April

Saturday, July 31, 2021

April

விடுதலைசிறுத்தைகள் கட்சி திமுகவுடன்தான் கூட்டணி- எங்களுடன் இல்லை: காங்கிரஸ்

thiruma_8-4.jpgஇலங்கை போர் நிறுத்தத்திற்கு உண்மையாக முயற்சி செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, உங்கள் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் வயலார் ரவி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசுடன் இல்லை’’ என்று தெரிவித்தார்.

பண்டாரநாயக்கவின் புரட்சிகர அரசை நிறுவ உந்து சக்தியாக இருந்தவர்கள் ராஜபக்ஷாக்களே -நிருபமா ராஜபக்ஷ

“1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கவின் புரட்சிகரமான அரசாங்கத்தை நிறுவுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்களும் கிராமிய மண்வாசனையை கொண்டவர்களும் ராஜபக்ஷாக்களே’என்று அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பெலியத்தை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சு.கட்சியின் புதிய அமைப்பாளருமான நிருபமா ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிட்டினா மதுறு என்ற இடத்தில் வீட்டுக்கு வீடு தனது புதிய அமைப்பு வேலைகள் தொடர்பான பிரசார நடவடிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிருபமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது;

“மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்றபோது சில நகரவாசிகளுக்கும் சில நகரசபை உறுப்பினர்களுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டது. காரணம், 56 புரட்சிகரமான அரசியல் ஏடு புரட்டப்பட்டதும் கிராமப்புறவாசிகளே சகல துறைகளிலும் முன்னுரிமை பெறுவார்கள். ராஜபக்ஷாக்கள் அவர்களுக்கு உதவி புரிவார்கள் என்ற எண்ணமே நகர வாசிகளின் அச்சப்பாட்டுக்குக் காரணியாக அமைந்தது.

நாட்டின் அரசியலில் பாராளுமன்றத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் சென்றது ராஜபக்ஷ குடும்பத்திலேயே உள்ளது. நாம் என்றும் கிராமவாசிகளின் இன்பதுன்பங்களில் பங்கேற்ற வண்ணமே இருக்கின்றோம். இதனால் தான் கிராம மக்களின் ஆதரவு எமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எனது தந்தை ஜோர்ஜ் ராஜபக்ஷ முதலாவது மீன்பிடி அமைச்சராக இருந்து மக்களுக்கு விசேடமாகக் கடற்றொழிலாளருக்குச் சேவை செய்ததோடு, சுகாதார அமைச்சராக இருந்தும் பெரும் பணிகளைச் செய்தார். அதேபோல் என் அண்ணாவான மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து இன, மதபேதம் பாராது முழு நாட்டுக்கும் பணிசெய்கிறார். வடக்கையும் கிழக்கையும் மீட்டெடுத்து வரும் அவரது பணியை யாரும் மறப்பதற்கில்லை’ என்றார்.

போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு-ராகுல்

rahul.jpgஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.

இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா. இலங்கை தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை.

சகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் சுதந்திரமாக வாழும் காலம் தூரத்தில் இல்லை – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgசகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் சுதந்திரமாக வாழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மகாபொல புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தை முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி தான் அறிமுகப்படுத்தினார். அவர் இன்று எம் மத்தியில் இல்லை. என்றாலும் அவரது திட்டத்தை நாம் கைவிடவில்லை.  அது நல்ல திட்டம். யார் என்ன திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் அத்திட்டங்களின் மூலம் நாட்டு மக்கள் அடையும் பலன்களைப் பொறுத்தே நாம் தீர்மானங்களை எடுக்கின்றோம். நாம் நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டுதான் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்றோம். தேர்தல்களை கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுத்தால் அவை நாட்டை இருண்ட யுகத்திற்கே விட்டுசெல்லும். அப்படியான முடிவுகளை நாம் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.

இப்போது புலமைப்பரிசிலைப் பெறும் பட்டதாரி மாணவ மாணவிகள் பிறந்த காலம் முதல் பயங்கரவாதப் பிரச்சினையை அனுபவித்திருக்கிறார்கள். பிரபாகரனுக்கு நிர்வாகத்திற்கென ஒரு பிரதேசமும் எழுதிக்கொடுக்கப்பட்டிருந்தது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் அச்சம், பீதியுடனேயே வாழவேண்டிய சூழல் நிலவியது. நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறோம். எழுதிப் பிரிக்கப்பட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம்.

உலகிலேயே அதிகளவு பணயக் கைதிகளை குறுகிய காலத்தில் எமது படைவீரர்கள் வெற்றிகரமாக விடுவித்திருக்கின்றார்கள். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகில் விடுவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதனால் பல்கலைக்கழக கல்வியைத் துரிதமாகப் பூர்த்தி செய்து விட்டு மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் முன்வர வேண்டும். புதிய நாட்டை கட்டியெழுப்பும் தற்போதைய சூழலில் பட்டதாரிகளின் சேவை எமக்கு மிகவும் அவசியமானது. ஒரே தடவையில் 45 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குச் ஏற்கனவே சேர்த்திருக்கிறோம். ஆயினும் அவர்களிடமிருந்து உச்ச சேவை பெறப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.

யாழ். மாவட்டப் பாடசாலைகள் திங்களன்று இரண்டாம் தவணைக்காக ஆரம்பம்

schools_stu.jpgயாழ். மாவட்டப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 27 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென சில பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சிலவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் அயல் பாடசாலைகளில் பிற்பகல் வேளையில் கல்வி கற்பதற்குரிய மாற்று ஏற்பாடுகளைக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திற்கு இதுவரையில் சுமார் 13 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக யாழ். மாவட்ட அரச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் – இராணுவத்தளபதி

sarath-fonseka.jpg புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார். இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

பிபிசியின் சிங்கள செய்தி சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச்செவ்வியில் இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே மறைந்து இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் 8கிலோ மீற்றர் நீளமும் 1.5கிலோ மீற்றர் அகலமும் கொண்ட கடற்பகுதியிலேயே மறைந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் மனித கேடயமாக வைத்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களை விடுவிக்கும் பொறுப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அதேவேளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகிறோம்.

இன்னும் சுமார் 15ஆயிரம் மக்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என நினைக்கிறேன்.சுமார் 300, 400 புலிகளே அங்கு இருக்கின்றனர். பலவந்தமாக ஆயுதம் கொடுக்கப்பட்ட பொதுமக்களும் அதில் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச போராட்டங்களும் புலிகளும் அவர்களது ஆயுதங்களும் : ரி சோதிலிங்கம்

Protest_London_BigBang புலிகள் ஒரு புரட்சிகர அமைப்பாக இல்லை எனவும் இவர்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க முடியாதவர்கள் அல்லது சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றும் பலர் கருத்துக்களை முன்வைக்கிறனர். கடந்த காலங்களில் எப்படி அறப்போர் செய்த அமைப்புக்கள் அதனைத் தொடர்ந்து முன்னேற்ற முடியாமல் போய் அந்த அமைப்புக்கள் இயற்க்கை எய்தியதோ அதேபோல் புலிகளினால் தொடரப்பட்ட 30 வருட ஆயுதப் போரும் தொடர்ந்து முன்னேற முடியாத நிலைக்கு வந்தள்ளது. இதனை உணர்ந்து அடுத்த சந்ததியினர் தொடரும் புதிய பாதைளை திறக்கும் வழிமுறைக்கு இடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமைகளை புலிகள் உணர்ந்து செயற்ப்பட வேண்டும். அது புலிக்கொடியை அவர்களிடம் கொடுத்துச் செல்வது என்று அர்த்தமாகாது.

கடந்த கால தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை புலிகள் செய்துள்ள போதிலும் மிகவும் பாரதூரமானதும் தமிழர்களின் போராட்டத்தை அஸ்த்தமிக்கும் நிலைமைக்கு கொண்டுவரக் கூடிய தவறுகளையும் புலிகள் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல அப்படியாக புலிகளினால் செய்யப்பட்ட தவறுகளுக்கு இன்று வரையில் எந்தவித பிராயச்சித்தங்களும் மேற்கொள்ளப்படாததும் தவறாகிவிட்டது.

இத் தவறுகள் தமிழ்பேசும் மக்களை இன, பிரதேச, சாதிய, இயக்க, அரசியல் வேறுபாடுகளை முனைப்புப்படுத்தி தமிழர்கள் தமிழ்பேசும் மக்களை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. வெவ்வேறு அரசியல் முகாம்களுக்குள் தள்ளியுள்ளது. எதிரியை பலப்படுத்தி உள்ளது.

இன்றுள்ள தோல்வி நிலைமைகளில் இருந்து தமிழ்பேசும் தமது பாரம்பரிய பிரதேசங்களில் தொடர்ந்து நிம்மதியாக வாழவும் புதிய சந்ததியினர் தொடர்ச்சியாக தமது புதிய பாதையை தெரிவு செய்து சுயநிர்ணயப் போராட்டத்தை தொடரவும் இன்று புலிகள் மிக முக்கியமான அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

புலிகளின் கடந்த கால சகோதர இயக்க அழிப்பு, இலங்கை-இந்திய ஒப்பந்த எதிர்பு, இந்திய விரோதப் போக்கு, ஏகபோக பிரதிநிதித்துவம் போன்ற அரசியல் விவேகமற்ற தன்மைகளே புலிகளின் இன்றய நிலைமைகளுக்கு காரணமாகியுள்ளது. கிடைக்கப் பெற்ற பல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, கட்டம் கட்டமாக சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நோக்கி கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் புலிகளின் விவேகமற்ற இராணுவ நடவடிக்கைகளும் அரசியலற்ற சுத்த இராணுவப் போக்கும் அவர்களுக்கு இன்று வினையாகி உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டதோ அதே போன்று அந்த மக்களுக்காக அந்த மக்களின் நலனுக்காக இன்று அந்த மக்களுக்கு இந்த ஆயுதங்கள் அழிவை ஏற்படுத்தும் போது அந்த ஆயுதங்களை கீழே போடவும் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். ஆயுதங்கள் தேவைப்படும் போது பாவிப்பதற்கே அன்றி ஆயுதங்கள் இன்றி போராட முடியாது அல்லது வாழ முடியாது என்ற நிலை உருவாகக் கூடாது. ஆயுதங்கள் அல்ல முக்கியம். மக்களே பிரதானமானவர்கள். அந்த போராடும் மக்கள் ஆயுத வன்முறையால் தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து வன்முறையாக வெளியேற்றப்படுவதும் அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதம் மக்களின் விருப்பத்திற்கு முரணாக விரோதமாக செயற்படுவதும் மக்களுக்கான போராட்டமல்ல. மாறாக இது பயங்கரவாதமே. இதை யார் செய்தாலும் வரலாறு மன்னிக்காது.

மக்களின் போராட்டத்தை வென்றெடுப்பதை மையமாக கொண்டு செயற்ப்பட்டிருக்க வேண்டியவர்கள் தமது இயக்கத்தையும், தலைமையையும், இராணுவ நடவடிக்கைகளையும் முதன்மைப்படுத்தி செயல்ப்பட்டதினால் தற்போது தங்களுக்கு இருந்த மக்கள் பலத்தை கோட்டை விட்டுள்ளதாகவே எண்ணத் தோண்றுகின்றது. தங்களை மறுசீரமைக்க இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.

வன்னி மக்கள் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. புலிகளின் ஆயுதங்களும் மக்கள் தப்பிப் போய் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. இப்படியாக தப்பிப் போனவர்கள் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் ஊனமுற்று உள்ளனர். இந்தப் புலிகளின் ஆயுதங்கள் தமிழர்க்கு எதிராக மீண்டும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. எந்த மக்களின் உரிமைக்காக போராட ஆரம்பித்தனரோ? எந்த மக்களின் உழைப்பில் இயக்கம் உருவானதோ? எந்த மக்களின் உழைப்பில் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனரோ? அந்த மக்ளையே புலிகள் கொலை செய்ததை, இந்த கேவலமான நடத்தையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மக்களுக்காக ஆயுதங்களை ஏந்தினோம் என்று சொன்ன புலிகள் அந்த மக்களை சுட்டுக்கொன்று விட்டு எப்படி இனிமேல் இந்த ஆயுதங்களுடன் அந்த மக்களுக்காக போராட முடியும். புலிகள் யாருக்காகப் போராடினர் என்பதே இப்போது கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதுடன் புலிகளிடம் உள்ள இந்த ஆயுதங்கள் மக்களுக்கு எதிரானவைகள் என்பதையும் நிரூபித்துள்ளது.

விடுதலைப் போரட்டம் புலிகள் இயக்கத்தினரால் மட்டும் முன்னெடுக்கப்பட்டதென்றோ அல்லது தொடர்ந்தும் அவர்களின் தலைமையில் தான் நடாத்தப்பட வேண்டும் என்றோ நினைப்பது அல்லது அதற்காக செயற்படுவது அர்த்தமற்றது. எப்போது சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு காலத்தால் செயல் இழந்து போனதோ, பின்னர் எப்படி ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டதோ அதேபோல இன்று இந்த ஆயுதப் போரட்டம் வேறு ஒருவடிவத்திற்கு போக வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. புதிய பாதையை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இங்கு சிந்தித்து செயற்ப்பட வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியுள்ளது.

பிராந்திய நலனின் ஈடுபாடு கருதியும் பிராந்தியத்தில் பெருந்தொகையான தமிழர்கள் உள்ள இந்தியாவின் – இந்திய சார்பு நிலை தவிர்க்க முடியாததும் இயற்கையானதுமாகும். எந்தவொரு நாடும் இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும். நோர்வேயை எதிர்கால நடவடிக்கைகளில் இருந்து மிகச் சாதுரியமாக இந்தியா ஓரம்கட்டியுள்ளது. மேலும் புலிகள் ஒன்றும் புரட்சிகர அமைப்பு அல்ல. அதனால் அவர்களிடம் இந்தியாவையோ வல்லரசுகளையோ அரசியல் ரீதியாக கையாளும் அரசியலும் இவர்களிடம் இல்லை. புலிகள் அமெரிக்கா உட்பட எந்த அரசுடனும் உறவுகளைப் பேண விரும்புகின்ற அமைப்பு. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறி இந்தப் பின்னடைவைச் சந்தித்தற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இருக்க முடியும்.

புலிகளும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் பிராந்தியத்தை முதன்மைப்படுத்தி பிராந்தியத்தின் பங்காளிகளாக மாற முயற்ச்சிக்க வேண்டும். இதன் ஆரம்பப் படியாக ரிஎன்ஏ யினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவுடனான பேச்சுக்களில் இருந்து இதை ஆரம்பிப்பதும் பொருத்தமானதாக இருக்கும்.

புலம் பெயர்நாடுகளில் மக்களுக்காகவென நடாத்தப்படும் போராட்டங்கள் மக்ளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை இராணுவத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மையமாக வைத்து நடாத்தப்பட வேண்டியது அவசியம். தனி மனிதர்களையும் இராணுவ இயக்கத்தையும் முதன்மைப்படுத்தி போராட்டங்கள் செய்வது கடந்த கால தவறிப்போன போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும். புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் போராட்டங்கள் புலிகளுக்காக அல்லாது தமிழ்பேசும் மக்களுக்கானதும் சிறுபான்மையினருக்குமான போரட்டமாக மாற்றம் பெற வேண்டும்.

சர்வதேசங்களில் உள்ள சிறுபான்மையினர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பததன் மூலமும் அந்த சர்வதேச போரட்டங்களின் பகுதியாக எமது உரிமைப் போராட்டம் நிரந்தரமாக வென்றெடுக்க முடியும்.

ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

un_humanitarian.jpgஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக அவர் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக ஐ.நாவின் பேச்சாளர் மரி ஒக்காபி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மேலும் தெரிவித்துள்ளது

சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள்?

brig_shavendra.jpgகேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோர் மக்களோடு மக்களாக புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியிலேயே இன்னமும் உள்ளனர் என்பது தயா மாஸ்டரின் வாக்குமூலம் ஊடாக ஊர்ஜிதமாகியிருக்கிறது என்றும் பிரிகேடியர் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுமாத்தளனிலுள்ள 58ஆவது கட்ட ளையிடும் தளபதியின் அலுவலகத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே பிரிகேடியர் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படையினரிடம் சரணடைந்த புலிகளின் ஊடகப் பேச்சளரான தயா மாஸ்டர் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக புலிகளின் தலைமையின் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக தமது வாழ் நாளில் பொய்பேச வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப் பட்டதாகவும் இதனால் தாம் மிகவும் மனம் வருந்து வதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் மட்டுமல்ல அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்டனியும் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறிய தயா மாஸ்டர் இறுதி நேரத்தில் பிரபாகரன் தப்பிச் சென்றுவிடுவார். போராட்டத்தில் இறுதிவரை நின்று உயிரிழக்க மாட்டார்; அவர் இவ் வாறான மனப்பான்மையை கொண்டவர் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.

இதேவேளை, பிரபாகரன் இறுதிநேரத்தில் தப்பிச் செல்வதற்காக இன்னுமொரு நீர்மூழ்கியை வைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியின் தென்முனைப் பகுதியிலிருந்து எதிர்முனைக்கு கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்முனையினூடாக மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறிய பிரிகேடியர் சவேந்திர சில்வா, எனினும் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தியே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேறும் மக்களின் நலன் கருதியே இவ்வாறு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரிகேடியர் கூறினார்.

புலிகள் அனைவரும் இறுதி வரை போராட வேண்டும் என்றும் அனைவரும் சிவில் உடையில் நின்றே போராட வேண்டும் என்றும் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவ உளவுப் பிரிவின் தலைவர் பதவி நீக்கம்

korabelnikovafp.jpgரஷ்யா வின் மிகப்பெரிய உளவு அமைப்பான இராணுவ உளவுப் பிரிவின் தலைவரை ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கும் அதிகமாக அந்த பதவியில் இருந்துவந்த வலன்ரின் கொரபல்நிக்கோவ் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆனால், ரஷ்ய இராணுவ ஆட்குறைப்பு திட்டத்துக்கு இவர் முக்கியமான எதிர்ப்பாளர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஜோர்ஜியாவில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஏற்பட்ட சில தவறுகளுக்கு இந்த அதிகாரி மீதே அரசாங்கம் குற்றஞ்சாட்டப்படுவதாகவும் நம்பப்படுகிறது.