April

April

மட்டக்களப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கோதுமைக்குப் பதில் அரிசி.

மட்டக்களப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தினால் நிவாரணமாக வழங்கப்படும் கோதுமை மாவிற்கு பதிலாக முன்னர் விநியோகிக்கப்பட்ட விதத்திலேயே அரிசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது..

கிழக்கு மாகாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அதன்பின்னர் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.  குறிப்பாக கோதுமைக்குப் பதில் அரிசி வழங்கவும் இதற்கென கொள்வனவு செய்யப்படும் அரிசியை கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளிடமிருந்து மீண்டும் யுத்தநிறுத்த அழைப்பு

lttelogo.jpg
விடுதலைப்புலிகள் மீண்டும் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருப்பதாக இணையத்தள செய்திகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன.

“விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தத்திற்கு செல்லுமாறு அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டிய தேவை இருப்பதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசிடமிருந்து உடனடியாக கருத்து எதுவும் வெளிப்படவில்லை . விடுதலைப்புலிகள் ஆயுதங்களை முதலில் கீழே வைக்க வேண்டுமென அரசு கூறியிருந்தது. ஆனால், அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்ததை யதார்த்தபூர்வமற்றது என்று பத்மநாதன் கூறியுள்ளார்.

தற்போது குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை தற்காலிக பின்னடைவு என்று பத்மநாதன் கூறியுள்ளார். “புலிகள் பலவீனமடைந்த நிலையில் இருப்பதாக அனுமானிப்பது தவறானதாகும். புலிகள் அமைப்பு பல்வேறு ஆற்றல்களை கொண்ட மீள் எழுச்சி பெற்றுவரும் இயக்கமாகும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக வைத்திருப்பதாக அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து புலிகள் ஆட்லறி, மோட்டார் தாக்குதலை அதிகரித்திருப்பதாக இந்தவாரம் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது. பொதுமக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதை பத்மநாதன் நிராகரித்துள்ளார்.

ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம் – புன்னியாமீன்

april-fools-day.jpgசர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.

விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.

“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.

புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.

இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.

இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.

இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ‘பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.

ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்..

ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

ஓர் ஆலோசனை

மூன்றாம் உலக நாடுகளில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் நாளை முட்டாள் தினமாக பிரகடனப்படுத்தினால் எப்படி இருக்கும்?  .

உண்மையான ஜனநாயக நாள் அல்லவா அது.?

தேசம் நெட் வாசகர்களே உங்கள் கருத்து என்ன?

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அடையாள அட்டை

mahinda-samara.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்கும் வகையில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடையாள அட்டை வழங்கிய பின்னர் அவர்களுக்கு சுதந்திரமாக நடமாடவும், உறவினர்கள் வீடுகளில் சென்று தங்கவும் வாய்ப்பு ஏற்படும் என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையக பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அரசுக்கு வழங்கியிருந்த பரிந்துரைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. வன்னியில் இருந்து வரும் மக்களை சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் சகல மக்களையும் பதிவு செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டவாறு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னர் அந்த மக்களுக்கு தடையின்றி சுதந்திரமாக நடமாட வாய்ப்பு ஏற்படும். பாதுகாப்புக் காரணங்களினாலேயே இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதிக்க முடியாதுள்ளது.

இதேவேளை ஜோன் ஹோம்ஸின் பரிந்துரைகளின் பிரகாரம் நிவாரணக் கிராமங்களை கவனிக்கும் பொறுப்பு மீள்குடியேற்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அரச அதிபரின் பங்களிப்புடன் இராணுவமே முகாம்களை கவனித்து வந்தது என்றார்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களில் ஆதரவற்ற வயோதிபர்களை மன்னாரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் மரணமடைந்துள்ளார். லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவர் இவர் என்றும் அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்பட நெறிப்படுத்தியவர் என்றும் கூறப்படுகிறது.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன்,  இலங்கைப் படையினருக்கு எதிரான களத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இனவாத சுவரொட்டிகளை ஒட்டி அரசின் மீது பழிபோட ஐ.தே.க சதி

srisena.jpgமேல் மாகாண சபைத் தேர்தலை இலக்காக வைத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு சேறுபூசும் வகையில் இனவாத சுவரொட்டிகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

இந்த சுவரொட்டிகளை அரசாங்கம் வெளியிடும் சுவரொட்டிகள் போல் வெளியிடுவதற்கு அவர்கள் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேல் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், மேல் மாகாண சபைக்கான ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரம் வெற்றிகரமான முறையில் மூன்று மாவட்டங் களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டங்களில் ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரத்திற்குப் போட்டியாக ஐ.தே.க. வோ, ஜே.வி.பி. யோ கிடையாது.

ஐ.தே.க.வுக்குள் உட்கட்சி பூசல் காரணமாக அக்கட்சித் தலைவரால் கூட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிரு க்கிறது. இதனால் ஐ.தே.க.வின் பிரதேச மட்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியு ள்ளனர். அனேகர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றனர். ஜே.வி.பியின் தீவிர செயற்பாட்டாளர்கள் கூட ஐ.ம.சு. முன்னணிக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேல் மாகாண சபைக்கான ஐ.தே.க.யி னதும், ஜே.வி.பி. யினதும் பிரசார நடவடிக்கைகள் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கத்தினதும், ஐ.ம.சு.முன்னணியினதும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இனவாத சுவரொட்டிகளை அரசாங்கம் வெளியிடுவது போன்று வெளியிட ஐ.தே.க.வின் ஒரு குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

மேல் மாகாணத்தில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்காக வைத்தே இப்படியான சேறுபூசும் சுவரொட்டிகளை வெளியிட அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அரசுடைமையாக்கப்படும் வாகனங்கள் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்த ஜனாதிபதி பணிப்பு

ranjithsiyabalapitiya.jpgசுங்கச் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரசுடைமையாக்கப்படும் வாக னங்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்கும், படையினருக்கும் பயன் படுத்த வழிவகுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசுடைமையாக்கப் பட்டிருக்கும் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். முதலில் வாகனங்களை விற்பனை செய்வதற்கே நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அரச வருவாய்த்துறை மற்றும் பிரதிநிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

ஏல விற்பனையில் முன்பு குறிப்பிட்ட நிறுவனத்தினரே பங்கேற்று வந்தனர். எனவே, இதில், பரவலான பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமுகமாக, பரந்து பட்ட பிரசாரத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புலிகளின் 130 மி.மீ. ஆட்லெறி தாக்கியழிப்பு

srilanka_army1.jpgபுலிகளின் 130 மி.மீ ரக கனரக ஆட்லெறி ஒன்றை விமானப் படையினர் கிபீர் விமானங்கள் நேற்று முற்பகல் தாக்கியழித்துளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே புலிகளால் பொருத்தப் பட்டுக்கொண்டிருந்த இந்த பீரங்கியை இலக்கு வைத்து தரைவழியாக இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய அதே சமயம், விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் கனரக ஆட்லெறி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே அதாவது, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்பகுதியில் செயற்பட்ட புலிகள் 130 மி.மீ. ரக கனரக பீரங்கியை பொருத்தி படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் உள்ள பிரதேசத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே புலிகள் இந்த கனரக பீரங்கியை பொறுத்த முற்பட்டுள்ளனர்.

விமானப் படையினர் உரிய இலக்கு மீது தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 130 மி.மீ. ரக பீரங்கி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதை விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். படையினரை இலக்கு வைத்து புலிகள் மேற்கொள்ளவிருந்த இந்த தாக்குதல் முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ-9 ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பொருட்கள் கொண்டுசெல்ல தனியார் வர்த்தகர் இணக்கம்

a9-food.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்பாக குடாநாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் விதத்தில் ஏ-9 பாதையூடாக பொருட்களை கொண்டு செல்ல தனியார் வர்த்தக நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

யாழ். குடாநாட்டுக்கு தமது உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தமையையிட்டு அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்ட தனியார் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண விசேட சந்திப்புக்காக அழைத்தமை குறித்தும் தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டனர்.

நேற்றுக்காலை சுமார் 10.30 க்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ணவின் தலைமையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் பிரதி பலனாக நாளை வியாழக்கிழமை சுமார் 20 அல்லது 25 லொறிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

லயன் புரூவரி, ரைகம் இன்டஸ்ரீஸ், டி. எஸ். ஐ., மெலிபன், யுனிலிவர், டி. சி. எஸ். எல், பாட்டா, எஸ். ரி. சீ, ஆர்பிகோ, ஹேமாஸ், சுவதேஷி இண்டஸ்ரீஸ், கார்கில்ஸ், அபான்ஸ், எலிபன்ட் ஹவுஸ், லங்கா சதொச, எட்னா சொக்லேட் உட்பட 35 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குடாநாட்டுக்கு தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கான இணக்கத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

நாளை வியாழக்கிழமை லொறிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமறும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கம்பனி பிரதிநிதிகளை கேட்டுக் கொண்ட துடன் முடியுமானவரை நிறுவனம் ஒன்று க்கு தலா ஒரு லொறி வீதம் வழங்க ஏற்பாடுகள் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக எவ்வளவு பொருட்கள் எந்தெந்த கம்பனிகள், எத்தனை லொறிகள் என்ற முழு விபரமும் இன்று மாலையே தெரியவரும் எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தினகரனுக்குத் தெரிவித்தார்.

தனியார் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நேற்று நடத்திய விசேட கூட்டம் உலக வர்த்தகமையத்தில் நடைபெற்றது. காலை 10.30 க்கு ஆரம்பமான கூட்டம் சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மேலதிக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் என். பி. லியனாராச்சி, உதவி ஆணையாளர் ரியல் அட்மிரல் எஸ். எஸ். ரத்னகீர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தயாரான “ரோபோ” சர்வதேச கண்காட்சியில் முதலிடம் மொறட்டுவ பல்கலை மாணவர்கள் சாதனை

இந்தியாவின் மும்பை நகரில் அண்மையில் நடந்த “ரோபோ” போட்டியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பிரிவே இந்த ரோபோவைத் தயாரித்தது.

இந்த ரோபோவின் வேகம் மற்றும் தடை அறிந்து வழியைமாற்றிக்கொள்ளும் சக்தி போன்ற சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ரோபோவிற்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தொழில் நுட்ப நிறுவனமே இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.