June

June

குடியரசு தலைவர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : திருமாவளவன்

07thirumavalavan.jpgகுடியரசுத் தலைவர் உரையில் சேது சமுத்திர திட்டம்,  இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் தொகுதி  எம்.பி.யும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான தொல். திருமாவளவன் இன்று சிதம்பரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  முன்னதாக சிதம்பரம் சுப்பிரமணிய தெருவில் உள்ள மன்மதசாமி காமுண்டி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார்.

தொடர்ந்து அவர் இத்தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர், லால்பேட்டை, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திறந்த வேனில்  வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கடந்த 2ஆம் தேதி எம்.பி.யாக பதவியேற்ற நான், அனைத்து தேசிய  தலைவர்களை நாடாளுமன்றத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன். புகழ் பெற்ற நேரு, அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த நாடாளு மன்றத்தில் மக்களுக்காக வாதாட நான் சென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஏழைமக்களுக்கு கூரை இல்லாத வீடு வழங்கப்பட வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும். தற்போது ஜனாதிபதி உரையில் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் ஜனாதிபதி உரையில் சேது சமுத்திர திட்டம், இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.  குறிப்பாக சேது சமுத்திர திட்டம் பற்றி எந்த குறிப்பும் ஜனாதிபதி உரையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கடலில் விழுந்த ஏர்-பிரான்ஸ் விமானம் கண்டுபிடிப்பு

01-air-france.jpgஅட் லாண்டிக் கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு விழுந்த ஏர்-பிரான்ஸ் விமானத்தின் உதிரிபாகங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி 228 பேருடன் கடந்த 1ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற ஏர்-பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து மூழ்கியது. விபத்து நடந்த இடத்தில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் போர் விமானங்களும், கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தன. நீர் மூழ்கி கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சில தினங்களுக்கு முன் விமானம் மாயமான இடத்தில் இருக்கை போன்ற ஒருபொருள் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு, விமானம் கிடைத்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது விமானத்தின் இருக்கை பகுதி அல்ல என்று பின்னர் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த கடல் பகுதியில் 6 நாட்களுக்கு பிறகு பிரேசில் நேரப்படி நேற்று காலை பெர்னாண்டோ டி நொரங்கா தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 900 கி.மீ. இரண்டு உடல்கள் மற்றும் ஒரு சூட்கேஸ், ஒரு பை, விமான இருக்கை ஆகியவை மிதப்பதை பிரேசில் மீட்புக்குழுவினர் கண்டு பிடித்ததாக பிரேசில் விமானப்படை உயர் அதிகாரி ஜார்ஜ் அமரால் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 2 உடல்களும் ஆண்களுடையது என்றும், மீட்கப்பட்ட சூட்கேசில் விமான டிக்கெட் மற்றும் ஒரு லேப்-டாப் கணினி இருந்ததாகவும் அவர் கூறினார். முதலில் ஒரு உடலை கடற்படை கப்பலில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மீட்டதாகவும், அதன் பிறகு 20 நிமிடம் கழித்து மற்றொரு உடல் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

0706.jpgதமிழீழ தாயகத்தில் மாணவர்களின் கல்வி சிறிலங்கா அரசாங்கத்தினால் பறிக்கப்பட்ட நிலையில் அவர்களின குரலாக மாறியுள்ள புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் அவர்களுக்கு நீதி கிடைக்க உழைப்போம் என்ற உறுதியுடன் இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாளை பிரித்தானியா நாடாளுமனற சதுக்கத்தில் முன்னெடுத்தனர். மாலை 3 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி நிகழ்வில் பொன சிவகுமார் அவர்களின் உருவப்படத்திற்கும், தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மாணவர்களின் நினைவு படத்திற்கும் அங்கு கூடியிருந்த இளையோர் உட்பட அனைத்து மக்களும் மலர் செலுத்தினர்.

அதனைத் தொடரந்து ஐக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினால் பிரித்தானியா பிரதமருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மக்கள் முன் வாசிக்கப்பட்டது. தடுப்பு முகாம்களில் வாழும் தமிழ் மக்களை ஜ.நா பொறுப்பேற்று அவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 24 மணித்தியால அடையாள உண்ணாவிரதத்தை இளையோர்கள் இன்று மதியம் 1 மணியளவில் ஆரம்பித்துள்ளனர்.

இதே நேரம் 20 ஆவது நாளாக மனிதநேயப் பணியாளர் ரிம் மாற்றின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார் இவருக்கு துணையாக 5 தாய்மார்கள் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றார்.  இறுதி காலப் போராட்டத்தில் வன்னி மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் ஓவியக் கண்காட்சி தொடர்ந்தும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பல வெளிநாட்டவர்கள் பார்ப்பதுடன் ஒவ்வொரு ஓவியங்களாக புகைப்படங்களும் எடுத்து வருகினறனர்.

5ம் ஈழப் போரை விரைவில் பிரபாகரன் அறிவிப்பார்: நெடுமாறன்

07-nedumaran.jpgஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் அறிவிப்பார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். “தமிழீழமும் நமது இன்றைய கடமையும்” என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார். இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்.

ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்.

பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல – 53ஆவது படையணி தளபதி

07-srilanka-army.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே பிரபாகரன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:  (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். “சேர், பிரபாகரனின் உடல் இருக்கிறது’ என அவர் கூறினார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.  நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது பொடியன்கள் (சிப்பாய்கள்) அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர். முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.

19ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.

பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாரகனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

நான் இராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் இராணுவத் தளபதி “ஆர் யூ ஷவர்?’ என்று கேட்டார். “ஷவர் சேர்’ எந்த சந்தேகமுமில்லை. பிரபாகரனின் சடலத்தை நாம் இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன். பின்னர் எனது சகோதரர்கள் போல் பழகிய ஏனைய படைத்தளபதிகளுக்கும் தகவல் தெரிவித்தேன்.

இன்றும் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு – மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

07-sea-eruption.jpgதமிழக கடல் பகுதிகளில் தொடர்ந்து இன்றும் கொந்தளிப்பு நிலவியது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெரும் காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

ராட்சத அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பலத்த சூறைக் காற்றும் வீசியது. இதனால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த மக்கள் முன்பே வெளியேறி விட்டதால் உயிர் தப்பினர்.கடல் நீர், கடற்கரையிலிருந்து குடியிருப்புகள் உள்ள பகுதி வரை வந்து விட்டது. கடல் நீர் உள்ளே போவதும், சீறிப் பாய்வதுமாக உள்ளது. இன்று காலையும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமைச்சர் போகொல்லாகம நிராகரிப்பு

rohitabogallaagama.jpgஇலங் கையின் வடக்கே மோதல் சூன்யப் பகுதியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உறுதியாக நிராகரித்துள்ளார். “மோதல் சூன்யப் பகுதி மீது நாங்கள் ஒரு போதும் பதில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. அதற்குரிய சந்தர்ப்பத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவும் இல்லை. பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவும் இல்லை’ என்று லண்டனில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் போகொல்லாகம “த ரைம்ஸ்’ பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்திருக்கின்றார். பொதுமக்கள் மீது நாங்கள் தாக்குதலை மேற்கொள்வற்தகு எம்மை ஆத்திரப்படுத்தும் விடயங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வெளியேறிய போதே புலிகள் அவர்களை சுட்டதாகவும் பொதுமக்களின் மரணங்களுக்கு புலிகளே காரணம் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார். இராணுவ நடவடிக்கையால் எந்தவொரு பொதுமகனும் இறக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஐ.நா. மதிப்பீடு செய்திருந்த அறிக்கையின் பிரகாரம் ஏப்ரல் இறுதியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பிலுள்ள அமெரிக்கா, பிரிட்டன் உட்பட வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இந்தப் புள்ளி விபரம் ஐ.நா. வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களின் இழப்புகள் ஏற்பட்டிருக்கும் சாத்தியம் குறித்து ஐ.நா. வட்டாரங்கள் “த ரைம்ஸ்’க்குக் கூறியிருந்தனர்.

இவை இரண்டையும் அமைச்சர் போகொல்லாகம நிராகரித்திருக்கிறார். புள்ளி விபரங்களை வெளியிட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மன்னிப்புக் கேட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா.வின் பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த வாரம் “த ரைம்ஸ்’க்குத் தெரிவிக்கையில்; பொதுமக்களின் இழப்புகள் ஏற்றுக் கொள்ள முடியாதளவிற்கு அதிகமானவையாகவும் இது தொடர்பாக உரிய விசாரணையை இலங்கை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சுதந்திரமாக செல்வதை இலங்கை தடை செய்துள்ளது.

அங்குள்ளோர் விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி சோதனைகள் முடிவடையும் வரைக்கும் அங்கு முழுமையாக மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை கூறியுள்ளது.  இந்தச் சோதனை நடவடிக்கை நீண்டவையாக இருக்கும் என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். வயது போனவர்கள் கூட உள ரீதியில் புலிகளுடன் இருந்திருக்கக் கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மோதல் சூன்யப் பகுதியில் பணிபுரிந்த மருத்துவர்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. மோதலின் இறுதிக் கட்டத்தின் போது அரசாங்கத்தின் ஷெல் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் இடம் மாற்றப்பட்ட ஆஸ்பத்திரி உட்பட மோதல் சூன்யப்பகுதியில் ஷெல் வீச்சு இடம்பெற்றதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறும் போது அவர்களுடன் வந்த இந்த மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக ஐ.நா. தெரிவித்திருக்கின்றது. இந்த மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பி.பி.சி.க்குக் கூறியுள்ளார்.

விசாரணைகளிலிருந்து என்ன வெளிவரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சில சமயங்களில் அரச படைகள் ஷெல் வீச்சு நடத்தியதாகவும் ஆஸ்பத்திரிகளை இலக்கு வைத்ததாகவும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படும் இந்த கருத்தை உள்ளடக்கிய சதியின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்கக் கூடும் என்றும் சமரசிங்க கூறியிருந்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளிப்பாடானது தமிழ்ச் சமூகத்தின் மீது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் உறுதிப்பாடு பற்றி நியாயபூர்வமான அச்சத்தை தோற்றுவிப்பதாக சேர்.ஜோன் ஹோமஸ் கூறியுள்ளார்.

முசலி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம்

07resettle.jpgவடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முசலி பிராந்தியத்திற்கான இரண்டாம் கட்ட மீள் குடியேற்ற நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு அபிவிருத்தி செயலணித் தலைவர் பஸில் ராஜபக்ஷ்வின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரிப்பு,சிலாபத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2216 பேர் உள்ளடங்கிய 515 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.இந்நிகழ்விற்கு மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.அதேவேளை அரச திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவில். நீடிக்கும் அட்டகாசம் – இந்தியர் கார் எரிப்பு

sea.jpgஇந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் இன்னும் நிற்கவில்லை ஆஸ்திரேலியாவில். மெல்போர்ன் நகரில், இந்திய மாணவரின் கார் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. 22 வயதான விக்ராந்த் ராஜேஷ் ரத்தன் என்பவர் அங்கு படித்து வருகிறார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வரும் அவர், தனது சம்பளத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியிருந்தார். இந்த காரைத்தான் நேற்று இனவெறியர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்தக் கார் தவிர அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களுக்குச் சொந்தமான வேறு இரு கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரத்தன் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அபாய மணி ஒலித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

போதைக் கும்பல் செய்த வேலையாக இது இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவர்கள் அந்தப் பகுதியில்தான் உட்கார்ந்திருப்பது வழக்கம். காரைத் திறக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை திறக்க முடியாததால், பெட்ரோலை ஊற்றி காரை தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார். லூதியானாவைச் சேர்ந்த ரத்தன், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆட்டோமோட்டிவ் என்ஜீனியரிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார்.

சில நாட்களுக்கு முன்புதான் தனது காரை 2500 டாலர் கொடுத்து வாங்கினார். காரை இன்னும் இன்சூரன்ஸ் கூட பண்ணவில்லையாம். விக்டோரியா போலீஸில் இதுகுறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கை விஜயம்

06bankimoon.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம், அபிவிருத்தி,  புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.