அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வடமாகாண சுகாதார அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

ag-chanra.jpgவட மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் அடுத்த மாத நடுப்பகுதியில் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடைமுறை ப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச் சையும் கிளிநொச்சி நகருக்கு மாற்ற தீர்மானித்ததாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண கல்வி, கலாசார அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.

புலிகளுக்கு பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவையானோருக்கு சுயதொழில் பயிற்சி – டியூ குணசேகர

due-00000.jpgபுலி களுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளானவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

‘புலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் நடமாடும் சேவைக்கு வந்தபோது நான் மிகவும் வேதனைய டைந்தேன்’ என அவர் கூறினார்.

வடக்கில் (மாவட்ட ரீதியாக) மூன்று தினங்கள் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது சுமார் 36 ஆயிரம் பேர் அங்கு வந்து பிரச்சினைகளை முன் வைத்தனர். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் உணரமுடிந்தது எனவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.

கைதிகள் தினத்தையொட்டிய நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எமது பிரதி அமைச்சர் மற்றும் நானும் மக்களின் நன்மைக்காக சிறைக் கைதிகளாக இருந்துள்ளோம். அதன் காரணமாக சிறையில் நடக்கும் அனைத்து விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தவறு இழைத்தவர்களுக்கு சட்டரீதியாக நீதிமன்றமே தண்டனை வழங்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் கைதி களை அதிகாரிகள் தண்டிக்க முயற்சி செய்யக் கூடாது. சிறை அதிகாரிகளின் நடத்தைகளை சிறையில் கண்டுள்ளேன்.

யுத்த காலத்தில் பலாத்காரமாக புலிகள் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப் பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. கட்டம் கட்டமாக இவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்து வருகிறோம். நான்காயிரம் பேர்வரை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 7 ஆயிரத்து 500 பேர் புனர்வாழ்வு நிலை யங்களில் உள்ளனர்.

இவர்களில் 708 பேர் நேரடியாக புலிகளின் தலைமைகளுடன் செயல்பட்ட உயர்மட்ட உறுப்பினர்கள். இவர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படுகிறது. அண்மையில் 570 பேருக்கு புனர்வாழ்வு வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம். கூடிய விரைவில் மேலும் 2700 பேரை விடுதலை செய்யவுள்ளோம். முப்பது வருட கால யுத்தத்தில் எமது படை வீரர்களும் இன்னல்களை அனுபவித்தனர்.

அதேபோன்று கைதிகள் விடயத்திலும் மிகவும் வேகமாக செயல்படுகிறோம். கைதிகள் தொடர்ந்தும் தவறு செய்து சிறைக்கு வருவதை தடுக்க வேண்டும். சிறை வாழ்வில் மாற்றம் பெற வேண்டும். அரசியல் ரீதியாக செயல்படாது சமூக நலனோடு நாம் செயல்பட்டு வருகிறோம். இவ் விடயத்தில் ஜனாதிபதி பெரும் உதவி செய்து வருகிறார். கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு தேவை. சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதிகள் மத்தியில் சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நல்ல முறையில் செயல்படுகிறது.

கனடா சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் திருட்டு

copy.gifகடந்த மாதம் எம்.வி. சன். சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளை ரொரன்டோ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தில் இருந்த கணனி ஒன்றும் களவாடப்பட்ட நிலையிலேயே எம்.வி. சன். சீ கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது. இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி

இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.

ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

unp_logo.jpgஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், சுயாதீனக் குழுவாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பலர் இணைவரென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தலைவர் தொடர்ந்தும் பிடிவாதமாக இருப்பாரேயானால் மேலும் பல எம்.பிகள் எம்முடன் இணைவர். ஒரு கட்சி என்ற வகையில் இதே நிலைமை மேலும் தொடர முடியாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் யாப்பு சீர்திருத்தம் நடைபெறும் வரை கட்சித் தலைமைக்கு அப்பால் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித்தாய் குத்திக் கொலை; லுணுகலயில் நள்ளிரவில் கொடூரம்

கர்ப்பிணித் தாயொருவரை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பசறை லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பசறை பங்குவத்தை என்ற இடத்தில் வசித்த ஒரு பிள்ளையின் தாயான எச். என். டி. பியதர்ஷனி வயது (25) என்ற கர்ப்பிணித்தாயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவம் கடந்த சனி இரவு பசறை லுணுகல சூரியகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் லுணுகல சூரியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வை. எம். நெலும்தெனிய முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது: குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் சேவையாற்றி வருகிறார். சம்பவத்துக்கு முதல் நாள் நண்பர் ஒருவரின் திருமணத்துக்காக விடுமுறையில் வந்து தனது மனைவி பிள்ளைகளுடன் நண்பரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளவென பசறை லுணுகல சூரியகொட பகுதியில் அமைந்து இருந்த நண்பனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இரவு அங்கு இடம்பெற்ற திருமண விருந்து உபசாரத்திலும் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அன்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது. இந்த வேளையில் குறித்த நபர் சமையலறைக்கு தனது கையடக்க தொலைபேசியின் வெளிச்சத்தில் சென்று அங்கிருந்த கத்தியொன்றை எடுத்து வந்து மனைவி உறங்கிகொண்டு இருந்த அறைக்குள் நுழைந்து மனைவியை குத்திப் படுகாயமடைய செய்துள்ளார்.

அதனையடுத்து சற்று நேரத்தில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைத்தவுடன் அங்கு படுக்கையில் இருந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பெண்ணை லுணுகல வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டப்போது அவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை மேற்கொள்ள சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு (12) திகதி மாலை எடுத்துவரப்பட்டு மரண பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின் சடலம் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லுணுகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்

suwarna-latha.jpgஇந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37)  சிகிச்சைப் பலனின்றி  சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.

நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு; அரச ஊழியருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

அரச சேவை தொழிற்சங்கங்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரச ஊழியர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்பின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 20 வீதமான வாய்ப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ஜுலை மாதத்திற்கு முன் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாவது மொழித்தேர்ச்சி நடைமுறையை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற இனிமேல் 30 வீதமான அரச ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத்தகையவர்கள் அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவையே தோற்ற முடியும் என்ற நிலை மாறுவதுடன் இவர்கள் நான்கு தட வைகள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அலவி மெளலானாவின் தலைமையில் ஏழு தொழிற்சங்கச் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

ஐ. தே. க உட்பூசல்: ரணிலின் அழைப்புக்கு காத்திருக்கும் அதிருப்திக்குழுவின் 25 எம்.பிக்கள்

unp_logo.jpgகட்சித் தலைவரிடமிருந்து அழைப்பு வரும்வரையே காத்திருப்பதாக ஐ.தே.கவில் தனித்துச் செயற்பட தீர்மானித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவிக்கின்றது. இன்றோ நாளையோ அழைப்பு வரலாமென குழு நம்புவதுடன், எவ்வாறெனினும் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க எம்.பி. தலதா அத்துகோரள தெரிவித்தார். கட்சித் தலைவருடனான பேச்சுவார்த் தைக்குப்பின் குழு கூடி கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க வின் கட்சி உட்பூசலுக்கு ஒரு வாரகாலத்தில் தீர்வு காண தவறுமிடத்து அக்கட்சியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்துச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது அந்த 25 பேரும் தனியான குழுவாக அமரவும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குருநாகல் மாவட்ட ஐ. தே.க எம்.பி. தயாசிறி ஜயசேகர பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். எனினும் இதற்கான தீர்க்கமான பதிலொன்றை ஐ. தே. க. தலைமை நேற்று வரை முன்வைக்கவில்லை.

இதேவேளை, சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளரெனத் தெரியவருகிறது. இதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே 60 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துவிட்டனர்.

இதனையடுத்து தற்போது 43 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் மேலும் 25 பேர் விலகினால் 18 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பர் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அதிருப்தி குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியை விட்டு தனித்து இயங்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமது கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் சிறந்த நாடு இலங்கை – பிரிட்டிஷ் ஆய்வில் உலகில் 8வது இடம்

sri-lanka000.jpgதியாக மனப்பான்மையுடன் தான உணர்வும் புன்னகையும் கொண்ட மக்கள் வாழும் உலக நாடுகளில் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது. Charities aid foundation என்ற பிரிட்டிஷ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்து ள்ளது.

தியாக மனப்பான்மையுடன் கூடிய மக்கள் வசிக்கும் உலக நாடுகளில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை ஆசிய நாடுகளிடையே முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் உலகில் முதல் 18 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு,

1. அவுஸ்திரேலியா, 1. நியூசிலாந்து 3. அயர்லாந்து, 3. கனடா, 5. சுவிட்சர்லாந்து, 5. அமெரிக்கா, 7. நெதர்லாந்து, 8. பிரிட்டன், 8. இலங்கை, 10. ஆஸ்திரியா, 11. லாகோஸ், 11. சியராலியோன், 13. மோல்டா, 14. ஐஸ்லாந்து, 14. துர்க்மெனிஸ்தான், 16. கயானா , 16. கட்டார், 18. ஹொங்கொங், 18. ஜெர்மனி, 18. டென்மார்க், 18. கினி.