March

March

லாகூர் தாக்குதல் முடிவடைந்தது : 31 பேர் பலி

pakistan_attack.jpgலாகூருக்கு அருகே உள்ள மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.மேலும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிணையக் கைதிகளாக இருந்த பயிற்சிக் காவலர்கள் மீட்கப்பட்டனர்.

இன்று காலை 7.30 மணியளவில் காவலர்கள் போல் உடையணிந்த 10 பயங்கரவாதிகளைக் கொண்ட குழு, மனாவான் காவலர் பயிற்சி மையத்திற்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும்,அங்கிருந்த 500க்கும் அதிகமான காவலர்களை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்தது.

இதையடுத்து பயங்கரவாதிகளை பிடிக்க மனாவான் காவலர் பயிற்சிப் பள்ளியில் ராணுவ வீரர்ர்கள் குவிக்கப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்சி மையத்திற்குள் அதிரடியாக நுழைந்த ராணுவ வீரர்களுக்கும், உள்ளே இருந்த பயங்கரவாதிகளுக்கும் நீண்ட நேரம் சண்டை நீடித்தது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பயங்கரவாதிகளில் 6 பேரை ராணுவம் கைது செய்ததாகவும், மீதமுள்ள 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு மணி நேரம் நீடித்த காவலர் பயிற்சி மையத் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.இத்தாக்குதலில் 31 காவலர்கள் உயிரிழந்ததாகவும், 90 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், லஸ்கர் – இ – தயீபா அல்லது ஜெய்ஷ் – இ – முகமது காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க லாகூர் வந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பரபரப்பு முற்றிலுமாக அடங்குவதற்கு முன்பாகவே, லாகூர் புறநகர்ப் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்துக்கு எதிராக நடிகர் வடிவேலு பிரச்சாரம்?

vadivelu.jpgநடிகர் வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் இருந்து வருகிறது. வடிவேலு வீட்டின் முன் கார் நிறுத்தியது தொடர்பாக தேமுதிக தொண்டர்களுக்கும் வடிவேலுக்கும் இடையே 2007-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. தலைவர் படத்தில் நடிக்க மறுக்கிறாய், இப்போது எதிர்த்து வேறு பேசுகிறாயா என்று கேட்டு தன்னை விஜயகாந்தின் ஆட்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார் வடிவேல்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த், வடிவேல் சண்டை பூதாகரமானது. இந்நிலையில் வடிவேலு வீட்டின் மீது ஒரு கும்பல் கற்களை வீசி மிரட்டி சென்றது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றார் வடிவேலு.

இந்த சம்பவத்துக்கு விஜயகாந்த்தான் காரணம் என்று சொன்னார். ஆனால் விஜயகாந்த் இதை மறுத்தார். எனினும் வடிவேலு சமாதானம் அடையவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில் விஜயகாந்த் காணாமல் போய்விடுவார் என்று வடிவேலு கூறினார். மக்களவை தேர்தலில் அவர் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் விஜயகாந்துக்கு சவால் விட்டார். நகைச்சுவை நடிகனை அழவைத்து வேதனைப்படுத்தியவருக்கு தகுந்த பாடம் புகட்டுவேன் என்றும் வடிவேலு சொல்லி வந்தார்.

தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வடிவேலு – விஜயகாந்த் விவகாரமும் சூடு பிடித்துள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜயகாந்த் எல்லோருக்கும் முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தேமுதிகவுக்கு எதிராக வடிவேலு பிரசாரத்தில் குதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடிவேலு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.

5 ஆண்டு வேட்டி துவைப்பார்-5 ஆண்டு சேலை துவைப்பார் – விஜயகாந்த்

vijayakanth1.jpgஜெயலலிதாவுக்குப் பின்னால் ரோபோ போல நிற்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு வேட்டி துவைப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு சேலை துவைப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நக்கலடித்துள்ளார். தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து நேற்று காலை செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.அப்போது அவர் கூறுகையில்,

கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் நான் மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும் கூட்டணி வைத்துள்ளேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள்.மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். காலையில் ‘டிவி’ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா (ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்.

அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும். எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன், ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது முக்கியமல்ல. மக்களாட்சியை கொண்டு வருவோம். மக்களின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று எனது வேட்பாளரை அறிவிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எனக்கு பின்னால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்கள். எதை நம்ப வேண்டும், எதை நம்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் இன்று அமைச்சர் அமீர் அலி தலமையில்…

2009ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு அபிவிருத்தி சபைக் கூட்டம் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அமீர் அலி தலமையில் மட்டக்களப்பு கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திக்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் லயன் நொகான் விஜய விக்கிரம ஆகியோரின் இணைத் தலமை வகித்திருந்தார்கள். அமைச்சர் முரளிதரன் நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்று பங்குகொள்ளும் முதலாவது அபிவிருத்தி சபைக் கூட்டம் இதுவாகும்

யாழ்தேவி ரயில் சேவையை தாண்டிக்குளம் வரை நீடிக்க நடவடிக்கை

bati-trnco.jpgமதவாச் சிக்கும் கொழும்புக்கும் இடையே நடைபெற்று வரும் யாழ்தேவி ரயில் சேவையை, வவுனியாவுக்கு வடக்கே சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்தோருக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

us_donates_medical_.jpgவடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசாங்கம் 77 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற வைபத்தின்போது இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மோர் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இந்த மருந்துப் பொருட்களைக் கையளித்தார். இந்த வைபத்தில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடிய கரிசனை கொண்டுள்ளார். விடுவிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் இப்பொருட்களை புலிகள் சூரையாடுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன எனக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கியமைக்காக அமெரிக்க அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க பிரதித் தூதுவர், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

“ஏ9′ வீதியூடாக வாகனத் தொடரணி குடா நாட்டில் பொருட்களின் விலை வீழ்ச்சி

a9-food.jpgஏ9 பாதையூடாக தனியார் துறையினரும் பொருட்களை எடுத்துவர அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளமையால், குடாநாட்டில் பொருட்களின் விலை வெகவாக வீழ்ச்சியடைந்துள்ளன.  கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்டத்துக்கு உப உணவுப்பொருட்கள் பழவகைகள் மென்பானங்கள், பிஸ்கட், பட்டர், மாஜரின், மருந்துவகைகள் என்பன பதினெட்டு லொறிகளில் எடுத்துவரப்பட்டமையால், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் நாற்பதுசதவிகித விலை வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

ஒன்றரை லீற்றர் மென்பானம் முன்னர் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் இதனை 160க்கு வாங்கமுடிகின்றது. மருந்துவகைகள், பிஸ்கட், மாஜரின், பட்டர், போடப்பட்டவிலையில் ஐந்துசதவீத அதிகரிப்பில் விற்பனையாகின்றன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களான சீனி, பருப்பு, அரிசி, டின்மீன், நவதானியம் என்பன கொழும்பு விலைக்கு விற்பனையாகின்றன. கொழும்பிலிருந்து குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கப்பல்களில் பொருட்கள் வராவிட்டால் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளும் அதனைக் கைவிட்டு பதுக்கிய பொருட்களை சந்தைக்கு விடத்தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர பல வர்த்தகர்கள் அத்தியாவசிய தேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 100 லொறிகளில் சித்திரை புத்தாண்டுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பில் உள்ள சில தனியார் நிறுவனங்களும் தமது உற்பத்தி பொருட்களை குடாநாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன. உடு பிடவைகள், பாதணிகள், வீட்டு உபகரணங்கள் போன்றவையும் குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக எடுத்துவரப்படவுள்ளன.

இன்று ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் ஜனாதிபதி சந்திப்பு

euro_comm_.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி மீது துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு 40 க்கும் மேற்பட்டோர் காயம்

pakistan_attack.jpg பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் லாகூர் நகருக்கு அண்மித்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40 க்கும்  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போது துப்பாக்கிப் பிரயோகம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரை துப்பாக்கி நபர்கள் பணயக் கைதிகளாக எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய எல்லைப்புரத்துக்கு அருகிலுள்ள இந்த மனாவான் பொலிஸ் பயிற்சி நிலையத்தை நோக்கி நாலா புரத்திலிருந்தும் அந்தக்குழுவினர் முதலில் கைக்குண்டுத்  தாக்குதல் நடத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பதை விமானப்படை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு இலகு ரக விமானம் இருப்பதாக வெளியான செய்திகளை விமானப் படையினர் நிராகரித்துள்ளனர்.  விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் புலிகளின் விமானமொன்று குடிசையொன்றில் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தெரிவிப்பதாகக் கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு இலகு ரக விமானம் இருப்பதான செய்தியை விமானப் படையினர் மறுத்துள்ளனர்.

விமானப் படை பேச்சாளரின் தகவல்படி, கடந்த இரு வருடங்களில் புலிகளின் நான்கு விமானங்கள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கில் தற்போது நடைபெறும் படை நடவடிக்கையின் போது புலிகளின் ஏழு விமான ஓடு பாதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், தற்போது புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானமானது, அவசர தேவை ஏற்படும் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் செல்வதற்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.