March

March

கனகரட்ணம் எம்.பி.யின் செயலாளர் வவுனியாவில் கடத்தப்பட்டார்

white-van.jpgவன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி கே.கனகரட்ணத்தின் செயலாளர் நேற்று சனிக்கிழமை மாலை வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கனகரட்ணம் எம்.பி.தற்போது வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிறார். இவரது செயலாளர் செல்லத்துரை சபாநாதன் தனது குடும்பத்தவர்களுடன் வவுனியா வைரவபுளியங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் வசிக்கிறார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இவரது வீட்டிற்கு வெள்ளை வானொன்றில் ஆயுதங்களுடன் சென்ற சுமார் பத்துப் பேர் இவரை கடத்திச் சென்றுள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிலிருந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே இவர் கடத்தப்பட்டார்.

இது தொடர்பாக அவரது மனைவி, வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பியான சிவநாதன் கிஷோரிடம் தெரித்துள்ளார். கடத்த வந்தவர்கள் தொடர்பாகவும் வெள்ளை வானின் இலக்கத்தகடு எண் தொடர்பாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, சிவநாதன் கிஷோரும் வன்னிமாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.

பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும்- நாஞ்சில் சம்பத்

naagil.jpgஇலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்து மதி.மு.க. சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றும் சரியான தீர்வாக இருக்க முடியாது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்து மாறு மத்திய அரசை நிர்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார். நாங்களோ (ம.தி.மு.க.), அல்லது பா.ம.க., கம்யூனிஸ்டுகள் நினைத்தாலோ தி.மு.க. அரசை கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் நினைத்தால் மட்டும்தான் முடியும். அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.

மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவன் செய்த தவறுக்காக ஒரு இயக்கத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என நினைத்த அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்டார். அதே போல் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சி எடுப்பாரா? அங்கே ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்கிறீர்கள். ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் அடுத்து விநாடியே அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுவிடுவார்கள். விரைவில் இலங்கையில் தனி நாடு பிறக்கும். அதன் பெயர் தமிழ் ஈழமாக இருக்கும். தமிழின தலைவனாக பிரபாகரன் இருப்பார். தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று பேசினார்.

‘வித்தியாதரனை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்’

vithyatharan.jpgகைது செய்யப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட உதயன், சுடர் ஒளி நாளிதழ்களின் ஆசிரியர் நடேசன் வித்தியாதரனை விடுவிக்கக் கோரி, சென்னையில் நேற்று செய்தி ஊடகக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் போரை எதிர்த்து எழுதியதாகக் கொலைசெய்யப்பட்ட 16 பத்திரிகையாளர்களின் மரணம் குறித்து ஐ.நா. மன்றம் விசாரிக்கவேண்டும், இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும், ராஜபக்சவை விமர்சித்து நக்கீரன் பத்திரிகையில் வெளியான முகப்பு அட்டை குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக, சென்னையில் இயங்கும் இலங்கைத் துணைத்தூதர் அம்சா மிரட்டல் அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது; இத்துடன் அதைத் திரும்பப் பெறவேண்டும், உதயன் நாளிதழ், சுடரொளி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் வித்தியாதரனை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டைம்ஸ் ஆப் இன்டியா சென்னைப் பதிப்பின் அரசியல் பிரிவு துணை ஆசிரியர் கே.வி.ரமணி, அரசியல் செய்தியாளர் குணசேகரன், டெக்கான் ஹெரால்ட் சென்னை செய்தியாளர் முராரி, சன் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுசி. திருஞானம், மாலைச்சுடர் நாளிதழின் முதுநிலை செய்தியாளர் துரை. கருணா, சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதி தமிழன், முதுநிலை செய்தியாளர் சஞ்சய் ரகுநாதன் உட்பட பலர் இங்கு உரையாற்றினார். 

விமானப் படை விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என விமானப்படைப் பேச்சாளர் அறிவிப்பு

mi-24.jpgவிமானப் படையைச் சேர்ந்த விமானமொன்று விடுதலைப் புலிகளால் வன்னிப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார நேற்று கருத்துத் தெரிவிக்கையில், விமானப்படை விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை எனவும், இச்செய்தி  பலவீனத்தை மறைக்க புலிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் தமது படுதோல்வியை மறைப்பதற்காகவும், தாம் இன்னும் பலமுடனேயே இருக்கின்றோம் என சர்வதேசத்துக்குக் காட்டவுமே இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

58 ஆவது, 57 ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பில் புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் அதேவேளை, தரைப்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

houses-of-parliament-london-uk.jpgபிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.  லண்டன் நகர மத்தியில் பாராளுமன்ற சதுக்கத்தில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களில் ஒருவர் திடீரெனத் தனது உடலில் பெற்றோலை ஊற்றி விட்டு நெருப்பைப் பற்ற வைத்துள்ளார்.

எனினும் , அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து செயற்பட்டு அவரைக் கீழே தள்ளி விழுத்தி நிலத்தில் உருட்டி அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவ்விடத்தில் பொலிஸாரும் நின்றிருந்தனர்.

அவர்களும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற அந்தத் தமிழ் இளைஞனை உடனடியாகத் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டதால், அவர் பாரதூரமான காயங்களுக்குள்ளாக வில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அந்தப் பகுதி மக்களும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர்.

கடந்த 14 ஆம் திகதி லண்டன் டவுணிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் வீட்டின் முன்பாக ஈழத்தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஒருவர் தீக்குளிக்க முனைந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து அண்மையில் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தார்.

அந்த இடத்திலிருந்து ஜெனீவா பொலிஸார் 5 பக்கக் கடிதமொன்றையும் எடுத்திருந்தனர். ஈழத்தமிழர்களது துயர் குறித்து அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே தற்போது மேற்கு நாடுகளில் ஈழத்தமிழர்கள் தீக்குளிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரம் பிரதமர் இல்லத்தில் இல்லை சோனியாவின் இல்லத்தில்: அத்வானி

advani.jpgஇந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இந்தியாவின் கருத்தை இலங்கை அரசு செவிமடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்ய முடியாவில்லை என ஊடகவியலாளரிடம் பேசும் போது குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரம் முழுவதுமே பிரதமர் இல்லத்தில் இல்லை. சோனியா வசிக்கும் இல்லத்தில் தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும்: இந்தியா கோரிக்கை – ஏகாந்தி

pranab1032009.jpgயுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பயன்படுத்தி, இலங்கை அரசு யுத்தத்தை இடைநிறுத்த வேண்டும் என்றும், யுத்தப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இது விடயமாக பி.பி.ஸி. தமிழோசை கருத்துத் தெரிவிக்கையில், மோதல்களை இடைநிறுத்த வேண்டும் என்று இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைப்பது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்டிருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகே ரூ.4 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் மேலும் ஒரு அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய மின் நிலையத்துக்கு (28) அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்.பிரணாப் பேசுகையில், ”இலங்கையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கிறது. போர் பிராந்தியத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன” பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பது குறித்தும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரணாப் முகர்ஜி, அது, அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இல்லை என்பதை உணர்த்திலும் கூட, இலங்கை அரசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, யுத்தத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் கருத்து என்றும் தெரிவித்துள்ளார். 

Pranab_Mukherjee”எனவே, போர் பிராந்தியத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக் கொண்டுவருவது குறித்த நடைமுறைகளை இலங்கை அரசு உடனடியாக வகுக்க வேண்டும்” என்று இந்தியா கோரிக்கை விடுப்பதாக பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஏற்பாட்டுக்கு, விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் நிறுத்தப்படும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, போர்ப் பகுதியில் உள்ள பொதுமக்களை, மறுவாழ்வுக்கு உகந்த பகுதிகளுக்குக் கொண்டுவர வேண்டும். அங்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச உதவி அமைப்புக்கள் பணியாற்றவும், மருத்துவ மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கும் தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

வட இலங்கையில், உள்நாட்டில் புலம் பெயர்ந்த மக்களுக்கு அவசர மருத்துவக் குழுக்களையும், மருந்துகளையும் அனுப்புவதற்கு இந்தியா ஏற்பாடு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”அடுத்த கட்டமாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அதன் அரசியல் சட்டத்தின் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்று பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த உண்மையான கோரிக்கைக்கு, இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரும் செவிமடுப்பார்கள் என்று நம்புவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விளக்கம்.

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொருத்தமான  நம்பகத்தன்மை மிக்க  நடைமுறை ஒன்றை வகுக்குமாறு இலங்கை அரசைக் கோரியுள்ள இந்தியா, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கத்தான் தயார் என்றும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்துள்ள சாதகமான பதில்களைத் தொடர்ந்தே இந்தியா இந்த  வேண்டுகோளை விடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்குமாறு சர்வதேச சமூகம் விடுத்துள்ள வேண்டுகோள்கள் குறித்து ஆராயத் தயார்  என்ற தனது விருப்பத்தை விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் பின்னணியில்  நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் நகர்வுகளை சர்வதேச முகவர் அமைப்புகள் கண்காணிப்பது உட்பட்ட விடயங்கள் அடங்கியதாக  அந்த அகதிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பான நம்பகமான, பொருத்தமான நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு இலங்கை அரசையும் ஏனைய தொடர்புபட்ட அனைவரையும் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.”  என விஷ்ணு பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்தின் புனிதத்தை இரு தரப்புகளும் பேணவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பெரும் எணணிக்கையான மக்களைக் கடல் மற்றும் தரை வழியாகக் கொண்டு வருவதற்குரிய நடைமுறைகளை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  அனைத்து  ஒத்தாசைகளையும் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகவீனமுற்றுள்ள  காயமடைந்துள்ள  மக்களுக்கான மருத்துவ உதவிப் பொருள்கள் அவர்களுக்கு விரைந்து கிட்டுவதற்கான வகையில் அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் இந்தியா கலந்துரையாடி வருகின்றது”  என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் நிலைப்பாடு

இது குறித்து இச்செய்தி எழுதப்படும் நேரம்வரை இலங்கை அரசு எவ்வித உத்தியோகபூர்வமான அறிவித்தல்களையும் விடுக்கவில்லை.

“யுத்தம் தீர்வல்ல’ டில்லி கொழும்புக்கு தெரிவிப்பு
 
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதலுக்கிடையில் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் தலைவிதி குறித்து கவலைதெரிவித்திருக்கும் இந்தியா, பொது மக்கள் இழப்புகளை தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கிறது.
அத்துடன் இலங்கையின் சகல பிரஜைகளினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான அரசியல் தீர்வை வட இலங்கைக்கு முன்வைக்கும் முழுமையான ஜனநாயக நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஈ.அகமட் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்ற சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பின் நேற்றுநாடு திரும்பிய அகமட் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.

தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அகமட் சந்தித்திருந்தார்.

பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல என்பதை இலங்கைக்கு நாம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது, பொது மக்களின் பாதுகாப்புத் தொடர்பான இந்தியாவின் கரிசனையையும் தெரியப்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் இழப்புகள் குறித்து இலங்கை ஜனாதிபதியும் கவலையை வெளிப்படுத்தியதாகவும் பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விபரத்தையும் தெரிவித்ததாகவும் அகமட் கூறியுள்ளார்.

யுத்த வலயத்திலிருந்து வரும் மக்களுக்கான அவசர மருந்து உதவி அனுப்பிவைக்கப்படும் என்று கூறிய அகமட், பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைகோ குழு கைது.

vaiko-black-flag.jpgஅதேநேரம், நேற்று (28) தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் திறன் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தூத்துக்குடி வந்தநேரத்தில்  இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட்ட 185 பேர் நேற்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விழா நடைபெற்ற ஏ.பி.சி. மகளிர் கல்லூரி விளையாட்டுத் திடலுக்கு ஊர்வலமாகப் புறப்பட்ட நேரத்திலே அவர்களை காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ்,  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழீழநேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானதாஸ், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராசன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு உட்பட 185-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டுசென்று அடைக்கப்பட்டனர்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார்

18-01menon.jpgஅதேநேரம், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார் என்ற செய்தியையும் இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து போர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து இந்தியாவின் கவலையை அவர் இலங்கை அரசுக்குத் தெரிவிப்பார் எனவும் தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தொடரை தொடர்ந்து ராஜபக்சவை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பதாக திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் தனது பயணத்தை பிரணாப் முகர்ஜி ரத்து செய்து விட்டார். இதையடுத்து மேனன் கொழும்பு சென்று ராஜபக்சவை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் மாதம் முதல் யாழ். குடாநாட்டுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கப்படும் – வடபிராந்திய மின்சார சபை தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgயாழ். மாவட்டத்துக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தடையின்றி இருபத்துநான்கு மணித்தியாலமும் மின்சாரம் வழங்கக்கூடியதாக இருக்குமென வடபிராந்திய மின்சார சபை அலுவலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் மின்பாவனை அதிகரித்தமையால் கடந்த பதினெட்டு மாதங்களாக மாலை ஆறு மணிமுதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு குடாநாடு முழுவதும் சுழற்சிமுறையில் அமுல் செய்யப்பட்டுவந்த மின்தடை முற்றாக நீங்குமென மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு முப்பத்தைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் சீன நிறுவனமான “நோத்பவர்’ ஆறு மின் பிறப்பாக்கிகளில் மூன்று மின் பிறப்பாக்கிமூலம் பன்னிரெண்டு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்து வழங்குவதால், மின்தடை நீங்க வழியேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது, குடாநாட்டுக்கு பதினைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதால், இரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குடாநாட்டுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமானதாகவுள்ளது. இவற்றுக்கு மேலாக சுன்னாகத்திலுள்ள மின்சார சபை மூன்று மெகாவாட் மின்சாரத்தையும், காங்கேசன்துறையில் மூன்று மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்துவருகின்றன

மேலும் 252 பேர் திருகோணமலை வந்தடைந்தனர்

red-cr.jpgதிருகோண மலைக்கு வந்த நோயாளர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின அனுசரணையுடன் நோயாளாகள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் உட்பட 252 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட மேலும் நூறு பேர் பேருந்துகள் மூலம் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு இதுவரை 746 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு ஆறாவது தொகுதி நோயாளர்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஓரளவு சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளர்களை மன்னார் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மேலும் சில மனிதப் புதைகுழிகள்

bangaladesh.jpgவங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 70 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது.சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.