தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கிய அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நீண்ட விவாதம் ஒன்று தேசம்நெற் இணையத்தில் அண்மைக்காலமாக நடந்து கொண்டு உள்ளது. இவ்விவாதத்தில் வெவ்வேறு இணையத் தளங்களில் பங்கு பற்றியவர்களும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய உறுப்பினர்களும் பங்குபற்றுகின்றனர். கருத்தாளர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தியும் கருத்துக்களை முன்வைப்பதால் விவாதம் மேலும் ஆரோக்கியமாகி வருகின்றது. தேடலையும் தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் தேசம்நெற் வரவேற்று இவ்விவாதத்தைத் தொடர்கிறது. முன்னைய பதிவில் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த விவாதத்தளம் கனதியாகி உள்ள நிலையில் அதற்குச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது. அதனால் இவ்விவாதத்தை பகுதி (2) ஆகத் தொடர்கிறோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தற்போதும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அவர்களுடைய கடந்தகால வரலாறு சங்கடங்களை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் அந்த வரலாற்றை கடந்து செல்வதற்கு இவ்வாறான ஆய்வுகள் அவசியம். உண்மைகளை அறியாமல் அவற்றை அப்படியே கைவிட்டு நாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. அதற்காகவே தென்னாபிரிக்காவில் உண்மையும் மீளுறவுக்கும் ஆன ஆணைக்குழு – Truth & Reconciliation Commission அமைக்கப்பட்டது. ஆகவே இந்த வரலாறு தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவர தற்போதைய தமிழீழ விடுதலைக் கழக உறுப்பினர்களும் தலைமையும் முன்வரவேண்டும். அதற்கூடாக மட்டுமே தமிழீழ விடுதலைக் கழகம் தனது அரசியல் பயணத்தை தொடரமுடியும். அதைச் செய்யாதவிடத்து கடந்தகாலம் அவர்களைத் துரத்துவதை தவிர்க்க முடியாது. மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை தாங்கள் எழுதி வருவதாக சிலர் தேசம்நெற் க்கு தெரியப்படுத்தி உள்ளனர். தேசம்நெற் இல் வரும் பின்னூட்டங்கள் தாங்கள் எழுதுகின்ற வரலாற்றுக் குறிப்பை செழுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தேசம்நெற் கருத்தாளர்கள் ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு உரிய கண்ணியத்துடன் தங்கள் உணர்வுகளுக்கு இடம்கொடாமல் தொடர்ந்தும் தாங்கள் அறிந்த உண்மைகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். … Continue reading தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)