July

July

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு – இன்றுமுதல் அமுலில்

mosquitfora.jpgநுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமையின் காரணமாக சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள்  தவறியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் யாப்பினூடாக மேலதிக அதிகாரங்களை வழங்க முடியாதுள்ளது. எனினும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,  தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாகவுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் தொகுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். டெங்கு நோயைப் பரப்பக்கூடிய சுற்றுச் சுழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அபராதம் அறவிடுவதுடன் மற்றும் தண்டனை வழங்குவதற்கான சட்டம் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.  இதன்படி குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு 492 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

srilanka-cri.jpgபாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு இலங்கை அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று சற்று நேரத்துக்கு முன்னர் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லண்டன் நிலாந்தனின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை : த ஜெயபாலன்

Nilanthan Moorthiஎந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என கடந்த ஆண்டு குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்கு அப்போது தெரிவிததிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று அன்று வேதனையுடன் தெரிவித்த அத்தாயின் வேண்டுகோளுக்கு சட்டம் பதிலளித்துள்ளது. யூன் 26 2009ல் ஸ்னேஸ்புருக் கிறவுண்கோட் ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) இக்கொலையைப் புரிந்ததாகத் நீதிபதி டேவிட் றட்போட் தீர்ப்பளித்து உள்ளார். யூலை 3ல் இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. வெள்ளை இனத்தவரான குரொய்டனில் வாழ்பவரான ஸ்ரீபன் பிறித்வெயிற் நான்கு குழந்தைகளின் தந்தையாவார்.

ஓகஸ்ட் 16 2008 அதிகாலை 1:30 மணியளவில் குரொய்டனில் இடம்பெற்ற தெருவோரக் கை கலப்பில் நிலாந்தன் கத்தி வெட்டுக்கு இலக்காகி சில சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்ன பூரண உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) – கலா (கரணவாய்) தம்பதிகளின் புதல்வனே நிலாந்தன். நிலாந்தனும் அவருடைய நண்பர்களும் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை குவேசியரும் ஜக் டானியலும் அருந்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த நிலாந்தன் தெருவில் சென்று வந்த சிலரை வம்புக்கு இழுத்ததாக இவர்களுடைய நண்பரான மாணவன் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அப்படி வம்புக்கு இழுக்கப்பட்டவர்களில் ஒருவரே கொலையாளியான ஸ்ரீபன் பிறித்வெய்ற்.

Place_Where_Nilanthan_Murderedஅவ்வழியால் மினிகப்பில் பயணம் செய்துகொண்டிருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை சம்மர் ரோட்டில் உள்ள ரபிக் லைற்றில் வைத்து நிலாந்தன் வம்பிற்கு இழுத்ததாக நிலாந்தனின் நண்பர்களில் ஒருவரான ரக்டிப் சிங் (23) நிதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அப்போது ஸ்ரீபன் பிறித்வெயிற் நிலாந்தனை ‘பக்கி’ என்று இனத்துவேசத்துடன் விழித்துள்ளார். அப்போது நிலாந்தன் மினிகப்பின் பின் இருக்கையில் இருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை யன்னலினூடாக இழுக்க முயன்றதாக அரச சட்டவாதி கியூசி கிறிஸ்தொப்பர் கின்ச் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சலசலப்பில் அவ்விடத்தை விட்டகன்ற ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் 20 நிமிடங்கள் கழித்து நிலாந்தனுடனான தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள கத்தியுடன் வந்துள்ளார்.

கத்தியை விசுக்கி நிலாந்தனின் கழுத்தில் ஆழமான வெட்டை ஏற்படுத்தியதில் நிலாந்தன் நினைவற்று வீழ்ந்ததை அவருடைய நண்பர்கள் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தனர். நிலாந்தனின் உயிரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடிக் கொண்டிருக்கையில் கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் லண்டன் வீதியில் இறங்கி நடந்து சென்றார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அருகில் அடிங்ரன் ரோட்டில் உள்ள குப்பைப் பையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். சம்பவ தினம் தனது நான்கு பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்த மைத்துனியின் பிளற்இற்கு ஸ்ரீபன் பிறித்வெயிற் சென்றுள்ளார்.

நிலாந்தனை தான் தாக்கியதோ அல்லது நிலாந்தன் கொல்லப்பட்டதோ தனக்கு சில நாட்களின் பின்னர் பத்திரிகையில் பார்க்கும் வரை தெரியாது என கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

உடனடியாக மருத்துவவண்டி அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயப்பட்ட நிலாந்தன் அருகில் உள்ள மேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மதுபோதையில் இருந்த சில தமிழ் இளைஞர்களை அள்ளிச் சென்றனர். அங்கிருந்த மதுப் போத்தல்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

நிலாந்தன் மூர்த்தியுடைய இறுதி நிகழ்வுகள் ஓகஸ்ட் 31 2008ல் ஸ்ரெத்தம் கிரெமற்ரோரியத்தில் இடம்பெற்றது.

நிலாந்தனுடைய கொலை தொடர்பாக சில தினங்களிலேயே ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டது. கொலையாளி சட்டன் மஜிஸ்ரேட் கோட்டில் ஓகஸ்ட் 21 2008ல் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Nilanthan’s Final Journeyஓகஸ்ட் 21 2008ல் நிலாந்தனின் துயர சம்பவத்தை அடுத்து நிலாந்தனின் பெற்றோரை லண்டன் குரல் பத்திரிகை சந்தித்தது. அப்போது ”எமது பிள்ளைகள் கால நேரத்துடன் வீடுகளுக்கு வந்துவிட வேண்டும், குழுக்களாக குழுமி நிற்பது போன்றவைகளை தடுக்க நாங்களும் பொலிஸாரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது” என நிலாந்தனின் தாயார் தனது துக்கத்திலும் வேதனையிலும் உறுதியாகத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் நிலாந்தன் உட்பட ஐந்து தமிழர்கள் வரை பிரித்தானியாவில் வேற்று இனத்தவர்களால் இனத்துவேசத்துடன் கொல்லப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 வது இன்னிங்சில் பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவின்போது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது.

பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது. பின்னர் வந்த மலிக், மிஸ்பா உல் ஹக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த சோடி இணைப்பாட்டமாக 119  ஓட்டங்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணி 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த நேரத்தில் மிஸ்பா 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பின்பு மலிக்குடன் அக்மல் இணைந்து 3ம் நாள் ஆட்ட முடிவின் போது இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்று அணியை மேலும் ஸ்திரனப்படுத்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது மலிக் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்கங்களையும், அக்மல் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 22 ஓட்டங்களுக்கும் 3வது விக்கெட்டை 54 ஓட்டங்களுக்கும் 4 வது விக்கெட்டை 67 ஓட்டங்களுக்கும் 5 வது விக்கெட்டை 186 ஓட்டங்களுக்கும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பாக பந்து வீச்சில் ஹேரத் 2 விக்கெட்டையும், துஷார, குலசேகர, மெதிவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது பாகிஸ்தான் அணி 366 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Pakistan  1st innings: 299
Sri Lanka 1st innings: 233

PAKISTAN 2nd innings (overnight 16-1)
Khurram Manzoor b Herath    2
Fawad Alam c and b Thushara    16
Younus Khan lbw b Kulasekera    19
Mohammad Yousuf c Sangakkara b Herath    23
Misbah-ul Haq c Sangakkara b Mathews    65
Shoaib Malik not out    106
Kamran Akmal not out    60

Extras: (b6, lb2, w1)     9

TOTAL (for 5 wkts, 95 overs)    300

Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf), 5-186 (Misbah).Bowling: Kulasekera 15-5-33-1 (w1), Thushara 19-2-84-1, Herath 37-6-113-2, Vaas 14-6-29-0, Mathews 10-1-33-1.

மன்னார்-திருமலை பஸ் சேவை இன்று ஆரம்பம்

bus_ctb_logos.jpgமன்னாரி லிருந்து திருகோணமலைக்கு நேரடி பஸ் போக்குவரத்துச் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைப் போக்குவரத்துச் சபை இதனை ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது. மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பஸ், வவுனியா சென்று அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைச் சென்றடையும்.

பின்னர் அதே பஸ் பிற்பகல் 1.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து அதே வீதியூடாக மன்னாரை வந்தடையும். இச்சேவை நாளாந்தம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களின் பின்னர் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு அரச பஸ் சேவை, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 பாதை பஸ் சேவைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்

bus.jpgஏ9 வீதியூடாக கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ் சேவையை நடத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் அனுமதி கேட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கை தொடர்பாக ஏ9 வீதியூடாக போக்குவரத்து செய்ய பாதுகாப்பு தரப்பினர் அனுமதி கிடைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

ஏ9 பாதையூடாகச் செல்வதற்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இவர்களுக்கு ஏ9 பாதையூடாகச் செல்ல பாதை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
 

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

kamal.jpgவன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசுரியவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார். அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது அலுவலகத்துக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார். இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரத்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கி வந்தார். இராணுவத்தினர் நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று மேற்கொண்ட கள நடவடிக்கைகளுக்கு இவர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2010 ஜனவரியில் மற்றொரு சூரிய கிரகணம் யாழ், வல்வையில் 10 நிமிடங்கள் பார்க்க முடியும்

sun.jpg2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும் என்று கொழும்பு பல்கலைக்கழ கத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இச்சூரிய கிரகணம் யாழ்ப்பாண நகரிலும் வல்வெட்டித் துறையிலும் முழுமையாகத் தென்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி ஏற்படும் சூரிய கிரகணத்தை இலங்கையின் யாழ்ப்பாண நகரிலும், வல்வெட்டித்துறையிலும் சுமார் பத்து நிமிடங்கள் பார்க்க முடியும். ஏனைய பிரதேசங்களில் அதற்குக் குறைவான நிமிடங்களே பார்க்க கூடிய தாக இருக்கும். ஏனைய பிரதேசங்களில் அதுபகுதியாகவே தென்படும்.

இச்சூரிய கிரகணத்தை யாழ்ப்பாண நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் பார்க்க முடியும். முழுமையான சூரிய கிரகணத்தை இலங்கையர் நீண்ட காலத்திற்குப் பின்னர் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு இதுவேயாகும். இச்சூரிய கிரகணம் மிகவும் ஒளிர்விட்டு மாணிக்கம் போல் பிரகாசிக்கக் கூடியதாக இருக்கும்.

சந்திரனில் கால்பதித்த விண்வெளி வீரர்களுக்கு பராக் ஒபாமா பாராட்டு!

moon.jpgநாற்பது வருடங்களுக்கு முன்னர் சந்திரனில் முதன் முதலில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங்,  எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்ததாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இந்த மூன்று விண்வெளி வீரர்களும் புரிந்த சாகஸத்தை ஜனாதிபதி ஒபாமா பாராட்டியுள்ளார். ஆம்ஸ்டே;ராங் நிலவில் கால் பதிக்கும்போது தனக்கு 7 வயது எனக் குறிப்பிட்ட ஒபாமா,  இந்த வரலாற்றுச் சாதனையாளர்கள் மூவரையும் ஒன்றாகச் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரனில் மனிதன் கால்பதித்து 40 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலவுக்கும் பின்னர் செவ்வாய்க் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் நாஸாவின் முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகம் இணங்க வேண்டுமென அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித்துறை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கெளரவத்துடன் கடமையை நிறைவேற்ற வழிவகை செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்

ஊடக அடக்குமுறையை நோக்காகக் கொண்டு பத்திரிகை பேரவையை மீண்டும் அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பத்திரிகைப் பேரவையின் ஊடாக பத்திரிகைகளுக்கோ, பத்திரிகை ஆசிரியர்களுக்கோ எதிராக செயற்படுவதும் அரசின் நோக்கமல்ல என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்கம் பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கச் செய்வதன் ஊடாக, ஊடக அடக்கு முறையை அரங் கேற்ற முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்தார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.

1973 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பத்திரிகைப் பேரவைச் சட்டத்தினூடாக ஊடகவியலாளருக்கு தண்டனை வழங்கவும், சிறைத் தண்டனை வழங்கவும் ஏதுவாக இருக்கிறது என சுட்டிக்காட்டினார். இதனை மீண்டும் கொண்டு வருவதே அரசின் நோக்கமாக இருக்கிறது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பேசும் போது, 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைப் பேரவை சட்டத்தின் கீழேயே பத்திரிகைப் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த பேரவைக்கு உறுப்பினர்களை நியமி க்காமல் விட்டதனால் பத்திரிகைப் பேரவையை இயங்கவிடாமல் செய்தது. அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. வினர் செயற்பட்டனர்.

ஆனால், தொடர்ந்து வந்த எல்லா அரசுக ளும் பத்திரிகை பேரவையை ஒழிக்க செயற்படவில்லை. பல வருடங்களாக பேரவை செயற்படாமல் இருந்தது. இருப்பினும் சுமார் 20 பேர் பேரவையின் நிரந்தர சேவை யில் இணைக்கப்பட்டிருந்தனர். வருடக் கணக்காக அவர்களுக்கு எந்த கடமைப் பொறுப்புகளும் வழங்கப்படாமல் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. பேரவை செயற்படாமல் இருந்த போதும் 209 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளோம்.

இந்த விடயம் தொடர்பாக கணக்காய்வுகள் நடத்தப்பட்ட போதும் பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு மீண்டும் பத்திரிகை பேரவையை இயங்கச் செய்யுமாறு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தது. இதனடிப்படையிலேயே பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயக்கச் செய்ய முடிவு செய்தது.

பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கச் செய்வதன் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று ஊடகவியலாளர்களை அடக்குவதற்காக அல்ல என்பதை நான் பொறுப்புடன் கூறுவேன். பேரவையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் ஊடகங்களுக்கு தடைகளை போடுவதும் அல்ல.

பேராசிரியர் சோமரட்ன பாலசூரிய, பேராசிரியர் சுனந்த மகேந்திர, லங்காதீப ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியர் ஆரியநந்த தொம்பகஹவத்த, சட்டத்தரணி பிரசாத் சூரியஆராச்சி, உழைக்கும் பத்திரிகையா ளர் சங்கத்தின் பிரதிநிதி உட்பட இன்னும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர். தகவல் திணைக்களத்தின் தலைவரும் பேரவையின் உறுப்பினராக இருப்பார்.

பத்திரிகைப் பேரவையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் தொடர்பாக நோக்கும் போதும் இந்த உறுப்பினர்கள் ஒருவரும் ஊடக அடக்கு முறைக்கு ஆதரவு வழங்குபவர்களாக வும், தொடர்புடையவர்களாகவும் தெரியவில்லை.

ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சிகள், வழிகாட்டல்கள், அவர்களது கடமைகளை நிறைவேற்றக் கூடியவாறு ஒத்துழைப்புகள், வழங்குதல் போன்ற விடயங்களுக்காகவே பத்திரிகைப் பேரவை செயற்படவுள்ளது.

ஊடகவியலாளர்கள் கெளரவத்துடன் தங்களது கடமையை நிறைவேற்றுவதற்கு வழிவகைகளை செய்து கொடுப்பதே அரசின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.