June

Sunday, September 19, 2021

June

கண்டி-யாழ் ஏ 9 வீதியில் எட்டு எரிபொருள் நிறப்பும் நிலையங்கள் – அமைச்சர் பௌசி தகவல்

fawzi_minister.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கண்டி யாழ்ப்பாணத்துக்கான ஏ 9 வீதியில் புதிதாக எட்டு எர்பொருள் நிறப்பும் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்ர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான 180 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு அமைய இந்த நிலையங்கள் இமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்துக்காக 150 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

வணங்காமண் நிவாரணபொருட்களை தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க வேண்டும் – பழ. நெடுமாறன்

ships000.jpgஇலங்கை அரசு திருப்பி அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வணங்காமண்’ என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.

அந்தப் பொருட்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கையில் அப்பொருட்களை இறக்க முடியாது.

கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருட்கள் வீணாகிப் பழுதடைந்து போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

பன்றிக் காய்ச்சல் அபாயத்தையடுத்து கொழும்பு சர்வதேச விமான நிலையம், துறைமுகம் உஷார்

19swine-flu.jpgதமது ஆரோக்கிய நிலைமையை உறுதிப்படுத்தும் பிரகடனப் படிவத்தைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு வெளிநாட்டவரையும் நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாமென விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுச் செயலாளர் இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய சகல குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளையும் அறிவூட்டும் வகையில் விசேட சுற்றறிக்கையொன்றை உடனடியாக வெளியிடுவதற்கு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நேற்று நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளை இலங்கைக்குள் வருகை தரும் சகல வெளிநாட்டவரும் விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர். தேர்மல் ஸ்கேனர் இயந்திரம் மூலம் இலங்கைக்குள் வருகைதரும் சகலரும் பரிசோதிக்கப்படுவர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

புதிய இன்புளுவென்சா ஏ. எச்.1 என் 1 வைரஸ் என்கிற பன்றிக் காய்ச்சல் மேலும் இலங்கைக்குள் வந்து சேர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ் தொடர்பான பரிசோதனை தினமும் 24 மணி நேரமும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

இப்பணியில் ஈடுபடவென நான்கு டாக்டர்களும், நாற்பது பொது சுகாதாரப் பரிசோதகர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் ஆறு மணித்தியாலயங்கள் சுழற்சி முறைப்படி கடமையாற்றுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கைக்குள் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ¤டன் வருகை தந்தவர்கள் பயணம் செய்த விமானப் பயணிகள் 185 பேரும் அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் காண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் இவர்களிடம் இக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.புதிய இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் நால்வர் இற்றைவரையும் இனம் காணப்பட்டுள்ளனர் என்றாலும் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய மாத்திரைகளும் பாணி மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாகவும் இவ்வதிகாரி மேலும் கூறினார்.

குடாநாட்டு உற்பத்திப் பொருட்களுடன் 29 லொறிகள் கொழும்பு வருகை

a-9-loorys.jpgயாழ்ப்பா ணத்திலிருந்து உள்ளூர் விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை 29 லொறிகள் ஏ9 வீதி வழியாக கொழும்புக்குப் புறப்பட்டதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்தார்.
சோதனையிடப்பட்டு லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்ட பின்னர் எந்தவித தரிப்பிடமுமின்றி அவை நேரடியாக கொழும்பு சந்தைக்குக் கொண்டுவரப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் 30 லொறிகளில் குடாநாட்டின் விளைபொருட்கள் ஏற்றப்படுவதாகவும் இவை ஞாயிற்றுக்கிழமை புறப்படுமெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

ஏ9 வீதி வழியாக இரண்டு நாளைக்கு ஒரு தடவை குடாநாட்டுக்கு கொழும்பிலிருந்து தனியார் லொறி சேவை தொடர்ச்சியாக நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக கொழும்பிற்குப் பயணிகள் பஸ்சேவை நடத்துவது குறித்தும் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் சேவையை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

டாக்டர் ஜயலத் இன்று யாழ். விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று  22 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் 23 ஆம் திகதி வவுனியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரமுள்ள பிரதிநிதியாக டாக்டர் ஜயலத் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள ஐ.தே.க.வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியாவில் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகளையும் சந்தித்து அப்பிரதேசங்களின் நிலைமைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

பட்டினியால் வாடுவோர் உலகில் 100 கோடி

world-maps.jpgசர்வதேச பொருளாதாரப் பின்னடைவால் பட்டினியால் வாடுவோரின் தொகை 100 கோடியை எட்டிவிட்டதாகவும் இது சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா. வின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலுள்ள மக்களில் 6 பேருக்கு ஒருவர் என்ற விதத்தில் யுத்தம், வரட்சி, அரசியல் ஸ்திரமின்மை, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு,வறுமை, பட்டினி என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பட்டினியால் வாடும் மக்கள் தொகை 10 கோடியால் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு எப்.ஏ.ஒ. தெரிவித்துள்ளது.

உலகின் எந்தவொரு பகுதியும் இதிலிருந்து தடுக்கப்படவில்லையெனவும் அனைத்துப் பிரதேசங்களும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக உணவு ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நெருக்கடி மனிதாபிமானம் சார்ந்தவொன்று மட்டுமன்றி அரசியல் விடயமாகவுமுள்ளது. பட்டினி மற்றும் உளவியல் தொடர்பான அழுத்தங்கள் தொடர்பாக ரோமிலுள்ள இந்நிறுவனம் வெளியிட்ட அளவீட்டில் கடந்த வருடத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருட்களின் விலையேற்றம் என்பனவும் உள்ளடக்கப்பட்டன.

இது தொடர்பாக ஐ.நா.வின் முகவர் நிலையமொன்றான உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில்;

பட்டினியான உலகம் மிகவும் ஆபத்தானது. மக்களுக்கு உணவு இல்லாது போகும் போது அவர்களுக்கு 3 வழிகளே உள்ளன. அவர்கள் கலகம் செய்யலாம், நாட்டை விட்டு வெளியேறலாம் அல்லது மடிந்து போகலாம். இம் மூன்றுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய தெரிவுகளல்ல என்றார்.

உணவு விவசாய அமைய அறிக்கையின் பிரகாரம் கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது உணவு விலை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் தொடர்ந்து சந்தைகளில் கட்டுக்கடங்காது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போசாக்கின்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமை குழந்தைகளை பலி வாங்கலாம் என கிழக்கு ஆபிரிக்க சர்வதேச சுதந்திர செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அண்மையில் தெற்கு எதியோப்பியாவிற்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்த அவர், கென்ய எல்லைப்பகுதியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்தார். அங்கு மலேரியா காய்ச்சலில் குழந்தையை இழந்த குடும்பமொன்றினைச் சந்தித்ததாகவும் போதிய போசாக்கின்மையாலேயே குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியாது போனதாயும் மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 91 கோடி 50 இலட்சம் பில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோர் தொகை 11 வீதத்தால் அதிகரித்து 100 கோடி 2 இலட்சத்தை அடைந்துள்ளதாக ஒவ்.ஏ.ஓ. தெரிவித்துள்ளது. இக்கணிப்பீடு அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டது.

மேலும் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விட பட்டினியால் வாடுவோர் தொகை அதிகரித்துச் செல்வதாக எவ்.ஏ.ஓ. தெரிவிக்கின்றது. இது தொடர்பான தரவுகளை வழங்காவிடினும் இரு வருடங்கள் முன்பிருந்தே இப்போக்கு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் 64 கோடி 20 இலட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் இத்தொகை கடந்த வருடத்தை விட 10.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆபிரிக்காவில் 26 கோடி 50 இலட்சம் மில்லியனாக இத்தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 11.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஈ.பி.டி.பி. தனித்தா, அரசுடன் இணைந்தா போட்டியிடும்- இரண்டொரு தினங்களில் முடிவு

21deva.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடும் விதம் குறித்து இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படுமென கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்தின் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சிக்குள் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி அரசாங்கத்தின் தோழமைக் கட்சியென்பது தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்னும் இரண்டொரு தினங்களில் மேற்படி உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் விதம்பற்றி அறிவிப்பாரெனவும் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினம் எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமையாகும். அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இத்தேர்தல் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகரை சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான்

second-world-cup-of-twenty20.jpgஇருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது.

இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கார மட்டுமே உறுதியாக ஆடி 64 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற தேவைப்பட்ட 139 ஓட்டங்களை எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகித் அஃப்ரிடி சிறப்பாக ஆடி 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக கம்ரன் அக்மல் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்தப் போட்டியில் முந்தைய சாம்பியனான இந்திய அணி காலிறுதி நிலையிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

வணங்கா மண் கப்பலுக்கு 200 லிட்டர் குடிநீர் வழங்கிய சென்னை

 vanangaaman-captainali.jpgஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வந்த வணங்கா மண் கப்பலுக்கு சென்னை துறைமுகம் சார்பில் 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.

884 டன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

இதையடுத்து எங்கு போவது என்று தெரியாமல் அந்த கப்பல் சென்னையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. .இந்த நிலையில், கப்பலில் இருந்த இரண்டு ஊழியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் சிலரின் நிலையும் பாதிக்கப்பட்டது. குடிநீர் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாகியது.

கடந்த 12ம் தேதி முதல் நடுக்கடலில் இருந்த அந்த ஊழியர்கள் ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு சென்னை துறைமுகம் சுமார் 200 லிட்டர் குடிநீர் வழங்கி உதவியுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் அந்த கப்பல் சுமார் 1 வார காலத்துக்கு மேல் கடலில் நிற்கிறது.

அதில் 15 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்கு குடிநீர் இல்லை எனறும் கடந்த 16ம் தேதி அவசரத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு மறுநாளே 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் அந்த சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை. ஏதாவது உதவி கேட்டால் மனிதாபிமான அடிப்படையில் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

புதிய சிக்கல்…

பொதுவாக நிவாரண பொருட்களை அனுப்பும் போது அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற பட்டியல் மற்றும் சில ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது வணங்கா மண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. மேலும், நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தூதரகம் மூலமாகவோ அனுப்புவது வழக்கம். ஆனால், இலங்கையில் தவிக்கும் மக்களுக்கு விரைவாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தமிழர்கள் நடைமுறையில் உள்ள சில சம்பிரதாயங்களை கவனிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. சில ஆவணங்களை சேர்த்து இணைக்காமல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் வணங்கா மண் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வர, ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த கப்பல் தொடர்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

20-20 நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

cricket20-20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில்   இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.  நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சற்று வலிமையானதாக இருந்தாலும் பந்துவீச்சில் இரு அணிகளும் சம வலிமையுடன் விளங்குகின்றன. இலங்கையின் மெண்டிஸ், மலிங்கா, பாகிஸ்தானின் குல், அஜ்மல் ஆகியோர் தலா 6 போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதனால்  யாருக்கு கோப்பை என்பதை கடைசி பந்து வரை முடிவு செய்ய முடியாது.