April

Saturday, July 31, 2021

April

புதுமாத்தளனுக்கு மேலும் 1200 மெ.தொ. உணவுப் பொருட்கள். திருமலையிலிருந்து நாளை கப்பல் புறப்படுகிறது

p-devaaratna.jpg முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதிக்கு 1200 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் மேர்க் டப்ளின் சரக்குக் கப்பல் நாளை திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது.

17,500 பக்கற் குழந்தைகள் பால் மா, அரிசி, சீனி, கோதுமை, சோயா இறைச்சி, மிளகாய், மல்லி உட்பட சமையலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன தெரிவித்தார். தற்போது கொண்டு செல்லப்படும் 1200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் புதுமாத்தளனுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2600 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஓமந்தை ஊடாக முல்லைத்தீவு புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதை விட அதிகளவு தற்போது கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஆணையாளர் புதுமாத்தளனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் சந்தர்ப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் முதல் வாரம் புதுவருடத்திற்கு முன்னதாக 1400 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண குறிப்பிட்டார்.

மாலைதீவில் 10 ஆயிரம் வீடுகள் இலங்கையர்களால் நிர்மானிக்கப்படும் – அமைச்சர் ராஜித தகவல்

rajitha.jpg மாலைதீவில் பாரிய வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கும் பணியை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் முன்வந்துள்ளதாக தேசநிர்மான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் மாலைதீவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின் பலனாகவே இந்த நன்மை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இத்திட்டத்தின்படி மாலைதீவின் தலைநகரில் பாதி சொகுசு வசதிகளுடன் கூடிய 10 ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைக் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு

badurdeen.jpgபுத்தளம் நகரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக கற்கை நிலைய பணிக்கென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் 20 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். கால்நடை வளத்துறை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த நிதியினை அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் தெரிவித்தார்.

இப்புனரமைப்புப் பணிக்கான நிதி புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கற்ற சமூகத்தை உருவாக்க எடுக்கப்படும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இத்திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நெறி புத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் பல்துறைகளில் முன்னேற்றம் காணுவார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளதாக, பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம். இர்சாத் மேலும் கூறினார்

கிண்ணியாவில் அல்-அக்ஸா கல்லூரிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அல் அக்ஸா கல்லூரியையும் அல் அக்ஸா கணிஷ்ட வித்தியாலயத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமெனக் கோரி கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவர் அமைப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டி ருக்கும் அல்-அக்ஸா கல்லூரியையும் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அல்-அக்ஸா கனிஷ்ட பாடசாலையையும் ஒன்றாக இணைப்பதனால் ஏற்படும் அனுகூலங்களையும் அவை பிரிந்து செயல்படுவதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் அம்மாணவர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1700 மாணவர்களைக் கொண்ட அல்-அக்ஸா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.4 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறையே இல்ல விளையாட்டுப் போட்டி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்கு அப்பால் உள்ள கரடுமுரடான எழிலரங்கு மைதானத்தில் நடத்தப்படும். அத்தோடு கல்லூரியில் காலை தேகப் பயிற்சியையும் உடற்கல்வி பாடத்துக்கு தேவையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

ஒரே காணிக்குள் இயங்கும் இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இணைவதன் மூலம் 40 மீற்றர் நீளமும் 60 மீற்றர் அகலமும் கொண்ட ஒரு பயிற்சி மைதானத்தை உருவாக்க முடியும்.

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவி

pakis-japan.jpg பாகிஸ் தானின் அபிவிருத்திக்கேன சர்வதேச கொடையாளி நாடுகள் 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவியை வழங்க முன்வந்துள்ளார்கள். உலக வங்கி மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால், டோக்கியோவில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இதற்கான மாநாட்டில் 30க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டன.

இதனைவிட பாகிஸ்தானிய பொருளாதார பிரச்சினையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியமும் 7 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது.

அமெரிக்காவும், ஜப்பானும் தலா ஒரு பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்துள்ளன. உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய திட்டங்களின் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த உதவிகளின் நோக்கம் என்று கொடையாளிகள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டம் தொடர்பில் கால அவகாசம்

இலங்கையில் மத்திய அரசினால் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் விசேட திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மாகாண சபைகள் தமது கருத்துக்களை தெரிவிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை ஜனாதிபதி மேலும் ஒரு மாத காலம் நீடித்தள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச திருத்த சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருந்த வேளையில் வெள்ளிகிழமையன்று கிழக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமைக்கு கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாகாண ஆளுனருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வுகளையும் சுனாமி ஆபத்தையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏற்பாடு!

alert_towers1.jpgநாட்டில் அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாடுகளை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் நில அதிர்வுகளையும் சுனாமி ஆபத்தையும் முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய இரு கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் சுரங்க ஆய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி கிஸ்ரி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்திலுள்ள மஹகந்தராவ மற்றும் மாத்தறையிலுள்ள ஹக்மன ஆகிய பிரதேசங்களில் பொருத்தப்படவுள்ள இவ்விரு கருவிகளும் அமெரிக்காவின் கலிபோனிய பல்கலைக் கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவுடன் இணைந்ததாக செயற்படும்.

இந்து சமுத்திரத்தில் ஏற்படக்கூடிய சுனாமிப் பேரலைகள் குறித்து துரித தகவல்களைப் பெறும் ஆற்றல் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் அனர்த்தங்கள் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கைப்போல விரைவில் வடக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – தொழிற் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே

கிராமிய மக்கள், அரசின் செயற்திட்டங்களை நன்கு உணர்ந்துள்ளனர். மகிந்த சிந்தனை மூலம் கிராமங்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்கள் எமது அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அரசை சூழ்ந்தும் நிற்கின்றனர் என்று தொழிற் பயிற்சி தொழில் வழங்கல் அமைச்சர் பியசேன கமகே கூறினார்.  கிங்கங்கைக்குக் குறுக்கே கல்வான என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது;

கடந்த காலங்களில் இந்த நாடு சகல துறைகளிலுமே அமைதியற்றுத் தவிர்த்தது கடந்த மூன்று வருடகாலமாக எமது ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளால் இன்று நாட்டிலே அமைதி நிலை ஏற்பட்டுள்ளது. அன்று கிழக்கிலே பயங்கரவாத நிலை ஏற்பட்டபோது அதனை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டது இன்று அங்கு அமைதி நிலவுவது மாத்திரமல்ல அபிவிருத்தி வேலைகளும் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது அதே போல் வடக்கிலும் மிக விரைவில் அபிவிருத்திச் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அதனை நாம் செய்தே தீருவோம்.

ஐக்கிய தேசிய கட்சி என்னதான் கூறினாலும் இன்று மக்கள் அக்கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கைகளை இழந்து விட்டனர். அக் கட்சியினரும் மக்களை விட்டுத் தூர விலகிக் கொண்டிருக்கிறது. இந் நிகழ்வில் தென் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெமடி சம்லிவிதானாச்சி உட்பட மற்றும் பலரும் உரையாற்றினர்.

Sri Lanka: Trapped and Under Fire : HRW’s Photogenic Report

HRW Logohttp://www.hrw.org/en/features/sri-lanka-trapped-and-under-fire

Human Rights Watch researcher Anna Neistat says both sides in Sri Lanka’s conflict are violating the laws of war. Approximately 100,000 civilians are trapped in a government-declared “no-fire zone” in the northern Vanni region. Tamil Tiger (LTTE) rebels have prevented civilians from leaving a tiny strip of land, while government forces have repeatedly and indiscriminately shelled the area.

These photos are from a makeshift hospital in Putumattalan that was treating survivors of attacks on April 8 and 9, 2009.  Many were women and children who were waiting in a food distribution line in Pokkanai when artillery shells hit.

ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

nadesan-10.jpgபொது மக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார்.
 
வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.