அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

jail-cell.jpgமட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் ஆரம்பித்துள்ளது. தண்டனை பெற்ற கைதிகளின் குடும்பங்களில் நிலவும் வறுமையை நீக்கி வாழ்க்கையை உயர்த்த சுயதொழில் உபகரணங்கள் அவர்களது குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைக்கைதிகளின் மனைவிமார்களுக்கு இடியப்பம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்க தலைவர் வைத்தியர் கே. இ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறிபண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நலன்புரி அதிகாரி எஸ். ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

அதிகதொகை இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும் யுத்தம் – நீல் புனே

போரினால் ஏற்பட்ட தாக்கமானது நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு பாரிய எண்ணிக்கையிலான இளம் வயதுப் பெண்களை குடும்பத்தைப் பராமரிக்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டிருப்பதாக ஐ.நா. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்தார். சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொழுது உரையாற்றிய நீல் புனே இவ்வாறு தெரிவித்தார்.

நீல் புனே தொடர்ந்து தெரிவிக்கையில்;

கடந்த வாரம் புத்தளம் , அநுராதபுரம், வவுனியா , முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கான விஜயமொன்றை நான் மேற்கொண்டிருந்தேன்.வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள், இளைய தலைமுறைகள் பாடசாலைகளுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் இச்சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். கடந்த பல வருடங்களாக நடைபெற்ற மோதலினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள இளம் சமுதாயத்தினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இளம் சமுதாயத்தினர் பலவந்தமாக மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போரினால் காயமடைந்தனர். இடம்பெயர்வுகளால் சமூக மற்றும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானதுடன் குடும்ப உறுப்பினர்களை இழந்து சொத்துகளை இழந்து பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டனர். அதேவேளை, போரினால் ஏற்பட்ட தாக்கமானது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாரியளவிலான எண்ணிக்கையுடைய இளம் வயதுப்பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட பல குடும்பங்கள் உருவாகியுள்ளன.

இளம் வயதுப் பெற்றோர் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தினை குறைப்பது பாரிய சவாலாக உள்ள நிலையில் அத்தாக்கத்தினை குறைப்பதற்கு ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சரியான கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம்தான் மக்கள் சக்தி மிக்கவர்களாகவும் பொறுப்பு மிக்கவர்களாகவும் மாறமுடியும்.அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சரியான ஆதரவுதான் அவர்களை போரின் தாக்கத்திலிருந்து மீட்சிபெறவைக்கும். அத்துடன், வலுவான குடும்பங்களையும் வலுவான சமாதானமுள்ள சமூகத்தையும் கட்டியெழுப்ப மக்கள் தமது வல்லமையைப் பயன்படுத்தவேண்டும்.

சமூகப் பிரிவினைகளை இல்லாதொழிக்க இளம் சமூகத்தினரிற்கு உதவுவதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதனை இலங்கையில் நான் சந்தித்த பல பிரமுகர்கள் கருதுகின்றனர்.இதேவேளை, மொழிப்பயிற்சி மற்றும் கொள்கை வடிவமைப்புகளினூடு மொழி ரீதியாக உள்ள தடையைக் குறைக்க முடியும்.ஐ.நா. கடந்த 60 வருடங்களாக இலங்கையுடன் உறவைப் பேணிவரும் நிலையில் தற்போதுள்ள நெருக்கடியான சவால்களுக்கு தொடர்ந்தும் ஆதரவாக இருக்குமெனத் தெரிவித்தார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துகளின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த அமைச்சு தீர்மானம்

medicine.jpgஅடுத்த வருடம் முதல் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த சுகாதார போஷாக்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார். நோயாளிகளுக்கு பாமஸிகளில் இருந்து கொள்வனவு செய்வதற்காக மருத்துவர்கள் சிபார்சு செய்யும் மருந்துகளின் விலைகளும் இதேபோல காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

அரசாங்கம் இலவச மருத்துவ சேவைக்காக எவ்வளவு செலவிடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்பட வுள்ளது.

மருந்து வகைகள் இலவசமாக வழங்கப்படுவதால் அவற்றின் பெறுமதியோ மதிப்போ நோயாளிகளுக்கு புரிவதில்லை. இதனால் சிறு குறையைக் கூட தூக்கிப் பிடிப்பதாக அமைச்சு குறிப்பிட்டது. இது தவிர ஆஸ்பத்திரியில் இல்லாத சில மருந்துகளை வெளியில் இருந்து வாங்குமாறு மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். அத்தகைய மருந்து வகைகளின் விலைப்பட்டியல்களும் அடுத்த வருடம் முதல் காட்சிப்படுத்தப் படவுள்ளன.

இந்தியாவின் 50,000 வீடமைப்பு திட்டம்: முதற்கட்டம் கொத்தணி முறையில் 1000 வீடுகள்; 10,000 வீடுகள் புனரமைப்பு

sri-lanka.jpgவடக்கில் மீள் குடியமரும் மக்களுக்கு இந்தியா வழங்கும் ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன் பத்தாயிரம் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார். நிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் வடக்கில் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்டத்தில் ஆயிரம் புதிய வீடுகள் கொத்தணி முறையில் நிர்மாணிக்கப்படுவதுடன் பத்தாயிரம் வீடுகளைப் புனரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பத்தாயிரம் வீடுகளைத் திருத்தும் பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். புதிய வீடுகளை அமைக்கும் முதற்கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐம்பது வீடுகள் வீதம் இருநூறு வீடுகள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படும்.

வீடு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென இந்திய நிறுவனமொன்றின் அதிகாரிகள் இலங்கை வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், இந்தத் திட்டத்திற்கான முழுமையான ஆளணி வளத்தை இலங்கை அரசு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.  தொழில்நுட்ப உதவிகளை மாவட்டச் செயலகம் வழங்கும். நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள நிறுவனம் மேற்பார்வை செய்யும் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.

வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கவென அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய மட்டங்கள் என மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. வீடுகளைப் புனரமைப்பதற்கென இரண்டு இலட்ச ரூபாயும் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஐந்து இலட்ச ரூபாயும் வழங்கப்படுமென குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிர்மாணப் பணிகளுக்கான வரைவாவணங்கள் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  அத்துடன் பயணாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திற்கு ஏழாயிரம் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புனரமைப்புப் பணிகள் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பயணாளிகள் விரும்பினால் மேலதிகமான விரிவாக்கத்தினைச் செய்துகொள்ள முடியும். வவுனியாவில் சுமார் இரண்டாயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனினும், தற்போது மேற்கொள்ளப் படும் ஒதுக்கீடுகளின் பிரகாரம் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஆடைத் தொழிற் சாலைகள் மூன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், தற்போது வைத்தியசாலை, பாடசாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம், உள்ளிட்ட ‘உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அரச சார் பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாக மாவட்டத்தில் மீள்குடி யேற்றம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இதுவரை 8114 குடும்பங்களைச் சேர்ந்த 27,414 பேர் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று மீள்குடியேறியிருப்பதாகக் குறிப்பிட்டார்.  வவுனியா தெற்கிலிருந்து 1990களில் இடம்பெயர்ந்த 812 குடும் பங்களைச் சேர்ந்த 1185 பேரும் சொந்த இடம் திரும்பியுள்ளனர்.

செட்டிக்குளம் மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் முல்லைத்தீவு புதுக்குடி யிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் மாத்திரமே மீளக்குடியமர காத்திருக்கிறார்கள். கண்ணி வெடி அகற்றும் பணிகளும் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. எனினும், மாக மன்குளம் பகுதியில் மாத்திரம் சிறிய பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

பேராசிரியர் ஜிப்ரி நேற்று காலமானார்

jiffry.jpgபல் கலைக்கழக மானிய ஆணைக்குழு உப தலைவரும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக உடற்கூற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியருமான எம். ரீ. எம். ஜிப்ரி (62) நேற்று கொழும்பில் காலமானார். சிலகாலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர் நேற்று காலை மரணமானார்.

அன்னாரின் ஜனாஸா இலக்கம் 23 பிரிவேனை வீதி, இரத்மலானையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்தது. ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நேற்று மாலை இடம்பெற்றது. முஸ்லிம் கல்வி மாநாட்டு அமைப்பின் உறுப்பினராகவும் பணிபுரிந்த இவர் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கும் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கும் திட்டத்தை கிழக்கு மாகாண சபை தற்போது ஆரம்பித்துள்ளது. முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட் டம் பிரதேச செயலக ரீதியாக அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டு ள்ளது.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்கள் மத்தியில் இத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவும் முதற்கட்டமாகத் தெரிவாகியுள்ளது.

பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கலந்துகொண்டார். அவர் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் 30 பேருக்கும் இதற்கான அனுமதி அட்டைகளை வைபவ ரீதியாக வழங்கி இப்பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன கிராமிய மின்சக்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தா. உதயஜீவதாஸ், பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஆணைக்குழுக்கள் ஜனவரி முதல் செயற்படும்

kaheliya.jpgபதி னெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 7 சுயாதீன ஆணைக்குழுக்களும் ஜனவரி மாதம் முதல் செயற்படும். அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (16) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,17வது திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையோ சுயாதீன ஆணைக்குழுக்களோ நடைமுறைச் சாத்தியமற்றவையாக இருந்தன. இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

அரசியலமைப்பு சபைக்கு பிரதிநிதி ஒருவர் பிரேரிக்கப்படாவிடின் அதனை செயற்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. ஒரு சிறுபான்மைக் கட்சி பிரேரித்த உறுப்பினரை மற்றொரு கட்சி எதிர்க்கும் நிலை காணப்பட்டது.

17வது திருத்தத் தில் காணப்பட்ட குறைபாடுகள் நடைமுறைச் சாத்திய மற்ற விடயங்கள் என்பவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் 18வது திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வாரத்தில் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை பிரேரிக்க வேண்டும். இல்லாவிடின் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பார்.

இதன் மூலம் உரிய காலத்தினுள் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதோடு சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்படும்.

18வது திருத்தச் சட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை நிய மிக்கவும் சுயாதீன ஆணைக்குழுக் களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்படவுள்ளன. அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் செயலிழந்தது.

அடுத்த வருடம் முதல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இயங்கும். அதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளதோடு ஆணைக்குழுவுக்கு 5 மாடிக் கட்டிடமொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 155 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக துரிதமாக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றார்.

சரத் பொன்சேகா குற்றவாளி

sarathfonsekasad.jpg2 ஆவது இராணுவ நீதிமன்றிலும் சரத் பொன்சேகா குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார். சரத் பொன்சேகா மீதான 2 ஆம் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் இடம்பெற்றன. இவ் விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார்.

2 ஆம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுகளிகன் கீழ் சரத் பொன்சேகா குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார். அவர் இராணுவத்தில் பணியாற்றிய போது அவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியிருந்தது.

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 25,000 பேர் மாத்திரமே

இடம் பெயர்ந்த மக்களில் சுமார் 25 ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.  இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின் றனர்.

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்: 5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்

பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.