அருட்சல்வன் வி

Sunday, January 23, 2022

அருட்சல்வன் வி

ஐ.நா. உச்சி மாநாட்டில் ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதுடன், மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 65வது பொதுச் சபை அமர்வுகள் எதிர்வரும் 14ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து 20ம் திகதி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் செப்டெம்பர் 23ம் திகதி ஆரம்பமாகும்.

இம்முறை உச்சி மாநாட்டில் மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு மற்றும் வலுப் படுத்தல், பாதுகாப்பு சபை மறுசீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இந்தியாவின் உதவியுடன் பெருந்தோட்ட கிராமம் மத்திய, ஊவா மாகாணங்களில் முதற்கட்ட செயற்பாடு

sri-lanka.jpgமலையகத் தோட்டப் புறங்களில் உள்ள ‘லயன்’ குடியிருப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்து தனித்தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் வீடுகளைக் கொண்ட கிராமத்தைத் தனியாகவும் தொழில்புரியும் தோட்டத்தைத் தனியாகவும் அடையாளப்படுத்துவதற்கு திட்டமிட்டுச் செயற்படுத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார். தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக இந்தியா ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்கவுள்ளது. இதில் முதன் முதலாக ஊவா மற்றும் மத்திய மாகாண தோட்டங்களில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்று பிரதியமைச்சர் சிவலிங்கம் குறிப்பிட்டார்.

தற்பொழுது தொழிலாளர் குடியிருப்புகளும் தோட்டமும் ஒன்றாகவே உள்ளன. இதனால், அவர்களின் வாழ்விடமும் தோட்டம் என்றே அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அந்த நிலையை மாற்றி வாழ்விடம் அமையும் கிராமத்தை வேறாகவும் தேயிலை, இறப்பர் தோட்டங்களை வேறாகவும் அழைக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

‘நான் இந்தத் தோட்டத்தில் வாழ்கிறேன் என்பதை இல்லாமற் செய்து நான் இந்தக் கிராமத்திலிருந்து அந்தத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் நிலையை உருவாக்குவோம்’ என்று கூறிய அமைச்சர் தோட்டங்கள் ஆங்கிலப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் 90% தமிழ்ப் பெயர்கள் உண்டென்றும் அந்தத் தமிழ்ப் பெயர்களில் தொழிலாளர்களின் கிராமங்கள் அழைக்கப்படுமென்றும் விளக்கினார்.

வாழமலை, சமுத்திரவள்ளி, சமரவள்ளி, தெய்வானை, மண்வெட்டி, லெட்சுமி, கல்மதுரை, பூப்பனை என்று பல்வேறு தமிழ்ப் பெயர்களில் தோட்டங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தத் தமிழ்ப் பெயர்களைக் கிராமங்களுக்குச் சூட்டுவதோடு தோட்டங்களை ஆங்கிலப் பெயரில் அழைக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம் உதாரணமாக கல்மதுரை கிராமத்திலிருந்து ஸ்ரோனிகிளிப் தோட்டத்திற்குத் தொழிலுக்குச் செல்கிறேன் என்ற நிலையைத் தோற்றுவிப்போம் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மலையகத் தோட்டப் புற மக்களின் வாழக்கை முறையை முற்றாக மாற்றியமைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு இளைஞர்களுக்கு இத்தாலி வேலைவாய்ப்பு – அமைச்சர் முரளி

murali00000.jpgகிழக்கு மாகாண இளைஞர்களுக்கும் இத்தாலியில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள இத்தாலிய தூதுவரை தூதரகத்தில் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் பேச்சு நடத்தினார்.

இலங்கையில் தற்போது சமாதான சூழல் நிலவுவதையடுத்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்லலாம் என இத்தாலி அரசு தனது பிரஜைகளு க்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதியமைச்சர் முரளிதரனின் சந்திப்பு அமைந்திருந்தது.

வருடாந்தம் இத்தாலி அரசு இலங்கைக்கு வழங்கும் 3000 வேலைவாய்ப்புக் கான கோட்டாவை 2011ம் ஆண்டு சற்று அதிகரித்து தருவதாகவும் இதில் கிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குவதாகவும் இத்தாலிய தூதுவர் ரூபன்ஸ் அனா ஸடேல் பிரதி யமைச்சர் முரளிதரனிடம் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் வேலையற்ற இளைஞர், யுவதிகள் பெருந்தொகையானோர் இருப்பதாக குறிப்பிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களுக்காகவே இத்தாலி தூதுவரிடம் இந்த வேண்டுகோளைச் செய்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன் வெளிநாட்டு அமைச்சின் ஒப்புதலுடன் இத்தாலி பெரகுவா , சேரு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களுக்கு கற்பதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் 2011 பெப்ரவரி மாதம் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவுள் ளதாகவும் இத்தாலிய தூதுவர் பிரதியமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

பாண் விலை 3 ரூபாவினால் அதிகரிப்பு

bread.jpgஒரு இறாத்தல் பாணின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.

மாவின் விலை அதிகரிப்பு, போக்குவரத்து செலவின் வரி அறவீடு போன்றன இந்த பாண் விலை அதிகரிப்புக்கு காரணம் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். ஜே. ஜயரட்ன தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுமுன் அமைச்சர் ஆறுமுகன்

இலங்கை தொழிலாளர் காங்கிஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர் வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

கொழும்பு ஏழு ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் திங்கட்கிழமை பிற்பகல் 1.30 இற்கு அமைச்சர் தொண்டமான் சாட்சியமளிப்பார். மேலும் மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் பிரதிநிதி ஆகியோருக்கும் அன்றைய தினம் சாட்சியமளிக்கின்றனர்.

மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய வேலைத் திட்டம் – அமைச்சரவை உபகுழு அமைக்க அங்கீகாரம்

mahinda-samarasinghe.jpgமனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவுமென தேசிய வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பாக வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கையில்,

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து 2006ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். இதற்கேற்ப 2008ம் ஆண்டில் இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக நாம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறினோம். அதன்படி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வகையில் அரசாங்க நிறுவனங்கள், அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பொதுநல முக்கியஸ்தர்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் திரட்டி, மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச அமைப்புக்களின் தகவல்களையும் கவனத்தில் கொண்டு தான் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கான முதலாவது வரைவொன்றை நாம் ஏற்கனவே தயாரித்துள்ளோம்.

நான் மனித உரிமைகள் அமைச்சராக இருக்கும் போது இவ் வரைவு தயாரிக்கப்பட்டது. இதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் ஜனாதிபதி வழங்கினார். இந்த வரைவு சட்டமா அதிபரின் பரிசீலனைக்கும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவை அடிப்படையாக வைத்து இறுதி வரைவைத் தயாரிப்பதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது என்றார்.

நல்லிணக்க ஆணைக்குழு; முல்லை, கிளிநொச்சியில் அமர்வுகள்; யாழ், மட்டக்களப்பிலும் நடத்த ஏற்பாடு

நல்லிணக்க ஆணைக்குழுவானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதன் பொது அமர்வுகளை நடத்தவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை அமர்வுகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்திலும் அமர்வுகளை நடத்த நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் நேரடி விஜயங்களை மேற்கொண்டு பொது அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் காட்டும் ஆர்வத்தைக் கருத்திற்கொண்டு ஆணைக் குழுவானது தொடர்ந்தும் பொதுமக்களிடம் இருந்து மேலும் சமர்ப்பணங்களை வரவேற்கின்றது.

எவரேனும் நபரொருவர் ஆணைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பணங்களைச் செய்ய விரும்பினால் அதனை கொழும்பு 7, ஹோர்ட்டன் பிளேஸ், இல. 24, லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கலாம்.

புனித நோன்பு பெருநாள் இன்று

friday-of-ramadan-2010.jpgஹிஜ்ரி 1431 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இன்று (10) வெள்ளிக்கிழமை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஆகியன இணைந்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

மூதூர், கிண்ணியா, சிலாவத்துறை, புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் தலைப்பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைவர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

0010.jpgபுனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகராவின் ஆலோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 1000 கைதிகள் தங்கக் கூடிய வசதி கொண்ட புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறையில்…

athaulla.jpgஉள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பழைய முறை உட்படுத்தப்பட்ட கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் இயற்றுவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி மூன்றில் ஒரு வீதம் விருப்பு வாக்கு அடிப்படையிலும் மூன்றில் இரண்டு பழைய முறைப்படியும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.