May

May

சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தை குறித்து தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் – பிரகாஷ் கணேசன் கூறுகிறார்

sri-lanka-upcountry.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிற தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டொப்பந்தம் காலாவதியாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை புதிய கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய கூட்டொப்பந்தம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தாது இரகசியம் காத்து வருகின்றன. இது கூட்டொப்பந்தத்தில் பங்குபற்றாத தொழிற்சங்கங்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளன. தமது நாளாந்த வாழ்க்கையைக்கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென அரசாங்கத்தின் எந்தவொரு நிவாரணத் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைப்பதாகவில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தமது உழைப்பையே நம்பி வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தினையே தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.

எனவே இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வொன்று தற்போது உடனடியாகத் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெறுமனே காலந்தாமதிக்காமல் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பல திட்டங்கள்

batticaloa-sri-lanka.jpgநாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதற்கான  பல திட்டங்களை செயல்படுத்த சுற்றுலாத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட  ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கமிடையிலான சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கையைப் பிரபல்யப்படுத்த விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அடுத்த வருடம் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்த சு10ழல் காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்பின்னர் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்றும் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதைத்  தடுக்க வகை செய்ய வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மைக்கள் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் சீகிரியா மற்றும ஹிக்கடுவை போன்ற பிரதேசங்களுக்குச் செல்வதை கூடுதலான சுற்றுலாப்பயணிகள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் இதன்பின்னர் இவ்வாறான நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுககொண்டுள்ளார். 

இத்தாலி பேராயர் சபை 1 மில்லியன் யூரோ உதவி

refugee_.jpgஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மில்லியன் யூரோவை இத்தாலி பேராயர் சபை அன்பளிப்பு செய்தமைக்காக தனது நன்றியை அதி.வண.மெல்கம் ரஞ்சித்துக்கு ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்கடர் ஜெயலத் ஜயவர்தன கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தங்களின் தலையீட்டின் மூலம் இத்தாலி பேராயர் சபையின் மூலதனத்திலிருந்து இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளதாக வண. நெலில் ஜோபெரேரா தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் காட்டுகின்ற அன்புக்கும் அக்கறைக்கும் இலங்கையின் மக்கள் பிரதிநிதியென்ற ரீதியில் உங்களுக்கு எனது நன்றிகள்.

இதனை முன்னின்று செய்தமைக்காக எனது கௌரவம் அவருக்கு உரித்தாகட்டுமெனவும் ஜெயலத் ஜயவர்தன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

வடக்கின் 5 மாவட்டத்துக்கும் துரித கெதியில் மின்சார வசதி – அமைச்சு அதிகாரிகள் விரைவு

வடக்கிலுள்ள 5 மாவட்டங்களுக்கும் துரிதமாக மின்சார வசதி வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது. இதற்காக வெளிநாட்டு உதவிகள் பெறப்படவுள்ளதோடு இது தொடர்பாக பல நாடுகளுடன் பேசி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

இதே வேளை வடக்கு கிழக்கில் மோதல் காரணமாக சேதமாகியுள்ள உப மின் உற்பத்தி நிலையங்கள், மின்மாற்றிகள், மின் கோபுரங்கள் என்பனவற்றை திருத்தியமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

ஈரான் உதவியுடன் வடக்கு கிழக்கிலுள்ள சில பகுதிகளுக்கு மின்சார வசதி அளிக்கப்படவுள்ளது. மீட்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி மாவட்டங்களுக்கும் மின்சார வசதியற்ற யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் துரிதமாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

மன்னார் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு மின்சார வசதிகள் வழங்கப்பட்டு வருவதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஏனைய பகுதிகளுக்கும் மின்வசதி அளிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு தடையின்றி மின்சார வசதி வழங்குவதற்காக சுண்ணாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 சதவீதத்தால் அதகரிப்பு

coconut_tree.jpgஇவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 தவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த வருட முதலாம் காலாண்டுப் பகுததியில் மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் தெங்குப்பொருள் ஏற்றுமதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறி ஏற்றுமதியில் அபிவிருத்தி ஏற்பட்டது என்று சபை அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,  இந்தியா, ஆகிய நாடுகள் வரிசையில் தெங்குப்பொருள் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய இடம் வகிக்கின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் – பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; வைகோ அறிக்கை

vaiko.jpgதமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

 மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4’ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்

இந்தியா ஆயுதம் தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு செய்தோம்: சரத் பொன்சேகா

fonseka-000.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  “பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கும் அல்லது விற்பனை செய்யும் நிலையில் தாம் இல்லையென இந்தியா கூறிவிட்டது. தொடர்பாடல் சாதனைங்களைக்கூட வழங்கமுடியாது என அவர்கள் கூறிவிட்டனர்” என்று இராணுவத் தளபதி கூறினார்.

இதனாலேயே, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவியை நாடவேண்டியேற்பட்டதாக இந்திய செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த ஆயுதங்களிலும் குறிப்பிட்டளவு ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியதுடன், ரஷ்யா, உக்ரேன் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் குறிப்பிட்டளவு ஆயுதங்களே தமக்குக் கிடைத்ததுடன், அவை மிகவும் விலையுயர்ந்தவை என்பது தெரியவந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே எமக்கு மாற்றுவழியிருக்கவில்லை. சீனாவிடமே கனரக ஆயுதங்களை நாங்கள் வாங்கினோம்” என்றார் சரத் பொன்சேகா.“இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானவை. எமக்கு மாற்றுவழியிருக்கவில்லை” என அவர் கூறினார்.

TNA நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்- ஆனந்த சங்கரி

a_sangary.jpgபுலிகள் எனும் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறானதொரு அமைப்பு இங்கில்லையாகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளியேறவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இங்கே ஓர் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது. அவ்வத்தியாயம் புலிகள் இல்லாததோர் அத்தியாயம். புலிகள் இல்லாத புதிய அத்தியாயத்தில் தமிழ் கூட்டமைப்பினருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஐலா புயல்: ஒரிசாவில் 12 பேர் பலி

rain.jpgவங்காள விரிகுடா கடலில், ஐலா என்ற பயங்கர புயல் உருவாகி இருந்தது. அந்த புயல் இன்று மேற்கு வங்காளம்-வங்காள தேசம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி அந்த புயல் இன்று மாலை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பர்கானா மாவட்டம், கிழக்கு மிட்னாப்பூர், அவுரா, ஹூக்ளி, பர்தாமன் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
 
மழை-புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ராணுவம், எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், படகுகளில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 12 ஆக இருந்தது. மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும் மழைக்கு 9 பேர் பலியானார்கள்.

புலிகளுடன் தொடர்புள்ள 9100 பேர் நிவாரணக் கிராமங்களில் – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgவடக்கு நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள 9100 பேர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார்.

இவர்களை வவுனியா, வெலிக்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் கூறினார். இவர்களில் உள்ள சிறுவர்கள் அம்பேபுஸ்ஸ சிறுவர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.