April

Saturday, July 31, 2021

April

விடுதலைப் புலிகள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை: புலித்தேவன் அறிவிப்பு

puli_thevan0.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், “நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்” எனவும் கோரியிருக்கின்றார்.

“நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய புலித்தேவன், “நேரம் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

சிறுவர்கள் இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

baby-01.jpgஅக்மீமன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததோடு மற்றைய சந்தேக நபர் இனந்தெரியாத கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன நுகேகந்த பகுதியில் வைத்து 10 வயது சிறுமி ஒருவரும் மூன்று வயது சிறுவன் ஒருவனும் கடந்த 15ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். பின்னர் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 18ஆம் திகதி சிறுமியின் சடலமும் 19ஆம் திகதி சிறுவனின் சடலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீட்டில் வசித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின்படி, மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை மீட்பதற்காக பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மறைத்து வைத்திருந்த கைக்குண்டை சந்தேக நபர் பொலிஸார் மீது வீசித் தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேக நபர் கராபிடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, யக்கலமுல்ல கொட்டாவ காட்டுப் பகுதியில் இருந்து நபரொருவரின் சடலமொன்று நேற்றுக்காலை (20) மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த சடலம் பிரதான சந்தேக நபரின் உறவினர் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். இவருக்கும் சிறுவர்களின் கொலையுடன் தொடர்பு இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை சடலம் அடையாளங் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இருவரினதும் பிரேத பரிசோதனை பத்தேகம நீதவானின் முன்னிலையில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்றது. இதேவேளை, கொல்லப்பட்ட 10 வயது சிறுமியரின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஊர் மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர். இவரின் உடலில் 12 வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன். – ரவூப் ஹக்கீம்

sri-lanka-parliament.jpgவடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. வடக்கில் கட்டம் கட்டமாகத் தேர்தலை நடத்த அரசாங்கம் எண்ணுகிறது. இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கக் கூடியவாறான ஜனநாயக சூழலையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் எம்.பீ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் எம்.பீ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்வோர் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் விவாதித்து நிறைவேற்றும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இது சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, சிவிலியன்களை விடுவிப்பதற்கு புலிகள் இயக்கத்திற்கு அரசாங்கம் 24 மணித்தியாலத்தை வழங்கியிருக்கின்றது. அதுபோல் இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன்.

மேலும், முஸ்லிம் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. புல்மோட்டை ஜின்னா நகர் பகுதிகளில் முஸ்லிம் பெயர் கொண்ட கிராமங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இது மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும். தயவு செய்து இதனைச் செய்யாதீர்கள்.’

தாக்குதல் தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவிப்பு

puthumathalan.jpg அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவர் டாக்டர் சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களில் சிவ மனோகரன் என்ற ஒரு இறுதியாண்டு மருத்துவ மாணவர் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் அரச பகுதிகளுக்கு இடம்மாறுவது குறித்த செய்திகள் பற்றி, கருத்துவெளியிட்ட அவர், தாம் இது குறித்து வரும் செய்திகளைக் கேள்விப்படுவதாகவும் ஆனாலும் எண்ணிக்கை குறித்து தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் தப்பியோடும் பொதுமக்களை சுடுவதாக அரச தரப்பு வெளியிட்டுள்ள படங்கள் குறித்தும் தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக அவர் கூறினார். தமது பகுதிக்கு வரும் மக்களில் பலர் ஷெல் காயங்களுடனும் சிலர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடனும் வருவதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது எட்டு மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன

sri-lanka-parliament.jpgஜனாதிபதி இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது எட்டு மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நான் முன்னர் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டிருந்தது. என்று அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நானும் ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன்தான். நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன். இன்று புலிகள் மூன்று சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த முறைதான் கிழக்கு மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினர் தலைகால் புரியாமல் செயற்படுகிறார்கள். எதனைச் செய்வதற்கும் நமக்கு நாடு ஒன்று வேண்டும். நாடு இருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். ஐ. தே. கவினர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மாவிலாறு அணையை மூடியதன் சாபத்தைத்தான் இன்று பிரபாகரன் அநுபவிக்கின்றார். அந்தப் பாவத்தால்தான் இன்று அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.’

தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட்; பிரபாகரனின் பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை – அமைச்சர் ஹேமகுமார

hemakumara.jpgஅப்பாவி தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, தமது இனத்தையே கொன்று உண்டு வாழுபவர் தான் பிரபாகரன். அப்பாவி தமிழ் மக்களையே துன்பப்படுத்தி மகிழுகின்ற பிரபாகரன் அவரது மகனையும், மகளையும் லண்டனிலுள்ள சொகுசு பாடசாலைகளில் படிக்க வைத்துள்ளார். ஆனால் அவர் உருவாக்கிய படைகளுக்கு அப்பாவி தமிழ் பிள்ளைகள் பலவந்தமாக சேர்க்கப்பட்டனர். அப்பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கின்றனர்.

புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவென எமது பாதுகாப்பு படையினர் புலிகள் அமைந்திருந்த அணையை உடைத்தனர். மக்கள் வெள்ளம் போல வந்தனர். அந்த அப்பாவி மக்களைக் கூட புலி தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து கொன்று குவித்தனர், காயப்படுத்தினர்.

இவ்வாறு குரூரமான பயங்கரவாதிகளுக்குத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், எம்.பி. என். ஸ்ரீகாந்தா போன்றோரும் ஆதரவு நல்குகின்றனர். எம்.பி என். ஸ்ரீகாந்தா புலிகளின் உளவாளியாவார். இவர் 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மறைந்த காமினி திஸாநாயக்கவின் அல்பிரட் ஹவுஸ் இல்லத்திற்கு வந்து போனார். அதன் பின்னரே மறைந்த காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ஸ்ரீகாந்தா புலிகளிடம் சென்றிருந்தார்.

பொருட்களின் வரி நீக்கத்தால் அரசுக்கு 999 மில். ரூபா நட்டம்

தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியை 3% ஆக அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படாதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு வரிகளை நீக்கியதாலும், மட்டுப்படுத்தியதாலும் அரசாங்கத்திற்கு 9991 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகை ஒருவருடத்திற்கு சமுர்த்தி நிவாரணமளிக்க போதுமானதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்ட மூலம் அதிகார சபை (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பொது மக்களுக்குச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தேசிய வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இறக்குமதி வரி 25% அறவிடப்பட்டதால் 222 மில்லியன் வருவாய் இருந்தது. ஆனால், தற்போது தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், அரசாங்கத்திற்கு பல்வேறு விதமான செலவுகள் உள்ளன. இன்று (நேற்று 21) முற்பகல் 11 மணிவரை பாதுகாப்பு வலயத்திலிருந்து 39042 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். இன்று சிகரட் மூலம் கிடைக்கும் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இழக்கப்பட்டவற்றை ஈடு செய்து தேசத்தைக் கட்டியெழுப்பு முகமாகவே ஒரு வீதமாக இருந்த வரியை 3%ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எந்தவித தாக்கமும் ஏற்படாது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

படையினரால் மீட்கப்படும் மக்களை தங்கவைக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி

puthu.jpgபாது காப்புப் படையினரால் தற்போது மீட்கப்பட்டு வரும் பெருந்தொகையான பொது மக்களை தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள அதேசமயம், மருத்துவ நிபுணர்கள், மின்சார சபை அதிகாரிகள் அடங்கிய இரண்டு விசேட குழுக்கள் நேற்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இதற்கு மேலதிகமாக வந்துள்ள மக்களின் நிலைமைகளை விசேடமாக அவதானிக்கவென ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினமும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று மற்றுமொரு குழுவுடன் சென்றுள்ளதுடன் இன்று இன்னுமொரு குழு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொள்ளுப்பிட்டியில் உள்ள அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

மீட்டெடுக்கப்பட்ட மக்களை நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கவென மேலதிகமாக 154 பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 58 ஆயிரம் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன் 6700 கூடாரங்களும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அருணாச்சலம், கதிர்காமர், வலயம் – 01 ஆகிய மூன்று நிவாரணக் கிராமங்களிலும், தாண்டிக்குளம், புதுக்குளம், ஓமந்தை, ஆண்டி புளியங்குளம் மற்றும் முதலியார் குளம் ஆகிய ஐந்து பாடசாலைகளிலும் இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 30 ஆயிரத்திற்கும், 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட மக்களே எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எதிர்காலத்தில் வருகைதரவுள்ள மக்களையும் எந்த பாதிப்புக்களுமின்றி தங்க வைக்கவென ஆயிரம் ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரயான்குளத்தில் – 600 ஏக்கர், மெனிக்பாம் – செட்டிக்குளம் பகுதிகளில் – 200 ஏக்கர், மதவாச்சி – செட்டிக்குளம் பகுதிகளில் 200 ஏக்கர் காணிகள் தற்பொழுது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி – அரசாங்கம் தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது.

பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும் பலப்படுத்தும் விடயமாகும்.

விரைவில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் சில தினங்களில் புலிகளிடமிருந்து அனைத்து சிவிலியன்களையும் பாதுகாப்பு படையினர் மீட்டுவிடுவர்.

உலகில் பிரதேசங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாத இயக்கங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதற்கு இலங்கை இராணுவத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgஇலங் கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்துவித இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கமானது முழு நாட்டினையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் ஈழம் இராச்சியத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நனவாகிவிட இராணுவத்தினர் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே பலமான அபிவிருத்தியுள்ள நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். இன அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்து இன மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் இராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இராணுவத்தின் பலத்தை ஒன்றுதிரட்டும் நீண்ட கால நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இராணுவம் முற்றாக புனரமைக்கப்பட வேண்டும்.

வடபகுதியிலும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களிடமிருந்து விடுதலைப் புலி உறுப்பினர்களால் பிரித்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பத்தினையும் அரசாங்கம் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.