July

July

சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவி நேற்று இலங்கை வந்து சேர்ந்தது!

saudi-arabia.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய  மனிதாபிமான உதவிகளில் முதல் தொகுதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தக்கு வந்து சேர்ந்துள்ளது. 1000 கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 100 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை அரச அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர்.

மொத்தம் 33 கோடி ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த உதவியின் இரண்டாவது தொகுதியான மேலும் 100 மெட்ரிக் தொன் எடைகொண்ட உதவிகள் அடுத்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கப்டன் கெலாராடோ கொழும்பை வந்தடைந்தது – நிவராணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்கும்

_vanankaman-captionali.jpgவடக்கி லிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வணங்கா மண் கப்பலினூடாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தாங்கிய எம்.வி. கப்டன் கெலாராடோ எனும் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இது பற்றி இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தியாவின் சென்னைத் துறைமுகத்திலிருந்து வந்துள்ள இக்கப்பலில் காணப்படும் 650 மெற்றிக் தொண் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கையேற்கவுள்ளது.

இப்பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இன்று முற்பகல் 11.00 மணியளவில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளனர். 531 பெட்டகங்களிலுள்ள இந்நிவாரணப் பொருட்களுள் அத்தியவசிய உணவு வகைகள்,  சிறுவர் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியன அடங்கியுள்ளன. இந்நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலுடன்; வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சார்க் சிறுவர்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று ஆரம்பம்

சார்க அமைப்பின் சிறுவர்கள் தொடர்பான மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள சார்க் நாடுகளின் அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு,  ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நான்காவது முறையாக நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அதிகாரிகள் மட்ட மாநாட்டில் சார்க அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சீல் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.  13 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை சார்க  நாடுகளின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நாளை நடைபெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இணைந்து வாழ்வதுபற்றிச் சிந்திக்கலாம்; இறைமைக்கு பங்கமில்லாத தீர்வுக்கு தயார்

nsri.jpgபிரிவி னைக்குப் பதிலாக இணைந்து வாழும் நிலை பற்றிச் சிந்திப்பதற்கும், பிளவுகளை மறந்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கும் தயாரென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டின் ஒற்றுமை, இறைமை, சமத்துவத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தீர்வொன்றைக் காண்பதற்குத் தாயரென்றும் கூட்டமைப்பு உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதியமைச்சுக்கான குறை நிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீகாந்தா,“அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளது. இனம், மதம், கலாசாரம் என பல வகையிலும் பொது அம்சங்களைக் கொண்டவர்கள் நாம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வைக்காண ஒன்றிணைந்து செயற்படுவோம்” எனவும் சர்வகட்சிக்குழு இதற்கு சிறந்ததொரு ஆரம்பமாகும்.

நாம் அனைவரும் இந்நாட்டு மைந்தர்கள் என்ற வகையில் நாட்டின் இறைமை, ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் தீர்வொன்றைக் காண்போம். எல்லாக் காலத்திலும் நாம் விடுதலைப் புலிகளின் சரி பிழைகளைச் சுட்டிக்காட்டியே வந்துள்ளோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே எமது ஒருமித்த எண்ணமாக இருந்தது.

இன முரண்பாட்டுக்கு ஒரு நிலையான தீர்வைக் காண்பதில் நாம் அக்கறையாயுள்ளதால்தான் நாம் ஜனாதிபதியின் அழைப்பையேற்று சர்வகட்சிக்குழு கூட்டத்திற்குச் சென்றோம். அக்கூட்டம் நல்ல ஆரம்பமாக விருந்தது. நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு மூவினங்களும் இணைந்து பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது, யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மாறி மாறி வந்த அரசாங்கங்களால் எமது கோரிக் கைகள் மறுக்கப்பட்டு எமது மக்கள் ஓரங்கட்டப்பட்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மூன்று இலட்சம் மக்கள் முகாங்களில் அவதிப்படுகின்றனர். இவர்களை விரைவாக மீளக்குடிய மர்த்த நடவடிக்கை எடுப்பது அவசியம். மீளக்குடியமர்த்துவதற்கான நிலை ஏற்படும் வரை அரசாங்கத்திற்குச் சுமையாக இல்லாது இம்மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் சென்று வாழ அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு இவர்களை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் தயாராகவுள்ளனர்.

இம்மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை காண வேண்டும். அரசாங்கத்தின் ஆக்க பூர்வமான சகல நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளது.

எமது வரலாற்றைப் பலரும் பலவிதமாகக் கூறுகின்றனர். எமக்கு ஒரு சிறந்த பாரம் பரியம் உள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கு மிடையில் நிகழ்ந்த உறவுகள் தொடர்ந்துள்ளன. எமக்குள்ளே பல பொதுவான அம்சங்கள் பண்புகள் உள்ளன. இந்நிலையில் பிரிவினைக்குப் பதிலாக இணைந்து வாழும் நிலைபற்றி சிந்திப்போம். பிளவுகளைப் பார்க்காமல் ஒற்றுமையைக் கவனத்திற் கொண்டு செயற்படுவோம். ஒரே நாட்டின் மைந்தர்களாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

தேசியப் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த அரசியல் தீர்வொன்றை எட்டுவோம். நாட்டின் ஒற்றுமை, இறைமை, சமத்துவத்திற்கு பங்கம் விளைவிக்காத வகையில் இத்தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முட்கம்பி வேலிக்குள் 3 இலட்சம் மக்களை அடைத்துவைத்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல்

06arliament.jpgஎமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள்? இது அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை. எனவே, உடனடியாக அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுங்களென ஐ.தே.க. எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் \செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறியதாவது; வவுனியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று வந்த மருத்துவர்களை நான் சந்தித்தேன். அங்குள்ள மூன்று இலட்சம் மக்களில் 90 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களெனவும் அவர்கள் எதிர்வரும் மாரிகாலத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்கள் இன்னும் பல வருடங்களுக்கு செயற்படும் நிலைமையே காணப்படுவதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சில அமைச்சர்கள் பாகிஸ்தானிலும் இவ்வாறான அகதிமுகாம்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். உண்மைதான் அங்கு அகதிமுகாம்கள் உள்ளன. ஆனால், அந்த முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் சென்றுவர முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படியா உள்ளது? எதனை மறைப்பதற்காக ஊடகங்கள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளை அங்கு அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.

இந்த அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பிச்சைக்காரர்களல்ல. அவர்கள் நன்றாக வசதியாக வாழ்ந்த மக்கள் அவர்கள் எதற்கும் வழியில்லாதவர்களென அரசு நினைக்கக் கூடாது. இந்த அகதிமுகாம்களுக்கு உதவ முன்வரும் நாடுகளிடம் பொருள் உதவிவேண்டாம். பண உதவி செய்யுங்கள் என இந்த அரசு கேட்கின்றது. ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அரசுடன் இணைந்து கொண்டு தமது புள்ளிகளை  அதிகரிப்பதற்காக கூச்சலிடுகின்றார்கள்.

யுத்தம் முடிந்துவிட்டதென அரசு கூறுகின்றது. உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றது. யுத்தம் முடிந்து விட்டதென்றால் பயங்கரவாதத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவசரகாலச் சட்டம், காவலரண், சோதனைச் சாவடிகளை நீக்க வேண்டும்.இவ்வாறான நிலைமை ஏற்பட்டால்தான் உல்லாசப்பயணிகள் இந்த நாட்டுக்கு வருவார்கள்.

இதேவேளை, எமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்தச் சட்டத்தின் அடிப்படையிலே முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்களென அரசிடம் கேட்கின்றோம். இது ஒரு அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல் உடனடியாக அந்த மக்களை அவர்களின் இடங்களில் மீளக்குடியேற்றுங்கள்.

யுத்தம் இல்லாத நிலையில் 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாம் முயன்றோம். ஆனால், இவர்கள் யுத்தத்தை நடத்திவிட்டு 13 ஆவது அரசியல் திருத்தத்திற்கு மேலாக தரத்தயார் என்கின்றனர்.  நாம் யுத்தத்தை எதிர்க்கவில்லை ஆனால், யுத்தத்தின் மறைவிலே நடந்த மனித உரிமை மீறல்கள் படுகொலைகளைத் தான் நாம் எதிர்த்தோம். அரசு செய்யும் அனைத்தையும் சரியெனக் கூற நாங்கள் இங்கு வரவில்லை.

அம்பாறை மாவட்ட மக்கள் வரட்சி மற்றும் மழையால் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதி மக்கள் வரட்சியாலும், மறு பகுதியினர் சுழல் காற்றுடன் கூடிய மழையினாலும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பொத்துவில், திருக்கோயில் பகுதிகளில் வரட்சி நிலவுவதால் சிறு போகமான நெற்பயிர்கள் கருகியுள்ளன. குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. கால்நடைகள் குடிநீரின்றி உயிரிழக்கின்றன.

அத்துடன் இப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வரட்சியினால் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதிகளிலுள்ள பிரதேச சபைகள் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, இம் மாவட்டத்தின் மேற்குக்கரை பகுதிகளில் சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வரப்பத்தான் சேனை, தமனை தொட்டம் போன்ற இடங்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றுடன் பறந்துள்ளன. மரங்கள் சரிந்து விழுந்ததில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதியில் ஆரம்பமாகியுள்ள சிறுபோக நெல் அறுவடை வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பிரதேச கிராமசேவையாளர்கள் விபரங்கள் சேகரித்து பிரதேச செயலாளர்களூடாக அரசாங்க அதிபரின் கவத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை, பல தொண்டர் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.

புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள், 1250மோட்டார் குண்டுகள், அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,  கிளிநொச்சி பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது,  ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 5000, 60மி.மீற்றர் மோட்டார் குண்டு 40,  80மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுக்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் 81மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 550,  60மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 468,  120மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 330,  12.7மி.மீற்றர் ரவைகள் 470,  வெடிமருந்து 400கிறாம் மற்றும் ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்துள்ளார்

சபையில் 5 தடவை நேற்று மின் தடை

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 5 தடவைகள் மின் விநியோக தடை ஏற்பட்டதினால் சபையில் அடிக்கடி இருள் சூழ்ந்து மறைந்தது.
உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தகமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவிகருணாநாயக்க பேசிக் கொண்டிருக்கும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. முதல் 3 சந்தர்ப்பங்களில் மின்விநியோகம் அடிக்கடி தடைப்பட்டு மீண்டும் வழமைக்கு வந்தது.

இதன்போது சபையில் இருள் சூழவே அரசாங்கத்தின் நிலைமையும் இதுவே என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் 2 தடவைகள் மின் விநியோக தடை ஏற்படவே நாட்டின் நாளைய தலைவர்கள் பாராளுமன்றத்தின் நிலைமையை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்று கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்களை சுட்டிக் காட்டி ரவி கருணாநாயக்க கூறினார்.

இதன்போது சபையில் இருந்த அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஏதோ கூறிவிட்டு தனது ஆசனத்திலிருந்து எழுந்து சபையை விட்டு வெளியில் செல்ல முற்பட்டபோது அமைச்சரின் பச்சை நிற சால்வை பொன் நிறமாக மாறிவிட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், அது பச்சோந்தியின் நிறமென ஜே.வி.பி. எம்.பி.யான திலகரட்ன விதானாச்சி கூறினார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தை அப்புறப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

maussakele-maskeleya.jpgகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தக் கோரி தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்ததைத் தொடர்ந்து தலவாக்கலைப் பொலிஸார் 4 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இந்த நிலையில், கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை குறிப்பிட்ட தோட்டத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி வேறொரு தோட்டத்தில் குடியமர்த்தக் கோரிய ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இப்போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

986 கோடி 64 இலட்ச ரூபா குறைநிரப்பு பிரேரணைக்கு சபை அங்கீகாரம்

வரவு செலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக இரு அமைச்சுகளுக்கென 986 கோடியே 64 இலட்சம் ரூபாவை குறைநிரப்பு தொகையாக வழங்குவதற்கு சபை நேற்று புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு ஆகிய இரண்டினதும் கீழான செலவினங்களுக்காகவே இந்த குறைநிரப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம் பலாப்பிட்டிய நேற்று இதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையாக 801 கோடியே 64 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையானது 35 கோடி ரூபா மற்றும் 150 கோடி ரூபா என இரண்டு கட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேநேரம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகளையும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவற்றுடன் சமர்ப்பித்தார்.

அத்துடன், ஏற்கனவே அமுலில் இருக்கும் விடயங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறவே இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பொருட்களினதும் விலையும் அதிகரிக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை மீதான விவாதத்தின் இறுதியில் குறைநிரப்புப் பிரேரணைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.