::அரசியல் தஞ்சம்

::அரசியல் தஞ்சம்

அரசியல் தஞ்சம் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

TRO தலைவர் ரெஜிக்கு UK இல் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் : த ஜெயபாலன்

Reggie_TROபுலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெஜியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு கேட்டுள்ளதாக உள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது. சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் ரெஜி இங்கு அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். ஆனால் அவருடைய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்குப் பிறம்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” கவுன்சிலர் போல்சத்தியநேசன் இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்வேயில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ரெஜி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தேசம்நெற்க்கு செய்திகள் கிடைத்துள்ளது. நோர்வெயின் ஆளும்கட்சியில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவருக்கு ஊடாக நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹைமிடம் இந்த தஞ்சக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பாக இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக ரெஜி செயற்பட்டு வந்தார்.

இச்செய்தி தொடர்பாக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதும் தனிப்பட்ட ஒருவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.

Raj_Rajaratnamஇதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். சுனாமியின் போது இலங்கையில் தங்கியிருந்து உயிர் தப்பிய ராஜ் ராஜரட்ணம் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கு 5 மில்லியன் யுஎஸ் டொலர்களை வழங்கி இருந்தார். உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் ராஜ் ராஜரடணம் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவரது மேற்பார்வையில் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட போதும் பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க பிரித்தானியா மறுத்திருந்தது. குறிப்பாக கேணல் கிட்டுவினுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு தாங்கள் கைது செய்து திருப்பி அனுப்புவதற்கு முன்னர் கேணல் கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது. அவ்வாறு கிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை சென்றபோதே சர்வதேச எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்ய முற்படுகையில் தங்களது கப்பலைத் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரித்தானிய உள்துறை அமைச்சு கேணல் கிட்டு தொடர்பாக எடுத்த அதே முடிவையே தற்போது ரெஜி தொடர்பாகவும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.

மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )

தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

”பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். ” எனத் தெரிவிக்கிறார் சட்ட வல்லுனர் அருண் கனநாதன். இவர் இவ்வாண்டு மார்ச்சில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

\Paul_Sathyanesan_Cllrஇது தொடர்பாக தேசம்நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல்கொடுத்து வரும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”ரீஆர்ஓ தலைவர் ரெஜி க்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டது பற்றியோ அல்லது அவரை வெளியேறும்படி கேட்டது பற்றியோ எனக்கு உறுதியாகத் தெரியவரவில்லை” என்றார். ஆனால் ”ரெஜி போன்ற முக்கிய புள்ளிகள் இலங்கைக்கு அனுப்பப்ட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஒன்று அங்கு உள்ளது. மேலும் ரெஜியை திருப்பி அனுப்பும் முடிவு ஏனைய அரசில் தஞ்ச விண்ணப்பதாரிகளையும் திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்” என்றும் கவுன்சிலர் போல் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

”பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சத்தை சட்டவியலின் நுணுக்கத்தில் பார்க்கின்றதேயல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை கையாள்வதில்லை” எனவும் ஆட்சியில் உள்ள தனது கட்சியின் அரசியல் தஞ்சம் தொடர்பான கொள்கையை விமர்சித்தார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். – அருண் கணநாதன் உடனான நேர்காணல் : த ஜெயபாலன்

Arun Gananathan ._._._._._.
அருண் கணநாதன் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் தஞ்ச சட்டவல்லுனர். பிரித்தானிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும் போக்கை கடுமையாக விமர்சிப்பவர். பிரித்தானிய அரசில் தஞ்ச நடைமுறைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ‘தேசம்’ ஏற்பாடு செய்த அரசியல் தஞ்சம் தொடர்பான நடவடிக்கைகளில் எப்போதும் தனது ஆதரவை வழங்குபவர். இன்று ஒரு புறம் இலங்கையில் மிக மோசமான மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரித்தானியாவில் இருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இவை தொடர்பாக லண்டன் குரல் பத்திரிகைக்கு சட்ட வல்லுனர் கணநாதன் வழங்கிய நேர்காணலின் முழுமை இங்கு தரப்படுகிறது.
._._._._._.

ல.குரல்: பிரித்தானிய அரசியல் தஞ்ச நடைமுறைகள் அண்மைக்காலத்தில் எவ்வாறு உள்ளது?
கணநாதன்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சினுடைய அணுகுமுறையில் கடும் போக்கு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு நீதி மன்றங்களும் பாராபட்சமாக தனிப்பட்ட வழக்ககளில் தலையிட்டு நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். இப்படியான மாற்றங்கள் தான் ஏற்பட்டு இருக்கிறது. அகதிச் சட்டத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பப்ளிக் லோ (public law) என்று எடுத்தால் அதற்குள் தான் இமிகிரேசன் (immigration) வருகிறது. ப்ளட்கேற் (floodgate) என்று சொல்வார்கள். எத்தனை எத்தனை பேர் நாட்டுக்கு வருகிறார்கள் நாட்டின் நலன் என்ற அரசியல்கள் கட்டாயம் இருக்கும். அது தொடர்பான விசயங்களைக் கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். தனிப்பட்ட அகதித் தஞ்ச வழக்கில் கொள்கை, ப்ளட்கேற்றை வைத்து முடிவெடுப்பது வந்து பக்க சார்பன தீர்ப்பாகிவிடும். அதனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக அதைத்தான் செய்கிறார்கள்.

ல.குரல்: நீதித்துறையின் இந்த தட்டிக் கழிக்கும் போகை;கை சட்டப்டி எதிர்கொள்ள முடியாதா?
கணநாதன்: இன்றைக்கு இமிகிரேசன் ஜடஜ் ஆக இருக்கட்டும், அப்பீல் கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும், ஹைக்கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு சார்பாக நீதி வழங்குவார் என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியக் கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த நீதிபதி அகதிக்கு சார்பாக எப்போதும் நீதி வழங்காதவர் என்ற அடிப்படையில் வழக்கைத் தொடருவதற்கு பிரித்தானிய நீதித்துறையில் ஒரு செயன்முறையில்லை.

அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்றால் இந்த நீதிபதி தட்டிக்கழித்து நீதி வழங்காதவிடத்து வேறு சட்டக் காரணங்களின் அடிப்படையில் அவ்வழக்கு மேலே செல்லும் போது அந்த நீதிபதி அகதிக்கு சார்பாக தீர்ப்பளிப்தற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதில் இப்போது உள்ள பிரிச்சினை என்னவென்றால் வழக்கை மேலே கொண்டு செல்வதற்கான செலவீனம். இவ்வாறு அரசியல் தஞ்சத்தை இறுக்கமாக்கிய உள்துறை அமைச்சு சட்ட உதவி வழங்குவதையும் தொண்ணூறு வீதம் வரை குறைத்துவிட்டுள்ளது. அதனால் அகதிகளும் தொடர்ந்தும் பணத்தை இறைத்து இந்த வழக்குகளைத் தொடர முடியாத நிலையில் வழக்குகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ல.குரல்: பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் அறிந்தவற்றைக் கூற முடியுமா?
கணநாதன்: ஈராக் போன்ற நாடுகளுக்கு கனகாலமாக இப்படி செய்துகொண்டு இருக்கினம் ஆனா இலங்கையைப் பொறுத்தவரை charter flight புக் பண்ணி ஆட்களை திருப்பி அனுப்பினது இது தான் முதற்தடவை. இதை பிரித்தானிய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் பத்தியில் 150 பேர் அனுப்பப்பட்டதாக கதை உலாவுகிறது. ஆனால் நான் அறிந்த அளவில் 40 முதல் 50 பேர் வரையே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினை என்னென்று கேட்டால் வழமையாகவே 10 முதல் 30 பேர் வரை கிழமைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதை நாங்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இருந்துவிடுகிறோம்.

ஆனால் இந்த சாட்டர் ப்ளைட்டில் தொகையாக ஆட்கள் அனுப்பட்ட விடயம் தான் ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் அரசாங்கத்தின் நோக்கமும். இந்த அரசாங்கம் வந்து போடர்களை ரைற்ரின் பண்ணி இந்த நாட்டில் சட்ட விரோதமாக வந்து அகதி அந்தஸ்து கேட்கிற நிலையை சரியாகக் குறைத்து விட்டது. மற்றைய நாட்டவர்களை விட இலங்கையர்கள் தொடர்ந்து இவர்களது எல்லையை கட்டுப்பாடுகளை உடைத்து விசாக்களை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பயப்படுகிறது. இந்த நம்பிக்கையை உடைத்து திருப்பி அனுப்பப்படுவினம் என்ற திகிலை ஏற்படுத்தவதற்குத் தான் பிரித்தானிய அரசாங்கம் இந்த சாட்டர் ப்ளைற் என்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் என்றது என்னுடைய கருத்து.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுபப்பப்படுவது தீவிரமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
கணநாதன்: இதற்கு முதல் ஒரு சமூகமாக வந்து கூடி இந்த திருப்பி அனுப்பப்படுவதை பேசியது வந்து 2007 யூனில். அப்போது எல்பி என்றவரின் வழக்கு முடிவு வரப்போகிறது. அந்த முடிவு வந்தால் அது அகதி வழக்குகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் அதற்கு முன்னர் உள்துறை அமைச்சு திருப்பி அனுப்புவதில் துரிதகதியில் செயற்பட்டது. அதற்குப் பின்னர் என்ஏ என்பவருடைய வழக்கு ஈரோப்பியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் திருப்பி அனுப்பப்படுவது ஓரளவு நிறுத்தப்பட்டது. தமிழர்கள் ஐரோப்பிய நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவுகளைப் பெற்று ஓரளவு இந்த நாடுகடத்தலை தவிர்த்துக் கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு ஈரோப்பியன் கோட் போன வருடம் 2008 ஏழாம் மாதம் தங்களுடைய தீர்ப்பினை வழங்கியது. அது சாதகமான தீர்ப்பாகத் தான் இருந்தது. ஆனால் தடை உத்தரவை வந்து வெறுமனே தமிழர் என்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் என்ஏ இன் வகைக்குள் வருபவர்களுக்கு அதுவும் யுகே நீதிமன்றங்கள் முழுமையாக நிராகரித்த பின்னர்தான் தாங்கள் தடையுத்தரவை வழங்குவோம் என்று ஈரோப்பியன் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

அதற்குப் பிறகும் தமிழர் என்ற அடிப்படையில் தருப்பி அனுப்புவதை நிறுத்தவதற்கான தடையுத்தரவைக் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இப்ப ஒரு இரண்டு மூன்று மாதமாக திருப்பி அனுப்புவது தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு வருடமாக ஈரோப்பியன் கோர்ட்டின் தடையால் அனுப்ப முடியாமல் போன வெற்றிடத்தை துரித கதியில் அனுப்பி ஈடுசெய்ய உள்துறை அமைச்சு முற்பட்டு உள்ளது.

ல.குரல்: அண்மைக்காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாராவது மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?
கணநாதன்: அண்மைக்காலத்தில் இல்லை. ஆனால் 2001ல் குமரகுருபரனுடைய வழக்கை கூறலாம். குமரகுருபரன் இந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு விட்டார். அப்படியிருக்க அவரை திருப்பிக் கொண்டுவர வெண்டும் என்று கோரி நாங்கள் ஹைக் கோட்டுக்குப் போய் நிரூபித்து திருப்பிக் கொண்டு வந்து வதிவிட உரிமையையும் பெற்றுக் கொடுத்தோம்.

அதற்கு முன்னரும் 1987 – 88 காலப்பகுதியில் சிவகுமாரன் என்பவருடைய வழக்கு ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது. திருப்பி அனுப்பப்பட்டவர் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் எத்தனை பேர் உள்ளனர் என்று மதிப்பிட முடியுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
கணநாதன்: என்னைப் பொறுத்தமட்டில் குறைந்தது நூற்றுக் கணக்கிலாவது இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். பலபேர் 1990க்களில் வந்து நிராகரிக்கப்பட்டவர்கள். அதற்குப் பிறகு வழக்கு கைவிடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கிறார்கள். அதற்கப் பிறகு 2000 – 2004 ம் ஆண்டுக்கு இடையில் நடந்த வழக்குகளால் பல பேர் அப்படியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திருப்பி அனுப்புதல் என்பது 2005, 2006க்குப் பின்னர்தான் தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னர் பெரிய அளவில் இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை.

லிகசி கேஸஸ் (legacy case) என்ற அடிப்படையில் 2007ல் இருந்து பல குடும்பங்களுக்கு விசாக்கள் வழங்கி தஞ்ச வழக்கு முடிவுகள் தெரியாமல் இருந்தவர்களின் தொகையை சரியாகக் குறைத்துக் கொண்டார்கள். 2008லும் விசாக்கள் வழங்கப்படாமல் இழுபட்ட பல வழக்குகளுக்கு விசாக்களை வழங்கி அந்தத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு முடிவில்லாத சூழ்நிலை ஒன்று இருப்பதையும் பீதி ஒன்று நிலவுவதையும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. திருப்பி அனுப்பப்டுவதற்கான அச்சமும் இருக்கிறது.

உள்துறை அமைச்சைப் பொறுத்தவரை லிகஸி கேஸ் அடிப்படையில் 2007 – 2008 நடுப்பகதி வரை விசாக் கொடுக்க வேண்டியவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்தாகி விட்டது. இனி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் தான் என்ற மனநிலையுடன் செயற்படுவதாகவே நான் நினைக்கிறேன். இப்படியான பார்வையால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது வழக்கையும் தட்டிக்கழிக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதனால் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு ஆனால் விதிவிலக்குகளின் அடிப்படையில் (எக்செப்சனல் லிவ்ற்று ரிமெயின் – Exceptional Leave to Remain ELR) விசா வழங்கப்பட்டவர்களின் விசாக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
கணநாதன்: இப்ப எக்செப்சனல் லீவ்ற்று ரிமெயின் என்பதை நிப்பாட்டி டிஸ்கிரேசனல் லீவ்ற்று ரிமெயின் (Discretionary Leave to Remain) என்பதைத்தான் கொடுத்து வருகினம். அதற்கு உரிமைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. முன்னர் வந்து 4 வருடம் ஒருவர் ஈஎல்ஆர் ல் இருந்தால் அவருக்கு ஐஎல்ஆர் வழங்கப்பட்டு வந்தது. இப்ப ஒருவர் ஆறுவருடம் டிஸ்கிரேசனல் லிவ்று ரிமெயினில் இருந்தால் தான் அவருக்கு ஐஎல்ஆர் கொடுக்கப்படலாம். ஆனால் ஐஎல்ஆர் (Indefinite Leave to Remain ILR) கொடுக்கிற தன்மை வந்து இப்ப குறைந்து வருகிறது.

அப்படி இருந்தாலும் கொடுத்ததை பறிக்கிற தன்மை என்பது அவர்கள் இந்த நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பொய்சொல்லி பிழையாக நடந்து இந்த விசாவைப் பெற்று இருந்தால் விசாவுக்கு கொடுத்த காரணங்கள் இல்லாமல் போனால் அதாவது திருமணம் முடிக்கும் போது அதற்காக மற்றவருக்கு வழங்கப்பட்ட விசா அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மற்றவருடைய வீசா மீளப் பெறப்படலாம். எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதற்காகத் தண்டணை பெற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

Arun Gananathanல.குரல்: தஞ்சம் மறுக்கப்படுவதில் சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் அறிவீனங்கள் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கணநாதன்: சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் பற்றி நாங்கள் வருடாவருடம் கதைத்துக் கொண்டு வாறம். அது வந்து ஒரு புதிய ரொப்பிக் இல்லை. ஆனால் நான் அவர்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவரவில்லை. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பிரச்சினை தான். அது தமிழருக்க மாத்திரம் உரித்தானது இல்லை. மற்ற சமூகங்களுக்கும் உள்ள பிரச்சினைதான்.

ஆனால் என்னுடைய கருத்து வந்து இந்த நாட்டில் இந்த சட்டங்களின் தரம் குறைந்துவிட்டது. மற்றும்படி எல்லாத் துறைகளிலும் தங்கள் தொழில்சார்ந்த பொறுப்புகளை உணராதவர்கள் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அப்படி சட்டதுறையிலும் இருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு எங்களுடைய மக்கள் மத்தியில் நிறைய இருக்கிறது. அதனால் நல்ல சட்டத்தரணிகளுக்கும் சட்ட ஆலோசகர்களுக்கம் கூட சங்கடங்கள் உண்டு. ஏனென்று சொன்னால் அந்த நம்பகத் தன்மை வந்து சரியாக உடைக்கபட்டுவிட்டது. நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கினாலும் அதனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற போக்கு வந்தள்ளது.

சட்டத்தரணிகள் கவலையீனமாக இருந்தாலும் அதனை கவனித்தக் கொள்ள பல வழிகள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பத்திரங்களைப் பார்த்து என்ன நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக பைலை வைத்திருக்க வேண்டும். அதுக்கு முக்கியமாக சட்டத்தரணிகளோ சட்ட ஆலோசகரோ தான் பிழையென்று சொல்ல முடியாது. 10 – 12 வருடங்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு துண்டு பேப்பர் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும். தங்களுடைய பத்திரங்களின் கொப்பிகளை கவனமாக எடுத்து வைக்கிறதில்லை. அதைத் தவறவிட்டு இருந்தால் கூட உள்துறை அமைச்சிற்கு 10 பவுண்களைச் செலுத்தி அதற்கான பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி நாடுகடத்தப்படுகின்ற அபாயமான சூழல் உள்ள இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொருத்தரும் 10 பவுணைக் கட்டி தங்கள் பைலை முழுமையாக எடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பதான் நாடு கடத்துவதற்கு பிடித்தவுடன் அதைத் தடுப்பதற்கான முதலாவது ஜீடிசல் ரிவியூவை (judicial review)செம்மையாகப் போட்டு நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ல.குரல்: பிரித்தானியா உட்பட சர்வதேச அளவில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
கணநாதன்: ஓம். தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியென்று கேட்டால் சட்ட ரீதியாக சட்டங்கள் எதனையும் உட்புகுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வந்து அகதிகளை மிகவும் பிழிந்து மிகவும் கஸ்டமான நிலையில் தான் இந்த அரசாங்கம் தள்ளி வைத்திருக்கிறது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட குற்றச்செயல்கள் அதிகரிக்கும். அதில் இந்த அகதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அது கொள்கை ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதைவிட இன்னொரு காரணம் என்னவென்றால் உள்துறை அமைச்சில் பொலிசி என்றொன்று இருக்கிறது. மற்றது அதனை நடைமுறைப்படுத்துவது. அலுவர்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களுடைய வேலைக்கு தங்களுடைய குடும்பத்தினரின் வேலைக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்துடன் விண்ணப்பங்களை பரசீலிக்கும் போது அவர்கள் பெருந்தன்மையாக நடக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போகிறது. அது அவர்களையும் கடும்போக்கு உடையவர்களாக்குகிறது.

உதாரணமாக அண்மைக்காலமாக வேர்க் பெர்மிசன் (work permision) வந்து பல பேருக்கு நிப்பாட்டி வந்தார்கள். ஒரே ஒரு குழுமத்தைத் தான் விட்டு வைத்தார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக முடிவெடுக்கப்படாதவராக இருந்தால் வேர்க் பெர்மிசன் கொடுக்க வேணும் என்று இமிகிரேசன் லோவில் இருக்கிறது. அந்த வகைப்பட்டவர்களுக்கு வேர்க் பெர்மிசன் கொடுத்து இருந்தார்கள். அதைவிட முன்னர் வேர்க் பெர்மிசன் வழங்கி அவர்களுடைய வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தாலும் வேர்க் பெர்மிசனை கொடுத்து வந்தார்கள். அண்மைக் காலத்தில் திடீரென்று ஐடி கார்ட்டில் வேர்க் பெர்மிசன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அப்படி இருக்கும் போது கடந்த 3 – 4 மாதங்களுக்குள் ஐடி காட் புதுப்பிக்க வேண்டும் என்று கூப்பிட்டுப் விட்டு வேர்க் புரொகிபிற்றற் (work prohibited) என்று புது ஐடி காட்டை அடித்து கொடுக்கிறார்கள். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வீழ்ச்சி அகதி விண்ணப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதையே காட்டுகிறது.

ல.குரல்: இலங்கையில் இன்று இராணுவச் சமநிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் தஞசம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கணநாதன்: உண்மையாக ஒரு மாற்றத்தையும் கொண்டு வரக்கூடாது. ஏனென்று கேட்டால் யுத்தம் என்றது சிவில் வோர். சிவில் வோர் ரிப்பியூஜிஸ் 1951 கொன்வென்சனுக்குக் (Civil War Refugees – 1951 Convention) கீழ் அடங்க மாட்டார்கள். அதனால் தான் எங்களுக்கு யுத்த காரணங்களுக்காக அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அதனையும் ஒரு காரணமாகக் காட்டி உள்ளது. அதாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த கொண்டிருக்கிறது அதனால் தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறோம் என்று.

அவர்களுக்கு உள்ள பயம் என்னென்று கேட்டால் வடக்கில் நடக்கிற கொன்வென்சனல் வோர் வந்து பிரச்சினைக்கு உள்ளானால் தென்பகுதியில் வந்து கொரில்லா முறையிலான யுத்தம் பரவும் என்று பயப்படுகின்றார்கள். இந்த நாட்டில் அகதிகளின் வழக்குகள் வந்து கொழும்பில் என்ன நிலைமைகள் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு உள்ள பீதி என்னென்றால் யுத்தம் கொழும்புக்கு பரவுகிற நிலை ஏற்பட்டால் அது அகதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் தங்களால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாமல் போவதுடன் அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பது.

ல.குரல்: இலங்கை யுத்தத்தின் இராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களுடைய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கணநாதன்: விடுதலைப் புலிகள் மாத்திரம் என்றல்ல பொதுவாக வேரர்க் க்ரைம் (war crime) என்று 1951 அகதிச் சட்டத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது பெரிய அளவில் மனித உரிமை மீறும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று என்று எக்ஸ்குளுசன் குளோஸ் (exclusion clause)என்ற தன்மையும் தமிழர்களுடைய வழக்குகளை நிராகரிக்கின்ற தன்மை 2006ல் இருந்து காணப்பட்டு வருகிறது.
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா? அந்த அமைப்புகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனவா? என்று பார்த்து அதற்கு சிறு ஆதாரமாவது இருந்தால் அதனைக் காரணமாகக் காட்டிக் கூட அவர்களது வழக்குகளை நிராகரித்து வருகிறார்கள். அப்படி நிராகரித்தாலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஏனெனில் அகதி அஸ்தஸ்து கிடைக்காவிட்டாலும் மனித உரிமை சாசனத்தின் ஆட்டிக்கிள் 3 இன் கீழ் அவர்களை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பாமல் பாதுகாப்புத் தேடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த அடிப்படையில் வழக்குள் நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டு தொடர்ந்தும் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில வழக்குகள் இந்த எக்ஸ்குளுசன் குளோசில் சேர்க்கப்பட்டு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஆட்டிக்கிஸ் 3 இன் கீழ் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்றும் இருக்கிறார்கள்.

ல.குரல்: அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதா? எவ்வாறான விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாகப் பரிசிலிக்கப்பட்டு உள்ளது?
கணநாதன்: இது புதிதாக வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான கேள்வி என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கும் போது ஓம்! இந்த நியூ அசைலம் மொடல் ஏப்ரல் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குக் கீழ் வந்த வழக்குகள் சாதகமான முடிவுகளைப் பெற்றது. அதுவும் இப்ப 2008 கடைசிப் பகுதியில் இருந்து மோசமான நிலைக்கு போய்விட்டது. பழைய ஹோம் ஒபிஸ் மாதிரி எதையும் நிராகரிக்கிற நிலைக்குப் போய்விட்டது. இது இலங்கை அகதிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படியான நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

ல.குரல்: வழமையாக வழங்கப்படும் ஐஎல்ஆர் முறை நீக்கப்பட்டு தற்போது எல்எல்ஆர் Limited leave to remain (LLR) வழங்கப்படுவது பற்றி சற்று விளக்கவும்?
கணநாதன்: இந்த நடைமுறை வந்து 2005லேயே வந்துவிட்டது. அகதி அஸ்தஸ்து கிடைத்தாலும் ஐஎல்ஆர் வழங்கப்படுவதில்லை. எல்எல்ஆர் 5 வருடங்களுக்கு வழங்குகிறார்கள். அதுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் எந்தவித குற்றங்களும் புரியாமல் இருந்தால் அவர்களுடைய நாட்டின் சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணாத இடத்தில் அவர்களுக்கு அந்த 5 வருடங்களின் பிறகு ஐஎல்ஆர் வழங்குவது என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. அதில் ஒரு விடயம் முக்கியமாக வருகிறது. என்னவென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் அல்லது இந்தியாவில் இருந்தால் (அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னரேயே திருமணமாகி இருந்தால் பெரிய மாற்றம் இல்லை.) அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூப்பிடக் கூடியதாக இருக்கிறது. இல்லாமல் தனி இளைஞராக வந்து அவரது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டால் அவர் மற்ற நாட்டுக்குச் சென்று திருமணம் முடித்து ஸ்பொன்சர் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படும்.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் கோரி உலகின் பல பாகங்களிலும் பலர் தங்கள் பயணத்திற்காகக் காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க முடியும்?
கணநாதன்: சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது சரியான நடவடிக்கை இல்லை. பொதுவாக ஒரு அரசியல் என்று கதைத்தால் அது அவர்களுடைய முடிவு. இன்றைக்கு இலங்கையின் மனித உரிமைநிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது. அரசியலில் சம்பந்தப்படாத ஒரு தமிழரும் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று அங்கிருக்கிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்று சொல்கிற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன சொல்லலாம் என்றால் இங்கு வந்தவுடன் ஏதோ அள்ளிக் கொடுக்கினம் இங்க வந்தவுடன் அகதி அந்தஸ்து கிடைக்கிறது என்ன மாயையை வந்து நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்த நாட்டின் போக்கு வந்து ஒவ்வொருநாளும் இறுக்கமாகவும் கடும் போக்கிலும் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு உயிராபத்து இருக்கிறது என்று சொன்னால் அவர் இந்த நாட்டுக்கு வரத்தான் வேணும். அதுக்கான சட்டத்தை இந்த நாடு வைத்திருக்கிறது. அதற்குக் கீழ் அரசியல் தஞ்சம் கேட்க வேணும் என்றால் கேக்கத்தான் வேணும். சரியான வழியில் சரியான சட்ட ஆலோசணைகளைப் பெற்று முதற்தடவையே சரியான முறையில் வழக்கை நடத்தி முடிவைக் காண வேண்டும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தாம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?
கணநாதன்: ஓம். இதுவும் ஒரு தட்டிக்கழிக்கின்ற கடும் போக்குத்தான். இங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் போதே எப்படி அனுப்பகிறார்கள் என்றால் யூடிசியல் ரிவியூ போட்டு முதலாவது படியில் தோற்றாலும் அவர்கள் மேலும் போகக் கூடிய உரிமை சட்டத்தில் இருக்கிறது. மேற் கொண்டு செல்லும் போதும் முதலாவது படியில் நிராகரிக்கும் போது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் உங்களை நிராகரிக்கிறது மாத்திரமல்ல உங்களை நாடுகடத்துவதற்கும் எதிராக உங்கள் விண்ணப்பத்தை மேற்கொண்டு சென்றாலும் நாடுகடத்துவதை நிறுத்தமாட்டோம் என்று முதலாவது படியில் வழங்குகிற தீர்ப்பிலேயே சொல்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும் யூடிசியல் ரிவியூவை அவர் நாடு கடத்தப்பட்ட பிறகும் தொடரலாம். முதலாவது படியில் நீதிபதி மறுத்திருந்தாலும் நான் இந்த வழக்கைத் தொடர விரும்புகிறன் என்று இங்கு தன்னுடைய சட்டத்தரணியூடாக தொடர வேண்டும். என்னை திருப்பி அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஆதாரபூர்வமாகக் காட்டி தன்னை திருப்பி பிரித்தானியாவுக்க அழைக்க வேண்டும் என்று ஹைக்கோட்டிடம் முறையிடலாம். ஹைக்கோட் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் அவர் இந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தவரப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதைவிட பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் பொது அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படி உள்ளது? அவர்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
கணநாதன்: அகதிகளுக்காக ஒரு அமைப்பு மட்டும் தான் இயங்குகிறது. என்று நினைக்கிறன். மற்றும்படி எந்த ஒரு தமிழ் அமைப்பும் அகதிகளுக்காக இயங்கவில்லை.

ல.குரல்: நீங்கள் ருவானைக் குறிப்பிடுகிறீர்களா?
கணநாதன்: ஓம். வேறு ஒரு அமைப்பும் அகதிகள் சம்பந்தமாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. வடிவாகப் பார்த்தால் ஹோம் ஒபிஸ் வந்து அந்த நிலையை ஒரு சிஸ்ரமற்றிகாககத்தான் உருவாக்கியது. முன்னர் நிதிகளைக் கொடுத்து சமூகத்தை பலப்படுத்தி வந்தார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் குறைத்து அத்தோடு எங்களுக்குள்ள போட்டிகள் பிரச்சினைகளுக்காகவும் எல்லாம் சேர்ந்து குறைத்துக் கொள்ளப்பட்டது. இப்ப அந்த அமைப்புகள் எதுவும் அகதிகள் பிரச்சினையைத் தொடுவதே இல்லை. ருவானும் பொலிசி வேர்க் என்றில்லாமல் கேஸ் வேர்க்குகள் செய்துதான் தனிப்பட்ட முறையில் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ல.குரல்: இந்த விடயத்தில் தமிழ் பொது அமைப்புகள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
கணநாதன்: இந்தக் க்ளைமற்றில அவர்கள் பங்களிக்கிறதுக்கு இல்லை. அவர்கள் திருப்பியும் பிழையான நம்பிக்கைகளைக் கொடுக்காமல் அவர்கள் அப்படியே இயங்காமல் போறது நல்லது. அப்படி இருக்கும் போது அகதிக்காவது நான் என்னுடைய அலுவலைப் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்படும். அவை இருக்கினம் இந்த அமைப்பு இருக்கு அவை கம்பைன் பண்ணுறார் என்று பார்த்து அது எந்த பலனையும் தாற சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அப்படியான நிலையில இந்த அமைப்புகள் நச்சுரல் டெத்தை சந்தித்தது என்னைப் பொறுத்தவரை நல்லது. அந்த அமைப்புகள் இனி உருவாக்கப்பட்டாலும் அதன் பங்களிப்பு மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

ல.குரல்: திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் தமிழ் அமைப்புகள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
கணநாதன்: இந்த திருப்பி அனுப்பபடுகிற விசயத்தை நாங்கள் சமூகமாக விழிப்புணர்ச்சியோடு பார்க்கிறம். ஆனால் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டதும் நாஙகளும் திருப்பி அனுப்பப்டவரும் அதை அப்படியே விட்டுவிடுறம். ஹோம் ஒபிஸ் என்ன சொல்லப் பார்க்கிறது என்றால் இத்தனை பேரை திருப்பி அனுப்பின நாங்கள். அவை அங்கு போய் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் திருப்பி அனுப்பிறது சரி என்று. அதனால் தாங்கள் அகதிகளைத் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருப்பம் என்று. அப்ப திருப்பி அனுப்பப்பட்ட ஆட்களுக்கு என்ன நடந்தது என்ற ஆதாரங்கள் சேகரிக்க முடியும் என்றால் அது இங்குள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க திருப்பி அனுப்புகிறவர்களுக்கான அட்வைஸ் லைன் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான உதவிகளை வழங்க முடியும் என்றால் அது பெரிய உதவியாக இருக்கும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவதற்கு ஏதாவது வழிகள் உண்டா?
கணநாதன்: இன்றைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தச் சொல்வதையும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோருவதையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறன். இன்றைக்கு நாங்கள் லொபி பண்ணி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லுவாராக இருந்தால் நிச்சயமாக அகதியை அனுப்புவதையும் நிறுத்தலாம். அரசியலில் அடிபட்ட ஒருவருக்குத் தெரியும் இரண்டுமே சரியான கஸ்டம். கொள்கை முடிவுகள் எங்கெங்கோ எடுக்கினம் அதுக்கு ஜனநாயக மூலாமைப் பூசி வைக்கினம். அதில மக்களோ லொபி குறூப்போ வந்து இம்பக்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ஒரு நிலை. முன்னர் ஒரு அகதியைத் திருப்பி அனுப்பினால் அகதி அமைப்புகள் குரல் கொடுக்கும், பிசப் குரல் கொடுப்பார் எத்தினையோ என்ஜிஓ எல்லாம் போர்க்கொடி எழுப்பும்.

ஆனால் இப்ப சட்ட ரீதியாக வாதாடக் கூடிய அடிப்படை உரிமைகளையே கொடுக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிராபத்தில் உள்ளவர்களே கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவத்திற்கு அரசாங்கத்தின் போக்கு கடுமையாக இருக்கிறது. அதனை எதிர்கொண்டு தடுக்கிறது மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவோ லொபி செய்தோ அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தனிப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாகச் சென்று முதலில் இருந்தே சரியான முறையில் வாதிட்டு முதற்தடவையே சரியான முறையில் வழக்கு கையாளப்பட்டால் இந்த சூழலிலும் சாதகமாக தஞ்ச விண்ணப்பத்தை பரிசிலிக்கச் செய்ய முடியும். அப்படி இல்லாமல் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலைத் தடுப்பதற்கு முதல் முறையாகப் போடுகிற ஜீடிசறி ரிவியூவை செம்மையாகப் போட்டு இருந்தாலும் உச்ச நிதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிப்பாட்டக் கூடிய சூழல் இருக்கிறது. அதில் நிராகரிக்கப்பட்டால் கூட ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிறுத்த முடியும்.

புகலிடம் தேடி பிரான்ஸ் வந்தவர்களுக்கு வதிவிட உரிமையை வழங்கு! – பாரிஸ் ஊர்வலம் : த ஜெயபாலன்

Paris_Protest_14Mar09வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சில நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்கள் சார்ந்த நலன்களே இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பிரதான கோசமாகவும் கோரிக்கையாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக யுத்த்தாலும் படுகொலைகளாலும் வன்முறை அரசியலாலும் பாதிப்புற்று புகலிடம் தேடி பிரான்ஸ் வந்த இலங்கை மக்களுக்கு வதிவிட அனுமதி வழங்கு என்ற கோசம் கொண்ட பதாகையே பிரதானமாக முன்னெடுக்க்பட்டது.

பிரான்ஸ் அரசு ‘வதிவிட அனுமதியற்ற மக்களை அவமானப்படுத்தும் முறையில் சோதனை இடுவது, அவர்கள் வாழும் குடியிருப்புக்களை சுற்றிவளைத்து குற்றவாளிகள் போல் கைது செய்வது, சிறையில் அடைப்பது, நாட்டைவிட்டு பலாக்காரமாக அனுப்புவது, போன்ற மனித உரிமை விழுமியங்களை மீறும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்’ என்ற கோரிக்கை வலுவாகவும் தீவிரமாகவும் ஆர்ப்பாட்டக்காறர்களால் முன்வைக்கப்ட்டது. ‘பிரான்ஸ் அரசு வதிவிட அனுமதியற்றவர்களை ஆபத்தானவர்களாக நோக்குகின்ற போக்கை கைவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் முப்பதாயிரம் வதிவிட அனுமதியற்றவர்களை கைது செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து நாட்டைவிட்டு வெளியேற்றும் அரசின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்றும், இந்த சிறப்பு முகாம் என்ற சிறைகள் மூடப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்ட்டது.
 
சமூகப்பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தோழர்கள் கிறீஸ்தோபர், மேரிகிறீஸ்ரியன், தோமா, கிறீஸ்ரி, செபஸ்த்தியான், ரமணன், வரதன், கஸ்ரோ, அசோக் முதலானோர் ஊர்வலத்தை நெறிப்படுத்தினார்கள்.  இவ் ஊர்வலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வதிவிட உரிமை மறுக்கப்ட்ட மக்களும் தங்கள் தங்கள் கோரிக்கைகளோடு பதாகைகளை தாங்கி வந்தனர். பிரான்சில் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்களும் சமூக அக்கறையாளர்களும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

Paris_Protest_14Mar09இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்வர்களில் ஒரு பிரிவினர் ‘மாக்கற்றிப் போர்சனி’ பிரதான வீதியில் உள்ள தேவாலயத்தினுள் நுழைந்து அங்கேயே தங்கி உள்ளனர். தேவாலய பரிபாலனசபையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் வெளியேற மறுத்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தங்குமிட வசதியற்றவர்கள் தருப்பி அனுப்பப்பட தீர்மானிக்கப்பட்டவர்கள் தேவாலயத்தில் அடைக்கலம் பெறுவது இது முதற்தடவையல்ல. இவ்வாறான சம்பவங்கள் பிரான்ஸில் ஏற்கனவே இடம்பெற்று உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேற மறுத்து தங்கள் கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்து உள்ளனர்.

பிரான்ஸின் பிரித்தானியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதியான கலை என்ற பகுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காகப் பலர் தினமும் முயற்சித்துக் கொண்டு உள்ளனர். பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கொன்ரைனர் லொறிகளில் தாவி தங்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு சேர்க்க அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் சிலர் கலை ப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியும் உள்ளனர். இந்தப் பகுதி ஐரோப்பாவின் சேரியாக வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடுமையான குளிரிலும் அடிப்படை வசதிகளற்ற வாழ்நிலைக்கு உதவாத தரத்தில் உள்ள இக்கூடாரங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா தனது எல்லைப் பாதுகாப்பை மிகவும் இறுக்கமாக்கி உள்ள நிலையில் பிரித்தானியக் கனவுடன் பலர் பிரித்தானியாவின் அக்கரையில் காத்திருக்கின்றனர்.
 
சமூகப் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த வாரமும் யுத்த நிறுத்தத்தைக் கோரி ஒரு ஊர்வலத்தை நடாத்தி இருந்தனர். அதனை புலி அதரவாளர்கள் எனக் காட்டிக்கொண்ட சிலர் குழப்ப முயற்சித்த போதும் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால் இந்த ஊர்வலம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சமூக பாதுகாப்பு அமைப்பு எதிர்வரும் காலங்களில் இலங்கை மக்கள் நலன் சார்ந்த அரசியல் சமூக கலாச்சார விடயங்களில் கவனம் செலுத்தி செயற்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக அசோக் தேசம்நெற்றிக்கு தெரிவித்தார்.

இன்று வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம்.

No_One_Is_Illegalபிரான்சில் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் இன்று சனிக்கிழமை (14.03.2009) அன்று பிற்பகல் 14.00மணிக்கு பாரிசில் மெற்றோ Barbés Rochchouart முன்றலில் நடைபெற இருக்கிறது.

இவ் ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF ) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social) சேர்ந்து ஒழுங்கு படுத்தியுள்ளனர். எனவே பிரான்சில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட அனைவரையும் மற்றும் சக அக்கறையாளர்களையும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையோடு அழைக்கிறார்கள் .

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கரிசனையும் அக்கறையும் கொண்டு செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினர் சென்ற ஞாயிறு (07.03.2009) இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பாரிசில் நடத்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் ஊர்வலத்தில் வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களுக்கு பிரான்சில் வதிவிட அனுமதி வழங்கவேண்டுமென்ற கோசத்தையும் முன்வைத்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இருந்து தொகையாக தமிழர்களைத் திருப்பி அனுப்பத் திட்டம்!!!

Stop_the_War_on_Asylumபிரித்தானியாவில் இருந்து அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை தொகையாகத் திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முற்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு முடுக்கிவிட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜனவரி 15 அன்று 50 பேர் வரை விசேடமாக பதிவு செய்யப்பட்ட விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாகவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் தொடர்பான விரிவான கட்டுரையும் விரைவில் வெளிவரும். அதற்கு முன்னதாக சட்டவல்லுனர் அருண் கனநாதன் அரசியல் தஞ்சம் தொடர்பான தேசம்நெற் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க கேள்விகளுக்கு முன் வந்து உள்ளார். அரசியல் தஞ்சம் தொடர்பான உங்கள் கேள்விகளை கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்யவும்.

Related News:

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் – ஒரு பார்வை : த ஜெயபாலன்

பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது