அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும்

அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார்.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சரவையில் 7 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

22 நவம்பர் 2010இல் இலங்கை அமைச்சரவையில் 7 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஜனாதிபதி ராஸபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவியேற்றபின்பு நடைபெறும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். 2000 ஆண்டு காலப்பகுதியிலிருந்து அமைச்சரவையின் பிரதி அமைச்சர்களாக இருந்த பிரதி அமைச்சர்கள் சிலர் இந்த மாற்றத்தின்போது அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

யுஎன்பி யிலிருந்து அரசுடன் சேர்ந்து கொண்டவர்களில் இருவரும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸிலிருந்து ஒருவரும் அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

K Thevathasanபுதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை திரைப்படக் கூட்டுத்தபானத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான கனகசபை தேவதாசனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரின் மனைவி சுபத்திரா தேவதாசன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ( பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். ) அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இம்மாதம் 11 ஆம் திகதி முதல் எனது கணவன் தனது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. தாங்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளீர்கள். எனது இரு பிள்ளைகளுடன் எவரின் உதவிகளுமின்றி துன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனது கணவனை பிணையிலாவது விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.தமிழ்மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனக் கூறும் தாங்கள் எதுவித விசாரணையுமின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ இப்பதவியேற்பு காலத்தில் பொதுமன்னிப்பை வழங்கி அல்லது பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுள்ளார்.

Related News:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

ஐக்கியத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பெருநாள் வசதி படைத்தவர்கள் ஆவலோடு மேற்கொள்கின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிட த்தக் களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடு அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற் றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகளில் எமது எல்லா மக்களுக்கும் கெளரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காக வுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.

தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

ranil-wickramasinghe.jpgபல இலட்சக்கணக்கான மக்கள் வேற்றுமைகளுக்கப்பால் மக்கா நகரில் ஒன்றுகூடித் தனக்காகவும் ஏனையவர்களுக்காகவும் அதேநேரம் உலக அமைதிக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதனுடன் தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இப்ராஹிம் (அலை),இஸ்மாயில் (அலை) அவர்கள் தங்களது தியாகத்தை வெளிப்படுத்தியதையே இந்த ஹஜ் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த உலகில் இறை கட்டளையை விட எந்தவொரு பொருளும் பெறுமதியற்றது என்ற படிப்பினையை இது எமக்குப் புகட்டுகிறது.

உலோபித்தனம், அளவு கடந்த ஆசை என்பன அழிக்கப்பட்டு உள்ளம் பூரணமாகப் பரிசுத்தப்பட வேண்டும் என்ற படிப்பினையையே இது கற்றுத்தருகிறது. இவ்வாறான உள்ளங்களிலிருந்தே கருணை, அன்பு, பாசம் என்பவற்றை எதிர்பார்க்க முடியும். சுயநலமும் பேராசையும் மலிந்து காண்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஹஜ் எங்களுக்குச் சிறந்த ஒரு படிப்பினையைப் பெற்றுத்தருகிறது.எனவே, உலகில் மனிதத்துவம் மலர இப்புனிதத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்.

இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

முல்லைத்தீவு வெடிவிபத்தில் இரு சிறுவர் காயம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறிய சிலாவத்தை கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்றுள்ளது.

வீடு வளவு குப்பைகளை சேகரித்த குடும்பப் பெண் அதனை பனை மரத்தின் கீழ் எரியூட்டியபோது வெடிவிபத்து நடைபெற்றுள்ளது. அப்போது சகோதரர்களான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு 100 உழவு இயந்திரங்கள் விநியோகம்

tractor.jpgயாழ்ப் பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் நூறு அடுத்த வாரம் விநியோகிக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிகழ்வின் போதே இவை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  வட மாகாண விவசாயிகளின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கிணங்க இந்திய அரசாங்கம் ஐநூறு நான்கு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இவற்றில் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களில் 52 கடந்த வாரம் வவுனியா பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

எஞ்சிய உழவு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார்.

றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

11 இலட்சம் மரக்கன்றுகள் 11 நிமிடங்களில் இன்று நடுகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.

எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.