அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கரடியனாறு வெடி விபத்து; உருக்குலைந்த சடலத்தின் பாகங்களை மரபணு சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு

உருக்குலைந்த சடலமொன்றின் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யிலிருந்து மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உருக்குலைந்த சடலங்கள் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்விரண்டு உருக்குலைந்த சடலங் களில் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை யன்று அடையாளம் காணப்பட்டது.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த கண்டி, தெல்தெனிய கொமடதின எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தலால் என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டது.

இதன் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் சின்னய்யா மேற்கொண்டார். இதையடுத்து இச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட் டது.

முன்னாள் புலிகள் விபத்தில் குண்டுவெடிப்பில் இறந்த செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர். : மட்டக்களப்பு வெடிகுண்டு விபத்து

batti222.jpgகரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர்.  இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்

மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batti222.jpgஇவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.

கொழும்பு  – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு தகவல்

batti17.jpgகரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

sri-lanka.jpgவவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முகமாலை, கிளாலி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் மிகவும் செறிவு

யுத்த காலத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாக விளங்கிய முகமாலை மற்றும் கிளாலி உள்ளிட்ட சில பகுதிகள் கண்ணிவெடிகள் மிகவும் செறிவாக உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, கிளாலி இத்தாவில், வேம்படிக்கேணி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் மிகவும் கூடுதலாகப் புதைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் நீடிக்கலாம் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதினெட்டுக் கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை பதினொரு பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளதாகவும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு நிறைவு செய்யப்படாததால், முகமாலை, கிளாலி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் தாமதமாகி வருவதாகவும் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியமர்ந்துள்ள மக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் முகுந்தன், மக்களின் வாழ் வாதார நிலவரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வாவுக்கு எடுத்துரைத்ததுடன், சில பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று நிலைமைகளைக் காண்பித்தார்.

பச்சிலைப்பள்ளியில் வைத்தியசாலை மருந்து வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சாவகச் சேரிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகப் பொது மக்கள் சுட்டிக்காட்டினர். அதே நேரம், மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாடசாலையையும் வைத்தியசாலையையும் பார்வையிட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டதால், பிரதேச செயலாளர் முகுந்தன், அந்தப் பகுதிகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்றார். இந்தப் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லாததால், மரத்துக்குக் கீழ் இருந்து மாணவர்கள் கல்விகற்கும் நிலையைக் காணமுடிந்தது.

அதேநேரம், இந்தப் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்தினால் சிரமங்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்குமென மக்கள், ஆணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

பாவனைக்கு உதவாத பழங்கள் கொழும்பில்

fruit.jpgகொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர். கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.

இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.  இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.

இந்திய பாதுகாப்பு குழு இலங்கை வருகை

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது. நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இக்குழு வினர் பாதுகாப்பு அமைச்சு, வெளி நாட்டமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். அதனையடுத்து முப்படைத் தளபதிகள் மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரியையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றிற்காகவே இலங்கை வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல நேற்றுத் தெரிவித்தார்.

இரண்டொரு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழை – அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை

lightning-000.jpgஅடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாரண நேற்றுத் தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை பலவீனமடைந்திருப்பதாலேயே இந்நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொரு வரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது உயரமான மரங்களுக்குக் கீழே இருப்பதையும், திறந்த வெளிகளில் நடமாடுவதையும், விளையாடுவதையும், வீடுகளில் மின்சார பொருட்களைப் பாவிப்பதையும், குளம் மற்றும் ஆறுகளில் நீராடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடைப் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் எடுக்கும். அதற்குள் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடிய காலநிலை தற்போது திடீரென ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி பலவீனமடைந்திருப்பதே பிரதான காரணம்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி கெணியன் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் 66 மி. மீ. அதிக மழை பெய்துள்ளது என்றார்.

கிண்ணியாவில் மின்னல் தாக்கி மாணவன் பலி

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் பாட சாலை மாணவன் ஒருவன் பரிதாப மாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயிலும் காக்கா முனையை பிறப்பிடமாகக் கொண்ட என். முகம்மது நிக்லாஸ் (வயது 14) என்பவரே மின்னல் தாக்கி உயிரிழ ந்தவராவார்.

கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உதை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ள்ளது.

இந்நிலையில் இப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர் கள் மைதானத்தை விட்டு வெளி யேறிக் கொண்டிருந்த வேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஐ.நா. சபையில் ஜனாதிபதி 23 இல் உரை; அரச தலைவர்கள் பட்டியலில் முதலிடம்

mahinda-rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது அரச தலைவர்களின் உரைகளின் பட்டியலில் முதலாவது உரையாக இடம்பெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முதல்நாளன்று அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் புத்தாக்க அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவது தொடர்பான உயர் மட்ட பிரதிநிதிகளின் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வழங்கும் அரச தலைவர்களுக்கான விருந்து, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் நிதியத்தின் விசேட கலந்துரையாடல், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யும் வர்த்தக பிரமுகர்களுக்கான கலந்துரையாடல், நியூயோர்க் பெளத்த விஹாரையின் வைபவ நிகழ்வு ஆகியவற்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்

ஆயித்தியமலையில் பொலிஸ் நிலையம்

batti222.jpgகரடியனாறு பொலிஸ் நிலையக் கட்டிடம் சிதைவடைந்திருப்பதால், கரடியனாறு பொலிஸ் பிரிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து மேற்கொள்ளுவதற்கு சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பொலிஸ் மா அதிபர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதேநேரம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தைத் துரித கதியில் பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்