April

Sunday, September 19, 2021

April

நுவரெலியா கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மலையக இடதுசாரிகளின் மே தின விழா

may-day.jpgமலையக சோசலிச சக்திகளினதும் இடது சாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் மேதின விழா மே முதலாந் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

இடதுசாரிகளின் இம் மேதின விழாவிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி தோழர் ஏ.பி.கணபதிப்பிள்ளை தலைமை வகிப்பார். இவ்விழாவில் செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா, ஐக்கிய தொழிலாளர் சங்க நிர்வாகச் செயலாளர் எஸ்.ஜோதிவேல், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம், மகளிர் அமைப்புத் தலைவி மேனகா கந்தசாமி சத்தியம், ஆசிரியர் கலாபூஷணம் இல நாகலிங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஜீ.வி.டி.திலகசிரி, ஐக்கிய சேவையாளர் சங்க பிரதேச தலைவர் கே.நவரட்ணம் கலைமணி பசறையூர் க.வேலாயுதம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

நிவாரண உதவிகளை வவுனியாவுக்கு எடுத்துச் செல்ல விசேட விமான சேவை

fily-ap.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தோருக்கு விநியோகிப்பதற்காக தெற்கில் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் வவுனியா செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இலங்கை விமானப் படையின் சரக்கு விமானங்கள் பல இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலருணவுப் பொருட்கள்,  மருந்து வகைகள்,  குடிநீர்,  மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இவ்வாறு விமானம் மூலம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura_priyadarshana_yapa.jpgஊவா மற்றும் தென் மாகாண சபைகளின் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ளதாகவும் அவ்வாறு முடிவுற்றவுடன் அவற்றுக்கான தேர்தலை உடன் நடத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கிலும் மாகாணசபைத் தேர்தல் மட்டுமன்றி ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை ஏற்படும் நிலை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் நடந்து முடிந்த தேர்தல்களில் அரசாங்கம் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோன்று எதிர்வரும் தேர்தல்களிலும் அரசாங்கம் மகத்தான வெற்றியீட்டும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

காணமல் போன மாணவியை விடுவிக்க கோரி இன்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

thinu.jpgமட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆம் வகுப்பு மாணவியான சதீஸ்குமார் தினுஸிக்கா (வயது 8 ) என்ற மாணவி நேற்று முன்தினம் பாடசாலைக்கு சென்றிருந்தவேளை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.

இம்மாணவி பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார் என்பதை பொலிசார் பாடசாலை வரவு இடாப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். பாடசாலை முன்பாகக் கூடிய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இம்மாணவி காணாமல் போயுள்ள சம்பவத்தைக் கண்டித்தும், கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலைக்கு அண்மித்த வீதிகள் வழியாக இன்று பேரணியொன்றையும் நடத்தினர்.

காணமல் போன மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து தங்களால் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இருந்து வந்த படகு கடலில் மூழ்கி 9 தமிழர்கள் பலி

boat.jpgபோர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்திய கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

indiannavyship.jpgதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தென் இந்திய கரையோரப் பகுதிகளில் ஊடுருவக் கூடுமென்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளா மற்றும் தமிழ மாநிலக் கரையோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விடுதலைப் புலி உறுப்பினர்களை ஊடுறுவ விடாது தடுப்பதற்கு விகேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லெப்டினன் ஜெனரல் நோபல் தும்புராஜ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்: மே தின பேரணிக்கு தடை

may-day.jpgதேர்தல் நடைபெறுவதால் மே தின ஊர்வலம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படுகிறது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஊர்வலம் நடத்துவார்கள். பின்னர் பொதுக் கூட்டம் நடத்துவார்கள்.

சென்னையில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஊர்வலமாக சென்று, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள். பின் வீர வணக்கமும் செலுத்துவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடப்பதால், மே தின ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணைய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகள் மாவட்ட எஸ்பி அலுவலகம், கமிஷனர் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. சென்னையில் மே தின ஊர்வலம் நடத்த 8 அரசியல் கட்சிகள் அனுமதி கேட்டுள்ளன. தேர்தல் கமிஷன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அரசியல் கட்சிகளின் தொழிற் சங்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

புலிகளின் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிடமுடியாது- ஹிமாலயன் டைம்ஸ்:

himalayan-times.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென தி ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலையமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இதனால் இன்னமும் மிகவும் வலுவாலன நிலையில் காணப்படுவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அ.தி.மு.க. பேச்சாளர் மீது செருப்பு வீச்சு; தி.மு.க. தொண்டர் கைது

மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேத்துப்பட்டு அம்பேத்கார் திடலில் தெருமுனை கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் சிங்கை அம்புஜம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தி.மு.க.வை தாக்கி ஆவேசமாக பேசினார். தலைவர்களையும் விமர்சித்து பேசினார். இதை கேட்டுக்கொண்டிருந்த தி.மு.க. தொண்டர் விஜய ஜம்பு திடீரென ஆவேசம் அடைந்து செருப்பை கழற்றி வீசினார். அந்த செருப்பு பேச்சாளர் மீது விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய வரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தன்ர். உடனே போலீசார் விஜயஜம்புவை கைது செய்தனர்.

பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில் ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்கள் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் அங்குள்ள கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சகல மீனவப் படகுகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு புலிகளின் தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்:-

பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள மிகவும் குறுகியதும், ஒடுக்கமானதுமான பிரதேசத்தில் முற்றாக முடக்கிவிடப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள் எவ்வாறாவது தப்பிச் செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர். பிரபாகரன் மற்றும் அவரை சுற்றியுள்ள முக்கியஸ்தர்கள் மாத்திரம் தப்பிச் செல்வதற்கென ஆறு பாரிய படகுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன தொழில் நுட்ப கருவிகள், ஜி. பி. எஸ். கருவிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட சகல வசதிகளையும் கொண்டதாக இந்த படகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தப்பிச் செல்பவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட மேலும் 5 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார். எனினும், புலிகள் எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாத வகையில் சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகள் தங்களது பாதுகாப்புக்காக பணயமாக பிடித்துவைத்துள்ள பொது மக்கள் தரைவழியையோ கடல் வழியையோ பயன்படுத்தி எந்த விதத்திலாவது தப்பி பாதுகாப்பு படையினரை நோக்கி வர தயாராகக் காத்திருக்கின்றனர். இந்த மக்கள் தரைவழியால் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி தடுத்துவரும் புலிகள் இந்த மக்கள் கடல் வழியை பயன்படுத்தி தப்பிச்செல்வதையும் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் உள்ள சகல மீனவப் படகுகளை உடைத்து தகர்க்கும் வகையிலும், எரித்து நாசமாக்கும் வகையிலும் புலிகளின் உயர்மட்டம் தமது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.