February

Sunday, September 19, 2021

February

முல்லைத்தீவிலிருந்து 400 நோயாளர்களை இன்று திருமலைக்கு அழைத்துவர ஏற்பாடு.

trico.gifமுல்லைத் தீவில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலில் சிக்கியுள்ள மேலும் 400 நோயாளர்கள் இன்று திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்கள் அழைத்து வரப்படுவர் என்றும்  அவர் கூறினார்.

முல்லைத்தீவில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்; உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை,  ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய்,  பொலன்னறுவை, மன்னார்,  வவுனியா ஆகிய ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம்,திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும்,  15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம்

vanni-injured.gifவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மக்களில் சுமார் 152 பேர்  (26.02.2009) வியாழன் இரவு 8.15 மணியளவில் மன்னார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துவரப்பட்டுள்ளார்கள்.
 

உயிருக்கு போராடிய நால்வரை காப்பாற்றிய மாணவனுக்கு நாலந்தாக் கல்லூரியில் அனுமதி

nalanda-college-logo.jpgமகியங்கனை வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றிய ஒன்பது வயது நிரம்பிய மாணவனுக்கு, கொழும்பு நாலந்தா உயர்நிலைக் கல்லூரியில் கற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அடுத்தமாதம் முதல் வாரத்திலிருந்து, இம் மாணவன் கல்வி கற்பதற்கான ஒழுங்குகளை, கல்லூரி நிருவாகம் மேற்கொண்டிருக்கின்றது. மகியங்கனைப் பகுதியின் கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் ஆண்டு நான்கில் கல்வி கற்றுவரும் ஒன்பது வயது நிரம்பிய தினேஷ் சந்தகெலும் என்ற மாணவனுக்கே, மேற்படி வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உழவு இயந்திரமொன்று வாவியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்த வேளையில் அவ்விபத்தில் சிக்கிய நால்வர் வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த தினேஷ் சந்தகெனும் என்ற மாணவன், உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரைக் கண்டு, வாவியில் துணிகரமாகக் குதித்து, வெகு சிரமத்தின் மத்தியில் நால்வரையும் கரைக்கு இழுத்துவந்து, அவர்களைக் காப்பாற்றினான்.

இச் செயலைக் கண்டு, பல்துறையினராலும் இம் மாணவன் பாராட்டுப் பெற்றுவந்தான். மாணவனின் உயர்படிப்புக்கென பலரும் உதவ முன்வந்தனர். அவ்வேளையில், நாலந்தா உயர்நிலைக் கல்லூரி பிரதி அதிபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவனின் வீட்டிற்குச் சென்று, மாணவனை நேரடியாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், நாலந்தாக் கல்லூரியில் கல்வியைத் தொடரவும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறினார். மாணவனின் கல்விக்கும், தங்குமிடத்திற்குமான அனைத்து செலவினங்களையும் வசதிபடைத்த பலருடன் நாலந்தா உயர்நிலைக் கல்லூரி முகாமைத்துவம் ஏற்றுள்ளது. மாணவனும் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வியைத் தொடரப் போகின்றோமென்ற மகிழ்ச்சியில் இருந்து வருகின்றார்.

மகியங்கனைப் பகுதியின் கிராமப்பகுதியொன்றில் ஏழை விவசாயியின் புதல்வனே இம் மாணவனாகுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் தெற்கில் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம்; மக்களை எச்சரிக்கை செய்கிறது அரசு

l-yaappa-abayawardana.jpgதோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகள் தெற்கில் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன  நேற்றுக் கூறினார். இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக  மேலும் கூறியவை வருமாறு: புலிகள் இப்போது தோல்வியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்களால் படையினருக்கு எதிராக எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த முடியாது. விரக்தியிலும் கடும் கோபத்திலும் உள்ள புலிகள் தெற்கில் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இது தொடர்பாகத் தென்பகுதி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கொழும்பு மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எம்மிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஐரோப்பிய ஒன்றியம் கூட ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு புலிகளுக்கு அழுத்தங் கொடுக்கத் தொடங்கியுள்ளது.எமது நிலைப்பாட்டை  ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது யுத்த நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாடுகளும் திருப்தியடைந்துள்ளன என்பது இதன் மூலம் தெரிகின்றது.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றால் அதைத் தாம் வழங்குவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அப்படியென்றால் அக்கட்சி அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
என்றார்.

வெலிக்கடை சிறை மருத்துவமனையில் லலித் கொத்தலாவல அனுமதி

lalith.gifகோல்டன் கீ கடனட்டை மோசடி வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரபல வர்த்தக பிரமுகரான லலித் கொத்தலாவல வெளியில் சொல்லமுடியாத நோயொன்றின் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதை சிறைச்சாலை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.மேற்குறித்த மோசடி வழக்கின் கீழ் லலித் கொத்தலாவலவை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு கல்கிஸை பிரதான நீதிவான் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்ததன் பேரில் அவர் அன்றைய தினம் மாலை மகஸீன் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் அவருக்கு நோயொன்று ஏற்பட்டிருப்பது நேற்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து 70 வயதான லலித்கொத்தாவெல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோல்டன் கீ மோசடி வழக்கின் கீழ் லலித் கொத்தலாவெலவுடன் மேலும் சிலரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 சிறுவர்களுக்கு கொழும்பில் சிகிச்சை

army-help.jpgவன்னிப் பகுதியில் இருந்து காய மடைந்த நிலையில் திருகோணமலைக்குக் கொண்டு வரப்பட்ட ஐந்து சிறுமிகள் உட்பட பதினைந்து சிறுவர்கள் கொழும்பில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை நன்கு தேறிவருகின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித் திருக்கின்றது,

இந்தச் சிறுவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களே காணப்படுகின்றன எனவும், திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மருத்துவமனைகளில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்ட இந்தச் சிறுவர்கள் பூரணமாகக் குணமடைந்ததும், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

வங்கதேச துணை ராணுவத்தினர் கலகத்தில் 200 ராணுவ அதிகாரிகள் கொலை -பாதாள சாக்கடையில் பிணக் குவியல்

buyinfromreuters.jpgவங்க தேசத்தில் 2 நாட்களாக துணை ராணுவத்தினர் நடத்திய கலகம், அரசின் கடும் எச்சரிக்கையால் ஓய்ந்தது. கலவரத்தில் ரைபிள் படைப் பிரிவின் இயக்குனர் உட்பட 200 ராணுவ அதிகாரிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.  130 அதிகாரிகளை காணவில்லை. பாதாள சாக்கடையில் குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. வங்கதேசத்தில் வங்கதேச ‘ரைபிள் படை’ என்ற துணை ராணுவ படையில் 40 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

அவர்களில் 20 ஆயிரம் பேர் தலைநகர் தாகாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும், மற்றவர்கள் மற்ற மாகாணங்களில் உள்ள முகாம்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம், பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இது அலட்சியப்படுத்தப்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள், கடந்த புதன்கிழமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, வீரர்கள் கலகத்தில் இறங்கினர். அதிகாரிகளை விரட்டி விரட்டி சுட்டனர்.

தலைமை அலுவலகத்துக்கும் தீ வைத்தனர். கலகத்தை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது. கலகத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் ஹசீனா  அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒரு பிரிவு வீரர்கள் சரண் அடைந்தனர். மற்றொரு பிரிவினர்  தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். 2வது நாளில் மற்ற முகாம்களுக்கும் கலகம் பரவியது. அதைத் தொடர்ந்து பிரதமர் ஹசீனா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தலைமையகத்தை டாங்கி களுடன் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த ராணுவம் தயாரானது. இதையடுத்து, எல்லா வீரர்களும் சரண் அடைந்தனர். இதன் மூலம், 2 நாட்கள் நடைபெற்ற கலகம் முடிவுக்கு வந்தது. இந்த கலகத்தில் துணை ராணுவ படையின் இயக்குனர் ஷகீல் அகமது உட்பட 200 ராணுவ அதிகாரி கள் சுட்டுக் கொல்லப் பட்டள்ளனர். சம்பள உயர்வு பற்றி வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய சில நிமிடங்களில் ஷகீல் அகமது அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

அப்போது, 4 வீரர்கள் பாய்ந்து சென்று அவரை பிடித்து சுட்டுக் கொன்றதாக துணை ராணுவத்தின் லெப்டினென்ட் கர்னல் சையது குவாம் ரஜ்மான் கூறினார். இவரும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளார். தலைமையக வளாகத்தில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளன.கலகம் ஓய்ந்ததும் தலைமை அலுவலகத்துக்குள் ராணுவம் நுழைந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டது.

பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் காணப் பட்டது.  அந்த இடத்தை தோண்டியபோது, 38 அதிகாரிகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தன.
 
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கிறதா என்று தேடப்படுகிறது.  அலுவலக வளாகத்தில் உள்ள பாதாள சாக்கடையிலும் பிணக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இன்னும் 130க்கும் மேற்பட்ட அதிகாரிகளை காணவில்லை.  கலவரத்தில் ஈடு பட்ட 300 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலகத்தில் காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளை பிரதமர் ஹசீனா நேற்று பார்த்தார்.

அப்போது அவர், ”கலகத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட வர்களுக்கு மன்னிப்பு கிடையாது”  என்று அறிவித்தார்.

பிரணாப்புக்கு எதிர்ப்பு:தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு

Pranab_Mukherjeeதூத்துக் குடிக்கு இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகட்ஜி அரசு விழா சம்பந்தமாக வருகை தருகிறார்.
இவர் இலங்கை தமிழர்களை காக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்  பிரணாப்புக்கு கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவுகிறது. இப்பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த சூழலில் பாரிய பாதிப்பு பொதுமக்களுக்கே – ஜோன் ஹோம்ஸ்

John_Holmes_UNஇலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் யுத்த சூழலில் வன்னியில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து அவர்களை வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வருவதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோம்ஸ் தமது உரையின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அவர்கள் தற்போது தங்கியுள்ளனர்.அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்களே உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே அங்கு பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை. எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்; பலர் காயமடைகின்றனர் எனத் தாம் நம்புவதாக ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமது விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரை சந்தித்ததாகத் தெரிவித்த ஹோம்ஸ், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினரை (UNHCR) அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதேவேளை யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர இந்திய டாக்டர்கள் குழு

india-doctors.jpgஇலங்கை யில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய டாக்டர்கள் குழு செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவும், மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.