April

April

அகதியாகிப் போன மனிதம் : ஜோ செனவிரத்ன

Wanni_War_IDPs(லங்காஈ நியுஸ் இணையச் சஞ்சிகையில் ஜோ செனவீரரத்தின சிங்களத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் அஜீவன்.)

– http://www.lankaenews.com/Sinhala/news.php?id=8696

இன்று சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியொன்றுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பயங்கரவாதிகளின் இறுதி எப்படி இருக்கும் என்பதிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் மற்றும் உலகமும் வியப்போடு இருப்பது வியப்பான விடயமல்ல. 30 வருடங்களுக்கும் மேலாக சிங்கள மற்றும் தமிழரிடையே அரசியல் வேறுபாடுகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் துன்பத்தை மட்டுமே அளித்து வந்த போர் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்பதை தினசரி செய்திகள் கூறுகின்றன.

இது சிங்களவர் மனங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும், அபிமானத்தையும் தருவதாக இருக்கிறது. ஆனால் தமிழர் மனங்களுக்கோ தமது மன உறுதி தளர்ந்து தோல்வியில் மனமொடிந்து நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது. போர் ஒன்றின் வெற்றி தோல்விகளின் பின் இறுதியாக மனித மனங்களில் ஏற்படும் இந்த உணர்வுகள், எவருக்கும் பொதுவானது. இந்த இரு தரப்பும் தமது மதங்களின் படி இறுதி நிகழ்வுகளையும் நடத்தி ஆத்ம சாந்திக்காக பிராத்தனை கூட செய்வார்கள்.

இதற்கு முன் இரு முறை அதாவது 1971, 1989 ஆகிய வருடங்களில் தேசாபிமானம் கொண்ட சிங்கள இளைஞர்கள் அப்போதைய அரசைக் கவிழ்த்து சமத்துவமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு நடத்திய புரட்சியின் போதும் இதே போன்ற வெற்றி , தோல்வி இரண்டை பெற்றவர்கள் இருந்தார்கள். ஒரு சாரார் வெற்றிக் கழிப்பில் திழைத்த வேளையில் மற்றொரு சாரார் சோகத்தில் அமிழ்ந்து கண்ணீர் வடித்ததை நம்மால் இன்றும் மறக்க முடியவில்லை.

இந்த வெற்றி பெற்றவர்களிலும், தோல்வியைத் தழுவியவர்களிலும் இடையே நடந்த மோதலுக்குள் அகப்பட்டு சின்னாப் பின்னப்பட்டவர்களது வேதனைகளை உணரும் மனித நேயமுள்ள ஒரு சிலராவது இந்த நாட்டில் எப்படியும் மீதமாகி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையே இந்த மடலை எழுதும் தைரியத்தை எனக்களித்துள்ளது.

சிங்களம் – தமிழ் என, இனவாதத்துக்குள் மனிதம் தொலைந்து போய் இருந்தாலும் இந்த யுத்த மோதல்கள்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் மனிதர்கள் என்பதை நிராகரிப்பவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இப்படியாக நீங்கள் அனைவரும் ஆயுதம் தரித்து ஒருவரை ஒருவர் கொலை செய்வது யாரை? அது தமிழீழ பயங்கரவாதிகள் மற்றும் தேசத்தை காக்கும் வீரர்கள் என்பதாகட்டும், சிங்கள படை மற்றும் விடுதலைப் புலி போராளிகள் ஆகட்டும், நீங்கள் ஏப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். ஆனால் உங்கள் உணர்வுகளில் இங்கே மனிதர்கள் யாரும் இறக்கவில்லை என்றே நீங்கள் கருதுகிறீர்கள்.

இவை காலா காலமாக ஒருவர் அடுத்தவர் மேல் உருவாக்கிக் கொண்ட, அச்ச உணர்வுகளின் பாதிப்பாகவும், அடுத்த ஒரு பகுதியினர் மீது தமது பல பிரயோகங்களை பிரயோகிக்கும் ஆசை கொண்ட அதிகார மனிதர்களால் ஏற்படுத்தப் பட்ட கொலை வெறி கொண்ட அரசியல் தன்மை என்பதாகவுமே இதை நாம் பதிவு செய்யலாம்.

அதை இப்படியும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். கொல்லப்படும் மக்களை ஒரு வெறுப்புதத் தன்மைக்குள் தள்ளி அல்லது திணித்து, அவர்களின் மனிதத் தன்மையை மறக்க வைப்பதே இந்தக் அதிகார வர்க்கத்தின் முதல் முயற்சியாகும். அவர்களால் கொடுக்கப்படும் அல்லது குறிக்கப்படும் அல்லது அழைக்கப்படும் பெயர்கள் ஆரம்பத்தில், அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் தன்மையையே மனித மனங்களிலிருந்து அகற்ற வழி செய்கிறது.

அதனால் இவர்கள் மனிதர்களாக இல்லாமல் நம்மிலிருந்து வேறுபட்டுப் போகின்றனர். அப்படி வேறுபடுத்தப் படுவோர் தன்னைச் சார்ந்தவர்கள் இல்லை என்றாகி விடுகிறது. தன்னைச் சாராத எதிரியை கொல்வது நியாயப்படுத்தப்படுகிறது. அது பின்னர் நியாயாமானதாகியும் விடுகிறது.

பிரிவினைவாதி – பரதேசி – துரோகி – வேற்று மதத்தவன் – இனத்துரோகி – தேசத்துரோகி – கோத்திரத்தின் எதிரி – பச்சைத் துரோகி -கெரில்லா ………….. இப்படியான பெயர்களால் நாமம் சூட்டப்படுவோர் கொல்லப்படக் கூடியவர்கள் என்றாகிவிடுகிறது. அப்படி கொல்லப்படுவோர்ர் அல்லது மரணிப்பவர்கள் மனிதர்கள் அல்ல. அந்த மனிதர்கள் மேல் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை. அந்த மனிதர்கள் எம்மை விட்டு அகன்றுவிட்ட அல்லது எம்மால் தூக்கி எறியப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் தொடர்பாக கலங்கவும் தேவையில்லை. அவர்களது மரணங்களே எமது வெற்றிச் சின்னங்ககள் என ஊடகங்களில் சொல்லி பெருமை கொள்ளலாம். சந்தோஷப்படலாம். அப்படி இறந்தவர்களை காட்சிப்படுத்துவதால் மகிழலாம். அவர்கள் பிணங்களைப் பார்த்து இன்பம் அனுபவிக்கின்றனர். டுட்ஸி இனத்தவரது பிணங்கள். அப்கன் போராளிகளது பிணங்கள். அசாம் பிரிவினை வாதிகளின் பிணங்கள்.பாலஸ்தின போராளிகளின் பிணங்கள் இவை அனைவரும் எம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை மக்கள் மறக்கவே செய்கின்றனர். அங்கும் இறந்து போனவர்கள் எம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்தான் என்பதை எம்மிடையே மறைக்க வைக்க அவர்களால் இலகுவாக முடிகிறது. எம்மிடம் உருவாகும் அந்த அனுதாபத்தையும் சோகத்தையும் எம் இதயஙங்களிலிருந்து மறக்கடிக்க வைக்க அவர்களால் நிச்சயம் முடிகிறது.

வனாந்தரங்களில் உள்ள மிருகங்கள் கூட, மனிதர்கள், மனிதர்களை வேட்டையாடுவது போல வேட்டையாடுவதில்லை. மிருகங்கங்களுக்கு இல்லாத அளவு நாகரீகமும், கலாச்சார விழுமியங்களும் கொண்டு வாழும் மனிதன், இன்னொரு மனிதனை சாகடிப்பதில் திருப்பதி அடைகிறான். இவர்களிடம் ஜெனித்த புத்தரும், காந்தியும், யேசுவும், அல்லாவும், மனித உயிர்கள் மேல் மட்டுமல்ல விலங்குகள், செடி கொடி, ஆகியவற்றின் மேல் கூட அன்பு செலுத்துங்கள் என்றது மட்டுமல்லாமல் முழு உலகின் தன்மையையும் சீரழிக்காது பாதுகாக்க வேண்டுமானால் அன்பு – கருணை – நேசம் – பாசம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு பல நூறு தத்துவ விளக்கங்களோடு சொல்லிச் சென்றார்கள்.

அந்த உத்தமர்களின் தர்மத்தை, கிளிப்பிள்ளைகள் போல் மனப்பாடமாக சொல்லிக் கொண்டும், கோயில் குளங்களை நிர்மாணித்துக் கொண்டும் , உலகம் பூஜிக்கும் படைப்புகளை உருவாக்கிய மனிதன், கொலை கலாச்சாரத்தை மென் மேலும் வளர்த்துக் கொண்டே செல்கிறான்.

முதலாம் – இரண்டாம் உலகப் போரில், மாபெரும் மனித அழிவுகளுக்கு மத்தியிலும், கிரோஷீமா நாகசாக்கி போன்ற அணு சங்காரங்களிலும் மனித உரிமைகளை காப்பதற்காகவே ஐநா உருவானது. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக மனித உயிர்களைப் பலி கொள்ளும் மோதல்களும் போர்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

அண்மையில் சூடான் ஜனாதிபதி டிமால் அல் பஷீருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்யும் ஆணையொன்றை பிறப்பிக்க முயன்ற போது, அரபு லீக் மற்றும் ஆப்பிரிக்க சங்கம் அதைத் தடுத்து விட்டது. 2003ம் வருடம் சூடான் ஓர்பூர் பிரதேசத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் சாவுக்கு காரணமானவர் தப்புவதற்கு அது காரணமாகியுள்ளது. இது ஐக்கிய நாடுகள் எனும் ஈனியா தன்மை கொண்ட செயலகத்தின் வீழ்சியையே ஏமக்கு காட்டுகிறது. கொலைக் கலாச்சாரம், உலக அரங்கில் தனது அதிகாரத்தையுயும், அனைத்து மதக் கோட்பாடுகளையும் மிதித்துக் கொண்டு இன்று எழுந்து நிற்கிறது. இது மனிதனுக்கு வாழும் உரிமை இல்லாதாக்கியுள்தையே காட்டுகிறது.

நமக்காக நாம் என்போர் பிரபாகரன் மற்றும் பயங்கரவாதிகளின் மரண ஊர்வலத்தை தொலைக் காட்சிகளில் பார்க்க தயாராவார்கள். நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக ஆத்ம சாந்திகள் வேறு நடைபெறும்.

ஆனால், நம்மால் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அதாவது, வடக்கு கிழக்கில் இருந்து வந்து முகாம்களுக்குள் அடைபட்டு இருக்கும் அந்த அப்பாவி தமிழர்களுக்காக எமது மனங்களில் இருக்கும் இரக்கத்தோடு உதவ முயலவோம். தமிழர்கள் என்று உதறித் தள்ளாமல் மனிதர்களாக பிறந்தவர்கள், மனிதர்களை நேசிப்பதற்கானவர்கள் எனும் உணர்வோடு, எமது கரங்களால் அவர்களை அன்போடு பற்றிக் கொள்வோம். அது எம்முள் உள்ள மனிதத்தை அர்த்தப்படுத்தும்.

மேல் மாகாண சபை முதல்வர் அமைச்சர்கள் 4 இல் பதவியேற்பு

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் எதிர்வரும் மே 4ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்ற தகுதியான சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக நியமிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் எதுவித உண்மையும் இல்லை. கட்சியிலுள்ள சகல கட்சித் தலைவர்களினதும் ஒத்துழைப்புடனேயே முதலமைச்சர் நியமிக்கப்படுவார்.

முதலமைச்சர் யார் என்பது குறித்து ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும். அவரவர் பெற்றுள்ள வாக்குகள் சிரேஷ்டத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தெரிவு இடம்பெறும். கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்கவும் கொழும்பில் துமிந்தசில்வாவும் களுத்துறையில் ரெஜினோல்ட்குரையும் கூடுதல் விருப்புவாக்கு பெற்றுள்ளனர் என்றார்.

பன்றிக்காய்ச்சல்: தடுக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

mexico_flu_.jpgஆசியக் கண்டத்தில் அச்சுறுத்தலாகவிருக்கும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை உரிய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார். நாட்டில் இதுவரையில் எடுக்கப்பட்ட திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்காக செயலாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி எதிர்கால திட்டங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகே ஆசியாவை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினார். அதனைத் தொடர்ந்தே இலங்கைக்குள் அந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

700 மீற். நீளமண்அணை படையினரால் மீட்பு: வலைஞர் மடத்தில் புலிகளின் குண்டுலொறி தாக்கி அழிப்பு

udaya_nanayakkara_brigediars.jpg வலைஞர் மடத்திற்கு தெற்கே இர ட்டை வாய்க்கால் பிரதேசத்தில் புலி களால் அமைக்கப்பட்டிருந்த 12 அடி உயரமும் 700 மீற்றர் நீளமுமான மற்று மொரு பாரிய மண் அணையை பாது காப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வலைஞர்மடம் பகுதியில் நிலை கொண்டு ள்ள படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட லொறி யொன் றின் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதல்களில் அந்த லொறி முற்றாக வெடித்துச் சிதறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிய ரக ஆயுதங்களைப் பாவித்த வண்ணம் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரே இந்த மண்அணையை கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்; பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகளிடம் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் நேற்று அதிகாலை மற்றுமொரு பாரிய மண்அணையை கைப் பற்றியுள்ளனர்.

இந்த மண்அணையைக் கைப்பற்றிய சில நிமிடங்களில் படையினரை நோக்கி லொறி ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த லொறி வந்த நோக்கத்தை புரிந்து கொண்ட படையினர் அதன் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முற்றிலும் சி-4 ரக அதி சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்த அந்த லொறி வெடித்துச் சிதறியுள்ளது. இரட்டை வாய்க்கால் பிரதேசத்திலுள்ள மண் அணையை கைப்பற்றிய படையினர் அந்தப் பிரதேசத் திலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் ஏழு சடலங்கள், எம்.பி. எம்.ஜி-01, தொலைத் தொடர்பு கருவிகள் –3 மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தல் – ஜனாதிபதி

Mahinda Rajapaksa பயங்கரவாதம் தற்போது தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது என்பதை சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனத்திற் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொழிற்தளங்களில் மாத்திரமின்றி தொழிலாளர்களின் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் சகல விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்படல் அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் இரண்டு பகுதியிலும் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அற்றுப்போயிருந்த சுதந்திரம் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் அமைதியான சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் அதன் முன்னேற்றத்தின் எதிரியாகவே உள்ளது. எமது படையினர் பயங்கரவாதத்தை துடைத் தெறிந்து விட்டனர். இதன் மூலம் எமது நாட்டு மக்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று வருட காலப் பகுதியில் நாம் பாரிய பயங்கரவாதத்துக்கெதிரான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். அதற்கான பதிலடியையும் கொடுத்துள்ளோம். கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் முற்பட்ட போதும் பயங்கரவாதிகள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அதன் பின்னரே அரசாங்கம் அதன் உரிமையைக் கையிலெடுத்தது. பலத்தைப் பாவித்து பயங்கரவாதத்துக்குப் புரியும் பாஷையில் பதிலடி கொடுக்க நேர்ந்தது. விவசாயிகள் அவர்களது பிள்ளைகள் பாதிக்காதவாறு மிக அவதானத்துடனேயே நாம் எமது நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

இதனால் எமக்குக் கடினமான தீர்மானங்களை எடுக்க, நேர்ந்ததுடன் இறுதியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி காண முடிந்துள்ளது. பயங்கரவாதம் இன்று முழு உலகிலும் வியாபித்துள்ளது. வளர்முக நாடுகள் மற்றுமின்றி வறுமை நிலை நாடுகளையும் அது பாதித்து வருகிறது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கடந்த 90 வருடங்களுக்கு முன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்ட போது பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால் அது இன்று தொழிலாளர் வர்க்கம் உட்பட பல்வேறு துறைகளையும் பாதித்து வருகிறது.

தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சகல துறையிலும் அச்சுறுத்தலாகிவரும் பல்வேறு வித பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் தமது கவனத்தை செலுத்துதல் அவசியம்.

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பங்களிப்பு அவசியமானது. யாரோ விடும் தவறினால் அதன் பாதி ப்பை அபிவிருத்தி காணும் நாடுகளும் முகம்கொடுக்க நேர்கிறது. இத்தருணத்தில் இத்தகைய அமைப்புக்கள் எமது சமூகத்தை பாதுகாப்பதுடன் சரியான திசையில் வழிநடத்தவும் முன்வர வேண்டும்.

2006ம் ஆண்டில் எமது அரசாங்கம் ‘மஹிந்த சிந்தனை’ பத்தாண்டுக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. மக்களுக்கான கெளரவத்தையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொடுப்பதில் இது முன்னுரிமையளிக்கின்றது.  இத்திட்டங்களில் நாம் வெற்றியடைந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுமாறு தொடர்ந்தும் பொதுமக்களிடம் கோரிக்கை

flee0009.jpg
வன்னியிலிருந்து படை நடவடிக்கை காரணமாக வவுனியா வந்தவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இடம்பெயர்ந்து வந்த மக்களில் பலருக்கு மாற்று உடைகள் இல்லை. சமூக நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் உடைகளை அன்பளிப்பு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் சிறுவர்களுக்குரிய ஆடைகள் அதிகளவு தேவைப்படுகின்றது. சவக்கார வகைகள், துவாய், படுக்கை விரிப்புக்கள், பற்பசை. தூரிகை, முகச்சவரம் செய்வதற்குரிய பொருட்கள், சுகாதார துவாய் போன்ற பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக நலன்புரிநிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்ல எவருமே கிடையாது. சிறுவர்களுக்கு போசாக்கு உணவுகளும் தேவைப்படுகின்றது. சில தற்காலிக நலன்புரிநிலையங்களில் அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை எனவும் குறைகூறப்படுகின்றது.

‘இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ் அவசர கோரிக்கை

Douglas Devananda வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டு கோள்விடுத்துள்ளார். இடர்படும் மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் நிவாரண உதவிகளை வழ ங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கான உதவிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், எதிர்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து செய்யுமாறு மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவர்களுக்கான அவசர உதவிப் பொருள்களான பிஸ்கட் வகைகள், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிற அனைத்து வகை உணவுப் பொருள்கள் மற்றும் உடு புடவைகள், பாய், தலையணை போன்றவற்றை, இல. 61 இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்துள்ள, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சகல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

2011 உலகக்கோப்பை: இலங்கையில் 12 போட்டிகள்

28icc.jpg2011ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவில் 8 இடங்களில் 29 போட்டிகள் நடைபெற உள்ளன. இலங்கையில் மூன்று இடங்களில் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. சரத்பவார் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக்கோப்பை ஏற்பாட்டுக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளில் ஓர் அரையிறுதி ஆட்டமும், இறுதி ஆட்டமும் அடங்கும். இலங்கையில் மற்றொரு அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடக்கவிழா வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இரு இடங்களில் எட்டு போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் ஐசிசி தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கத் வெளியிட்டார்.

பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் மீது மார்ச் 3ந்தேதி தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கு போட்டிகளை நடத்துவதில்லை என ஐசிசி நிர்வாகக் குழு தீர்மானித்தது. இதையடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடைபெறுகின்றன.

கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை என்ற உறுதிமொழியை அரசு நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் – ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

john_holmes.jpgவடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்ற புதிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நடைமுறையில் செய்து காட்ட வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.

வன்னியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது தொடர்பிலேயே மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

முன்னரை போன்ற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாதென்றே நான் அஞ்சுகிறேன். கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற யோசனையை நேர்மையாக மதித்து செயற்படுவார்களென நான் நம்புகிறேன் என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.  அரசாங்கம் கூறியதை தற்போது மதிக்கிறதா என்பது இதில் மிகவும் முக்கியமானதென்றும் அவர் கூறியிருக்கிறார்.

இரு நாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஜோன் ஹோம்ஸ் வவுனியா முகாம்களுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே ஹோம்ஸ் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இவற்றுக்கமைய களத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கூறியது நடைபெற்றால் மோதல் நிலைமைகள் வெகுவாக குறைவடையும் என நான் நம்புகிறேன் என்று ஹோமஸ் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வன்னியிலிருந்து பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து அங்கு 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் இன்னும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எஞ்சியிருக்கின்றனர் என்பதே ஐ.நா.வின் மதிப்பீடென்று ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தினது புள்ளி விபரங்களிலும் பார்க்க எமது புள்ளிவிபரங்கள் சரியானவை? என்று கூறியிருக்கும் அவர், 70 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே அங்கு இருப்பதாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் கொழும்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், இந்த மக்கள் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருகிறார்.

இதேநேரம், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும், ஐ.நா.புள்ளிவிபரங்களென ஜனவரி மாத இறுதியிலிருந்து 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டதாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. அத்துடன், அது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களென கூற போதிய தெளிவான தகவல்கள் இல்லையென்றும் ஹோம்ஸ் இதன்போது கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடான பேச்சுக்கள் பயனுடையதாக அமையவில்லை. நான் தொடர்பு கொண்டிருந்த போது, பொது மக்களை விடுவிப்பது பற்றியோ அல்லது ஆயுதங்களை கீழே வைப்பது பற்றியோ அவர்கள் உரிய பதிலெதுவும் அளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயற்சிக்கும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஏனையவர்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதாகவும் பல்வேறு சாட்சியங்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்கள் அவர்களது தெரிவின் பேரிலேயே தங்களுடன் இருப்பதாக புலிகள் கூறுகின்றனர்.

இதேநேரம், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஐ.நா.மனிதாபிமான அணியொன்றை அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாகவோ, அகதி முகாமிலுள்ள ஐ.நா.வின் உள்நாட்டு பணியாளர்களை விடுவிப்பது குறித்தோ எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் ஜோன் ஹோம்ஸ் இதன்போது மேலும் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

முசலியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நாளை

மன்னார் – முசலி பகுதியிலிருந்து 2007 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நாளை (30) ஆரம்பமாகின்றன.

முதற்கட்டமாக 122 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் முசலி – சவரியார்புரம் கிராமத்தில் நாளை குடியமர்த்தப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.நிக்கலஸ்பிள்ளை தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு சவரியார்புரம் விளையாட்டுத் திடலில் நாளை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்து மன்னார், நானாட்டான் பிரதேசங்களில் தங்கியிருந்து மீளவும் தமது சொந்த வாழ்விடத்துக்கு செல்லும் இந்த 122 குடும்ப ங்களுக்கும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான உலருணவுப் பொருள்கள் வழங்கப்படுவதுடன், சேதமடைந்த வீடுகள் திருத்தப்படும்வரை தங்குவதற்கு வசதியாக கூடாரங்கள் வழங்கப்படுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இதற்கான உதவிகளை அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் வழங்குவதாகவும் அவர் கூறினார். மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு முன்னோடியாக, படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு கிராம சேவையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கபட்டதன் காரணமாகவே மீள்குடியேற்றம் தாமதமானதாக தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதைப் போன்று வடபகுதியிலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிய மர்த்துவதற்காக 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது ஆறு பிரிவுகளில் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மீள்குடியமரும் சவரியார்புரம் கிராம மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயம், கைத் தொழில் முயற்சிகளுக்கும் உதவி வழங்கப்படுகிறது.

நாளை மீள்குடியமரும் மக்களுக்காக நடைபெறவுள்ள நிகழ்வில் அமைச்சு க்களின் உயரதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோர் கலந்துகொள்கின்றனர். 2007 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

இந்த மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்தி அவர்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மேலும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவென உலக வங்கியின் 380 மில்லியன் ரூபா நிதியில் யோதவெவ மீளமைக்கப்படவுள்ளது. அதேநேரம், மதவாச்சி- மன்னார் வீதியும் புனரமைக்கப்படுகின்றது.