April

April

கடற்கொள்ளையை எதிர்த்து உலகம் உறுதியுடன் செயல்பட சோமாலியா கோரிக்கை

somaliya-robbery.jpgஆப்பிரிக்க முனை வழியே பயணம் செய்யும் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை சம்பவங்களை எதிர்த்து அனைத்துலக சமூகம் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சோமாலியாவின் பிரதிநிதி கேட்டுள்ளார்.

இந்த கடற்கொள்ளையர்களுக்கு நிதியுதவி வழங்கி, பின்னணியில் இருந்து இயக்கி வரும் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் சோமாலியத் தூதர் ஐக்கிய நாடுகள் சபைபில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் மட்டும் சோமாலிய எல்லையை அண்மித்த கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

சோமாலியாவின் தென்புறத்தே, பிரான்ஸின் போர்க்கப்பல்களில் ஒன்று, கென்யாவின் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் 11 பேரை கைப்பற்றியுள்ளதாகவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம்

இலங்கையின் வடகிழக்கே போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.  மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும், அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாலும் சுத்தமான நீர் அருகி வருவதாலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

போர் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகள் போதுமான நிலையில் இல்லாததால் அங்கு அங்கு தொற்று நோய் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண  தெரிவித்தார். ஆனாலும் இதுவரை தொற்று நோய் பரவல் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

p-devaaratna.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அன்பளிப்பாக குழந்தைகள் பால் மா, உடு புடவைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்க விரும்பும் நலன்விரும்பிகள், வர்த்தகர்கள் இருப்பின் உடனடியாக தம்முடன் தொடர்புகொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு உறவினர்களின் வீட்டுக்கு செல்லல் என்ற பாரம்பரியத்தை பின்பற்றக்கூடியதாக ‘புதுமாத்தளனுக்கான உறவுப் பயணம்’ என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 20 ஆம் திகதி சுமார் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் மேர்க்ஸ் டப்ளின் கப்பல் செல்லவுள்ளது.

இக்கப்பலில் அங்குள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்களையும், உடுபுடவைகளையும் அனுப்ப அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண ஏற்பாடுகளை செய்துள்ளார்.

 ஜனாதிபதியின் ஆலேசானைக்கு அமைய, இந்த ஏற்பாடுகள் செய் யப்படுவதுடன் அந்த மக்களுக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள், உடுபுடவைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், போன்றவற்றை அனுப்ப விரும்புபவர்கள் 011-2478322 அல்லது 0112478323, 0112478324, 0112478325 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை

udaya_nanayakkara_brigediars.jpgகடந்த இரண்டு தினங்களில் 757 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திங்கட்கிழமை 518 பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை 239 பொதுமக்களுமே மூன்று தடவைகளில் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 68,037 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி வந்த 136 பொதுமக்களுள் 45 ஆண்கள், 39 பெண்கள், 22 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் அடங்குவர். அம்பலவான்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வந்த 103 பொதுமக்களில் 32 ஆண்கள், 27 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

மன்னாரில் தொடர்ச்சியாக மின்சாரம் தடை

மன்னாரில் கடந்த சில வாரங்களாக பகல்-இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்பட்டு வருவதாகவும் இதனால் மக்களின் அன்றாட தேவைகள் தொடர்ச்சியாகத் தடைப்பட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். சித்திரை புத்தாண்டு தினத்தன்று முழுநேரமும் மன்னாரில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தொடர்ச்சியாகவும், பகல், இரவு வேளைகளிலும் மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமையால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், மின் சாதனங்கள் பழுதடைவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

ஏ9 வீதியை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்குத் திறக்க அரசாங்கம் முயற்சி

a9-road.jpgஅடுத்த மாதத்தில் ஏ9 வீதியை மக்கள் பாவனைக்குத் திறந்து விடுவதற்குத் திட்ட மிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியைத் திறந்து விடும் பொருட்டு கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளைக் காரியாலயம் ஒன்றை திறக்கவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏ9 வீதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் யாவும் அகற்றப்பட்டு அது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்,ஏனைய பணிகள் அனைத்தும் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் கிடைக்கும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ9 வீதி ஓமந்தையில் இருந்து முகமாலை வரை கடந்த மாதம் திறக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக படையினருக்கான மற்றும் யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசிய விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இலங்கைப் பிரச்சனையை முன் வைத்து தேர்தலை புறக்கணிக்க சரத் திட்டம்?

sarath-kumar.jpgஇலங்கைப் பிரச்சனையை முன் வைத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கட்சியுடனும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியுடனும் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால், சரத்குமார் திடீரென மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பாஜகவை கழற்றிவிட்டார். கார்த்திக் பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனால் இந்த இருவரையும் விட்டு விட்டு தனித்துப் போட்டி என பாஜக அறிவித்துவிட்டது.

இந் நிலையில் சரத்குமார்-கார்த்திக் கூட்டணி அமைக்கலாம், இருவரும் இணைந்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த இருவரும் இல்லாமலேயே இன்று புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்து புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்கிவிட்டன. இதில் சரத்குமாரையும் சேர்க்க இந்தக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் முயன்று வருகின்றன.

இந் நிலையி்ல் சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனை குழுக் கூட்டம் அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைபாடு குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரமும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் முதலில் கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும், பின்னர் தான் தேர்தலை சந்திக்க முடியும் என்று கூறியதாகத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகளையே நியமிக்காமல் தேர்தலில் போட்டியிடுவது வேஸ்ட் என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கையில் நடக்கும் தமிழர் படுகொலையை கண்டித்து தேர்தலையே புறக்கணிக்கலாம் என்றும் கட்சியின் சில தலைவர்களும் யோசனை கூறியுள்ளனர். இதையடுத்து தேர்தலை புறக்கணிப்பதா அல்லது சில தொகுதிகளில் ம்டடும் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பதை சரத்குமார் இன்றோ நாளையோ அறிவிப்பார் என்று தெரிறது.

பூமி அதிர்ச்சியால் பொத்துவில் பகுதியில் சிறு சேதங்கள்!

நாட்டில் இன்று காலை ஏற்பட்ட மிதமான பூமியதிர்ச்சியால் பொத்துவில் பானம பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் அகழ்வாராய்ச்சி மத்திய நிலையத்தின் சுனாமி மற்றும் பூமியதிர்ச்சி எச்சரிக்கை நிலையத்தின் விஞ்ஞானியான  எஸ்.ரீ. களுபண்டார தெரிவித்தார்.

இன்று காலை 8.50 அளவில் இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகவும் இதன் அளவு சுமார் நான்கு ரிச்டர் எனவும் கூறினார். இரண்டு விநாடிகள் மட்டும் இது நீடித்ததால் இதன் பாதிப்பு வெகுவாகக் குறைந்தே எனவும் கூறினார். நில அதிர்வு மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்குப் பரவியுள்ளது.

கூடுதலான அதிர்வு பொத்துவில் பானம பகுதிகளில் உணரப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த வீடுகளின் ஜன்னல்களின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடலுக்கடியில் அன்றி தரைப்பகுதிலேயே இந்த பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி அனர்த்தம் ஏற்பட வழியில்லை என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

ஏவுகணைகள் கண்டுபிடிப்பு

sam-missile.jpgநந்திக் கடல் பிரதேசத்தில் 53 ஆம் படைப்பிரிவின் வீரர்கள் நேற்று நடத்திய தேடுதலின் போது விமானங்களைத் தாக்கக் கூடிய நான்கு ஏவுகணைகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக் காலை இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற புலிகள் இவற்றை மறைத்து வைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். 

உற்சவ தினங்களில் மூவர் மரணம்: 447 பேர் காயம்

தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 13 ஆம் 14 ஆம் திகதிகளில் ஏற்பட்ட விபத்துக்களால் மூவர் உயிரிழந்ததுடன் 447 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அந்தப்பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை 447 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 173 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மூவர் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அவர் கூறினார். அம்மூவரில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்தவர் என்றும் ஏனைய இருவரும் ரயிலுடன் மோதியவர்கள் எனவும் குறிப்பிட்டார்.

பட்டாசு கெளுத்தியதில் இம்முறை இருவரே காயமடைந்துள்ளனர். வீதி விபத்துக்கள் மூலம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது. அதன்படி 155 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.

மேலும் வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களால் 78 பேரும், மோதல்களால் 66 பேரும், ஏனைய விபத்துக்களால் 62 பேரும், விளையாட்டுகளின்போது 18 பேரும், தொழில்துறைகளின்போது 18 பேரும், தமது கவனயீனத்தால் 06 பேரும் காயமடைந்துள்ளனர் என டொக்டர் ஆரியவன்ச மேலும் தெரிவித்தார்.