்பின் மாத்தளை கிளை இணைப்பாளர்களான காமினி ஜயதிஸ்ஸ, பெ.வடிவேலன் ஆகியோர் தெரிவித்தனர். அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் முன் இதனைத் தெரிவித்த அவர்கள் மேலும் கூறியதாவது;

வேட்பு மனுத் தாக்கல் செய்த தினம்முதல் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலப் பகுதிக்குள் மாத்தளை மாவட்டத்தில் 5 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 2 தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாரதூரமான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை மிகக் குறைவான தேர்தல் வன்முறைச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.மு., ஜே.வி.பி. ஆகிய 3 கட்சிகளினதும் முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்முறை மொத்தமாக 8 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் இவை தொடர்பான எந்தவித முறைப்பாடும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் வன்முறைகளும் சம்பவங்களும் குறைந்துள்ள போதும் தேர்தல் சட்டத்திட்டதிற்கு முரணான செயற்பாடுகள் நாளாந்தம் அதுகரித்து வருகிறது. ஆளுங் கட்சியினரே பெருமளவில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அரச அதிகாரமும் அரச பௌதிக வளங்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

நாம் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதற்கென 200 இளைஞர், யுவதிகளை வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளோம். இவர்கள் 295 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இவர்களைத் தவிர, இவர்களின் கடமைகளை மேற்பார்வை செய்ய தொகுதி மட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் நிற தொப்பியும், கைப்பட்டியும், சீருடையும் அணிந்த வண்ணம் சேவையில் ஈடுபடுவர். அன்றைய தினம் மாத்தளை மாவட்டத்தின் முழுமையான நடவடிக்கைகளை கண்காணிக்க 4 வாகனங்களிலும் 7 மோட்டார் சைக்கிள்களிலும் எமது ஊழியர்கள் கடமையில் ஈடுபட உள்ளனர். சென்ற தேர்தல்களில் போன்று இம்முறையும் வாக்குப் பெட்டிகளை களவாடுதல், வாக்களிப்பை தடைசெய்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. நாம் இயன்றளவு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் அதேசமயம், எமது சக்தியையும் மீறி தேர்தல் முறைகேடான சம்பவங்களும் இடம்பெறலாம்.

அவ்வாறு நடந்தால் உடனுக்குடன் தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் மாத்தளை மாவட்ட தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் முறையாக பயன்படுத்தப்படுவதையும், அவர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என தெரிவித்தார். இவர்கள் தமது அமைப்பின் செயற்பாடுகளை நீதியாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் தமக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

புலிகளின் விமானங்கள் உருத்தெரியாதவாறு தனித்தனிப் பாகங்களாக கழற்றப்பட்டுள்ளன இராணுவப் பேச்சாளர் தகவல்

விடுதலைப்புலிகள் வசம் இருந்த விமானங்கள் உருத்தெரியாதவாறு தனித்தனியாக வெவ்வேறு பாகங்களாகக் கழற்றி வைக்கப்பட்டுள்ளன என்று கருதப்படுகின்றது. அவற்றை தேடும் பணியில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அரச ஊடகம் ஒன்றுக்கு மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் விமானப் படை, கடற்படை என்பவற்றின் செயற்பாடுகளை படையினர் முழு அளவில் சீர் குலைத்துள்ளனர். கடற்பகுதியில் 24 மணிநேரமும் கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

172 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். சுமார் 700 உறுப்பினர்கள் வரையிலேயே தற்போது அங்கு முடங்கியுள்ளனர். படையினர் எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்துவதால் விடுதலைப்புலிகள் தாக்குதல் திறனை இழந்து விட்டனர்  என்று இராணுவப் பேச்சாளர் விவரித்தார்.

பாதுகாப்பு வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம்

pranaf.jpgதமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்குமாறு இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி கோரிக்கை இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பான வலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முகர்ஜி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடுகடத்துமாறு வருடாந்தம் இலங்கை அரசாங்கத்தை புதுடில்லி கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் முகர்ஜி மேலும் கூறியதாவது;

“பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவிதமான அனுதாபமும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தமிழ்க் குடிமக்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டிருக்கிறது. தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மையில் நான் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வலயங்களுக்கு வருமாறு தமிழ்க் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. உணவையும் பாதுகாப்பையும் அந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இலங்கை அரசாங்கம் அத்தகைய ஏற்பாடொன்றைச் செய்தது. பாதுகாப்பான வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம். மனிதாபிமான உதவிகள் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பதவிக் காலத்தில் 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்’.

விசுவமடு, குருவிகுளம் தேடுதல்: மோட்டார் குண்டு ஏவும் கருவிகள் கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிடு விக்கப்பட்ட விசுவமடு மற்றும் குருவிகுளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளின் மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவிகள் ஒன்றும், 80 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவி ஒன்றும் இவற்றில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். படையினர் கடுமையான தாக்குதல்களினால் சேதமடைந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்றுள்ள இந்த மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினரே கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல் புலிகளின் வளங்கள் மீது விமானத் தாக்குதல்

jet-1301.jpgஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் -27 தாக்குதல் விமானங்கள் மூலம் கடற்புலிகளின் வளங்களை இலக்கு வைத்து இன்று(பெப்:09) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் விடயமாக விமானப் படைப்பேச்சாளர்  தகவல் தருகையில் தொடர்சியாக கடற்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்து இன்று காலை 7.00 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்காக அமைந்துள்ள வெள்ளமுள்ளவாய்கல் பகுதியில் கடற்புலிகளின் படகுகள் ரெய்லர்கள் ரெக்டர்கள் என்பன வானிலிருந்து அவதானிப்பதற்க்கு முடியாத வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களையே இத்தாக்குதல் இலக்காகும் என விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து வரும் வவுனியா மக்களின் நலன்பேண நான்கு விசேட செயலணிகள்

risard.jpgவிடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கிரமமான முறையில் பெற்றுக்கொடுக்கவென நான்கு விசேட செயலணிகள் அமைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வந்து சேர்வர் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எவ்விதமான குறைபாடுகளுமின்றி சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்க இச்செயலணிகள் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார். இதுவரை வவுனியா மெனிக்பாம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரை தங்க வைத்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இருந்துவரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமைத்த உணவுகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி என்பன வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு ள்ளதாக கூறிய அவர் வன்னியில் இருந்துவரும் மக்களை தங்க வைக்க ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவர்களுக்கு உதவி வழங்க ஐ.நா. மற்றும் ஐ.நா.வுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முன்வந்துள்ளன. இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தினேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்கள், நீர் வசதி, மலசல கூட வசதி என்பன அளிக்க ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

வவுனியா வரும் மக்களுக்கு சுகாதார வசதி, கல்வி, குடிநீர், மலசல கூட வசதி மற்றும் உணவு வசதிகள் அளிப் பதற்கென 4 செயலணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அது குறித்து இன்று (9) வவுனியா செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செயலணிகளினூடாக குறித்த வசதிகள் வழங்குவது குறித்து தனித்தனியாக நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. வன்னியில் இருந்துவரும் மக்களை கவனிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். உணவுகள், மருந்துகள் என்பவற்றை கையிருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட கிழக்கு கடலில் புலிகளின் இரு படகுகள் தாக்கியழிப்பு

_bort.jpgமுல் லைத்தீவு வடகிழக்கு கடலில் புலிகளின் இரண்டு படகுகளை கடற்படையினர் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஆறு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகான டோராவை பயன்படுத்தி நேற்றுக்காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆறு புலிகளில் இருவரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வெளியில் செல்ல முற்பட்ட இரண்டு படகுகளும் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 10 கடல் மைல் தொலைவில் வரும்வரை காத்திருந்த பாதுகாப்புப் படையினர் அந்த படகுகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையிலும் கடற்படையினர் கடற்பரப்பில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

48 மணி நேரத்தில் 10301 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம்

civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 10,301 சிவிலியன்கள் தப்பி வந்து இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களில் 5600 சிவிலியன்கள் நேற்று முன்தினம் 4701 சிவிலியன்கள் நேற்றும் வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாத்திரம் விசுவமடு பிரதேசத்தை நோக்கி வருகை தந்த 4701 சிவிலியன்களில் மூவர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று சிவிலியன்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் கொல்லப்பட்ட மூன்று சிவிலியன்களின் சடலங்களை பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுக்காலை வரை 21,621 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தப்பி வரும் பொதுமக்களை நலன்புரி முகாம்களுக்கு அழைத்துச் செல்லவென போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 50 பஸ்கள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதை புலிகள் பல்வேறு விதத்தில் தடுத்துவருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் பணயமாக வைத்து மேற்கொள்ளும் அடக்கு முறைகளையும், அவர்களது பிடியிலுள்ள சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாளாந்தம் கொடுத்துவரும் துன்பங்களையும் வெறுத்த சிவிலியன்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இது மேலும் கணிசமான முறையில் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பிவர முயற்சிப்பவர்களுக்கு சங்கிலிகளால் புலிகள் அடித்து கடுமையாக துன்புறுத்தியிருப்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களையும் பெருமளவில் குறைத்தும் கொடுப்பதாக தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இளம் வயதுடையவர்கள் பலாத்காரப் படுத்தப்படுவதுடன் 45 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாய பயிற்சி வழங்கப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காமினி மகா வித்தியாலயத்தில் 1000 பேரும், தம்பைமடு முகாமில் 2799 சிவிலியன்களும், நெலுங்குளம் முகாமில் 2625 சிவிலியன்களும், மெனிக் பாம் முகாமில் 582 சிவிலியன்களும், செட்டிக்குளம் மத்திய கல்லூரியில் 1763 சிவிலியன்களும், கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 1351 பொதுமக்களும், ஓமந்தையில் 6000 பொதுமக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக் காட்டினார்.

புலிகளின் ட்ரக் வண்டி மீது படையினர் தாக்குதல் -புதுக்குடியிருப்பில் சம்பவம்

udaya_nanayakkara_.jpgகுண்டு துழைக்காத தகடுகள் பொறுத்தப்பட்ட புலிகளின் ட்ரக் வண்டி ஒன்றை இலக்கு வைத்து படையினர் நடத்திய தாக்குதல்களில் அந்த வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் அதில் இருந்த 34 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு- ஒட்டுச்சுட்டான் வீதியின் ஊடாக முன்னேறிவரும் இராணுவத்தின் 53வது படைப் பிரிவினர் கனரக யுத்த தாங்கிகளை பயன்படுத்தி நேற்று முன்தினம் மாலை இந்த கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக முன்னேறிவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொருட்டே புலிகளின் ட்ரக் வண்டி வேகமாக வந்ததாகவும் இதனை அவதானித்த படையினர் அந்த ட்ரக்கை இலக்கு வைத்து  தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட புலிகளின் 12 பேரின் சடலங்களை நேற்று மாலை வரை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் – ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து.

jaya.jpgஇலங் கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கடந்த ஆறு மாத கால மாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்ற இந்த சோதனையான தருணத்தில், இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்.

எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளன்று என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.